மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

கோபால்


6

பிரியாவைச் சுமந்த
வாகனம் விரைந்து,
கலவர பூமியைக்
கடந்த பின்னரும்
கன்னியின் மனது
பூகம்ப பூமியாய்
பொங்கிக் கொண்டிருந்தது.

நிகழ்ந்தது கனவா ?
நிகழ்வது நிஜமா ?
மனிதம் வளர்த்த
புனித பூமியில்
மத மாச்சரியமா ?
எத்தனை இழப்புகள் ?
எத்தனை வலிகள் ?
கேள்விகள் துளைத்த
கன்னியின் மனது
உயிர் இருப்பதை
உணர்ந்து கொண்டதும்
பாலாவின் நினைவில்
பொங்கித் தவித்தது !

பாலாவின் நிலை நினைத்துக்
கவலை கொண்டவள்
ஆவல் நிறைய, அவன்
அலுவல் விரைந்தாள்
வாசலில் தேடிய
பாலாவின் வாகனம்
இருந்ததா ? இல்லையா ?
கவலை ரேகையில்
இதயம் கனத்தது.
தாவிப் படியேறி
தன்னவன் அலுவலில்
முன்னமே சென்றான் எனும்
செய்தியைக் கேட்டவள்
அமைதி இழந்தாள்.
கலக்கம் கூட்டுவதுபோல்
பதற்றமாய்ச் சென்றான் எனும்
உதிரிச் செய்தியால்
உயிர் வாடினாள்.

திரையரங்கு பக்கம்
விரைவாய் செல்லப்
பணித்தவளை
வாகன ஓட்டி
விரோதப் பார்வையால்
வாட்டினான்.

புரிந்து கொள் மனிதனே !
திசைகள் தெரியாத
கலமாய்த் தவிக்கிறேன்.
என் இதயம் வடிக்கும்
கண்ணீர்
கண்களின் வழியே
வழிந்து விடாமல்
காத்துக் கொண்டிருக்கிறேன்.
நிஜம் என்னைச்
சுட்டு விடாமல்
இருக்க வேண்டியே
பதைக்கிறேன்.
குருக்ஷேத்திரக் கண்ணணாய்
உன்னைக் காண்கிறேன்
என
உயிர்க் கவலையில்
கலங்கிய கண்களைக் கண்டு,
மனிதம் கொண்டு
வண்டியை விரட்டினான்.

கலவர பூமியினின்று
காத துரெம் வரை
பரவிக் கிடந்தது
பதற்ற நிலை.

தீ நாக்குகளுக்குத்
தெரியுமா இது
தீவிரவாதம் என்று ?
அவை
இயல்பு மாறாது
இருப்பதையெல்லாம்
இரையாக்க
இயக்கம் நிறுத்தியது
நகரம்.

நாசியில் கலந்த
காற்றிலும்
தீவிரவாதத்தின்
தீய வாடை!

சிதறிய நெல்மணிகளாய்
மக்கள் கூட்டம்!

நீந்தத் தெரியாது
நீரில் அமிழ்ந்தது போல்
ப்ரியாவிற்குள் பேரிரைச்சல்.

பாலா இருப்பானா ?
வெண்மணற்பரப்பில் வீழ்ந்த
ஒற்றை முத்தைத்
தேடுதல் சாத்தியமா ?

மன்னவன் எங்கே ?
என்னுயிர்க் கவலையில்
தன்னுயிர் வருத்துகிறானோ ?
வெற்றுப் பார்வை
சுற்றிலும் சுழன்றது.
நாயகன் நிச்சயம்
தொடர்பு கொள்வான் என
காதல் விதைத்த
நம்பிக்கை மனம் கொண்டு
இல்லம் நோக்கித்
திரும்பினாள் பாவை!

கோபால்.

Series Navigation

author

கோபால்

கோபால்

Similar Posts