மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

கோபால்


4

இன்னொரு நாள் மாலை,
பாலாவின்
எண்ண ஒட்டத்தின்
வேகம் தாளாது
ரத்த ஓட்டம்
தவித்துக் கொண்டிருந்தது !

இதமாய் என்றும்
இருக்கும் வேலை
இன்று ஏனோ
இங்கிதம் தெரியாது
அங்கதம் செய்தது !

சுற்றிலும் உலகம்
காதல் வண்ணம்
பூசிக் கொண்டு
காதலர் தினமென்று
களித்துக் கொண்டிருந்தது !

முன்னிரவில்,
நாள் முழுதும்
உடனிருக்கச் சொன்ன
நாயகியின்
விருப்பம் கொன்று,
மாலை மட்டும் உனக்கென்று,
திரையரங்கின் வாசலில்
ஆரணங்கைக்
காக்கச் சொல்லி,
வந்து சேருவதாய்
வாக்களித்திருந்தான் !

அலுவல், அவனை
இருக்கையில் கட்டிப் போட்டு
இரக்கமில்லாத
அரக்கனாய்ச் சிரித்தது !

கடிகாரத்தில்
நிமிட முள் கூட
வினாடி முள்ளாய்
விரைந்தது !

சிந்தையைக் காதலுக்கும்
செவிகளைத் தொலைபேசிக்கும்
கொடுத்து,
வேலையில் விழி பதித்து
நேரம் தின்று கொண்டிருந்தான் !

எதிரிலுள்ள
எந்திரம்
எதிரொலிக்க
எதிர் பார்த்தான் !
மணியடிக்கையில்
மனம்கவர்
மாதுதான் என்று
மயங்கினான்!
தாவியெடுத்த பின்
தனக்கில்லை என்றதும்
தவித்தான் !

பிரியாவை நினைத்துப்
பரிதவித்தவனைக்
கோபம் கொஞ்சமாய்
ஆக்கிரமித்தது.
அலுவல் முடிந்து
அரங்கம் கிளம்பு முன்
தொலைபேசியில்
அழைப்பதாய்ச் சொன்னவள்
மவுனம் காப்பதேன் ?
கேள்விக் கணை
சிந்தையை மொய்த்தது!

ஒவ்வொரு முறையும்
பலுனெில் நிரப்பிய
காற்றாய்,
அவனுள் இருக்கும்
கோபம்,
அவள் விழிகளின்
கூர்மையில்
வெளியேறிப் போகும்.

இப்படித்தான் ஆகிறது
எப்போதும்.
இந்த முறை தொலை பேசல்
எந்தன் முறை அல்ல!
எத்தனை முறைதான்
தான்
முதல் குரலாய் ஒலிப்பது ?
இனியவள் பேசட்டும்,
இல்லையெனில்
இனி அவளிடம்
பேசுதல் இல்லையென
பிரசவ வைராக்கியம்
விதித்துக் கொண்டான் தன்னுள் !

அலுவலர் முடித்த சிலர்
முடிச்சுகளாய் நின்றிருக்க
அலுவலில் கவனம்
திருப்பிய பாலாவை
உதறிப் போட்டது
செவியில் விழுந்த செய்தி !

ஆரணங்கைக்
காத்திருக்கச் சொன்ன
திரையரங்கின் வாசல்
குண்டு வெடித்துத்
தீப்பிழம்பான செய்தி
பாலாவின் உள்ளத்தில்
தீ அள்ளிக் கொட்டியது !

இதயம் ஒரு கணம்
இணையை நினைத்து
இயக்கம் நிறுத்தியது !

கண்ணின் மணிக்கு
என்னவானதோ ?
காதல் கிளியைக்
காண முடியுமோ ?
எண்ணச் சிறகுகள்
பட படக்க
எய்துவிட்ட ஏவுகணையாய்
பாலா,
எட்டிப் பாய்ந்ததும்,
இயந்திரம் இயக்கியதும்,
திரையரங்கு நோக்கி
வாகனம் விரட்டியதும்,
எப்போது ? எப்போது ?

– கோபால்.

(தொடரும்)

Series Navigation

author

கோபால்

கோபால்

Similar Posts