ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி

கோழியிலிருந்து
முட்டை வந்ததா
முட்டையிலிருந்து
கோழி வந்ததா
என்ன முயன்றும்
விடை காணேன்

என் மகன் சொன்னான்:

கோழியிலிருந்து தான்
முட்டை வந்தது
முட்டையிலிருந்து
கோழி வராது
கோழிக்குஞ்சுதான் வரும் என்று

கேள்வியை மாற்றினேன்:

கோழியிலிருந்து
முட்டை வந்ததா
முட்டையிலிருந்து
கோழிக்குஞ்சு வந்ததா

கோழியிலிருந்து தான்
முட்டை வந்தது
முட்டையிலிருந்து வந்தது
சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் என்றான்

கேள்வியை இன்னும் செதுக்கினேன்:
கோழி முதலில் வந்ததா
முட்டை முதலில் வந்ததா

கோழி பிறகுதான் வந்தது
கோழி வருவதற்குமுன்பே
பலவித முட்டைகள் வந்துவிட்டன என்றான்

கேள்வியை இன்னும் கூர்மையாக்கினேன்:

கோழி முதலில் வந்ததா
கோழி முட்டை முதலில் வந்ததா

கோழி முட்டை மூன்றாவதாக வந்தது
கோழியும் சேவலும்
முதலாவதாகவோ இரண்டாவதாகவோ
வந்தபின் என்றான்

கேள்வி கேட்கத் தொியாமல்
பதிலை ஏன் தேடுகிறேன் ?

2.

நான் மாறிவிட்டதாக
மிக வருத்தப்பட்டாய்
என் இயல்பு மாறவில்லை
மாறுவது என் இயல்பு

3.

அறிவிப்புகள்

‘நாய்கள் ஜாக்கிரதை ‘
மனிதர்கள் உள்ளே இருக்கிறார்கள்

‘திருடர்கள் ஜாக்கிரதை ‘
உங்களைப் பிடிக்க வருபவர்கள்
உங்களைவிட மோசமானவர்கள்

4. அவரவர் அகராதிகள்

நீ குடை கொண்டுவர
விரும்பாத ஒரு நாளில்
திடாரென்று மழை வந்தது

என் குடையில்
இருவருக்கு இடம் இருந்தாலும்
நாகாிகமும் கூட வர
இடம் இல்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நடந்தேன்

நான் மகிழ்ச்சியாக இருந்ததை
நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்

நான் மகிழ்ந்தது
உனக்கு
குடை கொடுக்க முடிந்ததற்காகவல்ல

குடை இருந்தும்
நான் நனைய முடிந்ததற்காகவே

உன் கூந்தல் ரோஜா
கீழே விழுந்ததைப் பார்த்து
நான் வருத்தப்பட்டதை
நீ கடைக்கண்ணால் பார்த்தாய்

உன் கூந்தலிலிருந்து
விழுந்ததற்காகவல்ல
அது விழுந்ததற்காகவே
நான் வருத்தப்பட்டேன்

என் மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும்
உனது அகராதியில்
அர்த்தப்படுத்திக்கொண்டு

ஒரு ஏளனப் பார்வையுடன்
எனக்கு விடையும் குடையும் கொடுத்து
நிழற்குடையில் ஒதுங்கினாய்

அப்படி ஒரு
பார்வை பார்த்ததால்,
உனக்கென்ன கிடைத்தது –
எனக்கொரு கவிதை.

5. வேட்டை

கற்பழிப்பவன்
புலி என்றால்

காதலிப்பவன்
சிலந்தி

அழகழகாய்
வலை பின்னி
சிக்கிய இரையை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்னும்
சிலந்தி

Series Navigation

author

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

Similar Posts