இராம.கி.
தன்னேர்ச்சி
ஆறொழுங்கை வளைச்சாலை;
அதனிடையே இருவழியும்
தாறுமாறாய்த் துரப்புநிலை;
தடுப்பெனவே கயிறுகட்டிக்
கூறுபோட்டும், கயிறொதுக்கிக்
குனிந்துசெல்லும் குடிமக்கள்;
ஏறுகொண்டு வாரோதோ
எங்கிருந்தோ தன்னேர்ச்சி ?
உந்துபல விதவிதமாய்;
ஒவ்வொன்றும் தனிக்கதியே;
விந்துவதும் முந்துவதும்,
வீள்வெடித்துப் பம்புவதும்,
சந்தினிடை முண்டியெழ
சடுசடுத்து ஏகுவதும்,
வெந்துவர எத்தனிப்பின்
வெருவாதோ தன்னேர்ச்சி ?
நாலுவழிச் சந்திப்பு;
நல்வழிக்கு செய்கைஒளி;
ஏலுதற்குப் பச்சைவிளக்
கேகிடுமுன் முடுக்குவதும்
ஓலமிடப் போகுவதும்,
உள்நுழைந்து சாலுவதும்,
கோலமிடப் போகிவரின்
கூடாதோ தன்னேர்ச்சி ?
எம்மூரின் சாலைகளுள்,
என்றேனும் எம்மக்கள்,
கும்மிவிடும் போதுகளில்,
கொள்ளுவரோ சாலைவிதி ?
தம்வீட்டின் குப்பைகளை
தம்சாலை நெடுகேனும்
எம்பியெறிந் தேகுவதால்,
எண்ணுவரோ தம்பொறுப்பை ?
நீச்சல்
‘டேய், குதிரா, ஒண்ணும் ஆகாது;
பொட்டப் புள்ளேயாட்டம் பயந்தா, எப்படி ?
சோமு இருக்கான்லே, பார்த்துக்குவான்.
ஊமுன்னு இழுத்து, மூச்சைப் புடிச்சுக்க;
தண்ணியை மட்டும் குடிச்சுராதே, என்ன ? ‘
தாவி, முழுங்கி, தன்கரத்தை மேல்தூக்கி,
ஆவி, அரற்றி, அப்படியே நீர்குடிச்சு,
வெடவெடத்துப் படபடத்து, வெப்பமெலாம் உள்ளேற்றி,
இன்னும் கீழேயா ? எத்தனைதான் ஆழமிது ?
கண்ணுக்குத் தெரியாமக் கடலாட்டம் கம்மாயா ?
கண்முன்னே கணநேரம் காட்டும் ஒரு பளிச்சீடு
‘கண்டனூருச் செல்லாத்தா, காப்பாத்திக் கொடுத்துரும்மா!
வையைக்கரை கம்மாயின் வனமெங்கும் சுற்றிவந்து,
ஆவியாய் நான் அலைஞ்சு, அடுத்திருக்கப் பிறந்தேனோ ?
மானோடும், மந்தோடும் மஞ்சுநிற மயிலோடும்,
கானோடும் பன்றியொடும் காட்டு முயலோடும்
நான் அலையக் காத்திருந்து, நல்லவிதம் ஆவேனோ ?
மரத்தில் இருப்பேனா ? மண்ணில் இருப்பேனா ?
கால் தரையில் பாவிடுமா ? பாவாமல் காலிடுமா ?
என்னுடைய முடிவெளுப்பா ? எங்கெங்கும் ஆழ்கருப்பா ?
சண்டவளி ஆவேனா ? சாமியாடித் திரிவேனா ?
பண்டாரம் ஆவேனா ? பட்டையொடு உருத்தாக்கம் ? ‘
மங்கிக் கலங்கி மருண்டு உழந்திருந்து
தொங்கித் தவித்துத் துவளுகின்றது உள்நினைவு
‘டேய் கிட்டு ‘,
கன்னத்தையும் தலையையும்
யாரோ தட்ட,
மெல்லக் கண்விழிக்கிறேன்.
சுற்றும் பலபேர்கள்;
சோமு, அருண், மாணிக்கம்,
வாயிருந்தும் மூக்கிருந்தும் வழிந்தோடும் புளிவீச்சம்;
காயழுகும் படிகிடந்து கண்மலங்கப் பார்க்கின்றேன்.
திரள்மீசை; கொண்டைமுடி; தேர்ந்தே அறிந்தமுகம்;
எங்கள் வீட்டுச் சமையற் காரர்,
சாமியாடி நாராயண அய்யா;
‘ஏண்டா டேய், படவா, யாரைக் கேட்டு
கம்மாய்க்குள்ளே குதிச்சே;
குரல் கேட்டு நான் வரலைன்னா
என்ன ஆயிருக்கும் ?
வா, உங்க அய்யாகிட்டே சொல்லிடுறேன். ‘
எல்லாம் முடிஞ்சு எங்களய்யா முன்னாடி
நின்னு தலைகுனிஞ்சு நேர்ந்துகொண்ட பேச்சாலே,
கண்ணு கலங்கி கதிகுலுங்கிப் போனகதை
சென்மம் முழுதுக்கும் சேர்த்துவச்ச சொத்தாகும்;
நாற்பத்தைந் தாண்டாச்சு; நானின்றும் கேட்பதுவோ
‘நீச்சல் ‘னா என்னாங்க ? ‘
ஐந்திணைக் காட்சிகள்
ooooo
கோடு போட்டமாதிரிச் சாலைகள் போறதுக்கு,
இது என்ன பாலையா ?
‘மருதங்காணும், மருதம்;
பொன்னு வெளையுற மருதம் ‘;
வயலும் வயல் சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா ?
கும்மோணத்திலேர்ந்து மாயவரம் போறதுன்னா,
அப்படியும் இப்படியும் ஆறுமாதிரி வளைஞ்சுதான் ஓடும்;
ஆற அமர வேடிக்கை பார்த்துக்கிணு போகும்;.
அங்கே பார்த்தீரா, ஓய் ?
இறவையைப் போட்டுட்டு குத்தாலம் மாதிரி
தண்ணிக்கடியிலே தொட்டிலே குளிக்குறான்,
இதுதான்யா மருதம்!
ooooo
அலையடிச்சு உப்புக்காத்துலே மணல் திரைக்க,
இது என்ன நெய்தலா ?
‘பாலைய்யா, பாலை;
பொட்டக் காட்டுப் பாலை ‘;
முல்லையும் குறிஞ்சியும் திரிஞ்சுன்னு கேள்விப் பட்டிருக்கீயளா ?
மதுரைலேர்ந்து தூத்துக்குடி போறதுன்னா,
இப்படித்தான் காட்சி திரிஞ்சு போயிட்டே இருக்கும்;
பனை, வேலிக்கருவை, புளி, கள்ளி, ஆடாதொடை;
அங்கே பார்த்தீங்களா,வே ?
வேகாத வெய்யில்லே பதநீரு, நீர்மோரோட
வெள்ளரிப்பிஞ்சையும் நுங்கையும் கூடைலெ விக்கிறான்,
இதுதான்வே பாலை!.
ooooo
வேங்கையும் கடம்பும் பூச்சொரிஞ்சு தடம்போட,
இது என்ன முல்லையா ?
நெய்தல் ஓய், நெய்தல்;
நீலப்பூ நெறஞ்ச நெய்தல்
கடலும் கடல்சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா ?
பிச்சாவரத்துலேப் படகு எடுத்துப் போனீருன்னா,
உப்பங்கழியிலே போயிட்டே இருக்கலாம்;
புன்னை விழுது, இறாலு வலை, செங்கால் நாரை
அங்கே பார்த்தீரா, ஓய்,
நாட்டுத் துமுக்குச் சத்தம் டொக்குன்னு கேக்குது;
கொக்கைச் சுட்டு டப்புன்னு விழுத்தாட்டுறான்,
இதாரும் நெய்தல்
ooooo
மஞ்சு தழுவ நெஞ்சடைக்கப் பச்சை போர்த்திப் படங்காட்ட
இது என்ன குறிஞ்சியா ?
முல்லைய்யா, முல்லை;
மோகமுள்ள முல்லை;
காடும் காடுசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கியளா ?
முண்டந்துறை பாவநாசம் போற வழியிலே,
அடர்த்தியாப் பேரு தெரியாத மரங்கள்,
புலி, மான், முயல், காட்டுப் பன்னி,
அந்தத் தடத்தைப் பார்த்தியளா,
நேத்து இந்தப் பக்கம் புலி நடமாட்டம்
இருந்துருக்கோணும்; வாசனை தெரியேல்லை!
இதுதான்வே முல்லை.
ooooo
வைக்கலை அசைபோட்டு, எருமையாட்டம் சோம்பேறியாத் திரிய
இது என்ன மருதமா ?
குறிஞ்சிங்க, சாமி குறிஞ்சி
கோடைக்குச் சொகமான குறிஞ்சி;
மலையும் மலைசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா ?
நிலக்கோட்டைலேர்ந்து கோடைக்கானல் அம்புட்டுக்கும்,
மரமும், வெளியும், தடமும், தேன்கூடும்;
பச்சப்பசேல்னு, நடுவிலே அமைதியாப் பாறை,
அந்தப் பச்சை மலை பார்த்தீங்களா ?
வளைஞ்சு, வளைஞ்சு மானம் வரைக்கும்,
இந்த வருசம் டாண்ணு நீலமாப் பூத்துரும்;
இதுதாங்க குறிஞ்சி
***
poo@giasmd01.vsnl.net.in
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- பணமே உன் விலை என்ன ?
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்