நிகழ் காலம்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

மீ.வசந்த், சாத்தூர்.


இந்தியாவிடம்
நலம் விசாரித்தேன்,
இருக்கிறதாம்.
இன்னும் அப்படியே
இளமை மாறாமல்.

புரியவில்லை.
இ..ள..மை மா..றா..ம..ல் ? ? ?

அர்த்தம் கிடைத்தது.
வளர்ச்சிகள் இல்லாமலும்
வசதிகள் இல்லாமலும்…
முன்னெப்படியோ
அப்படியே இன்றைக்கும்.

வருத்தம் தான்.
கூப்பிடும் தூரத்தில்,
சீனக் குழந்தைகள்,
எலெக்ட்ரானிக் யுத்தத்தில்
விளையாடிக் கொண்டிருக்க..,
நம்
கிராமத்து குழந்தைகளின்
புத்தகப் பையில்,
அலுமினியத் தட்டொன்று
சத்துணவுக்காய் காத்திருக்கிறது
பசியோடு…

‘சார்ஸ் ‘க்கு பயந்து
முகமூடியோடு திரியும்
நம்மைப் பார்த்து சிரிக்கலாம்,
கழிவுநீர் கால்வாயில்..,
இரயில் பாதையோரத்தில்..,
சாலையோர கழிப்பிடத்தில்..,
உண்டு , தூங்கி
உயிர் வாழும்
நம்
மனிதர்கள்.

என்னை விட
நன்றாய் படித்த,
அய்யர் பாலாஜியை
தற்செயலாய் சந்தித்தேன்,
பிள்ளையார் கோவில் அர்ச்சகராய்.
உயர்சாதி என்பதால்
இன்ஜினியரிங் போக
அரசாங்க கோட்டா
அனுமதிக்க வில்லையாம்,
இன்றளவு இந்தியாவில்
இருபது கோடி
கோவில்கள் இருக்கலாம்.

சென்னை தி.நகரில்
இந்திய ஜனத்தொகையின்- ஒரு
சின்னத்துளி நெரிசலில்
சிக்கித் தினறினேன்,
இங்கே
குடும்பக் கட்டுப்பாடு
திட்டம் உண்டு.
தலையில் குட்டி,
கட்டாயமாய் சரிசெய்ய
சட்டம் இல்லை.

கள்ளிப்பாலில்
கரைகின்ற உயிர்கள்
‘கருத்தம்மா ‘ வந்தும்
குறைந்த பாடில்லை.
இருந்தாலும் உண்டு
தெருவுக்கு இருபது
மாதர் சஙகம் ? ?!

சின்ன வயதில்
என்னோடு,
பம்பரம் விளையாடிய
இராமசாமி,
பாம்பு கடித்து
செத்து(ப்) போனானாம்!! ?
பாவம் ஊரில்
மருத்துவர் எவருமில்லை.
அத்தோடு
பக்கத்து ஊர் போக,
பஸ்சும் இல்லையாம்.

கனிப்பொறி வலைக்குள்
கட்டி வைத்துள்ள திண்ணையை
சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு
இன்டெர்நெட் தேடினேன்,
மின்சாரமில்லாத ஊரில்.
ஆம்-இன்னும்
நம் இந்தியாவில்
மின்சாரமில்லா கிராமங்களுண்டு.

முடிவாய் தமிழகத்தில்
அரசியலை கொஞ்சம்
அலசிப் பார்க்க
ஆசைப்பட்டேன்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
எல்லோரும் ஜெயிலுக்குள்.
எஞ்சியுள்ள கலைஞர்களும்
எதிர்க்க வழியின்றி…
இலக்கியத்துள் புகுந்துவிட,
ஆளும் கட்சி பற்றி…
நானேதும் சொன்னால்
நாளையே உள்ளிருப்பேன்
‘பொடோ ‘ வில்.

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

author

மீ.வசந்த்,சாத்தூர்.

மீ.வசந்த்,சாத்தூர்.

Similar Posts