பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

தமிழ்ச்செல்வன்


தமிழ் உரைநடை பற்றிய கட்டுக்கதை
மேற்கூறப்பட்ட கிறுத்துவப் பாதிரிகள்தான் தமிழில் உரைநடையை அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பிரசாரமும் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உரைநடையை அன்னியர் வந்து அறிமுகம் செய்தனர் என்று சொல்வது பச்சைப் புளுகு அன்றி வேறென்ன? ஒவ்வொரு இலக்கியத்திற்கும் உரை எழுதிய உரையாசிரியர்கள் உரைநடையிலன்றி வேறு எவ்வடிவில் எழுதினார்கள்?
தமிழ்மொழி குறைந்த பட்சமாக 2000 வருட வரலாறு உடையது. தமிழ் பாரம்பரியம் என்பது மிகவும் கல்வியறிவு மிக்கதும் இயல் இசை நாடக இலக்கியங்களை எழுதிச் சேமித்து வைத்திருந்ததுமான ஆரோக்கியம் மிகுந்த பாரம்பரியம் ஆகும். கிறுத்துவர்கள் சிலர் பொய்யாக்க் குறிப்பிடுவது போல வாய்மொழிப் பாரம்பரியம் கொண்டதல்ல. தமிழின் எழுத்திலக்கியப் பாரம்பரியமானது, சங்க காலங்களில் பண்டைய அறிஞர்களாலும், இடைக்காலத்தில் பிராம்மண மற்றும் சைவ அறிஞர்களாலும் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இளம்பூரணர், சேனவராயர், பேராசிரியர், பரிமேலழகர், நச்சினார்க்கினியார், தெய்வச்சிலையார் போன்ற பல அறிஞர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இம்மகோன்னதப் பாரம்பரியம். இங்கே நாம் முகியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஆக்கிரமிப்புகளும் நிலையில்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழ்நிலைகளும் இருந்தபோதுகூட இப்பாரம்பரியம் கடைப்படிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது என்பது தான். சைவ ஆதீனங்கள் தமிழ்ச் செம்மொழி இலக்கியப் பாரம்பரியத்தை பாதுகாக்கப் பேருதவி புரிந்துள்ளார்கள்.
அதன் பிறகு நவீன காலக்கட்டங்களில்கூட உ.வே.சாமிநாத ஐயர், ராமச்சந்திர தீக்ஷிதர், நீலகண்ட சாஸ்திரி, பி.நாராயணசாமி ஐயர், ஆர்.ராகவ ஐயங்கார் போன்ற மிக்க ஈடுபாடு கொண்ட பிராம்மண சமூகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், சி.டபிள்யு.தாமோதரம் பிள்ளை, ஸ்வாமி விபுலானந்தா போன்ற தீவிர சைவ சமயப் பற்றாளர்களும் தமிழ்ச் செம்மொழியின் பாரம்பரியத்தை வளர்த்தும் பாதுகாத்தும் வந்தவர்கள் ஆவர். இவர்களுடையத் தியாகங்களுக்கும் பங்களிப்புக்கும் முன்னால் கிறுத்துவ பாதிரிகளின் பங்களிப்பு என்று சொல்லப்படுவது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், முன்னால் கூறப்பட்டவர்களுடைய பங்களிப்பில் மொழி மீது பக்தியும், மொழி வளர்ச்சியின் மீது ஈடுபாடும், மொழி சார்ந்த கலாசாரத்தின் மீது பற்றும், அவற்றிற்காகத் தியாகம் செய்யக்கூடிய மனப்பாங்கும் இருந்தன; கிறுத்துவப் பாதிரிமார்கள் பங்களிப்பில்(?) சுயநலமும் மதமாற்ற நோக்கமும் மட்டுமே இருந்தன.
அகராதி பற்றிய கதை
தமிழ் எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் ஆகியவற்றின் அகராதி முறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கிறுத்துவப் பள்ளிகளில் தான் முதலில் ஆரம்பமானது என்று விளம்புகிறது www.cathnewsindia.com என்கிற கிறுத்துவ இணையதளம். பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசம் என்பவர் தான் இதை கிறுத்துவப் பள்ளிகளில் ஆரம்பித்ததாகவும், அவரைத் தொடர்ந்து பாதிரியார் சிங்கராயர் டேவிட் ஆறு தொகுதிகள் கொண்ட அகராதியை அச்சிட்டு பின்னர் அவற்றை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வழங்கியதாகவும் இந்த இணைய தளம் கூறுகிறது.
பாதிரியார் ஞானப்பிரகாசம் அவர்களை ஒரு தமிழ் அறிஞராகவோ, வரலாற்று ஆசிரியராகவோ ஏற்றுக்கொள்வதில் இலங்கைத் தமிழ் அறிஞர்களிடையே இருவிதமான கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவருடைய பல ஆராய்ச்சி முடிவுகள் வரலாற்று ஆதாரங்கள் இல்லாதவ என்று சிலர் கூறுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயானது தமிழ் மொழியே என்று இவர் கூறியதை உதாரணமாகச் சொல்லுகிறார்கள்.
உண்மையில் கிறுத்துவ மிஷனரிகள் நம் மண்ணில் கால்வைப்பதற்கு முன்பே வழக்கத்தில் இருந்தன நிகண்டு போன்ற தமிழ் அகராதி முறைகள். “நிகண்டுகள் பாடல் வடிவில் இருக்கும். தமிழில் பல நிகண்டுகள் 11-ஆம் நூற்றாண்டு முதலே இருக்கின்றன. உதாரணமாக
பகவனே ஈசன் மாயோன்
பங்கையன் சினனே புத்தன்
என்பது நிகண்டில் வரும் பாடல் வரிகள். இப்படிப் பாடல்களாக இருந்தால் மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறுகிறார் பல அரிய மரபிலக்கிய சொல்லகராதிகளைத் தொகுத்தளித்தவரும், மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் நேரடி மாணவருமான தமிழறிஞர் புலவர் மணியன் அவர்கள். அவரே, “அகர வரிசைப்படி அகராதியை அமைக்கும் முறையை வெள்ளைக்காரர்கள் தான் கண்டுபிடித்தார்கள். அகர வரிசைப்படியான அகராதியை நமக்குக் கொடுத்தார்கள்” என்றும் கூறுகிறார். (தமிழறிஞர் புலவர் மணியன் அவர்களுடன் நேர்காணல் – ”ரசனை” (ஜூலை 2010) மாத இதழ் – திரிசக்தி குழும்ம், சென்னை)
உண்மை தான். ஆனால் அதற்காக, உரைநடை என்பதே பாதிரிமார்கள் அறிமுகம் செய்தது தான், அவர்கள் பங்களிப்பினால் தான் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் பிழைத்தெழுந்தது, என்றெல்லாம் மிகைபடுத்திக் கூறுவதன் பின்னே உள்ள நோக்கம் தெளிவாகத் தெரிகிறதே! மாபெரும் இலக்கியங்களுக்கு உரை எழுதிய தமிழர்கள், நிகண்டுகள் எழுதிய தமிழர்கள், நாளடைவில் அகர வரிசைப்படியும் அகராதி தயாரித்திருக்க மாட்டார்களா என்ன?
மறுக்கப்பட்ட அச்சுரிமை
உண்மை என்னவென்றால், அயல்நாடுகளிலிருந்து வந்த வெள்ளைக் கிறுத்துவர்கள் அச்சு இயந்திரங்களையும் அச்சடிக்கும் முறையையும் தான் அறிமுகம் செய்தார்கள். அதுவும் எதற்காக? மதமாற்றம் விரைவாக நடக்கவேண்டும் என்பதற்காக.
காகிதமும், அச்சும் அறிமுகம் ஆவதற்கு முன்னால், அதாவது வெள்ளைக்காரர்கள் நம் தேசத்திற்கு வந்து அவற்றை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு வரை, தமிழில் மதிப்பு மிக்க நூல்களெல்லாம் பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, வரிசையாக்க் கோர்க்கப்பட்டு, மரம் அல்லது செப்புத் தகடுகளை மேலும் கீழுமாகக் கொடுத்து கட்டப்பட்டு இருக்கும். ஓலைச் சுவடிகளில் எழுதுவதென்பது பரவலாகவும் பொதுவாகவும் இருந்த ஒரு பழக்கம் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு பிரதி தான் செய்யமுடியும். மற்றொரு பிரதி எடுக்க வேண்டுமென்றால் மீண்டும் திருப்பி ஓலைச் சுவடியில் எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனக்கு வேண்டிய பாடங்களை ஆசிரியரிடமிருந்து தங்களுக்குறிய பிரதிகளாக மீண்டும் எழுதித் தான் எடுத்துக் கொண்டார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை பார்க்க வேண்டுமென்றால், கட்டைப் பிரித்து, குறிப்பிட்ட சுவடியைத் தேடி எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஓலைச் சுவடிகளில் எழுதுவதும், பிரதி எடுப்பதும், குறிப்பெடுப்பதும், தமிழ் இந்துக்களுக்குச் சுலபமாக இருந்ததே ஒழிய, அன்னியப் பாதிரிமார்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் இயலாமை அவர்களின் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடைஞ்சலாகவும் இருந்தது. தங்களுடைய பிரசாரக் கருத்துக்களையும், விவிலியக் கருத்துக்களையும், எழுத்து வடிவில் மக்களிடம் சேர்த்தால் ஆன்ம அறுவடைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அச்சு இயந்திரத்தைத் தருவித்தார்கள் பாதிரிமார்கள். இந்தியாவிலேயே அச்சில் வந்த முதல் மொழி தமிழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தரங்கம்பாடியில் தான் முதன் முதலில் ஜெர்மானிய ஒத்துழைப்புடன் டச்சு நிறுவனம் தமிழில் விவிலியத்தை அச்சிட்டது என்பதை பார்த்தலோமியோ ஸீகன் பால்கு என்கிற பாதிரியைப் பற்றிய விவரத்தில் பார்த்தோம். அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் சென்னை-வேப்பேரியில் ஒரு அச்சகத்தை நிறுவினர். அதன் பிறகு, பெருமளவில் மதமாற்றம் செய்து ஆன்மாக்கள் அறுவடை செய்வதற்காக, அச்சகங்கள் மெதுவாக ஆங்காங்கே நிறுவப்பட்டன. இந்தியாவில், அச்சிடுதல் வரலாற்றின் துவக்கம் வேதனை மிகுந்ததாகும். அச்சகங்களை வைத்திருந்த கிறுத்துவ மிஷனரிகள் இந்திய இலக்கியங்களையும் உரைநடை நூல்களையும் அச்சிடுவதைத் தவிர்த்து அவற்றை அடக்கி வைத்தனர். இந்திய மொழிகளில் இலக்கியங்கள் மற்றும் உரைநடைகளின் முன்னேற்றத்தை அடக்கு முறையில் தடுத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியர்கள் அச்சகம் தொடங்குவது, இந்திய நூல்களை அச்சிடுவது ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் ஒன்றையும் அமல்படுத்தினர். அன்னியரும், கிறுத்துவ மிஷனரிகளும் மட்டுமே அச்சிட அனுமதிக்கப் பட்டனர்.
பின்னர் பல வருடங்கள் கழித்து ஆளுனராக இருந்த தாமஸ் மன்ரோவும் அரசு அதிகாரியாக இருந்த எல்லிஸ் துரையும் மெற்கொண்ட நடவடிக்கைகளினால் 1835-ஆம் ஆண்டு தான் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இந்தியரும் அச்சகங்கள் வைத்து அச்சிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தடை இல்லாதிருந்தால் 18-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழில் இலக்கியங்களும் உரைநடைகளும் ஏராளமாகப் படைக்கப் பட்டிருக்கும். அடக்கு முறையில் அவற்றைத் தடை செய்து மதமாற்றத்திலும் பெரிதும் ஈடுபட்டு வெற்றி கண்டனர் கிறுத்துவப் பாதிரிமார்கள். (Christianity in India – A Critical study: – Vivekananda Kendra Prakashan)
உண்மை இவ்வாறிருக்க, ஏதோ உரைநடையையே கிறுத்துவப் பாதிரிகள் தான் தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தமிழ் மொழிக்கு பெரிய சேவை செய்துள்ளனர் என்று பொய்ப்பிரசாரம் செய்வதை என்னவென்று சொல்வது? தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அச்சகத்தை சொந்தமாக நிறுவவோ, புத்தகங்களை சொந்தமாக அச்சிடவோ உரிமை இல்லை என்று சட்டம் போட்டு, தமிழ் இலக்கியத்தையும், கலாசாரத்தையும் பெரிதும் அழித்து இருக்கிறார்கள் என்பது மேற்கூறப்பட்ட உண்மையான செய்திகளிலிருந்து தெரிகிறதல்லவா? இது தான் கிறுத்துவப் பாதிரிமார் தமிழுக்குச் செய்த தொண்டின் லட்சணம்!

(தொடரும்…)

Series Navigation

author

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

Similar Posts