நன்றி

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

பசுபதி


பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி

வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி

pas@comm.utoronto.ca

Series Navigation

author

பசுபதி

பசுபதி

Similar Posts