அப்பா!

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

வ.நகிரிதரன்


ஆறடி தாண்டிய ஆகிருதி.
சிந்தனைக் கண்கள்.
குமிண் சிரிப்பு.
நான் பார்த்து அப்பா
வேலைக்கென்று வெளியே
போனதில்லை.
வேலைக்குப் போகாத அப்பா.
எந்த நேரமும்
சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி
கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட்
ஹவுஸ், ஜோசப் கொன்ராட்,…
ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,…
இதைத் தவிர வேறென்ன செய்தார் ?

அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா ?
குடும்பம், குட்டியென்று…
எல்லாமே அம்மாதான்.
அதிகாலையெழும்பி, அடுக்களை
அலுவல் முடித்து, பாடசாலை செல்லும்
அம்மா போய்ப்
பொழுதுபட வந்தால்..
மீண்டும்
அடுக்களைதான்.
அம்மா வரும்வரை
அப்பா குட்டி போட்ட
நாயாய்
அலைவார்.
அப்பா ஏனப்படியிருந்தார் ?
அம்மா அதுபற்றி அலட்டிக்
கொண்டது கிடையாது.
ஏன்
அப்பாவும் தான்.
சில போதுகளில் பழையதை
எங்களுடன்
பகிர்ந்து கொள்வதுமுண்டு.
அந்தக் காலத்தில் அவர்
படித்த பாடசாலை
‘களியாட்டு விழா ‘ வொன்றில்
அம்மாவைக் கண்டதையவர் கூறக்
கேட்டிருக்கின்றேன்.
‘குந்தவை ‘ , ‘வானதி ‘போல்
கன்னியரிருவர் கண்டு
சிந்தையைப்
பறிகொடுத்ததைச் சொல்லிச்
சொல்லியே சிரிப்பார்.
பதிலிற்கு
அம்மாவும் ஆசிரியப்
பயிற்சிக் கலாசாலையொன்றில்
பயின்றுகொண்டிருந்த
காலமொன்றில்
பல நூறு மைல்கள் தொலைவில்
நடுக்காடொன்றில் நிலம்
அளந்து கொண்டிருந்த
அப்பாவைக் காண்பதற்காய்
அவசரமாய்க்
கார் பிடித்து வந்த போது இடையில்
குறுக்கிட்ட பஸ்சொன்றில்
தெரிந்த முழு நீளச் சட்டைக்
கையொன்றை வைத்து
அப்பாவைக்
கண்டு பிடித்த
கதைதனை கூறிக் களிப்பார்.
அப்பொழுதெல்லாம் அப்பா
வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆழ நடுக் காடுகளில் நில
அளவையாளராக
அவர் பார்த்த வேலை பற்றி
அம்மா சொல்வதுண்டு.
காதலென்றால்
என்னவென்று அவர்கள்
மூலம்தான்
கண்டு கொண்டேன்.
அந்தக் காலத்தில் காதலிப்பதில்
அவர்களிற்கிருந்த துணிச்சல்
இந்தக் காலத்தில் என்னிடம்
கூட இருந்ததில்லை.
கருத்தொருமித்தவர் காதல் செய்தால்
கிடப்பதெல்லாம் களிப்பே.
அப்பாவிற்கந்தக் காலத்தில்
அவர் பெயரில் வீடு,
வளவு, வயலென்று
அள்ள அள்ளக் குறையாத
சொத்துக்கள். சொல்லி
மாளாதாம்.
சின்ன வயதில்
பெற்றவர் போய்விடத்
தனித்திருந்தவரை
சுற்றமென்றிருந்தவர்கள்
முடிந்தவரை சுருட்டி
விட்டே
மறைந்தனராம்.
ஐந்திற்கும் பத்திற்கும்
அடகு வைத்து ,
அடகு வைத்த
வட்டி அளவற்றுப் பெருகிவிட,
வெளியுலகம் தெரியாத
அப்பா
அவர்களிற்கோர் காமதேனு.

அதன் பிறகு…..
அப்பா அவர்பாட்டில்
முயன்று முயன்று
முன்னுக்கு வந்தவராம்.
பல்கலைக் கழகப் படிப்பைப்
பாதியிலே விட்டு விட்டுத்
தொழில் நுட்பம் கற்று,
நில அளவைத் தொழில்
புரியும் போதுதான்
கல்லூரிக் களியாட்டு
விழாவொன்றில்
குந்தவையைக் கண்டு
காதல் கொண்டாராம்.

காதலிக்கும் போது வேலை
பார்த்துக் கொண்டிருந்த அப்பா
கல்யாணம் முடிந்ததும்
பென்ஷன் ‘
பெற்றுக் கொண்டாராம்.

ஏனென்று அப்பாவை
என்றும் கேட்டதில்லை.
அப்பாவும் கூறியதில்லை.

அவர்கள் காதலித்தார்கள்.
அவர்களிற்கதுவோர் பிரச்சனையேயல்ல.
அவர்கள் அன்பைச் சொரிந்தார்கள்.
அது போதும் எங்களிற்கு.

அறியாப் பருவத்தில்
அதுதவிர வேரென்ன வேண்டுமெமக்கு ?
புத்தகம் மட்டுமிருந்து விட்டால்
போதுமப்பாவிற்கு. எங்களிற்கும் தான்.

ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா,
குமுதம், கதிர், விகடன்,
கல்கி,கலைமகள்,மஞ்சரி,
தீபம்…இதுதவிர
பத்திரிகைகள் பலப்பல.
ஜெகசிற்பியன், ஜெயகாந்தன்
கோமகள், அநுத்தம்மா, நல்லபெருமாள்
கல்கி, சாண்டில்யன்,பி.வி.ஆர்,
அறிஞர் அண்ணா,
மு.க, கொத்தமங்கலம்சுப்பு…
கதைகள் படிப்பது;
நிரைப்படுத்தித் தொடர்கதைகளைக்
கட்டி வைத்துப் படிப்பது..

அப்பா வேலைகுப்
போகவில்லைதான்.
அப்பா வேலைக்குப்
போகவிட்டால்
தானென்ன ?
வளர்ப்பதிலென்ன குறை
வைத்தார் ? எங்களை
வளர்ப்பதிலென்ன குறை
வைத்தார் ?

அப்பாவிற்கு அதிகாலைகளில்
வானொலியில்
அந்தக் காலத்துப் பாடல்களைக்
கேட்பதிலோர்
களிப்பு.
பி.யூ.சின்னப்பா, பாகவதர்,
எம்.எஸ், டி.ஆர்.ராஜகுமாரி…

‘சிவபெருமான்
கிருபை வேண்டும்.. ‘

‘ராதே! உனக்குக் கோபம்
ஆகாதடா.. ‘

‘காற்றினிலே வரும்
கீதம்.. ‘

அப்பா அம்மாவைப்
பெரிதும் காதலித்தார்.
பதிலிற்கு
அம்மாவும் அப்பாவை
ஆழமாக நேசித்தார்,
இருந்தும் இஇடையிடையே
சிறுசிறு மோதல்கள்..உரசல்கள்…
அப்பொழுதெல்லாம்
அப்பா சொவார்:
‘செல்லச் சன்னதியிலைச்
சாமியாராய்ப் போவன் ‘
கடைசிவரைச் சாமியாராய்
அவர் போகவில்லை.
கடைசிவரை அவரால்
கட்டை மீற முடிந்ததில்லை.
அதற்காகச் சொல்லாமலிருக்கவும்
அவரால் முடிந்ததில்லை.

அம்மாவை நினத்தால்
எப்பொழுதுமே வியப்பு;
பெருமிதம்தான்.
ஒருநாள் கூட
அப்பாவிடம்
ஒருவார்த்தை வேலைபற்றி
அவர் கூறிக் கேட்டதில்லை.

‘அவர்தானே உங்களைப்
பார்த்ததெல்லாம் ‘
‘அவர்தானே உங்களை
வளர்த்ததெல்லாம் ‘

அப்பா வேலைக்குப் போகாதது
அப்பொழுதும் குறையாகப் பட்டதில்லை.
அப்பா வேலைக்குப் போகாவிட்டால்
தானென்ன ?
அப்பா ‘அப்பா ‘வாகயிருந்தார்.
அது போதாதா எங்களிற்கு.
அந்த வேலையை அவர்
ஒழுங்காகவே செய்தார்.
அது போதாதா எங்களிற்கு ?
‘தந்தை மகற்காற்றும் நன்றி
அவையத்து
முந்தியிருப்பச் செயல் ‘
அது போதாதா எங்களிற்கு ?

அப்பா நல்லதொரு
அப்பாவாகவிருந்தார்.
அதுதவிர அப்பாவின்
உள் உலகம் எப்படியிருந்தது ?
அதிலென்னவென்ன ஆசைகள், தாபங்கள்..
அப்பொழுது
அதுபற்றிச் சிந்திக்கும்
வயதாவெங்களிற்கு ?
இப்பொழுது சிந்திக்க முடிகின்றது.
அப்பா எங்களிற்கு
அப்பாவாகயிருந்ததில்
அளவிடா மகிழ்ச்சி. இருந்தும் வளர்ந்து,
உயர்ந்து, கிளை விட்ட சமயத்தில்
அவரிலையேயென்று கவலைதான்.
அப்பா!
‘நீ நீட்டி நிமிர்ந்து படுத்தபடி,
பொண்டாட்டியின் உழைப்பில்
பொழுதைப் போக்கியவ ‘னென்று
யாரும் சொல்லியிருக்கலாம்.
யார் சொல்லியென்ன ?
அம்மா சொன்னாளா ?
அவளுக்கோ
நல்லதொரு கணவனாய்
நீயிருந்தாய்.
எங்களிற்கோ……
நல்லதொரு தந்தையாய்
நிழல் தந்தாய்.
அது போதுமெங்களிற்கு.
அது போதும்.
அப்பா!
அது போதும்.
அப்பா!
அது போதும்.
***
ngiri2704@rogers.com

Series Navigation

author

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

Similar Posts