‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

இரா முருகன்


ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது
—————————————————–

சிற்றில் அழைப்புமணி ஒலித்துக்
கேட்கிறாய் ‘என் மகன் எங்கே ? ‘
தெரியலை எனினும் கேள்.

இறுகக் கட்டி இலக்கியம் படி. இல்லை
சிசுமூத்திரம் நனைத்த புத்தகம் உலர்த்து.

மார்க்கெட் உள்ள கோயிலாய்ப் பார்த்து
மனைவியோடு போவதும் மற்றும்
காராபூந்தி கொறித்தபடிக்குக்
கேசட் வேதம் கேட்பதும் உத்தமம்.

மந்திர வித்தை புராண நாடகம்
வயிறு வலித்துச் சிரித்து மகிழ
சமூக நாடகம் சபாக் கழிவறையில்
தண்ணீர் இல்லை நினைவில் கொள்வாய்.

சாண எரிவாயு செலவு குறைக்கும்.
மாடு பிடிக்க வங்கிகள் வழங்கும்.
வாரபலனில் வாகன யோகமா ?
ஓசி எல்மெட் அக்குளில் இடுக்கு.

எண்ணெய் குளித்தால் பகலில் உறங்கணும்.
பகலில் உறங்கினால் ராத்திரி முழிப்பாய்.
ராத்திரி முழித்தால் அப்புறம் ஒருநாள்
இன்னொரு வாரிசும் தேடலாம் சேர்த்து.

உப கடவுள்
———–

நெற்றிக் கோடுகள் வெளுத்துத் துலங்க
நெரிசல் விலக்கிப் பாதையோரம்
ஆனை வந்திடும் தலையசைத்து.

ஆசனம் விரித்து ஏகமாய்க் கழிந்து
தலைகள் தோறும் துதிக்கை தடவி
யாசகம் வாங்கும் கடைத் தெருவில்.

அரையில் சொறிந்து புகையூதிப்
பாகன் பார்க்கப் பஸ் உள்ளே
பழைய குருக்கள் நலம் கேட்பார்.

வானம் நோக்கிக் கைகாட்டி
வணங்கிப் போவான் புன்னகைத்து.
அசட்டுத் தனமாய்த் தன்வாலாட்டி
ஆனை நடக்கும் சுமையோடு.

புதுசு
—–

படைப்புக் கடவுள் தாடி சொறிந்து
பக்கம் இருந்த சகாவிடம் சொன்னார்
‘புதுசு ஒண்ணு. வேடிக்கை பாரும் ‘.

தவளை இரைச்சல் எழுந்த குளத்துத்
தண்ணீர்ப் பரப்பில் நிழல்தடம் பதித்து
இசைந்து போனது பட்டாம் பூச்சி.

சூரியச் சூடும் நுனிப்புல் தேனும்
இறகில் தங்கத் தூசியும் கொண்டு
எவ்விப் பறந்து மேற்கே போகச்
சின்னக் கீற்றாய்ப் பனியின் தூவல்.

வெள்ளை உடுத்த பூச்சி தன்னை
உன்னதமாக உணரத் தொடங்கிக்
கீழே பார்க்கச் சிறிசுகள் சிலது.

‘எழுந்து வரநான் ஆணை எறிந்து
எழுபவை தவிர மற்ற எதற்கும்
போக்கு வரத்து உரிமை இல்லை ‘.

எம்பிக் குதித்த பூச்சி தனது
இறக்கை இரண்டும் கழற்றி உதிர்த்துத்
தவளைக் குளத்தில் ஐக்கியமாகிப்
புதிய தவளையாய், இலக்கணச் சுத்தமாய்.

பூச்சியைப் பாதியில் தவளையாக்கினால்
லாஜிக் இடிக்குதே – சகாவு கேட்டார்.
தவளைகள் சொல்படி தான்இது படைத்தேன் –
தாவிக் குதித்துக் கடவுள் நகர்ந்தார்.

(நவீன விருட்சம்)

செய்தி
——-

நேற்றைய செய்தித்தாள் சொன்னது
கம்ப்யூட்டர் விலை குறையுமென்று.
மழையில்லாமல் மின்சார வெட்டென்று.
மந்திரிசபை விரிவடைந்தது.
குடும்பக் கட்டுப்பாடு ஊர்வலம் நடந்தது.
காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து
அமெரிக்க செனட்டர் புறப்பட்டுப் போனார்.
தேவாரத்தில் தேசிய ஒருமைப்பாடு –
இல்லந் தோறும் சாண எரிவாயு –
பிரமுகர்கள் சொற்பொழிந் திருந்தார்கள்.
ஹாக்கியில் இந்தியா வென்றதற்காக
ஆசிரியருக்குக் கடிதத்தில்
ஆராவமுதன் தொப்பியைக் கழற்றினார்.
அயோத்தியா மண்டப உபன்யாசத்தில் சாயந்திரம்
தந்தை சொல்காக்க ராமன் காடேகினான்.
ரேஷனில் இருபது கிலோ அரிசி.
செல்லுலர் தொலைபேசி வாங்கினால்
பேஜர் இலவசம்.
இட்லி சுற்றி எடுத்துப் போகும்போது பார்த்தேன்.
இயற்கை எய்தியவன் முகம்
மிளகாய்ப் பொடி கசிந்த எண்ணெய் மினுக்கில்
என்னைப் போல.

இருபது முடியும் நேரம்
———————-

வாரும் வாரும் வளைப்போம் பிடிப்போம்
கான்க்ரீட்டும் குப்பையும் உயரும் மாநகரங்களை.
புழுதி பறக்கும் சிற்றூர்களை. மற்றும்
ஐயனார் தோளோடு ஆண்டென்னா விரியும் கிராமங்களை.

வீட்டுக்குச் சிலபேர் வீதிக்கு நூறுபேர்
வளைக்க வாகாய் எல்லா வயசிலும்.
பிரபஞ்ச அழகிகள் பிரதேச அழகிகள்
கட்டிப் போடக் கிளம்பி வருகிறார்.

வயல்களைக் கைக்கொள்வோம்.
இப்போதைய தேவை
உலகம் முழுக்க மென்று தீர்க்க
உருளைக் கிழங்கு வறுவல்.
கண்டம் தாண்டிக் கடல் தாண்டிப்
பரங்கி தேசமும் கருப்பு பூமியும்
சிகப்பு வெளிறிய தரையும் எல்லாம்
கடந்து பரவுது பரவுது புரட்சி.

உப்பு எடுப்போம் தோழரே உப்பெடுப்போம்.
பிளாஸ்டிக் உறையில் அயோடின் சிரிப்பு.
‘ராசகோபாலா, வேதாரண்யம் கடைக்கு
போய்ச் சேரலேன்னு ஃபோன்கால். கவனி ‘.

ஆட்கள் தேவை உலகச் சந்தையில்
தாதுபுஷ்டி லேகியம் விற்க.
எம்பிஏக்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

கொட்டாம்பட்டியில் நேற்றைய நிலவரம் –
நமது குளிர்பானம் மூவாயிரத்து ஏழு
அவர்கள் சரக்கு ரெண்டாயிரத்துப் பதினெட்டு.
ஆரம்பப் பள்ளி விளையாட்டுப் போட்டியில்
நம் ஆதரவு அணி வெற்றி பெற்றது.
மாற்றார் மண்ணைக் கவ்வினர்.

நிகழ்ச்சியின் இந்தப் பகுதியை வழங்கியது
யந்திரத் துடைப்பம் செய்யும்
பன்னாட்டு நிறுவனம்.
கப்பலோட்டிய தமிழன்
திரைப்படம் தொடரும்.

(கல்கி)

சற்றே வந்து
————-

அன்புள்ள ஆசிரியருக்கு –
எழுதணும் எழுதணும் என்று
தள்ளிப் போய்விட்டது.

குளிர் காலமில்லையா ? விடிய நேரமாகிறது.
இருட்டில் பால் வாங்கப் போனால்
வாசல் படிக்கட்டில் யாராரோ
போர்த்திக் கொண்டு தூங்குகிறார்கள்.
வாசல்படி வரிகட்டும் பிரஜைக்குப்
பாதுகாப்பு அவசியம் இல்லையா ?

மரம் வைக்கிறோம் என்று பிரகஸ்பதிகள்
தெருவெல்லாம் பள்ளம் தோண்டிக்
கொப்பையும் கழியையும் ஊன்றி வைத்ததில்
கால் இடறிச் சுண்டுவிரல் நகம் உடைந்தது.

ஒரு லிட்டர் பாலுக்கு வரிசை போட்டுக்
காத்திருப்பது இந்த ஊரில்தான்.
அதுவும் பவுடர் வாடை அடிக்கிறது.
ஜனங்களுக்குப் பால் கிடைக்கச் செய்வது
அரசாங்கத்தின் தலையாய கடமையன்றோ ?

இன்னும் நாலு பஸ் விடச்சொல்லி
எழுதி ஒரு பிரயோஜனமில்லை.
பையன் அமெரிக்கா போக
பாஸ்போர்ட்டுக்கு அலைந்து திரும்பிவர
ஆட்டோவுக்கு அழ வேண்டியிருக்கிறது.

இதெல்லாம் பரவாயில்லை.
நேற்று ராத்திரி முழுக்க விசாவுக்காக
இடம் போட்டு உட்கார்ந்து, சொல்லி வைத்து
தூதரக வாசலில் துண்டு போட்டு
வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுந்தால்
ஏகமாக இரைச்சல்.

எங்கிருந்து வந்தது இத்தனை குயில் ?
வீட்டுச் சுவர்மேல், டெலிபோன்
கம்பத்தில், டிவி ஆண்டென்னா உச்சியில்.
விடாத தொணதொணப்பு.

வயதானவர்கள் தூங்க முடியவில்லை.
பிள்ளைகள் படிக்க முடியவில்லை.
படித்தால்தானே வெளிநாடு போகலாம் ?
யாராவது ஏதாவது செய்து
சத்தத்தை நிறுத்தினால்
செளகரியமாக இருக்கும்.

(மும்பை நாளிதழ் ஒன்றில் ‘cuckoo menace in Thane ‘ என்று குயில்களின் ‘இரைச்சல் ‘ பற்றிய ஆசிரியருக்குக் கடிதம் படித்ததைத் தொடர்ந்து ..).

(தினமணி கதிர்)

இன்னொரு கடிதம்
——————

அன்புள்ள அம்மா! விடிகாலை ஐந்து மணிக்கு
இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

பட்டினியும் மரண பயமுமாக
என்வயது யூதக் கைதிகளைக்
கல்லுடைக்க அனுப்பி விட்டு
இப்போதுதான் உட்கார்ந்தேன்.

எல்லோரும் பாடிக்கொண்டு போனார்கள்.
அடித்து அடித்துச் சொல்லிக் கொடுத்த பாட்டு.
அடிமை சங்கீதத்தின் சுவையே அலாதிதான்.

இன்னொரு சுவாரசியம் நேற்று மதியம்.
கால் வீங்கிய ஒரு கிழட்டு யூதனை
நிற்காமல் ஓடவைத்துப் பந்தயம்.
நான் சொன்ன முப்பதாம் சுற்றில்
செத்து விழுந்தான். இரண்டு மார்க் பணம் ஜெயித்தேன்.

இத்துடன் புகைப்படம் அனுப்பியுள்ளேன்.
கைக் குழந்தையோடு யூதப் பெண்ணைச்
சுட்டுக் கொல்லும்முன் எடுத்தது.
குழந்தை கண்ணில் மிரட்சி பார்த்தாயா ?
முதுகுப் பக்கமிருந்து எடுத்ததால்
அவள் முகபாவம் படத்தில் வரவில்லை.
அடுத்த தடவை இன்னும் நல்லதாக அனுப்புகிறேன்.

அப்புறம் வீட்டில் என்ன விசேஷம் ?
அப்பா கால்வலி குறைந்ததா ? அவர்
குளிரில் அதிகம் அலைய வேண்டாம்.
அம்மா, உன் கையால் சாப்பிட்டு
எத்தனை நாளானது ? சீக்கிரம் திரும்ப வேண்டும்.

(இரண்டாம் உலகப் போரின் போது யூத வதை முகாமில் காவல் இருந்த ஒரு ஜெர்மானிய நாஜி இளைஞன் தன் அம்மாவுக்கு இப்படி ஒரு புகைப்படம் அனுப்பியதாக ‘Willing executioners of Hitler ‘ புத்தகத்தில் படித்ததின் பாதிப்பு).

(தினமணி கதிர்)

நாள்தோறும்
————

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.

(முன்றில்)

அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
————————————————-

காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.

செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.

மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
‘போட்டுக் கொடு சார். பொணம் கனம் ‘.

எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.

‘காலையிலே தானா மற்றதெல்லாம் ?
சீக்கிரம் எடுத்துடுவேளா ? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே ‘.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.

காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் –
‘இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள் ‘.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.

நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.

‘எண்ணூறு சதுர அடி வீடா ?
எவ்வளவுக்கு வாங்கினது ? ‘
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.

‘எடுத்துப் போக வண்டி வரலியா ? ‘
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
‘போகலாம் வா ‘ என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.

(ஆனந்த விகடன்)

எரிதல்
——-

நேற்று எரிந்த சிதைக்குப் பக்கம்
மொட்டைத் தலையும் கக்கத்தில் குடையுமாக.

‘கிண்டியிலே ரயிலேறிக் காப்பி கூடக் குடிக்காமல்
மாம்பலம் மழையோடு நடந்தேன் நேரமாகும்னு ‘.

நான் காப்பிகுடித்துக் கிளம்பத் தாமதம்.
போனவர் போனாலும் மற்றவர் உயிர்க்கக் காப்பி.

லுங்கி தழைத்துப் பக்கத்துக்
கொட்டகை யிறங்கியவன்
சிநேகமாகச் சிரித்தான் இன்றும் கையேந்துவான்.

‘அது ரெட்டியாரம்மா. நீங்க போனப்புறம் வந்தது.
எரிய வச்சுப் பிள்ளைங்க இங்கேயே சண்டை ‘.

மழைக் காற்றில் ரெட்டியாரம்மா மேலேசிதறி
எல்லோரும் பிள்ளையாகத் தலைதடவினாள்.

‘ராத்திரி ரெண்டு மணியாச்சு. ஆட்டோ பிடிச்சு
வீடு போனா, டிவி பார்த்துட்டிருக்கா. திட்டினேன் ‘.

கண்ணை மூடி எடுத்ததைப்
பாலில் நனைக்க உதவினான்.
ஈரத் தரையில் குடையூன்றி மந்திரம் நீண்டது.

போதும் என்று சொல்லி மழையில் அவன் போக,
போட்டுக் கொடுங்கோ என்று குடை விரிந்தது.

(கணையாழி)

தோசைக்காரன்
—————-

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
‘உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா ‘.

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
‘அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண ? ‘
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா ?

அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம் ?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் – ‘சாவறதுக்கு வந்தியாடா ? ‘
மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
‘தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான் ‘னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.

பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது
————————————-

தகரக் குடுவை கோகோகோலா படையலும்
ஊதுவத்திச் சாம்பலும் சரிகைமாலையுமாக
மசாஜ் பார்லர் வாசலில் வெள்ளைக் களிமண் புத்தன்.
பறக்கச் சிறகு விரித்த பரிவார தேவதைகள்
பக்கத்தில் காத்திருக்கும் அனுமதிக்கு.

ராத்திரி முழுக்கக் கூட இருந்த
வெள்ளைக்காரன் குழறலை
அபிநயித்துச் சிரித்த இளம்பெண்கள்
டாக்சிக்குக் காத்திருக்கும்போது
உதட்டுச் சாயம் அணிகிறார்கள்.

உள்ளே உடைகளைந்த நடனம் பார்க்க
நடுராத்திரி வரை வரவேற்ற அலிப்பையன்
கண்ணோரம் மைகசியக்
கால்பரப்பித் தூங்குகிறான் விடுதி முன்னால்.

மோட்டார் வேனில் இறைச்சியோடு
இறங்கிவந்த பெண்குழந்தை
சாப்பாட்டு வண்டியில் எண்ணெய் சுடவைத்துக்
கையுறை அணிந்து மீன்செதிள் தேய்ப்பவள்
செதுக்கி எறிவதைத் தின்ன நிற்கும்
தெருப் பூனைகளைத் துரத்தி விளையாடும்.

நடந்த இடமெல்லாம் வெள்ளி பிரேம்
கண்ணாடி கடந்து கருணை சிந்தினாலும்
இன்னும் கொடுக்க மிச்சம் உள்ள புத்தபிக்கு
அடைத்த வாசல் தோறும்
ஆசிகள் சொல்லி நடக்கிறார்.

கையில் வெற்று பிளாஸ்டிக் வாளிகள்
சுமந்து தொடரும் மடத்துப் பையன்
காணிக்கை தேடிச் சலித்த கண்களோடு
கவிச்சி நுகர்ந்து நிற்க
சாலை கடந்த பிக்கு விளித்த சரணம்
சக்கர இரைச்சலில் தேய்ந்து சுருளும்.

(அம்பலம்)

பென்சில்வேனியா
—————–

ஸ்டியரிங் ஒடித்துத் தெரு திரும்பும்போது
பின்னாலிருந்து தினமும் அவர்களைப் பார்க்கிறேன்.
காலை வெய்யிலுக்கு முதுகு காட்டிக்
கைத்தடி ஊன்றிப் போகும் தம்பதி.

பக்கத்தில் கடக்கும் போதெல்லாம்
இருமலோடு காதில் விழுவது பென்சில்வேனியா.

பென்சில்வேனியா ?
பிழைக்கப் போன மகன்.
கூட்டிப்போன மருமகள்.
பார்க்காது போன குழந்தைகள்.
வாரம் ஒருமுறை டெலிபோனில்
நல்லாயிருக்கீங்களா ?
உடம்பைக் கவனிச்சுக்குங்க.

இன்னும்,
மூட்டுவலி மருந்து.
பேங்க் புத்தகம்.
ஆவின் அட்டை. மின்வாரியக் கார்டு.
தடவி அலுக்காத புகைப்பட ஆல்பம்.
பூங்கா பெஞ்ச் ஒட்டுப் புல்.
பத்திரிகை பிரிக்க,
வேண்டப்பட்டவர்கள்
வரிசையாக உதிரும் ‘காலமானார் ‘.

முகம் பார்க்காது வண்டி நகரப்
பக்கத்தில் பையன் கேட்கிறான்.
யாருப்பா ?

நானில்லை. கூட
உங்கம்மாவும் இல்லை.
இப்போதைக்குச் சொல்கிறேன்.

(அம்பலம்)

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – முன்னுரை

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.

எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது.

கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ‘ என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.

இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வெளியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், ‘முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை ‘ என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, ‘இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து ‘ என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!

என் கவிதைகளை வெளியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த ‘எங்க வாத்தியாரை ‘ (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், ‘இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது; ‘

——————————————-

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வெளியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் – கவிஞர் – ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.

மார்ச் 2000-ல் சுஜாதா வெளியிட்டது இப்புத்தகம்.

இரா.முருகன்
(ஆகஸ்ட் 2003)
eramurukan@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts