மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

சேவியர்


9

பாலாவின்
இதயத் துடிப்பு
இதயத்தை விட்டு வெளியேறி
காற்றில் பதிந்து
காதுகளில் குதித்தது.

அத்தனை நரம்புகளிலும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓர்
சோர்வு வந்து
சேர்ந்து கொண்டது.

எங்கே போவது ?
வேடந்தாங்கலில் வெடிவிழுந்தால்
பறவையைத் தேடி
எங்கே ஓடுவது ?

தன்
அலுவலகம் ஓடினான்,
பிரியா
அலுவலகத்துக்கு அங்கே
எனக்காய் காத்திருப்பாயா ?

மனசுக்குள்
குதிரைகளின் குளம்படிகளாய்,
இதயம் தடதடத்தது.

அலுவலகம்
அதோ துரெத்தில்…
தீவிரத்தின் ஓரமும் இன்றி
நிதானமாய் நின்றிருக்கிறது.

பாலாவின் விழிகள்
ஆயிரமாய் அவதாரமெடுத்து
அணு அணுவாய்
திசைகளெங்கும் ஓடி
தன்
தேவதையைத் தேடியது.

எங்கும் அவள் இல்லை,
வினாடிகள் நகர நகர
நரம்புகளுக்குள்
நடுக்கம் கூடியது.

காவலாளியைக் கேட்டான்,
இங்கே
என்னை நெஞ்சில் தாங்கி,
என் பெயரை உதட்டில் தாங்கி,
ஏதேனும்
சின்னக் குயில் சிறகடித்ததா ?

தன்னைத் தேடி
யாரேனும் வந்திருந்தால்,
அது
பிரியா மட்டுமே என்று
புரிந்து வைத்திருந்தான் பாலா.

பட்ட காலிலே படும்
என்பது
இடம் பொருள் ஏவல் பார்த்தே
தொடரும் போலிருக்கிறது.

அந்தக் காவலாளி
அப்போது தான்
அலுவலை ஆரம்பித்தானாம்.

எங்கோ
வெடிகுண்டு வெடித்ததாமே,
வீட்டுக்கு
பத்திரமாய் போய்விடுங்கள்,
ஆறுதலாய் அவன் சொன்னவை
இவனுள்
அமில அருவியாய் கொட்டியது.

யாரைக் கேட்பது,
அலுவலக இருக்கைகள் எல்லாம்
மனிதர்களைத் துடைத்து
காற்றை உட்கார்த்தி
கதை பேசிக் கொண்டிருந்தது.

பிரியா வீட்டுக்கு பேசலாமா ?
எண்ணத்தின் முனைகள்
ாபிரியா இல்லைா என்று
எதிர்முனை சொன்னால்
என்னவாகும்
என்னும் சிந்தனையில்
முடிச்சிட்டு பாதியில் தொங்கின.

வலைக்குப் பயந்து
விலகிய மீனை,
துணெ¢டில் விழுங்கியதாய்,
தொண்டைக் குழிக்குள்
வார்த்தைகள் வறண்டன.

அப்படி ஒரு பதில்
அப்பக்கமிருந்து வந்தால்,
எங்கே சென்று தேடுவேன் என்
சிறகுகள் திருடிச் சென்ற
வண்ணத்துப் பூச்சியை ?

என் விழிதொற்றிக் கிடந்த
விண்மீனை
எந்த வானத்தில் போய்
கண்டெடுப்பேன் ?

எந்த மேகம் கலைத்து
என்
வானவில்லை
துடைத்தெடுப்பேன் ?

கவலைகளும் கேள்விகளும்
விரல்களுக்கும்
மூளைக்கும் இடையே
விரைவுப் பயணம் நடத்தின.

எடுத்த தொலைபேசியை
காதுக்குக் கொடுக்கவே
கைகள் நடுங்கின,
காதுகளில் தீ விழுமோ
இல்லை பூ விழுமோ ?

வேறு வழி இல்லை,
மதங்களை எல்லாம் மறந்து
அத்தனை தெய்வங்களையும்
மொத்தமாய் வேண்டி,

பாலா
தொலைபேசி எண்களை
தொட்டான்.

சேவியர்

***
gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.co

***

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts