மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

சேவியர்


7

புயல் ஒன்று
நுரையீரலில் நுழைவதாய்
மூச்சிரைத்தது
பிரியாவிற்கு.

வியர்வை ஆங்காங்கே
சொல்லிக் கொள்ளாமல்
முளைக்க,
சோபாவில் சாய்ந்தாள்.

ஏன் சீக்கிரம் என்ற
அம்மாவின் கேள்விக்கு,
வார்த்தையில்லாத
ஓர் பதிலைச் சொல்லி
நெற்றியைத் தேய்த்தாள்.

அதற்குள்
அந்த விபரீதம்
தொலைக்காட்சி வழியாய்
வீடுகளில்
தலைநீட்ட,
பதட்டத்தின் நுரைகளால்
அறைகளும் நிறைந்தன.

தொலைக்காட்சி பார்த்த
பிரியா பயந்தாள்,
எங்கும் சிதறி ஓடும் கூட்டம் !
பகைவனாய் படரும்
புகை.
திரையரங்கு வாசலில்
குருதித் தோரணம்.

பாலா ?
நீ எங்கே இருக்கிறாய் ?
அனிச்சைச் செயலாய்
விரல்கள் கடிபட்டன.

ஒரே ஒரு வார்த்தை
பேசு என் பிரியமே,
ஹலோ .. மட்டும் சொல்லிவிடேன்.
உனக்கு ஏதும் ஆகியிருக்காது,
ஆகியிருக்கக் கூடாது.
மனம் இடைவிடாமல்
இறைவனைக் கெஞ்சியது.

பாலா,
காத்திருக்கும் வினாடிகள்
இத்தனை கடுமையானவையா ?

நான்
போன் செய்யாத பொழுதுகள்
உனக்குள்
பரபரப்பு இரயில் ஓடுமா ?

என் தண்டவாளங்களில்
ஒரு முறை தரிசனம் தாயேன்,
ஒரே ஒரு முறை
என் தொலைபேசியை
துயிலெழுப்பேன்.
பிரியா வின் பதட்டம்
மெல்ல மெல்ல விட்டம் தொட்டது.

அவசரமாய் பாலாவில்
அலுவலகம் அழைத்தாள்..
எடுப்பார் யாருமின்றி
அடித்துக் கிடந்தது அது.

நிழலின் அருமை
வெயிலில் தெரியுமாம்,
எனக்கு
வெயிலின் கொடுமை
வெயிலிலேயே தெரிகிறதே.

நீ
இல்லாத வாழ்வு.. என்னும்
நினைவுகளே நகர மறுத்தது.
சக்கரம் இல்லாத
தேருக்கேது ஊர்வலம் ?

எத்தனை முறை
அவனை வரச் சொல்லி
நான் வராமலிருந்திருக்கிறேன்.

எத்தனை முறை
தொலைபேசியை
தொடாமலிருந்திருக்கிறேன்.

அமிலத்தின் வலி
அதில்
அமிழ்ந்தால் தானே,
வேர்களில் பாதரசம் பாய்ந்தால்
கிளைகள் எப்படி
கிளிகளைத் தேடும் ?

வெண்ணை திருட வாராயோ
என்
கண்ணைத் திருடிய
கண்ணனே…
பிரியாவுக்கு கண்கள்
கசிந்தன.

இமை தாங்கிய கண்ணீர்
சுமை தாங்கியாய்
கனத்தது.

உன்னோடு
சண்டையிடுவதே எத்தனை
சந்தோசமானது ?
எத்தனை
நித்திரை கத்தரித்திருக்கிறாய்
கனவுகளில் வந்து.

என்
ஒவ்வோர் சிரிப்புக்குப் பின்னும்
மெல்லமாய் புகழும்
செல்லமான உன் வார்த்தைகள்,

கவலை சரிவுகளில்
சறுக்கினால்
கைப்பிடித்து கரையேற்றும்
உன் தோழமை.

கண்ணிமையில் கவிழ்ந்தாலும்
மாறாத உன்
கண்ணியம்…

என்
அத்தனை உறவினர்க்கும்
பின்னால் வந்து
அத்தனை உறவையும்
பின்னால் தள்ளியவன் நீ.

இனி உன்னை
வருத்தப்பட வைக்கமாட்டேன்,
ஒரே ஒரு முறை
எனக்காக போன் செய்.

ராட்சசச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்ட
சின்னச் சிட்டுக் குருவியாய்
பிரியாவின் உயிர்
சிறகடித்துக் கிடந்தது

– சேவியர்

Gopal – gopal@asdc.co.in
Xavier – Xavier_Dasaian@efunds.com

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts