விக்ரமாதித்தன் நம்பி
————————–
வினோத ரசமஞ்சரி
விக்ரமாதித்யன் நம்பி
எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி
அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு
கவிதை மொழியே
கவித்துவம் போல
யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்
நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்
மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை
ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை
மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்
*****************************************************************************
பாவக்கதை
விக்ரமாதித்யன்
உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது
அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்
ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்
பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய
என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.
******************************************************************
எந்த போதையிலும்
விக்ரமாதித்யன்
சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்
சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ
திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்
திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை
பாரதி
ஒரு
கவிஞானி
கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்
பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே
******************************************************************
கவிதை
விக்ரமாதித்யன் நம்பி
என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்
பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்
சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே
கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா
மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்
நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே
என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல
தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா
***************************************************************************
மேலும் மேலும்
விக்ரமாதித்யன் நம்பி
மேலும் மேலும்
குழப்புகிறார்கள்
மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்
மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்
மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்
மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்
மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்
மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்
மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்
மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்
மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்
மேலும்மேலும்
கோழையாகிறார்கள்
மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
மேலும் மேலும்
என்ன இருக்கிறது
மேலும் மேலும் எனும்
மனசுதான்
மேலும் மேலும்
என்ன எழுத.
**************************************************************
கூட்டுக் கவிதை
காக்கைப்பாட்டு
காகமே எங்கே போனாய் நீ
எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு
காகமே எங்கே போனாய் நீ
பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ
காகமே எங்கே போனாய் நீ
துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி
காகமே எங்கே போனாய் நீ
காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது
காகமே எங்கே போனாய் நீ
காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்
காகமே எங்கே போனாய் நீ
குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ
என்று சொல்வாயோ
திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ
என கரையும் காகமே எங்கே போனாய் நீ
கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்
(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.
கேள்விகள் எம்.டி.எம். உடையவை.
பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை)
–விக்ரமாதித்யன் நம்பி
***************************************************************************
ஐந்திணை
குறிஞ்சி
விக்ரமாதித்யன் நம்பி
கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்
* * *
முல்லை
காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்
* * * * *
மருதம்
காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்
* * * * *
நெய்தல்
திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்
* * * * *
பாலை
வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா
————————————
- மல மேல இருக்கும் சாத்தா.
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003
- சிந்தி நகைச்சுவை
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)
- பத்துகேள்விகளும் சில பதில்களும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘
- அம்மா வந்தாள் பற்றி
- இணையத் தமிழ்
- ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)
- கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்
- சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)
- வைரமுத்துக்களின் வானம்-8
- எனையாரென்று அறியாமல்..!!!
- மழையினால் காலம் ஆன போது
- பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு
- காதலாவது, கத்திரிக்காயாவது!
- பாரதி பாடாத பாட்டு
- கறுப்பு நிலா
- உன் குற்றம்
- இது சீனா அல்ல – இந்தியா
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்
- அது
- நிலைப்பாடுகளும், நியாயங்களும்
- ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1
- எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt
- கடிதங்கள் – நவம்பர் 13,2003
- பழி(சி)க்குப் பழி(சி)
- அமானுதம்
- ஆழ்வார்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- கல்லூரிக் காலம் – 7 -செங்கல்
- Bobby Jindal – ஒரு அறிமுகம்
- வித்தியாசமானவன்
- தேர்.
- கவிதைகள்
- மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
- இரைக்கு அலையும் நிகழ்
- ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு
- ஏழையா நான் ?
- தேவையென்ன ?
- குறிப்புகள் சில- நவம்பர் 13 2003
- விடியும்- நாவல் – (22)