சேவியர் கவிதைகள்

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

1)வேப்ப நிழல் நினைவுகள்… 2)- அவரவர் வேலை அவரவற்கு… -3) இன்னும் சில பக்கங்கள்….4) மழை


***

வேப்ப நிழல் நினைவுகள்…

பள்ளிக்கூட பிள்ளை நாட்களில்

வீட்டுக்கு மேற்கே நிற்கும்,

வேப்பமர நிழலில் படித்து…

கல்லூரி நாட்களில்

ஏதோ ஒரு பூங்காவின் எல்லையில்

வேப்பமர அடியில் படுத்து…

நடுவயது நாட்களில்

வெயில் தீயின் வேகம் இறக்க

சாலைக் கரைகளில்

வேப்ப மர நிழல் தேடி..

வியர்வையால் வருந்திய

வருடங்கள் அவை…

இப்போது

சுத்தமான காற்று வேண்டுமென்று

சாய்வு நாற்காலி எடுத்து

வேப்பமர நிழலில் இடுகிறேன்.

என் பேரனுக்கு

மின்விசிறி தான் பிடித்திருக்கிறதாம்.

மெத்தையில் படுத்து

படித்துக் கொண்டிருக்கிறான்.

எனக்கோ,

கிளையசைத்துக் கதைபேசி,

இலையசைத்து விசிறிவிடும்

வேப்பமரம் தான் தோழனாய் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு பரபரப்புப் பிராயமானபின்,

என் முதுமையின் முனகல்களை

முணுமுணுக்காமல் கேட்பது

என் கைத்தடியும் இந்த வேப்பமரமும் தானே…

*****

அவரவர் வேலை அவரவற்கு…

இந்த கணிப்பொறி வேலை

பாடாய்ப் படுத்துகிறது.

எழுத்துக்களின் மேல் ஓடி ஓடி

கை விரல்களுக்குக் கால் வலிக்கிறது.

எத்தனை நேரம் தான்

வெளிச்ச முகம் பார்ப்பது ?

கண்களுக்குள் பார்வை கொஞ்சம்

பழுதடையும் வாசனை.

உட்கார்ந்து உட்கார்ந்தே

என்

முதுகெலும்புக்கும் முதுகு வலி.

எல்லாம் எழுதியபின்

அவ்வப்போது

தொலைந்துபோகும் மின்சாரம்,

எரிச்சலின் உச்சிக்கு என்னை எறியும்.

வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கும்

சில சில்லறை வேலைகள்…

நிம்மதியை நறுக்குவதற்காகவே

கத்தியோடு அலையும் வைரஸ்கள்.

அவ்வப்போது எட்டிப்பார்த்து

நிலமை கேட்கும் மேலதிகாரி…

முரண்டுபிடித்து ஸ்தம்பிக்கும் என் கணினி.

தேனீர் தேடச்சொல்லும் தளர்வு…

அப்பப்பா…

இந்த கணிப்பொறி வேலை

பாடாய்ப் படுத்துகிறது…

சோர்வில் சுற்றப்பட்டு மாலையில்,

வீடுவந்ததும் மனைவி சொல்வாள்

உங்களுக்கென்ன

உக்கார்ந்து பாக்கிற உத்யோகம்…

****

இன்னும் சில பக்கங்கள்….

நண்பர்களே…

ஏன் இந்த சிந்தனை ?

போர்கள் வாழை மரங்கள்,

ஒன்றின் முடிவில் இன்னொன்று முளைக்கும்.

போர்ப்பயிரை நிறுத்துங்கள்.

பாதுகாப்புக்காய்

எழுபது விழுக்காட்டை ஒதுக்கி,

பாட்டாளிகளை பட்டினிக்குள் பதுக்கி,

வறுமைக்கோட்டை இறுக்கிக் கட்டும்

இந்த மண்டையோட்டு அறுவடை

இருபதாம் நூற்றாண்டிலுமா ?

ஒவ்வோர்ப் போரின் பின்னாலும்

பலியிடப்படும் பொருளாதாரமும்,

தீயிடப்படும் தியாகிகளின் உயிரும்,

மிஞ்சுவதெல்லாம்

மட்கிப்போன தடயங்கள் மாத்திரம்.

உலகத்தைச் கோரைப்பாயாய்

சுடுட்டிக் கட்டியவர்கள் எல்லாம்,

விரலிடுக்கில் சிறு வெண்கலம் கூட

எடுத்துச் சென்றதில்லை.

நீயா.. நானாப் போட்டிகள்

எப்போதுமே

மூன்றாவது மனிதனென்று தானே

முடிவாகியிருக்கிறது !

மலைச்சரிவுகளில் ஞானிகள்

முளைக்கலாம்…

ஆனால் மனச் சரிவுகளில் தான்

மனிதர்கள் முளைக்க முடியும்.

தேசியப்பறவையாய் மயில் இருந்தும்

வல்லூறுகளை மட்டும்

வழிபடுவது நியாயமில்லை என்பதால்…

இதோ…

முதல்

சமாதானப் புறாவை பறக்கவிடுகிறேன்

தயவு செய்து அதை

சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

***

மழை

மெல்ல மெல்ல மனக்கேணியில்

தெறித்துச் சிதறுகிறது நீர் முத்துக்கள்.

வெளியே மழை.

மண்ணோடு ஏதோ சொல்ல

மரண வேகத்தில் பாய்கிறது மேகம்.

மழை…

இயற்கை செடிகளுக்கு அனுப்பும்

பச்சையப் பராமரிப்பாளன்.

சாலைகளுக்கோ அவன்

சலுகைச் சலவையாளன்.

வாருங்கள்,

குடைகளுக்குள் நனைந்து போதும்

தண்ணீரால் தலைதுவட்டிக் கொள்ளலாம்.

பாருங்கள்,

அந்த வரப்பின் கள்ளிகள் கூட

கண்திறந்து குளிக்கின்றன…

சின்னச் சின்ன சிப்பிகள் கூட

வாய் திறந்து குடிக்கின்றன…

பூக்கள் செல்லமாய்

முகம் கழுவிக் கொள்கின்றன.

முகம் நனைக்க முடியாத வேர்கள் கூட

அகம் நனையக் காத்திருக்கிண்றன.

மழை வேர்வை சிந்தியதும்

பூமிப்பெண்ணிடம் புதுவாசனை…

இப்போது தான்

சகதிக்கூட்டைச் சிதைத்து வெளிக்குதிக்கின்றன

பச்சைத் தவளைகள்…

முகம் சுருக்க மறுக்கின்றன

தொட்டாச்சிணுங்கிகள்.

புற்களைக் கழுவி சாயவிட்டு,

காய்ந்த ஆறுகளில் ஆழப்பாய்ந்து,

சிறுவர்களின் காகிதக் கப்பல்களைக் கவிழ்த்து,

மரங்கொத்திக்கு தாகம் தணித்து

இதோ நதியைக் குடிக்கப் பாய்கிறது

மண்ணில் குதித்த மழை.

பூமிக்கு வானம் அனுப்பிய

விண்ணப்பக் கயிறு இது ?

காற்று ஏறி வர

வானம் இறக்கிவைத்த

இந்த தண்ணீர்ஏணி மேகத்தின் முதுகில்

தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.

அவ்வப்போது வானம்

மின்னல் நுனியில்

இடி கட்டி இறக்குகிறது.

மொட்டைமாடியில் இளைப்பாறி,

நாட்டிய நங்கையின்

சலங்கையொலியாய் சன்னலோரம் சிதறி,

குவிந்த இலைகளின் கழுத்து வரைக்கும்

குளிர் ஊற்றி சிரிக்கிறது

இந்த மழை.

தேனீர்க் கோப்பைகளில் வெப்பம் நிறைத்து

கதகதப்புப் போர்வைக்குள் உடலைப் பொதிந்து,

சாரளங்கள் வழியேயும்

மழையை ரசிக்கலாம்…

உச்சந்தலைக்கும்

உள்ளங்கால் விரலுக்குமிடையே

ஈரச் சிறகைச் சுற்றிக்கொண்டும்

மழையை ரசிக்கலாம்..

மழை.. அது ஒரு இசை.

கேட்டாலும் இன்பம்,

இசைத்தாலும் இன்பம்.

நல்ல இசை தன் ரீங்காரத்தை

காதோரங்களில் விட்டுச் செல்லும்…

மழை மாவிலையில் விட்டுச் செல்லும்

கடைசித் துளிகளைப்போல.

வாருங்கள்,

குழாய்த்தண்ணீர்க் கவலைகளை

கொஞ்சநேரம் ஒத்திவைத்துவிட்டு…

இந்த சுத்தமழையில்

சத்தமிட்டுக் கரையலாம்….

மழை…

புலன்கள் படிக்கும் புதுக்கவிதை…

மழை…

பூமிக்கு பச்சை குத்தும்

வானத்தின் வரைகோல்…

மழை…

இளமையாய் மட்டுமே இருக்கும்

இயற்கையின் காவியம்…

மழை…

இலக்கணங்களுக்குள் இறுக்கமுடியாத

இயற்கையின் ஈர முடிச்சு…

***

Series Navigation

author

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

Similar Posts