மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

சேவியர்


மிச்சமிருப்பவை

கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்
சூரிய பானத்தை
நிலாக் கோப்பை
குளிர வைத்துப் பரிமாறும்.
நிலவும் சூரியனும் இன்னும்
அயல் தேசக் காப்புரிமைக்குள்
அடைக்கப்படவில்லை.

தொட்டு விட இயலாத
தூரப் புள்ளிகளை
பூமி
நட்சத்திரமென்று பெயரிட்டு
உலகுக்கெல்லாம் உரிமையாக்கும்.

மிதக்கும் கட்டிடங்கள்
இப்போதைக்கு
சாத்தியமில்லாமல் போனதால்
தூரவானம் இன்னும்
கம்பி வேலிகளுக்குள் கட்டப்படவில்லை.

துருவப் பனி எப்போதும்
தீர்ந்து போகாது என்பதால்
யாரும்
வெட்டி எடுத்துச் செல்வதில்
வெட்டுக் குத்து நடப்பதில்லை.

இன்னும்
காற்றுக்கு வரி கட்டும்
காலம் வரவில்லை.

ஆற்றுக்குள் மணலெடுத்தால்
ஊற்றெடுக்கும் பிரச்சனைகள்.
பாலைவனத்தில்
மணல் திருடினால்
யாரும்
பொருட்படுத்துவதில்லை.

மேகத்தைப் பிரிந்து
தாய் வீடு திரும்பும்
மழைப்பெண்ணுக்கு
வானத்தில் வரப்புகள் இல்லை.

கீழே விழுந்தபின் தான்
அவை
அரசாங்க அணைக்கட்டுகளில்.

விதிமுறைகள்
பூமியில் வித்தியாசமானவை.

இழுத்துப் பிடித்து
அமுக்க முடியாததெல்லாம்
பொதுவுடமை.

விரட்டி விரட்டி
வால் தொட முடிந்ததெல்லாம்
தனியுடமை !

0


மனித இலைகள்

0

தனிமையில் நிற்கிறது
அந்த
ஒற்றை மரம்.

பனிக்காலத்துக்கு முந்திய
ஓர் இரவுப் பொழுது
ஆக்ரோஷமாய் அடித்த
திகில்க் காற்றில்
கொலையாகி விட்டன இலைகள்.

விழுந்து விட்ட
இலைகளில் சில
இன்னும் மர இடுக்குகளில்
மரண வலியில்.

இன்னும் சில
மரத்தில்
காலைக் கட்டிக் கொண்டு
மரணித்துப் போய்விட்டன.

இலைக் கூடுகள்
கண்முன்னால் கலைவதைக் கண்டு
மெளன அஞ்சலியில்
மூழ்கிக் கிடக்கிறது மரம்.

வீழ்ந்து விட்ட இலைகள்
வேருக்கு உரமாகி
மேலேறி வரக் கூடும்.
இல்லையேல்
கூட்டப்பட்டு
எங்கேனும் கொட்டபடலாம்.

நாளையும்
மரத்தில் இலைகள் முளைக்கும்.
புத்தம் புதிய இலைகள்.

மழலை இலைகளின்
இடை வருடலால்
மரம் மகிழக் கூடும்.
பழைய இலைகள் குறித்த
கவலைகளைக் கிளைகள்
குறித்து வைக்கவும் மறக்கக் கூடும்.

வீழ்ந்து போன இலைகளின்
தடயங்களும் மறந்தபின்
அடுத்த தலைமுறை
விடைபெறும். அதே அழுகையுடன்.

0


இரண்டடி தூரத்தில் வெற்றி

0

வெற்றி என்பது
பதக்கங்களை பெறுவதிலில்லை
அதை நோக்கிய
பயணத்தில் இருக்கிறது.

அங்கீகாரங்களே
வெற்றிகளென்று நாம் தான்
அர்த்தமில்லாமல்
அரற்றிக் கொண்டிருக்கிறோம்.

சில
பல்கலைக் கழகப்
பட்டங்களிலில்லை
வெற்றியின் சுவடுகள்,
அவை
சென்ற வகுப்பறையில்
தின்ற பாடங்களில் இருக்கின்றன.

மைல் கல் என்பது
ஊரை அடைந்ததற்கான
உத்தரவாதம் தான்.
அதுவே ஊர் இல்லை.

கடைசி வினாடியில்
கை நீட்டியவன்
நீச்சலில் முதலிடம் வரலாம்,
ஆனால்
நீந்தினேன் என்பதே
நிஜமான வெற்றி.

வெற்றி என்பது
கோப்பைகளைப் பெறுவதில் இல்லை.
கோப்பைகளைப்
பெறுவது மட்டுமே வெற்றியல்ல
என்பதைக்
கண்டு கொள்வதில்.

0

Xavier_Dasaian@efunds.com

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts