இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

புதியமாதவி, மும்பை 42.


ஆகாயக்கோட்டை
————–
ஆகாயமே-
உன் கதவுகளை
எனக்காக
ஏன் திறந்துவிட்டாய் ?

உன் வாசலில்
ஆயிரம் நிலவுகள்
ஆனாலும்-
பூமியின் நிலவுக்கு மட்டும்
ஏன் பொட்டு வைத்தாய் ?

உன் பிரபஞ்சத்தில்
கோடி சூரியன்கள்
ஆனாலும்-
உன் மனத்தேரில்
மண்ணின் சூரியனுக்கு
ஏன் மாலையிட்டாய் ?

ஆகாயமே..
ஓடும் மேகங்கள்
உறங்கட்டும் என்றா
என் சின்ன இலைகளில்
கூடு கட்டினாய் ?

இன்று-
மலைமுகடாய்
நான் தொட நினைக்கையில்
எட்டாத கனவோடு
எங்கே ஓடினாய் ?

பருவ மழையாய்
பிறந்த போதெல்லாம்
உறவு வயல்களுக்கே
உயிர்ப் பாய்ச்சினாய்

இன்று-
உனக்காக
பதியம் போட்ட
முல்லைப் பந்தலை
பார்க்காமலேயே
ஏன் பாலையாக்கினாய் ?

உன்னை-
தொட்டுவிடுவேன் என்றா
என் இமைகளில்
தூங்க மறுத்தாய் ?

என் இதழ்கள்
பட்டுவிடும் என்றா
உன் பாடலை
எழுதாமல் முடித்தாய் ?

**

காற்றே..வீசாதே..!!
——————

காற்றே..
கதவுகளில்லாத என் தோட்டத்து
காவலுக்கு வந்தக் காற்றே..!

என் பூக்களைத்
தொட்டுவிடாதே..!
சூரியதேவனை
மணப்பதற்காக
சூடிக்கொடுத்த பூமாலை
உன் கைப்பட்டால்
பட்டுவிடும்!
வாசனைத் தொட்டால்
வாடிவிடும்!

காற்றே.. அசையாதே!
பூவின் அந்தரங்கம்
உடைந்துவிடும்

காற்றே..வீசாதே!
பூவின் விதிவிளக்கு
அணைந்துவிடும்.

>>>>>>>>>>>>>>புதியமாதவி,
மும்பை 400 042.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

author

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

Similar Posts