மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue


1. சோர்ந்து விடாதே!

சோர்ந்து படுத்து விட்டால்
படுத்த இடம் சுடுகாடு –
பாய்ந்து புறப்படுவாய்
பாதையெல்லாம் உன் வீடு!

2. எழுதுகோல்

எழுதுகோல் என்பது
செங்கோல் ஆகும்
எப்போதும் விழித்திருக்க வேண்டும்

அழகிய மயில் இறகின்
ஆயிரம் கண்கள்
அதற்கு என்றும் அமைந்திருக்க வேண்டும்

3. அறிவாளர்கள்

பட்டினி கிடந்தாலும்
பகுத்தறிவு நூல் வாஙகிப்
படிக்காமல் இருக்க மாட்டோம்-அது

வெட்டிச் செலவல்ல
விண்ணுயர்த்தும் மூலதனம்
வேறு செல்வம் தேட மாட்டோம்

4. தாய்ப்பாலும் தண்ணிரும்

வேரிலே வாஙகிய நீர்
விளங்கும் இள நீராய்
வாரியே வழங்குதடா தென்னை

பாரிலே நீ குடித்த
பாலிலே உரம் உண்டு
பயன் பெறச் செய்குவாய் உன்னை

5. நீரும் நீயும்

கிழ் நோக்கி ஓடுகின்ற நீரும்
மேல் நோக்கி ஆவியென மாறும்
கிளர்ந்தெழுந்து சூரியக்கை வாரும்!

பாழ் நோக்கி ஓடுகின்ற நீயும்
பயன் நோக்கி நடைபயிலக் கூடும்
பண்புடையார் உறவில் மனம் தேறும்!

6.புயலாய்ப் புறப்படு

முயலார் எல்லாம் முடியார் ஆவார்
அயலார் அவரை அடித்துப் போவார்
செயலால் உன்றன் சிறப்பினைத் திரட்டு
புயலாய்ப் புறப்படு பூமியைப் புரட்டு

7.இரண்டு சோம்பேறிகள்

கைகள் இருந்தும்
உழைக்க மறுப்போன்
கடைந்து எடுத்த சோம்பேறி

செய்யும் பணியில்
திறமை இருந்தும்
சிறக்காதவனும் சோம்பேறி!

8.வேரும் விதையும்

புதைக்கும் விதைக்கள்
மண்ணைப் புரட்டிப்
புறப்படும் மேலோக்கி …

எதிர்ப்பை அதுபோல்
இடறிநீ எழுவாய்
இளைஞனே தோள் தூக்கி …!

9. அறிஞனும் முட்டாளும்

சொறிகின்ற கங்கையின்
அருகினில் கிணறுகள்
தோண்டுவோன் முட்டாளில் முட்டாளடா

எரிகின்ற பாலையில்
எங்கோ ஓர்மூலையில்
இனிய நீர் தருபவன் அறிஞனடா

10. கட்டாய் இரு

கட்டாய் இருந்து விட்டால்
காய்ந்த விறைனையும்
வெட்ட முடியாதடா

திட்டாய்த் தனித்திருந்தால்
தேக்கு மரம் கூட
சிற்றுளியில் சாயுமடா

Series Navigation

Similar Posts