இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

ரவி, சுவிஸ்


நீள நட குறுகல் அகல


எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது
நண்பன்தான் என
இயல்பாய் மனசு
எண்ணுவது எப்போது ?
வாள்களும் பொல்லுகளும் – ஏன்
உணவில் நஞ்சூட்டலும்கூட
துப்பாக்கிகளின் வேலையைச் செய்யும்போது
நான் சமாதானத்துக்காய்
அழ மட்டுமே முடிகிறது.

பனைவேர்ச்சல்லி மண்ணில்
புதைந்திருந்த நுாற்றாண்டு வேரை
இரவோடு பிணைத்த ஒரு பகல்பொழுதுக்குள்
அறுத்தெறிந்த இனத்துயரம் இன்னும்.
நினைவிறக்கப்பட முடியாத
இந்தத் துயாிடை நான்
சமாதானத்தைக் கனவுகாண்பதாயில்லை.

ஆயிரம் பூக்களென்ன
நாலு பூக்கள்தன்னும் மலரவிடா
மலட்டுப் பூங்காவினிடை
விடப்பட்டவர்கள் நாம்.
பூத்தல்களுக்காய் நாம் வியர்வைகளை
இறைக்கும்வரை – ஏன்
எமது முளைமடிப்புகளை குலைத்துப் போடும்வரை
சமாதானத்துக்காய் நாம்
நீளமாய்ப் பயணிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மீண்டும் ஒரு சில்வாவின் பேக்காியையும்
காதாின் துணிக்கடையையும் காண
விழைகிறது மனம்.
மந்திாியின் வரவேற்பும்
எம்பிக்களின் சுற்றுலாவும்
சமாதானப் பிரமாண்டங்களாய் வெளிவருகிறது
கமராக்களுக்குள்ளிருந்து.
சமாதானக் கனவுகளை நாம்
உற்பத்திசெய்து தள்ள
அப்பாவித்தனம் மலிந்ததா எமது தேசம் ?
வியர்க்கிறது தேகம்
குரல்வளையை நினைத்து!

-ரவி (சுவிஸ்,நவம்பர்2002)துயரங்களின் பின்னான நாட்களில்…

உலகின் அதிஅழகு
சமாதானம் என
படுகிறது எனக்கு.
அதனால்தானோ என்னவோ
அவ்வளவு இலகுவாய் அது
கிட்டுவதில்லை.
எனவே நான்
சமாதானத்தை சந்தேகிக்கிறேன் – அதன்
அர்த்தங்கள் களையப்படும்போது.

வாழ்வின் ஒவ்வொரு இழைகளும்
சிலந்திவலையாய்ப் பின்னப்பட்டபின்
இன்னொரு புயலை நினைக்க
உடல் நடுங்குகிறது.
மண்ணைப் பெயர்த்துத்
திாிந்த துயரங்களின் பின்னான
ஓய்ச்சலின் நடுவே
எதிாியுடனான கைகுலுக்கலில்
ஆழம்கொள்கிறது சந்தோசம்.
ஆனாலும்
இந்த விரல்களினுாடு பகிரப்படுவது
அதிகாரம் மட்டும்தான் என்றால்
சந்தேகம் கொள்வதிலிருந்து என்னால்
தப்பிக்க முடியவில்லை.

நடுநிசியில் விளக்குவைத்த
வெளிச்சத்தில் ஓர் உருவத்தைச்
சுற்றிச் சுற்றி குரைக்கிறது எனது
வீட்டு நாய்…
இன்னும் நெருங்குவதாயில்லை

புயல்பூத்த மையங்களைத்
தொடும் அதிர்வுகளின் பின்னால்
வெடிக்கப்போவது போரா
தலைநிமிரும் சமாதானமா என்பதாய்க்
காத்திருப்பதைத் தவிர நான்
கொள்ள எதுவுமில்லை –
இப்போதைக்கு!

– ரவி (சுவிஸ்,நவம்பர்2002)

rran@bluewin.ch

Series Navigation

author

ரவி, சுவிஸ்

ரவி, சுவிஸ்

Similar Posts