இரா.முருகன்
401
—-
தலையலங் கானத்துச் செருவில் பொருத
நடந்த படையில் ஒருத்தன் வழியில்
வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான்.
விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி
வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது.
குப்பைக் கோழிகள் மேயும் முன்றிலில்
அரவம் கேட்டு வெளியே வந்தவள்
ஈன்று அளித்த கடமை முடித்தவள்.
யவனக் கப்பலில் முத்தும் மிளகும்
ஏற்றி ஏற்றிக் களைத்துத் திரும்பித்
தகப்பன் உள்ளே உறங்கிக் கிடந்தான்.
ஆறுதல் சொல்லிக் கூட்டம் கலைந்தது.
அழுது முடித்துப் பெற்றவள் ஓய்ந்தாள்.
பார்ப்பார் போயினர் அரிசி பெற்று.
பல்கிப் பெருகின குப்பைக் கோழிகள்.
அரபிக் கப்பலில் குதிரை வந்ததால்
அடுத்த போருக்கு ஆள்சேர்த் தார்கள்.
( ‘ழ ‘ இலக்கிய இதழ்)
படம்
—–
நிறைய உடுத்திக் கொண்டு
கல்யாணக் களைப்போடு
பத்துப் பேர். யார் மடியிலோ
அப்பா அழத் தொடங்கி.
வெள்ளை யடிக்கக் கழற்றிக்
கையில் வைத்துப் பார்த்தபோது
ஞாபகம் இல்லையாம் எதற்கென்று.
எடுத்துக் கொடுத்த ராமாச்சாரி
ஞானக் கிறுக்காய்த்
துணி துறந்து திரிந்ததும்,
அவன் வண்டியில்
கட்டிலும் சருவமும்
அக்காள் திரட்சிக்குச்
சீர் ஏற்றிப் போனதும்,
தள்ளி வைத்தபோது
அழைத்து வந்து
படைக்கும் வெய்யிலில்
இறங்கிய தளர்ச்சியும்,
முறைக் காய்ச்சலில்
அடங்கியவளுக்கு
மருந்து வாங்கித்
தெருமுனையில் வரும்போதே
குரல் எழுந்த சோகங்களும்
வெற்று மார்போடும்
வெறித்த கண்களோடும்
கொண்டு வைக்க வேண்டிக்
கூட்டமாய்ப் போனதும்
நினைவிருக்காம்.
யார் மடியில் அன்றைக்கு – எதற்கு ?
இங்கே பக்கத்தில்
கண்கலங்கும் கிழவருக்கு
நினைவில்லையாம் அது ஒன்றும்.
(கணையாழி)
கி.பி 2099 மற்றும் ஒரு வீதி
—————————
பழைய உலோகம் மலிவு விலையில்
இவ்விடம் கிடைக்கும். இறந்து போன
விமான றக்கையில் பிய்த்து எடுத்தது.
கம்ப்யூட்டர் நாடாவையும் சானிட்டரி நாப்கினையும்
சேர்த்து வாராதே. குப்பை எல்லாம்
தொட்டியில் சேர். சுத்தம் சுகந்தரும்.
அவர்கள் எதிரகத்துப் பேராசிரியரை
நேற்றே அழைத்துப் போனார்கள்.
இவரா ? வம்புக்கே போகமாட்டார்.
அரசாங்க ஊர்தி. வரிசையில் வரணும்.
அடையாள அட்டை கையில் உள்ளதா ?
காடாத் துணி வழங்கப் படும்.
பிள்ளைகளே! கவச வண்டிகள் போனபிறகு
சாலையைக் கடக்கலாம். பிராணவாயுக்
கவசம் பத்திரம். போய் வாருங்கள்.
நமது வீரர்கள் இன்றும் வென்றனர்.
தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள்.
அடுத்த ஒலிபரப்பு நாளைக்காலை ஐந்துக்கு.
மின்சாரம் இல்லை. செய்தித்தாள் விசிறத்தா.
கரப்பு வராது ஜலதாரை அடைத்துக்
கவனமாக வந்துபடு. உறை இருக்கா ?
(கணையாழி)
ராமலீலா
———
புகை உயரச்
சரங்கள் வெடித்துச் சிதற
ராவணன் எரிகிறான்.
வழக்கமாக எரிப்போம்.
உயிர்க்க வைப்போம்.
பனிவிழ இரவு வந்தது.
முன்பைவிடக் கூட்டம் அதிகம்.
சட்டைக்குள்
மயிரும் சதையும் பொசுங்கத்
துணுக்குற்றேன்.
போர்வையைக் கழற்றினேன்.
எல்லோரும் கழற்றினார்கள்.
ஒரு காற்றில்
மறைப்பு விலக
எரியலானோம்.
நிறங்கள் – மழையில்
———————
நிசப்தம் நீலமாக;
அப்புறம்
ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக.
மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக.
நிறம் அதுவேயாக.
மசங்கலாகப் பழுப்புப் படகொன்று.
நிறம் மரித்த வெளிநோக்கிச்
செலுத்தப் பட்டேன்.
நீரின் துளியொன்று உதிர,
நீலம் இழைதொய்ந்து குழிய,
மேலும் துளிகள்; நின்று போனது.
புரண்டு படுத்த புலனும் மெல்லத்
துளிகள் விழுவதைப் புனைய முயல,
வேகங் கொண்ட படகின் உள்ளே
கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.
நிறங்கள் பற்றிக் கவலையில்லை –
இபோதைக்கு.
( ‘ழ ‘ )
நிறங்கள் – மழைக்கு அப்புறம்
——————————
ஆல்பின் சிறுவன் மட்டும்
கையில் பசையும் காகிதச் சுருளுமாக
வானவில்லை அதிசயிப்பான் கண்கள் சுருக்கி.
அங்கங்கே நீர்சுமந்து
கரும் பாம்பாய்த் தெரு நெளியும்.
பறக்க வைத்த தேவதைகள்
பாதியிலே சபித்தபடி
இறகு உதிர்த்த ஈசல்கள்
தரைநெடுகப் பரபரக்கும்.
சிறகு உலர்ந்த காக்கைகளும்
காலடியில் காற்று நீக்கி
ஊர்கின்ற பல்லிகளும்
விருந்துண்ண வெறுஞ் சுவரில்
சினிமா முகங்களைத் தடவிப் பதித்து
இறங்குமுன் உதிர்ந்தது
ஒட்டி வைத்த வானவில்.
ஆல்பின் சிறுவன் மட்டும்
காகிதச் சுருளும் பசையுமாக.
(கணையாழி)
விடியல்
——–
தூக்குச் சட்டிகள் மூலையில் வைத்து
விளக்கு நிழலில் கோடுகிழித்துச்
சிறுமிகள் விளையாடினார்கள்.
வர்ண முகங்கள் சிரிக்கும் சுவரில்
பழைய பந்தெறிந்து
சிறுவரும் ஆடினர்.
சுவர்க் கோழிகள் சேர்ந்து ஒலிக்க
உறங்கிக் கிடந்த உறவின ரெல்லாம்
காலைப் பனிகருதிப் போர்த்திக் கொண்டனர்.
தெறித்து விழுந்த பந்துகள் விலக்கிக்
கண்கள் மூடித் தாண்டிய சிறுமி
கோட்டை மிதிக்க வண்டி வந்தது.
சில்லுகள் துணியில் முடித்துத்
தூக்குச் சட்டிகள் கையில் சுமந்து
ஏறிக் கொண்டார்கள்.
ஒரு சின்னக் கனவில்
கைகால் முளைத்த தீப்பெட்டிகள்
தலையில் கந்தகம் தடவச்
சிலிர்த்த சிறுவன் அழத் தொடங்குமுன்
நகரம் வந்தது.
(கணையாழி)
புள்ளி
——-
ஒரு சக்கரம் உருண்டது.
தொடங்கிய இடத்தைப் புள்ளியிடு.
இலக்கு உணரப் பட்டதா ?
நாம் கற்பித்துக் கொள்வோம்.
திசைகள் ? மேலிருந்து கீழா ?
கீழிருந்து மேலா ?
அதையும் தான்.
ஆரங்கள் உண்டா ?
இல்லையென்றே சொல்லலாம்.
என்ன போயிற்று ? கற்பித்துக் கொள்.
உருளும்போது ஆரங்களைத்
தனித்துப் பார்க்க இயலாதென
வாத்தியார் சொன்னது நினைவிருக்கா ?
வாத்தியார் எல்லாம்தான் சொன்னார்.
சொன்னபடி குடுவையில் ஆக்ஸிஜன் தயாரித்து
முகர்ந்தோம். ஆடிகளை அமைத்து
வெய்யிலில் காயப்போட்ட கால்பந்தாட்ட
மைதானத்து ஓராமாய் அவர்
கோவணம் அவிழ்த்துக்
குந்தியிருக்க நோக்கினோம்.
அவர் சொல்லாமலே
அன்னி பெசண்டுக்கு மீசை போட்டோம்.
அப்புறம் ஒரு நாள் நினைவிருக்கா ?
அவரைத் தூக்கிப் போகத் தோள் கொடுத்தோம்.
அப்புறம் ? அதெல்லாம் அப்புறம்.
கற்பிதமா முக்கியம் ? நமக்குப் பேச வேண்டும்.
தொடங்கிய இடத்தில் புள்ளி ?
அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.
( ‘ழ ‘)
விஜயனின் மாமா
—————–
அவர் ஒரு நாஜி வதை முகாமில்
கொல்லப் பட்டதாகச் சொன்னார்கள்.
தன்முறை வரக் காத்திருந்த பொழுது
சரளைக்கல் பாதையில் குடைபிடித்துக்
குரிசுப் பள்ளிக்குப் போன பாதிரியை,
வயதான யூதப் புரோகிதனை, கால் விந்தி நடந்த
வெளிச்சப்பாட்டை நினைத்துக் கொண்டாரா ?
தூதப்புழை ஓரக் கிராமத்து அவர்
மேற்கில் எங்கோ மரித்த வினாடி,
ஆற்றில் குளித்து ஈரம் உடுத்து,
வேலுக் குட்டியும் நாணியும் வெள்ளாயி அப்பனும்
கூடவரச் சின்ன வயதில்
உற்சவம் முடிந்த அம்பலப் பரம்பருகே
அத்தப்பூத் தேடி நடந்த படிக்கா ?
அந்த வருடம் ஓணத்துக்கு முன்பா
அப்புறமா அவரைக் கொன்றது ?
மாவும் பலாவும் நிழல் விரிக்கும்
தோட்டம் தீட்டிய பழைய காகிதத்தில்
மழுங்கிய பென்சில் கொண்டு
யூத மனைவுக்குச் சொல்ல
நடுங்கும் விரல் வரைந்த ஓலைக் குடில்
அவர் நினைவின் முன்னறையிலா ?
ஓடம் நகரும் வேம்பநாட்டுக் காயலின்
கதைகள் சொல்லி உறங்க வைத்த
‘அச்சா ‘ என்று அழைக்கத் தெரிந்த
அவரின் நான்கு வயது மகனை என்ன செய்தார்கள் ?
விஜயனின் மாமா
யாராக இருந்தார் ?
யாராக இறந்தார் ?
(மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் , 1940-களில் ஜெர்மானிய நாஜி வதை முகாமில் வதிக்கப்பட்ட தாய்மாமன் நினைவாக. விஜயன், மலையாள மனோரமா ஆண்டு மலரொன்றில் இடம்பெற்ற நீண்ட பேட்டியில் யூதப் பெண்ணை மணந்து ஜெர்மனி சென்று அங்கே நாஜிகளால் கொல்லப்பட்ட தன் மாமன் பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்ததின் பாதிப்பு)
(சுபமங்களா)
தரிசனம்
——–
தலவரலாறு இல்லாத
கோயிலைச் சுற்றி
வழிகாட்ட வந்த கிழவர்
பிரகார வெய்யிலில் கைநீட்டிக்
காமராஜ் பேசிய இடம் என்றார்.
சிவாஜி சாயலில் தொப்பை தெறிக்கச்
சிவனார் ஆடும் சுவரில்
மஞ்சள் எழுத்து வேலு ஆர்ட்ஸ்
கையெழுத்தில் காரையைச் சுரண்டி
ராஜாகாலப் படங்கள் கீழே
இருந்ததாக விரல் தேய்த்தார்.
காக்கிக் கால்சராய்மேல் கைத்தறித் துண்டோடு
வாசலில் நிறுத்திய சைக்கிளில் கவனமாய்
வாத்தியம் பிசிறிட வாசித்தவரைக்
காருகுறிச்சி பரம்பரை என்றார்.
பாசிக் குளப்படியில்
சிகரெட் துண்டு ஒதுக்கி,
சாக்குக் கட்டியில்
‘சாந்தி ஒரு தேவிடி.. ‘யை மிதித்தபடி
கண்ணாம்பா ஷூட்டிங்க் நடந்ததென்றார்.
வியர்வையும் லைப்பாய் வாடையுமாக
பிரசாதம் நீட்டிய குருக்கள் பற்றித்
தொடங்கும் முன் யாரோ
மணியடித்ததால்
கோபுரப் புறாக்கள் கொஞ்சம் பறந்தன.
செருப்பில் கால்நுழைத்து
ஒட்டிய வயிறு பார்த்துப் பையில் கைவிட
வேண்டாம் என்று சொல்லி
விரசாக நடந்து போனார்.
கொடுத்து வைத்த கோயில்.
(அம்பலம் இணைய இதழ்)
மழை நகரம்
————
அசன்பாய்
அத்தர்க் கடைமுன்
குப்பை லாரியில் தூரத்துணியும்
ஈரம் நாறிய இலையும் கழிவும்
தோளில் வழியச் சுமந்து சுமந்து
கூடை கவிழ்த்தவன் வயிறு தீய்த்த
மூக்கு உறிஞ்சிச் சொல்லுவான் –
‘கிளப்புய்யா தாங்கலை வாடை ‘.
கடைசி நம்பர் லாட்டரி செண்டரில்
உதிர்த்து எறிந்த காகிதத்தோடு
வசவும் கிழித்துப் போகிற பெரிசு
சகதி தெளித்த கார் எண் படித்துப்
புதுசாய் வாங்கத் திரும்பி வருவார்.
மோர்வடியும் அலுமினிய டப்பா
மேசைக்கடியில் மறைத்தபடி
குடை மறந்த வாத்தியாரம்மா
உலர்த்திக் கொள்ள இடம் தேடுவாள்.
சிம்னி உடைந்த ராத்திரிச் சண்டையில்
வீட்டுப் பாடம் எழுத மறந்த
சின்ன விரல்கள் ஈர சிலேட்டில்
விரையக் கேட்கும் முதல்மணிச் சத்தம்.
‘நனையாதேடி உடம்புக்கு வந்துடும்.
மாசக் கடைசியில் டாக்டருக்கு அழக்
கொட்டியா கிடக்கு ? உள்ளே வாடி ‘.
பீத்தல் குடையில் ஒண்டிய கொலுசின்
சிரிப்புக் கொஞ்சம் கலைந்து சிதற
‘தண்ணி லாரி .. தண்ணி லாரி ‘.
(கணையாழி)
சாவேறு
——-
ஆயிரம் பேர் சாவுக்கு
ஒத்தன் ஆகச் சாப்பிட்ட
ராமசுப்பனும் போனதற்கப்புறம்
சவண்டிக் கொத்தனுக்குப் பஞ்சம்.
பிரேதக்களை –
மூக்கிலே வேர்த்துடும் சாவு விழுந்தா.
பொணம் போல தூங்கறான்.
எல்லாம் சுமந்து
சாவு இல்லாத வெறும் நாளில்
பஞ்சு மெஸ்ஸுக்குத்
தண்ணி வண்டி அடித்த பேர்வழி அவன்.
நாலுநாள் தாடியோடு வக்கீல் வேதராமன்
பெண் கல்யாணத்து நாதசுரக் கச்சேரியை
மூலையில் குந்தித்
தப்புத் தாளம் போட்டு ரசித்தவனை
வைர மூக்குத்தி மின்ன மாமி எழுப்பி,
வேலை சொல்லி விலக்கினாள்,
வேதராமன் போனவாரம் போய்ச் சேர
ஆளே கிடைக்காமல் அலைந்து
மதுரையில் இருந்து ஒத்தனைக் கூட்டி வந்தது.
‘நூத்து அம்பது ரூபா. பஸ் சார்ஜ் போகவர.
வென்னீர் வேணும் குளிக்க ‘.
சாப்பிட்டுப் போகும்போது பார்க்காமல் திரும்பி
‘ஆனாலும் இது அதிகம் ‘ என்றாள்
பிள்ளைத்தாச்சிச் சின்னவளோடு
அப்பம் வடை போட நடந்த
மூத்த பெண்.
தட்சணை இடுப்பில் முடித்த
சாஸ்திரி சொன்னார் –
‘இவனும் இல்லே இனிமேலே.
டெல்லியோட போறான்.
பிள்ளைக்கு யுபிஎஸ்ஸி கெடச்சிருக்கு ‘.
எண்ணெய் இறங்கிய வைரமூக்குத்தி
அடகு போன மிச்சத்தில்
கழித்துக் கணக்கு எழுதிய
ஒற்றைப் பிள்ளை கேட்டான்,
‘எப்ப வந்தது யுபிஎஸ்ஸி ? ‘
(சவண்டிக்கு ஒத்தன் – சாவுச் சடங்கில் பிரேதம் சார்பில் விருந்துண்ணக் கூப்பிடப் படுகிறவன்.)
(கணையாழி)
சுழலும் உறவுகள்
——————
மங்கிய இலைப்பச்சை வாடையும்
ஆமையோடாக உயரும் விளிம்புமாய்க்
குளம் ஒன்று கனவில் வந்தது.
ஆயிரம் ஆண்டு உடம்பு துறந்து
சுற்றும் முன்னோர் கரையோரம்
வந்து அமரச் சோற்று உருண்டைகள்
பரிமாறிய இலைகள் மிதக்கும் நீர்.
அடுத்த ஆண்டு வருவதாய்ச் சொல்லி
மேலே உயர்ந்தவர் குளிக்கச் சொன்னதால்
உள்ளே இறங்க விளிம்பு சுருங்கிக்
குளம் என்னைக் கவ்வி இறுக்கும்.
போனவருடம் எறிந்த இலைகளில்
படர்ந்து நீண்ட காளான் கைகள்
கீழே இழுக்கச் சுவாசம் முட்டிச்
சுற்றும் பார்க்க ஒளியும் இருளும்
பிணைந்து விரியும் பரப்பு அழைக்கும்.
தொடரும் தலைமுறைச் சங்கிலி இழையில்
எந்தக் கண்ணியில் இணைந்தோம் என்று
குழம்பி உள்ளே அமர்ந்து இருந்த
கூட்டம் நடுவே தேடத் தொடங்கினேன்.
கால்படாது ஓரம் வைத்த
வாளியில் புகையும் கல்கரித் தூள்கள்
மாவாய் அரைத்து அப்பிய வாசலில்
நின்றவர் அமரப் படைக்கலாயினர்.
முன்னோர் விரித்த இலைகள் முன்னால்
நான், மகன், அவன் பிள்ளைகள்.
விடுமுறை
———
நரகல் தெருக்களில்
சோனி எருமைகள்
கறந்த பாலில்
விடியும் காலையும்,
ஃபைல்களை வளர்த்து
ஃபைல்களைத் தின்று
ஃபைல்களைக் கழியும்
யந்திரங்களுக்குச்
சேவை செய்து
தேய்ந்த பகலும்,
பெட்ரோல் நாறும்
மாலைப் பொழுதும்,
காற்று ஓய்ந்து
புழுங்கும் இரவும்,
எனக்கே யானது
என்றிருந்தேன் இதுவரைக்கும்.
நகரக் கழிவுகள்
கழித்த ஆறும்,
மரங்கள் செத்த
வெற்று மலையும்,
கட்டிடம் உயரும்
நஞ்சையின் தரையும் கூட
எனக்குத் தானாம்.
புவா
—-
டிபன்சு காலனி மேஜர் குப்தாவின்
ஒற்றைப் பெண் ரஞ்சனா குப்தா.
ஜீன்சும் டாசர்ட்டும் குட்டை முடியுமாய்ப்
பொழுது போக ஆபீசு வருகிறாள்.
சிவகங்கையிலிருந்து சிவப்புப் பேரணிக்காகத்
தில்லி வந்த வாத்தியார் நண்பர்
விட்டுப் போன புத்தகப் பெயரைப்
பேச்சு வாக்கில் சொன்னேன். நெருங்கி விட்டாள்.
நெருலாவில் ஐஸ்கிரீமோடு விசாரித்ததில்
ரஞ்சனாவுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்
சீமொன் த புவா.
அப்புறம் பிடித்தது தேராதூன் பக்கம்
எருமைப் பண்ணை வைத்திருக்கும்
லாஜ்வந்தி புவா.
அத்தை வீட்டுக்கு
வருஷம் ரெண்டு தடவை போய்
உருண்டு திரண்ட உடம்பு.
எருமைப் பால்.
போனமாதம் தேராதூன் போய் வந்ததும்
டாசர்ட்டில் எழுதிய ரெட்டைப் பனைமரங்கள்
இடைவெளி அதிகமாக இறுகிய சட்டை.
நடராஜன் மெஸ்ஸில் ‘பூவா ‘வைக் கொட்டிக் கொண்டு
ஆரிய சமாஜ வீதியில் கண்ணாற நடந்துவிட்டு
ரஞ்சனா கொடுத்த ‘ரெண்டாம் செக்ஸ் ‘ புத்தகம் பிரிக்க
முப்பதாம் பக்கத்தில் நீளத் தலைமுடி.
நாளைக்குப் புரட்டலாம். மூடி வைத்தேன்.
ஒற்றை முடியைக் கன்னத்தில் இழைத்தேன்.
டாசர்ட்டை இறுக வைத்த தேராதுன் புவா
இன்னும் இரண்டு எருமை வாங்கட்டும்.
எருமை இல்லாது போனால்
எனக்கு எதற்கு சீமொன் த புவா ?
(புவா – இந்தியில் அத்தை; சீமொன் த புவா – பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர்; ‘இரண்டாம் செக்ஸ் ‘ – அவர் எழுதிய புத்தகம்; பூவா – பேச்சுத் தமிழில் சாப்பாடு)
(கணையாழி)
பயணம்
——–
கன்ஷ்யாம் திருடன். மேலிடத்தில்
செல்வாக்கு. மனைவி
அழகாக இருப்பாள்.
கலவரம் என்றால் நாயர்
போகாமலே எழுதுவான்.
சிகப்பு விளக்கு எழுதப் போறான்.
புதுமுகம் தயாராக இருந்தாள்.
துணிமாட்ட ஹாங்கர் இல்லாத வீடு.
பாரீஸ் போகிறார் நம்ம ..
சிகிச்சைக்குத் தானாம்.
ராஜனும் அப்புறம் போகணும்.
நமது கலை விமர்சகி
சிலிக்கன் சிகிச்சை
செய்து கொண்டாள்.
நண்பர்களும் இனி
மண் தின்பார்கள்.
காமிராவை ரொப்பினாயா ?
கலரெல்லாம் பிரமாதமாய் வரணும்,
அங்கே பெண்கள் ரவிக்கை போடுவதில்லை.
வண்டியைக் கொஞ்சம் நிறுத்து.
பெரியவரே, ஆதிவாசிகள் குடியிருப்பு
இந்தப் பக்கம் தானே ?
(கணையாழி)
ஜன்னல்
——–
இருட்டை விதைத்திருக்கிறது.
கருப்புத் திரவமாய்
நிரம்பி வழிந்து
கம்பிகளைப் பற்றிய விரல்களையும்
அரிக்க ஊறும் இருட்டு.
கதவுகளை மூடிவை.
நேற்றுப் பார்த்த சூரியன்
இறந்து போயிருக்கலாம்.
காற்றைக் கூட
வண்ணச் சிறகுகளோடு பார்த்திருந்த
கனவுகள் கலைந்து போக,
சாவோலம் கேட்டுத் தூக்கம் கலைந்த
ராத்திரிகள் திரும்பாதிருக்கக்
கதவுகளை மூடிவை.
ஒப்பாரியிலும் ஒற்றுமைப் படாத
நாய்கள்
வாசல் நனைக்க வேண்டாம்.
சபிக்கும் ராப்பறவைகளின்
வசவுகள் கேட்காது
அறைந்து சாத்து.
மூச்சு முட்டட்டும்.
முட்டிமோதி இழைபிரிந்து
வெளியேறும் வரை
மூடியே இருக்கட்டும்.
கதவுகளை மூடு.
இல்லை, வெளியில் நின்று
எக்கி வேடிக்கை பார்க்காது
விலகிப் போ.
(கணையாழி)
(இரா.முருகன் – ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000)
- வைரமுத்துக்களின் வானம்-3
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- பாரதீ…
- காதல் கருக்கலைப்பு
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- விடியும்! நாவல் – (14)