தனிமை

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பவளமணி பிரகாசம்


தனிமை என்பதோர் கொடுமையோ ?
தனிமை என்றென்றும் இனிமையோ ?
சுமையாய் காலம் தோன்றுமோ ?
சுகமாய் கற்பனை ஈர்க்குமோ ?
வெஞ்சிறையாய் என்னை பொசுக்கிடுமோ ?
வெட்டவெளியில் சிறகை விரிப்பேனோ ?
கூடிப் பேச யாருமில்லா வெறுமையோ ?
குறை கூற ஆளில்லா நிம்மதியோ ?
இலக்கின்றி மணித்துளியை நகர்த்தவோ ?
இடரின்றி விரும்பியதை நாடவோ ?
அலுப்பும் சலிப்புமாய் களைப்புறவோ ?
அலுவல் ஏதுமின்றி இளைப்பாறவோ ?
எட்டத்து உறவை எண்ணி ஏங்கவோ ?
எதுவும் எட்டுகிற நேரத்தை வியக்கவோ ?
சூன்யமானதே உலகமென்றிடவோ ?
சுட்சுமமாய் விளங்கிட இத்தனை ஞானமோ ?
தத்தளித்து மனம் அமைதி இழக்குமோ ?
தத்துவ விவாதத்திலே களிக்குமோ ?
நத்தையாய் ஓட்டுக்குள் ஒடுங்கவோ ?
பட்டாம்பூச்சியாய் பறந்து திரியவோ ?
தொல்லையாய் சுவாசிப்பதே ஆகுமோ ?
எல்லையில்லா சுதந்திரம் கிட்டுமோ ?
வட்டத்துக்குள் வருந்திடவோ ?
கட்டுக்கள் களைந்தனவோ ?
முள்ளாய் குத்தும் வலியிதுவோ ?
கொள்ளை இன்பம் கொடுப்பதுவோ ?
வரும் இறுதி நாளை எண்ணி மருளவோ ?
வந்து போன நாளை நினைவில் ருசிக்கவோ ?
நிந்தித்து பொழுதை தள்ளவோ ?
சிந்தித்து மகிழ்வை அள்ளவோ ?
இதுவோ ?அதுவோ ?எதுவோ ?
சாந்தி ஒன்றேதான் இலக்கோ ?

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts