‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

இரா.முருகன்


பெண்
—–
கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்.

ஆற்றங் கரையில்
ஊற்றுத்தோண்டிக்
கதைகள் பேசி
அலுத்த பின்னே
குடம் நிறைத்து
ஈரமண் உதிரும்
சிற்றாடை அசையக்
கூடநடந்து வந்த தோழிகளைத்
தேட மாட்டேன்.

அப்பா வந்ததும் குதித்தோட
அண்ணாவோடு காத்திருந்த
கல் யானைப் படிகள் ஏறி,
ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில்
அம்மாவின் பழம்புடவை
தரை புரளும் ராணியாய்
வலம் வந்த திண்ணை கடந்து
இருண்ட நடையுள்
போக மாட்டேன்.

மெளனமாய்க் கண்ணீரில்
அம்மா கரைய,
அண்ணா உறவு மறுக்க,
தெருவே கூடிப் பேசி நிற்க,
படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும்
அப்பாவையே பார்த்தபடி
நின்ற கூடத்தில்
பாதம் பதிக்க மாட்டேன்.

உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்.
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்.

(கணையாழி)

நாளை, இல்லை மறுநாள், இல்லை என்றாவது
———————————————

ராத்தங்கக் கூடாத
கிட்டப்பாவை
சாயந்திரமே எரித்தபோது
வெட்டியானுக்கு விறைப்பு.

ரெண்டு பொங்கலுக்கு
வாசலிலே நின்னு
வசவுதான் கிடைத்ததாம்.
‘கட்டிக்கிட்டா போனாரு ? ‘

கொள்ளி போட பிள்ளை
தாராள மனதோடு
கொடுத்தது இருபது ரூபாய்.
பம்பாயிலிருந்து இனிமேல்
மாதாந்திர மணியார்டர் மிச்சம்.

ஊருணிக் குளியல்.
சொறிந்து கொண்டு
கோனார் கடையில் பரோட்டா.
இழுத்து நின்ற நாய்களைப்
பிரித்து விட்டு
இரண்டாம் ஆட்டம்
பழைய படம்.

இடைவேளையில்
மூத்திரப் புரையில்
ஒருத்தன் சொன்னான் –
நாளைக்கு இண்டர்வ்யூ.

கொஞ்ச நேரத் தூக்கத்தில்
பம்பாயிலிருந்து வந்து
வெட்டியானுக்கு நூறுரூபாய்
கொடுத்தேன்.
பக்கத்தில் நின்று
அப்பா சிரித்தார்.

(கணையாழி)

சூழல்
——

என்மேல் எச்சமிட்டுப் போன
பறவைக்கு
நீலச் சிறகுகள்.

தொழிற்சாலைப் புகை சேராத
சுத்த வானிலும்
பறவைகள் இருந்தன.

கொடிக் கம்பத்தில்
அலகு தேய்க்கும் ஒன்று.
நாயர் கடையின் தகர அடைப்பைத்
தட்டிப் பார்க்கும் வேறொன்று.

பட்டுப் போன தொட்டிச் செடிகளில்,
சைக்கிள் ஸ்டாண்ட் விநாயகர் தோளில்,
கண்ணாடி உடைந்த ஆபீஸ் ஜன்னலில்,
எங்கும் பறவைகள்.

சங்கக் கட்டிடக் கூரையில் சிலவோ
தலைவர் போல நடைகள் பழகும்.

உச்சி வெய்யிலில் ஊர்வலம் வந்து
வெட்ட வெளியில் வியர்த்து நின்று
இன்னும் கொஞ்சம் உரைகள் கேட்டு
அடைத்த கதவைப் பார்த்துப் போகிறார்.

வெய்யில் தாழப் பறவைக் கூட்டமும்
விண்ணில் ஏறி மறைந்து போகும்.
இரைச்சலும் புகையும் இல்லா இடங்களில்
பறவைகள் இனியும் திரும்பி வரும்.

(கணையாழி)

இடம் பெயர்தல்
—————

பழைய நகரம். பாதை மறந்து
குழம்பித் தவிக்க ஒருவன் சொன்னதால்
கிழக்கே போனேன். சுற்றி வந்தால்
பலகை அடைத்த செருப்புக் கடையின்
வாசலில் நின்று திரும்பவும் அவனே
மேற்கு என்றான் சிரித்த படிக்கு.

நடந்த வழியும் அவனில் முடிய
இன்னும் எங்கோ கையைக் காட்டினான்.

தேடல் மறந்து சூரியன் போல
விரியும் கைகளின் திசைகள் சார்ந்து
இருண்ட தெருக்களில் அலைந்து திரும்பித்
தளரும் நேரம் கண்ணை விழிக்கிறேன்.

காலை எடுத்து நாலு நாளாச்சு.
கட்டைகள் வரும்வரை பொறுக்க வேணுமாம்.

அப்புறம் படுத்தால் ஏழெட்டுப் பேரை
ஒன்றாய்க் கிடத்தித் தூக்கிப் போகும்
ஊர்வலம் ஒன்று. அழுக்குத் தலையணை
வேண்டா மென்று மறுக்க மறுக்கச்
சுமந்து போயினர். எழுந்த போது
வந்து இருந்தன கட்டைக் கால்கள்.

(கணையாழி)

நாயம்
——

கோவாலுக்குக் கொள்ளைப் பிரியம்.
மிட்டாய்க் கடைக்கும் மீன் சந்தைக்கும்
சிட்டுக் குருவி லேகியம் வாங்கவும்
கூட்டிப் போவான் சைக்கிளில் ஏற்றி.
ராமே சரத்தில் வாளிக்காரன்
பின்னே நடந்து ஈரத்தோடு
தீர்த்த மாடப் போனதாய்க் கேள்வி.
கோவாலு மச்சினிக்குக் குமட்டல் எடுத்தால்
கோவாலைக் குரைப்பதில் என்ன நாயமாம் ?
கொன்று புதைத்தான் கோவாலு.

எலுமிச்சை மரத்தின் கீழ் நாய் தூங்க
ஏணையில் கோவாலு மகன் கிடக்கக்
குச்சு நாய் வேணுமாம் குழந்தை விளையாட.

(கணையாழி)

கணக்கெடுப்பு
————–

முகமுடி யணிந்தோம்
எனது நீலம்
பழுப்பாய்த் தாடை மயிர் துருத்த
மற்றவர் அணிந்தனர்.
கறுப்பும் இருந்தது.

காற்றில் நெடிகள் ஏறின.
வெளியே ஊர்திகள்
வேகம் கொண்டன.
வானம் சுருங்கக்
காகிதம் ஒட்டிய சுவர்கள்
உள்வளைந்து தொடமுயல
யந்திரம் ஒன்று பாடியது.

சூழ்ந்து நீரழுத்தும்
ஒழுங்கை யுள்ளே
மெல்ல நடந்தோம்.
செவ்வகமாகக் கிடந்த அறை.
வெளிர் நீல விளக்கில்
படுத்திருந்தார்கள்.

எண்ணத் தொடங்கினோம்.
எல்லாம் சரிதான்.
போகலாம்.
மணி ஒலித்தது.

சுகாதாரமான அலுவலகத்தில்
தட்டச்சுப் பொறிகள் நிறுத்திப்
பெண்கள் கேட்டனர் –
‘எத்தனை இருந்தது ? ‘
முகங்கள் கழற்றினோம்.
நாளை எனக்கு நீலம் –
நண்பன் சொன்னான்.

‘எத்தனை இருந்தது ‘ ?
மறுபடி அவர்கள்.
விரித்த கோப்பில்
என்பெயர் கண்டேன்.

எண்ணத் தொடங்கினர்.
ஒன்று என்று நீண்ட விரல்கள்
என்னைச் சுட்ட.

(கணையாழி)

வீடு விற்பனைக்கு
—————–

என்ன கேட்டார் வண்டிக் காரரே ?
ஊருக்கு நானொன்றும் புதுசு இல்லை.

மாறிப் போச்சுங்க ஊர் முச்சூடும்.
மாறாதது நானும் என் குதிரையும்.

பூட்டிய வீட்டு வாசலில் நிறுத்தும்.
போட்டுக் கொடுங்க முதல் சவாரி.

கதவைத் திறக்கப் புழுதி படிந்த
வாசல் திண்ணை. ( ‘சுதந்திரச் சங்கு ‘
வீசிப் போவார் சுதேசி நாயக்கர்.)

(தீபாவளிக்குக் காந்தி சொற்படி
கதர்தான் வாங்கணும். சிந்தாமணியில்
பாகவதர் டாக்கி. சீட்டுக் கிடைச்சுதா ?)

சவுக்கிய மெல்லாம் எப்படாங்க ?
வெங்கடா சலமா ? தவறிப் போய்
வருசம் நிறைய ஆகிப் போனதே.

‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ‘
சுக்கலாய் உடைந்து கிடந்தது.
ராட்டைப் பெட்டியில் வண்டுகள்.
ரிஜிஸ்தர் ஆப்பீசில்
பத்திரம் பதிந்தேன்.

வழக்கம் போல் ரயிலடிப் பலகை
விசாரிக்கிறது –
‘இந்த வாரம் விகடன் படித்தீர்களா ? ‘
மாதுங்காவில் போய்த்தான் வாங்கணும்.

நல்ல வரனாய்ப் பெண்ணுக்கு அமையணும்.
தெரிஞ்சால் சொல்லும் பம்பாய்க் குள்ளே.

( ‘அன்னம் விடுதூது ‘)

வெளி
——

சைக்கிள் படிக்கும் சிறுவன் தவிர
மைதானத்தில் யாரையும் காணோம்.
தூங்கும் மரத்தின் வெள்ளைப் பூக்கள்
சிதறிய தரையில் முள்ளால் எழுதிய
பெயர்கள் மற்றும் உருளைக் கற்கள்.
கிடந்த வாக்கில் சக்கரம் சுழலச்
செங்குத் தாகவோர் வெறுமை நின்றது.

குதிரைகள் வந்தன. முதலில் ஒன்று
வெறுமை தகர்த்து வெட்ட வெளியில்
சாம்பல் பூசி மெல்ல நடந்தது.
அழியும் முன்னர் மற்றொன் றாங்கே
மேலும் அந்நிறம் பூசிச் சென்றது.
செம்மண் பரப்பில் நீளநட்ட
சாம்பல் தளத்தின் எல்லைகள் விரிய,
இன்னும் வந்த குதிரைகள் எல்லாம்
வேகம் கொண்டு வெளியை நிறைத்தன.

சாம்பல் பூசிய காற்றும் அதிர,
அடிப்படைப் பரப்பும் காலில் மறைய,
புதிய தளத்தில் இயக்கம் மிகுந்தது.
ஒதுங்க நினைத்தேன். ஓடலானேன்.
முதுகில் விசிறும் ஈர வால்களும்
முகத்தில் எழுத முற்படும் கால்களும்
தவிர்த்து விரையப் பரப்பு நீண்டது.

சைக்கிள் சிறுவன் போய்விட் டிருந்தான்.
வியர்வைத் துளிகளில் சாம்பல் உதிரத்
திரும்ப நோக்கினேன். இருட்டு மழையில்
தொலைப்புலம் எல்லாம் மசங்கித் தெரிய
வண்டுகள் ஒலிக்கும் நிசப்தம் கிழித்து.

(கணையாழி)

(இரா.முருகன் – ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000)
eramurukan@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts