விதி

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

வை. ஈ. மணி


விதியால் வந்த வினையென்பர்
….. விண்ணில் கோட்டை கட்டுபவர்
மதியால் விளைவை ஆய்ந்தறிவர்
….. மடமை வினையை வழக்குமென (1)

சதிபோல் தோன்றும் விதியேநம்
….. துன்பம் தீர்க்கத் துணையாகும்
முதியோர் உணர்ந்த இவ்வுண்மை
….. வடிவம் கொண்ட கதையிதுவே (2)

அரசன் நாட்டின் நிலையறிய
….. அழைத்துச் சென்றான் மந்திரியை
மரங்கள் அடர்ந்த காட்டினிலே
….. மன்னன் கேட்டான் யோசனைகள் (3)

பாதை தவறிச் சென்றவர்கள்
….. பதறிப் புதரில் சிக்கினரே
காதை முட்கள் கிழிக்க(அ)ரசன்
….. குமுறித் தனது விதிநொந்தான் (4)

நடுங்கும் குளிரில் நடுநிசியில்
….. நடந்து மேலும் செல்லுகையில்
தடுமா றிப்பாழ் கிணறொன்றில்
….. தவறி வீழ்ந்தான் அமைச்சனவன் (5)

மிகவும் நொந்த மன்னனிடம்
….. வருத்தம் கொண்ட மந்திரியும்
நிகழ்ந்த தெல்லாம் நன்மைக்கே
….. நம்பும் என்று நவிழ்ந்தனனே (6)

வீண்டும் வேந்தன் வழிநடக்க
….. முன்னில் வந்த அரக்கர்கள்
உண்ண உணவு உறுதியென
….. ஓலமிட் டவனைச் சூழ்ந்தனரே (7)

வலையில் வீழ்ந்த மானைப்போல்
….. மருண்டு நின்ற மன்னனது
தலையைத் தாக்க முன்வந்த
….. துட்டன் காதில் குறைகண்டான் (8)

உடலில் ஊனம் உற்றவரை
….. உண்ப துசிதம் அன்றென்று
தடங்கல் நேரச் சினம்கொண்டு
….. தூற்றிக் கொண்டு சென்றனரே (9)

உயிர் பிழைத்த மன்னன்பே(ர்)
….. ருவகை பூத்து மந்திரியின்
உயிர் காக்கத் துணைதேடி
….. ஊரை நோக்கி விரைந்தனனே (10)

அரசன் ஆழ்ந்தான் சிந்தனையில்
….. அமைச்சன் கூற்றின் பொருள்தேடி
விரைவில் வந்தான் மந்திரியும்
….. வாழ்த்த மன்னன் புகழ்பாடி (11)

இயலா விதியின் குறியறிய
….. இன்னல் போலத் தோன்றிடினும்
நியதி நிலைக்கக் காரணமாய்
….. நன்மை பயக்கச் செய்திடுமே (12)

வை. ஈ. மணி

Series Navigation

author

வை ஈ மணி

வை ஈ மணி

Similar Posts