மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

கோபால்


வாகனம் விரட்டிய நாயகன்
திரையரங்கு அருகில்
நெருங்கினான் இல்லை!
தீவிரவாத நச்சுப் புகைக்குத்
தீண்டாமை ஏது ?
நகர வாழ்க்கையின்
அமைதியை அது
மூச்சுத் திணறலில்
மூழ்கடித்திருந்தது.

சற்று முன்
காதல் பறவைகளின்
கானம் நிறைத்த இடம்
புயலில் கலைந்து போன
பறவைக் கூடு போலானது.

அமைதி காக்கக்
காவலர் ஒரு புறம்!
கவலை நிறைத்து,
உறவுகள் தேடிக்
களைத்தவர் ஒரு புறம்!
நிகழ்வுகளின் தாக்கத்தில்
நின்றவர் ஒரு புறம் என
பாலாவைச் சுற்றிலும்
போர்க்களக் காட்சிகள்.

இதயத்துடிப்பு
நின்று போனவனாய்
பாலா
தன் காதல் பறவையை
அநிச்சயமாய்த் தேடினான்.

திரையரங்கில் இருந்தவர் எல்லாம்
இறந்தவரே என
கண்டவர் சொன்னது
பாலாவின் மனதில்
நம்பிக்கை வேர்களை
அசைத்துப் போட்டது.

பிரியமானவள் இங்கு
இருந்ததும் அறிந்திலன்
இருப்பதும் அறிந்திலன்
இமைகள் விழித்திருந்தும்
குருடனாய் உணர்ந்தான்.
இயலாமையில்
இலக்கில்லாக் கோபம்
இளைஞனைச் சுட்டது.

காதல் பெண்ணைக்
காணது செய்த
பணியின் மீது
திரும்பிய கோபம்
தன்னுள் இருப்பவளைத்
தேடும் எண்ணத்தில்
தணிந்து போனது.

இதயம் ச்ீராக்கிச்
சாத்தியங்கள் சிந்தித்தான்
நிச்சயித்து போல்,
கிளம்புமுன்
சேதி தெரிவிக்க
அழைத்தாளில்லை!
தவிக்க விடுதல்
அவள் தனிக்கலைதானே எனும்
எண்ணம் துளிர்த்ததை
துடைத்தெறிந்தான்.

காதல் பெண்
களம் வந்திருக்கலாம்,
வந்தவள் மீண்டிருக்கலாம்
மீண்டவர் இல்லையெனும்
சேதி உண்மையெனில்
என்னவளைத் தொலைத்தேனோ ?
அறிவு நினைத்ததை
இதயம் மறுத்தது.

காலதாமதத்தால்
கிளம்பு முன்னர்
கலவரம் அறிந்து
வராமல் இருந்து
உயிர் காத்திருக்கலாம்!
எப்படியாயினும்
தொடர்பு கொள்ள
முயன்று கொண்டிருக்கலாம்!

தன்னுள் இருக்கும்
அவள் உயிர்க்கு
தானறியாது
சேதம் இருக்காதென
காதல் மனதில்
உறுதி கொண்டு தன்
அலுவல் நோக்கி,
விவரம் அறிய
விரட்டினான் வாகனம்!
**
கோபால்.
***
Gopal Srinivasan gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.com

Series Navigation

author

கோபால்

கோபால்

Similar Posts