மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

சேவியர்


5

பாலாவும், பிரியாவும்
பாலர்கள் அல்ல.
வெப்பத்தின் தெப்பம் தேடும்
மனக் கிளர்ச்சி விரிய வைத்த
மலர்களுமல்ல.

அவர்கள்,
நிஜ வாழ்வில் நிற்பவர்கள்.
எதிர்காலம் என்பது
நிகழ்காலத்தின் நீளல் தான்
என்பதை உணர்ந்தவர்கள்.

நிறைய விவாதிப்பார்கள்,
இன்று ஒரு தகவல் முதல்
ஓஷோவின்
உள்ளொளிப் பரவல் வரை.

அரசியல் இல்லாத
அரசாங்கம் முதல்,
மதங்கள் இல்லாத மதங்கள் வரை,
இவர்கள்
விவாதம் தொடாத
மேடைகள் குறைவு.

ஆகாயத்தைப் பற்றிப்
பேசுவதை விட அதிகமாய்
ஏழைகளுக்கான
ஆகாரத்தைப் பற்றி
பேசுவார்கள்.

மனங்கள் பற்றியும்
இதயங்கள் பற்றியும்
சராசரிக் காதலருக்கு
சற்று மேல் சிந்திப்பவர்கள்.

உலகில்
தற்கொலை எண்ணம்
தோன்றியிராத
மனிதர்களே இல்லையாம்.
என்னும்
ஆச்சரிய விஷயங்கள்,

புன்னகை என்பது
இதயத்தின் ஆழத்தில்
உற்பத்தியாகி
உதடுகளில் சந்திக்கும்
உன்னதமான உணர்வு.

உதடுகள் மட்டும் விடுக்கும்
புன்னகை,
பாறை மேல் விதைத்த
நெல்மணி போல
வெயிலில் கருகும்,
மழையில் விலகும்.

உள்ளம் விடுக்கும் புன்னகை
வேர்விட்ட ஆலமரம்,
நாளைய விழுதுக்கு
இன்று தரும்
இலவச அழைப்பு அது.

என்றெல்லாம்
புதிது புதிதாய்,
பரவசம் பரவப் பரவ
பேசுவார்கள்.

அவ்வப்போது
உள்ளுக்குள் ஊடலும்
உலவும்.

என்னைச் சந்திப்பதை விட
பணி தான் முதன்மையா ?
வேலை உனக்கு அம்மாவா ?
அலுவலகம் தான் தாய் வீடா ?
அவள் வராத
மாலைப் பொழுதுகளின்
வேதனையில் பேசுவான்.

அலுவலகம் என்னை
எட்டு மணி நேரம்
கட்டிப் போடும் கட்டிடம்,
வேலை எனக்கு
நானே இட்ட கடிவாளம்.
உன் காதலி
கடமை தவறாதவள் என்றால்
உனக்குத் தானே பெருமை
சின்னதாய் சிரிப்பாள்.

என்னைக் காக்கவைக்கும்
கடமையை மட்டும்
ஒழுங்காய் செய்கிறாய்,
பொய்யான கோபத்தில்
பாலா பேசுவான்.

ஏன் காத்திருக்கிறாய் ?
நான்
உனக்குள் தானே
உட்கார்ந்திருக்கிறேன்,
சளைக்காமல் சொல்வாள் பிரியா.

கடைசியில்,
நம் பாதை
நான்கு சந்துகளோடு முடிவடையும்
சின்னதோர் சாலை அல்ல.
அது
மரணம் வரை தொடரக் கூடியது.

சின்னச் சின்ன சோர்வுகளுக்காய்
சிறகுடைக்காதே
பறப்பதற்கு இன்னும்
வெகுதுரெம் இருக்கிறதென்று
முடித்துக் கொள்வார்கள்.

ஓரமாய் விழும் துெசுகளை
காத்திருக்கும் கடல்
கழுவிச் செல்வது போல தான்
காதலில் வரும்
கோபங்கள்.

காதலியை விட்டு விட்டு
கால்கள் விலகினாலும்,
காதல் மட்டும்
காலோடு ஒட்டிக் கொண்டு
நிழலாய் தொடரும்.

பின்,
நிழலின் பின்னால்
கால்கள் நடக்கும்.

பாலாவும் பிரியாவும்
அப்படித் தான்.

ஊற்று மேல்
உட்கார்ந்திருக்கும்
மணல் போன்றதே
மெலிதான அவர்கள் கோபம்.

தண்ணீரில் வரைந்த
ஓவியம் போல
கலையும் நிலை தான்
அவர்கள் கோபத்துக்கு.

அவர்கள்
காதலின் நிலத்தை
உழுவதற்காய்
காத்திருந்தது
அந்த காதலர் தினம்.

***
சேவியர்

***
(தொடரும்)

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts