பாரதி தரிசனம்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

ஜடாயு


இனியொரு விதி
செய்த
பிரமன் – அதை
எந்த நாளும் காக்கச்
சொன்ன திருமால்
ஜகத்தினை அழிக்கப்
புறப்பட்ட ஜடாதரன்
பகைவனுக்கருளும் நன்னெஞ்சம்
வேண்டிப்
பாடிய புத்தன்
ஒளிவளரும் தமிழ் வாணி88
செம்மைத் தொழில் புரிந்தசெல்வத் திருமகள்
காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி

பெண்மை வாழ்கவென்று கூத்திட்ட
பெருமகன்
ஆதலினால் காதல் செய்வீர்
என்று
அறைகூவி அழைத்த அன்புத்தூதுவன்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று
சத்தியம் செய்த சமத்துவத் தந்தை

வேடிக்கை மனிதரைப் போலே வீழ
விரும்பாத வேதாந்தி
நிலைகெட்ட மனிதரை நினத்து நெஞ்சு பொறுக்காமல்
நிம்மதி கெட்ட நிஜப் புரட்சிக்காரன்
வீர சுதந்திரம் வேண்டி
வெகுண்டெழுந்த வேங்கை
வையத்தலைமை எனக்கருள்வாய்
எனக் கேட்ட
வல்லரசாதிக்கவாதி

வானம் வசப்படும்
என்று நம்பிய வருங்கால மனிதன்
காணி நிலம் வேண்டும்
தொடங்கி
கனவு மெய்ப்பட வேண்டும்
வரையில்
கற்பனைகளில் மிதந்த கனவு சாதனையாளன்
வாதனை பொறுக்கவில்லை
எனக் கதறிய
வாழ்க்கைப் போராளி
எத்தனை கோடி இன்பம்
என்று
எண்ணிப் பார்த்து மெய்சிலிர்த்த
காந்த யோகி
பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டார்
என்றவனை
அன்று
பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின் வழித் தோன்றல்களை
இன்றும்
பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை அள்ளித் தந்துவிட்டுப் போன
அமரகவி

***
(C) ஜடாயு (jataayu@hotmailcom)

Series Navigation

author

ஜடாயு

ஜடாயு

Similar Posts