மனம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நித்தமொரு பித்தமுடன் சித்தமதிற் சீழ்பிடித்து
கத்தும்கடல் போல வீணில் வாழும் – வாழ்வில்
சத்தமின்றி ஓய்ந்து மெல்லச் சோரும் -மனம் சோரும்

நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ஏர்பிடித்து
சுத்த சன்மார்க்க நெறிபேசும் – பொய்மை
வித்தகங்கள் மறைந்த பின்னர் நோகும் – மனம் நோகும்

நீதி நெறி வேதமென பாதிவிழிப் பார்வைகளில்
சோதியொளி முகம் முழுக்கக் காட்டும் -உள்ளே
சாதிமதச் சச்சரவில் ஊறும் – மனம் ஊறும்

ஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளிற் சேதமின்றி
பாதியுடற் தந்தவனைப் பாடும் – வீட்டிற்
நாதியின்றி வந்தவளைச் சாடும் – மனம் சாடும்

செறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை
அறிகின்ற ஆற்றலின்றி வாழும் – பிறர்
எறிகின்ற சொற்களிலே வாடும் – மனம் வாடும்

அறிவின்றி ஓலமிட்டு குறியின்றி கோலமிட்டு
சொறிகின்ற இச்சைகளில் வீழும் -விதித்த
நெறியென்று வெறும் கதைகள் பேசும் – மனம் பேசும்
Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts