மரம்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

வை.ஈ.மணி


தனித்து தினமும் புரியும் தவத்தில்
….. துதிக்க அனேக கரங்கள் குவித்து
அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன்
….. அறிந்து அளித்த வாழ்வின் நிலையை
நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை
….. நல்க வீண்டும் கருணை கோரி
எனக்கு விடுத்த பணியை என்றும்
….. இன்பம் பொங்கச் செய்யக் காணீர். (1)

சுற்றிலும் வாழும் மற்ற உயிர்கள்
….. சுற்றித் திரிந்து வாழ்வ தறிந்து
சற்றே கால்கள் இலாத சோகம்
….. திரண்டு பொருமி எழுந்த தெனினும்
மற்ற பிராணி கட்கு முற்றும்
….. மகிழ்ந்து சேவை செய்யும் வாய்ப்பு
பெற்ற பேற்றை எண்ணிப் பெரிதும்
….. பெருமை கொண்டு நிமிர்ந்து நின்றேன் (2)

தன்னலம் கருதி வளர்க்கும் தருவும்
….. தவிர, தோப்பும் செடிகள் யாவும்
தன்னுடல் போற்ற உணவுப் பொருட்கள்
….. சுகித்து வாழும் மனைக்கு மரமும்
தன்னுயிர் காக்க அசுத்த சுவாசம்
….. சுத்தப் படுத்தும் பணியும், என்றும்
இன்புற நீரும் நிழலும் பெறவே
….. என்ற உண்மை அறியார் யாவர் ? (3)

மலையிலும் காட்டிலும் காணும் மரங்கள்
….. மனிதன் வைத்து வளர்க்க வில்லை
அலைபோல் அசையும் புல்லின் அழகை
….. அனுபவித் தின்புறும் மனிதன் மேலும்
நிலவின் அழகை இலைகளின் ஊடே
….. நிரம்பப் பருகி மகிழ்வான் எனினும்
அலுக்கா துழைக்கும் மரத்தின் ஆவல்
….. அறிய என்றும் முயன்ற தில்லை (4)

பறவை பூச்சி காற்றும் புழுவும்
….. பரவ உதவும் மரத்தின் விதைகள்
அறிவு பெற்றும் மனிதன் அழிக்கும்
….. அரிய சேவை புரியும் மரங்கள்
இறைவன் அருளால் உணர்வு பெற்றும்
….. இரக்க மின்றி மனிதன் செய்யும்
சிறிதும் நன்றி யற்ற செய்கை
….. சொல்ல வாயும் பெற்ற தில்லை (5)
வை.ஈ.மணி

ntcmama@pathcom.com

Series Navigation

author

வை ஈ மணி

வை ஈ மணி

Similar Posts