கவிதைகள்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

சுப்பிரமணியன் ரமேஷ்


கவிதை 1:

எனக்கும் அவர்களுக்கும் இடையேயான

கண்ணாடித் தடுப்பை கண்டுபிடித்த நாளில் ஆசுவாசமானேன்

பிரிப்பின் தடுப்பறியா மாந்தர்கள்

என்னிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள

முயல்கின்றனர் ஓயாது!

முடியாத பட்சத்தில் தன் இருப்பின் கூறுகளையேனும் விட்டுச் செல்ல

ஒரு போதும் சமன் குலைக்க இயலா

தடுப்புக்குள் பரவிக் கிடந்தேன்

எனக்கும் நானுக்கும் நடுவே

மற்றொரு தடுப்பைக் கண்டு கொள்ளும்வரை

என்னை சமன் குலைக்க

நான் முயலும் வழிகளைக் கண்டு

எனக்குள்ளே விகசித்தபடி

மெளனப் புன்னகையொன்று
—————————————————————————-

கவிதை 2:

அன்றிலிருந்து பார்த்திருக்கும்
அலுப்பூட்டும் அதே நிலா தான்!

***

இக்கணம் அதே அன்றுதானா

பார்த்தல் அதே பார்த்தல் தானா

அலுப்பு அதே அலுப்புதானா

அதே கூட அதே தானா

நிலவு அதே நிலவு தானா

தானும் அதே தானா!

***

பழமைவாதம், இருத்தலியல்
நவீனத்துவம், பின் நவீனத்துவம்

கழிப்பறை
நவீனக் கழிப்பறை
அதி நவீனக் கழிப்பறை

கொள்வதென்னவோ மலம் மூத்திரம்தான்!

***

கொள்வது அதே கொள்வதே தானா

மலம் அதே மலமா

மூத்திரம் அதே மூத்திரமா

தான் இப்போதும் அதே தான் தானா!

********

சுப்பிரமணியன் ரமேஷ்

subramesh@hotmail.com

Series Navigation

author

சுப்பிரமணியன் ரமேஷ்

சுப்பிரமணியன் ரமேஷ்

Similar Posts