பாராட்டு

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

புகாரி


பாராட்டு!

உன் பாராட்டால்
தமிழா – நம்
தமிழுக்குச் சோறூட்டு!

O

பாராட்டும் போது வரும்
பெளர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
கம்பி மத்தாப்பு
கொளுத்திக்கொள்ளும்
கண்களைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள்
வேறுண்டா ?

O

மறந்துவிட்டாயா ?

தாலாட்டிப்
பாராட்டியதாலேயே
தோழா நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்

O

தமிழா நீ
சபிப்பதைத் தள்ளிப்போடு
ஆனால்
இன்றே இப்பொழுதே உன்
பாராட்டை அள்ளிப்போடு

O

பண்புயரப் பாராட்டினால்
உனக்குப்
பதவியும் பறிபோகுமா
அன்றி
பற்கள்தான் உடைபடுமா ?

பாராட்டுவதால்
பாராட்டியவன்தானே
பன்மடங்கு உயர்கிறான் ?

O

கலைஞர்களெல்லாம்
நல்ல
பாராட்டும் பண்பாளர்கள்தாம்
ஆனால்
ரசிகன்தானே உலகின்
முதல் மூலக் கலைஞன் ?

O

ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும்
பண்புதான் அதன் மகுடம்

ரசனைகளற்றவனின்
உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா ?

கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடன்தானே ?

காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடன்தானே ?

நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமைதானே ?

O

வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா ?

தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா ?

நிலவு வந்து பாராட்டாமல்
இரவு மனதில் இனிக்குமா ?

மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா ?

இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா ?

O

பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை

அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை

சொந்தம் பாராட்டாமல்
நெஞ்சுக்கு இன்பம் இல்லை

உறவைப் பாராட்டாமல்
உலகில் உயிர்களே இல்லை

O

பாராட்டி வளர்வதன்றோ
எங்கும் கலைகள்

பாராட்டி செழிப்பதன்றோ
நமது சமுதாயம்

O

அடடா…

இப்படி நீ
பாராட்டாமல் கிடந்தால்
அப்படி அப்படியே
அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்

அந்த அழிவின்
இராட்சச வாய் வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா ?

நீதான் தமிழா
நீயேதான்!

*

அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

author

புகாரி

புகாரி

Similar Posts