கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


பைய பைய
என்கிறாள் பெற்றவள்
தத்தித்தத்தி நடந்துவரும்
குழந்தையைப் பார்த்து

பைய பைய
என்கிறான் கணவன்
சூலிப் பெண்டாட்டி
மாடியிலிருந்து இறங்குகையில்

பைய பைய
என்கிறான் யாரோ ஒருவன்
தடுமாறி நடந்துபோகும்
குடிகாரனைப் பார்த்து

பைய பைய
என்கிறார்கள்
சுமை
இறக்கிவைக்கும்போது

பைய பைய
என்கிறார்கள்
சப்பரத்தை
தூக்குகையில்

தடுக்கி
விழும்போது
பைய பைய என்கிறார்கள்

இறங்குகையில்
தடுமாறினால்
பைய பைய என்கிறார்கள்

காதலில்
பைய பைய இல்லை

காமத்தில்
பைய பைய இல்லவேயில்லை

பைய பைய என்பது
பற்று
பைய பைய என்றால்
பரிவு

வாழ்க்கை பூராவும்
எவ்வளவோ பைய பைய.

************************************************************

விக்ரமாதித்யன் நம்பி கவிதை

காற்றாடி
எப்படி சுற்றுகிறது
எனக்குத் தெரியாது

மின்சாரம்
எப்படி வெளிச்சம் தருகிறது
எனக்குத் தெரியாது

தண்ணீரிலிருந்து
எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

பேருந்து
எப்படி ஓடுகிறது
எனக்குத் தெரியாது

விமானம்
எப்படி பறக்கிறது
எனக்குத் தெரியாது

பாலியஸ்டர்
எப்படி நெய்கிறார்கள்
எனக்குத் தெரியாது

வீரிய வித்துகள்
எப்படி கண்டுபிடித்தார்கள்
எனக்குத் தெரியாது

ஃப்ளாட்கள்
எப்படி தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

போட்டோ
எப்படி எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

ஓவர் ப்ரிட்ஜ்
எவன் மூளையில் தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

என்னதான் தெரியும்

வார்த்தைகளைக் கோத்து
வக்கனையாய் வடிவாய்
கவிதை எழுதமட்டுமே தெரியும்

*****************************************************************************

அறிந்தது
அறியாதது

விக்ரமாதித்யன் நம்பி

எங்கள் ஊரில்
இருக்கையில்தான்
இயல்பாய் இருக்க முடிகிறது

அதுவும் எங்கள் தெருவில்தான்
இன்னும்
தன்மையாய் இருக்கிறேன்

அதிலும் எங்கள் வீட்டில்
இருக்கும் பொழுதுதான்
சகஜமாய் இருப்பதே

இலக்கிய கூட்டங்களில்
காண்கிற விக்ரமாதித்யன் வேறு
இங்கே இருக்கும்
இவன் தனி

உளரில் வீட்டில்
பார்க்க வரும் நண்பர்களுக்குத் தெரியும்

குறிப்பாக
வித்யாஷங்கர்
திருமேனி
மகரந்தன்
ஆதவன்

லக்ஷ்மி மணிவண்ணன்
சங்கர ராம சுப்ரமண்யன்
பாலை நிலவன்
அனைவருமே அறிவார்கள்

வீட்டுக்கே வராதவர்களுக்கு
விளங்கிக் கொள்ள முடியாது

போதையிலேயே பார்த்த பிம்பம்
படிந்துவிட்டதற்கு என்ன செய்ய
சாதாரணமாய் இருக்கும் கவியை
சாதாரணமாய் காண ஒரு முறை
வந்து செல்லுங்களேன் நண்பர்களே

சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று
சந்திக்க வேண்டும் தோழர்களே

இவன்
அப்படி சந்தித்திருக்கிறான்

ஜெயகாந்தன்
கண்ணதாசன்
லா.ச. ராமாமிர்தம்
கி. ராஜநாராயணன்
கி.சு. செல்லப்பா
க. நா. சு.
சுந்தர ராமசாமி
அசோகமித்திரன்
நகுலன்
இப்படி
நிறைய சிங்கங்களை.

*********************************************************************

திருப்புன்கூர் நந்தி

விக்ரமாதித்யன் நம்பி

எந்தப் பக்கமாய் விலகியிருக்கும்
இடதுபுறமா வலதுபுறமா எப்படி
இருந்த இடத்திலிருந்து எழுந்து
இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ
நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த
குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது

ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து
நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று

ஆதிநாயகன்தான் அடிமனசில்
ஏது நினைத்திருப்பான்

தீண்டாமை கொடிதென்றே எண்ணியிருப்பார்
திருநாளைப் போவார்தான் தீர்மானமாய்

கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சட்டென்று எழும்பி நகர்ந்து வலதுபுறமாய்
உட்கார்ந்திருக்கிறது பெரியஉருவம் பிரயாசைப்பட்ட வருத்தத்தில் நாக்குத்துருத்தி

திருப்புன்கூரில் மட்டுமல்ல
தேசமெங்கும் நந்தன் சிவன் நந்தி

***************************************************************************

Series Navigation

author

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி

Similar Posts