நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ராம் பால்


பரம்பொருள்..

வெற்றிடமாய் எங்கும் நான்
வியாபித்திருக்க
ஒற்றைப் புள்ளியில் நீ
மையமாய் குவிந்திருக்கிறாய்..

பட்டமாய் நான்
பறந்து கொண்டிருக்க
ஆட்டுவிக்கும்
கயிறாய் நீ..

சண்டை சச்சரவு
என நான் சுற்றித்திரிய
சமாதானமாய்
நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய்…

படைப்பின் பெருமையில்
நான் பூரித்திருக்க
ஒன்றுமே அறியாதது போல்
படைத்துக்கொண்டிருக்கிறாய்…

அதிசயங்களைக் கண்டு
நான் ஆர்ப்பரிக்க
நீயோ அமைதியாக நின்று
அதிசயமாகிறாய்…

நான் முடிவைப்பற்றிய
பயத்திலிருக்க
நீயோ முடியாத முடிவாய்
தொடர்ந்துகொண்டிருக்கிறாய்..

உன்னைத்தேடி நான்
எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்க
என்னுள் நீ
ஒளிந்திருக்கிறாய்…

சலிப்பு..

கடிகார முள்ளோடு
வாள் சண்டை
போட்டு சலித்து…

நீண்டு..
சுருங்கி
நீண்டு..
பின் மறைந்து
போன நிழல்
காணச் சகியாமல்..

புரட்டி புரட்டியே
புத்தகங்களின்
பக்கங்களுக்கும்
வலி வந்து
என் ரேகை கூட
கொஞ்சம் தேய்ந்து..

எலி பிடித்து
வலையில்
விளையாடி
ஓய்ந்து..

வண்ணங்கள்
குழைத்து
காகிதங்களில் வாரி
இறைத்து…

போதும்..
இவைகளெல்லாம்
என்று
சலித்துப் போய்..

பொழுதை
வெட்டியாக
போக்கவேண்டுமென்று
உன்னை விளையாட்டாய்
காதலிக்கப் போய்…

தூக்கம் போய்…
கண்களில் கனவுகள்
குடியேறி..
வானத்திற்கு
வீடு மாற்றி..
வீட்டிற்கு
வெள்ளை அடிக்க
சுண்ணாம்பு
தேடி சலித்துப் போய்…

தனிமை பூதம்..

மயான அமைதியின்
நிசப்தத்தில்..
கரு வண்டுகளின்
ரீங்காரத்தில்..
ஒட்டடை அடைந்த
காற்றாடியின்
சத்தத்தில்…
என்னை
காலவேக வாகனத்தில்
அமர்த்தி
உலகு சுற்றி
பழைய நினைவுகள்
குப்பைகளாகக்
கிளறப்பட்டு
கொத்தி கொரித்து
தின்று
எப்போதோ
வாசம் செய்து
போனவளையும்..
மரணமடைந்த
ஆருயிர் நண்பனையும்..
கில்லி விளையாண்ட
பொழுதுகளையும்..
ஒரு சுற்று
சுற்றி விட்டு
அமைதியில்லாமல்
நிலை கொள்ளா
தவிப்பை உருவாக்கிவிட்டு
என்னை
உற்று உற்றுப் பார்க்கும்
தனிமை பூதம்..

வாடிக்கை மனிதர்கள்…

அரசு அங்காடியின்
நீண்ட வரிசையில்
நிற்கும் பொழுது
ஏறிவிட்ட விலைவாசி பேசும்..

கால தாமதமாய்
வரும்
பேருந்தின் கூட்டம் கண்டு
போக்குவரத்துக் கழகம்
பற்றியும் பேசும்..

ஏறிவிட்ட பேருந்தினுள்
ஜந்துக்களிடையே அகப்பட்ட
இளம்பெண்ணைக் கண்டு
ஓர் நொடி கோபம் கொண்டு
குடும்பம் கண்முன் வர
கையாலாகத்தனத்தை
ஞாயிறு ஹிண்டுவிலும் எழுதும்…

தேர்தலில் குத்த வேண்டிய
முத்திரையை
மனதிற்குள் நினைத்து
எல்லோருமே
அயோக்கியர்கள் என்று
வீட்டிலேயே
முத்திரை குத்தி
தொலைக்காட்சி பார்க்கும்..

ஓய்வு பெறுவதற்குள்
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
ஒரு மனையடி வாங்கி
வீடு கட்டி பார்த்து
ஓய்வாய் நாற்காலியில்
அமர்ந்து
செய்தித்தாள் படித்து
கண் மூடும்..

rambal@operamail.com

Series Navigation

author

ராம் பால்

ராம் பால்

Similar Posts