பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

தமிழ்ச்செல்வன்


கட்டுரைத் தொடரின் பொருள்
நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் வாயிலாகவும், கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும் என்பது போலவும் ‘தமிழ் உரைநடை’ என்பதே கிறுத்துவப் பாதிரிமார்கள் தமிழ் மொழிக்குக் கொடுத்த கொடை என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்திற்கு, மாநாட்டை நடத்திய திராவிட இனவாதக் கூட்டமும், மாநாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பங்காற்றிக் கொண்டு, அக்கூட்டதிற்கு ஜால்ரா போட்ட கூட்டமும், பூரண ஆதரவு அளித்தன. ஆனால் உண்மையான தமிழ்பற்று கொண்டவர்களும், நடுநிலையாளர்களும், பாரத மொழிகளுக்கிடையே உள்ள உறவும் அவ்வுறவினால் பின்னிப் பிணையப்பட்டுள்ள மகோன்னதமான பாரத கலாசாரத்தின் பெருமையை உணர்ந்தவர்களும், தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிறவர்களும், இப்பிரசாரத்தை பொய்யென அடியோடு வெறுத்துப் புறந்தள்ளுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. (cathnewsindia மற்றும் Hindu மற்றும் expressbuzz ).

இந்தப் பொய்ப்பிரசாரத்தைப் பரப்புபவர்கள் தமிழ் மொழிக்கு உயிர்கொடுத்தவர்களாக முன் நிறுத்துபவர்கள் ஜி.யு.போப், கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி, ராபர்ட் கால்டுவெல், பார்த்தலோமியோ ஸீகன் பால்கு, டாக்டர் சாமுவேல் கிரீன், இரேனியஸ் மற்றும் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் எல்லிஸ் துரை என்று வழங்கப்பட்ட ஆங்கிலேய அரசு அதிகாரியாக இந்தியாவிலும், சாமுவேல் கிரீன் மருத்துவராக இலங்கையிலும் பணியாற்றி பாதிரிமார்களின் மதமாற்றத்திற்குத் துணை நின்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் பெருமளவில் மதமாற்றம் புரிந்து இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை கிறுத்துவ தேசமாக ஆக்கவேண்டும் என்கிற “புனித” நோக்கத்தோடு இங்கே காலூன்றியவர்கள் தான். எழுத்தாளர் முனைவர் கே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தன்னுடைய “ஐரோப்பிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கு” (The contribution of European scholars to Tamil- K. Meenakshisundaram) என்ற புத்தகத்தில் கிறுத்துவ மிஷனரிகள் காலத்தைப் ”பொற்காலம்” என்று வேறு போற்றுகிறார்! இந்தப் புத்தகமானது அவர் 1966-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்காகத் தன்னுடைய வியாசமாக (Thesis) அளித்தகட்டுரைதான் இது. (http://www.hindu.com/2010/06/25/stories/2010062554000700.htm ) எனவே இந்தப் பிரசாரம் உண்மைதானா என்று ஆராய்ந்து நோக்குவது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை பயக்கும்.

மிஷனரிகளும் அவர்கள் நோக்கமும்

இம்மண்ணின் மைந்தர்களான தமிழ் இந்துக்களிடம் உரையாட இயலாததாலும், பேச்சுத் தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் வைத்துக்கொள்ள முடியாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசாமலும், கருத்துக்களைப் பரிமாற்றாமலும் அவர்களை மதமாற்றம் செய்ய முடியாது என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என்று அனைத்தும் ஊறிய ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழ் இந்துக்களை வெறுமனே தமிழ் மொழியில் பேசி மதமாற்றம் செய்ய முடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் பால் அவர்கள் கவனம் சென்றது.

ஒரு தேசத்தின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படித்தால் தான் அத்தேசத்தின் பண்பாடும், கலாசாரமும், ஆன்மீகப் பாரம்பரியமும் புரிபடும். அப்போது தான் அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய மதமாற்றத் தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிற களவு மனப்பான்மையுடன் தான் இவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்களே தவிர, தமிழின் பால் கொண்ட ஈர்ப்போ, ஈடுபாடோ, பற்றோ, பாசமோ அல்ல.

மேலும், இந்த நாட்டின் பண்பாடும், கலாசாரமும், பாரம்பரியமும் எப்பேர்பட்டன, எவ்வாறு இருக்கின்றன என்பதை இவர்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.
ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.
ஐரோப்பிய நிறுவனங்கள்
16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறுத்துவ ஆக்கிரமிப்பு மெதுவாகப் பரவியது. போர்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஜெர்மானிய மற்றும் ஆங்கிலேய கிறுத்துவ மத நிறுவனங்கள், வியாபார நோக்கிலும், மத ஊழிய நோக்கிலும் கோவா, கேரளம், தமிழகம், வட கிழக்கு, வங்காளம் என்று இந்தியாவின் பல இடங்களில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் பின்னே அந்நாடுகளின் படையெடுப்பும் தொடர்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் காலத்திலிருந்தே அடக்குமுறை ஆரம்பமாகிவிட்டது. 1858-ஆம் ஆண்டு அரசியல் சக்தி பெற்று ஆங்கிலேயர் ஆட்சி அமைத்தனர். அரசியல் சக்தி அடைந்தவுடன் மத நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்களும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தது ஆங்கிலேய அரசாங்கம். அரசு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் விரைவில் பலன் கிட்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். சுதந்திரம் பெற்ற பின்னும் இந்தியர்கள் விழித்துக் கொள்ளவில்லையாதலால், அரசியல் சக்தியும், ஆட்சி பலமும் அவர்கள் கையிலேயே தொடர்கின்றது என்பதை, சோனியாவின் தலைமையின் கீழும், அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சி நடப்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் திராவிட மாயையில் கட்டுண்டு கிடப்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பாதிரிமார்கள் தான் என்றும், ஹிந்து மதம் உயிரோட்டத்துடன் இருக்கும் வரை இந்தியரை அடிமைப் படுத்த முடியாது என்பதே கிறுத்துவ மிஷனரிகளின் நோக்கம் என்றும் பத்திரிகையாளர்/எழுத்தாளர் சுப்பு அவர்கள் தன் “திராவிட மாயை” புத்தகத்தில் கூறுகிறார். “டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப்பட்டினத்திலும் (1647), நாகைப் பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்கு கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.” என்று கிறுத்துவ ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டிய சுப்பு அவர்கள், “ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறுத்துவப் பாதிரிமார்கள் இறங்கிய போது, இன்னொரு பக்கம் கிறுத்துவத்தை முன்னிலைப் படுத்தாமல் இந்துக்களைப் பிளவு படுத்தும் முயற்சியும் தொடங்கியது” என்று கூறி, “கால்டுவெல்லின் தாயாதிகள்” என்கிற அத்தியாயத்தில் தமிழகத்தில் கிறுத்துவப் பாதிரிகள் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகளையும், ஹிந்துக்களைப் பிளவு படுத்த அவர்கள் கையாண்ட யுக்திகளையும் விளக்குகிறார். [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 20-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]
ஆகவே, 16-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் கால் வைத்த பாதிரிமார்கள் மதம் வளர்க்க வந்தவர்கள், அரசியல் சக்தி பெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வந்தவர்கள், அதற்காகத் தான் நம் மொழியைக் கற்றார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் இவர்களுக்கே உரிய களவு மனப்பான்மையினால், மதமாற்றம் செய்வதற்காகக் “கலாசாரக் களவு” (Inculturation) முறையும் செய்தார்கள். (Ref: ‘Inculturation’ – A danger to communal amity! – http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8512 )
ரோமானிய பிராம்மணர் நொபிலி
இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இத்தாலி நாட்டில் இருந்து வந்த ராபர்ட்-டி-நொபிலி (1577-1656) என்கிற கிறுத்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம்/தமிழ் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொண்டு தன்னை ’ரோமாபுரி பிராம்மணர்’ என்றும் சொல்லிக்கொண்டார். காவியுடை தரித்து, சிறிய சிலுவை இணைத்த ஒரு பூணூலையும் அணிந்துகொண்டு, நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டு, மதுரையில் ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக் கொண்டார். உணவுப் பழக்கத்தில் சுத்த சைவராகவும் மாறினார். நடப்பதற்குக் கால்களில் மரத்தாலான பாதுகைகளே உபயோகித்தார். பல நூற்றண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன, கர்த்தர் எனும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட, வேதம்தான் பைபிள் என்று சாதித்தார். காவியுடை தரித்து, பூணூல் அணிந்து, குடில் ஒன்றில் ஆசிரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய கலாசாரக் களவு முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு அந்தச் சமயத்தில் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. இவருடைய மதமாற்ற வழிமுறைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால், மதுரையிலிருந்து வெளியேறி, திருச்சி, சேலம் முதலிய ஊர்களுக்குச் சென்று இறுதியில் சென்னை சாந்தோம் அருகே ஒரு சிறிய வீட்டில் 1656-ஆம் ஆண்டு இறந்து போனார். (Ref: – “The Portuguese in India”, Orient Longman, Hyderabad, 1990 and “Christianity in India-A critical study” – Vivekananda Kendra Prakasham).
இவர், 15 புத்தகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவை மட்டுமல்லாமல் போர்சுகீசிய-தமிழ் அகராதி ஒன்றையும் தயாரித்துள்ளார். மேலும் தமிழில் பல விவிலிய வார்த்தைகளையும் புகுத்தியிருக்கிறார். இதனால் ‘தமிழ்’ வளர்ச்சி அடைந்ததா அல்லது ‘கிறுத்துவம்’ வளர்ச்சி அடைந்ததா என்று பார்த்தால் கிறுத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கும்.
தீண்டாமையைக் கடுமையாக ஆதரித்த இவர், “கிறுத்துவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை, கிறுத்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப்போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறுத்துவ சமயம் பரவுவதற்கு இடையூராக இருப்பது இப்போதனையே” என்று 1650-ல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் தன் குறிக்கோளைத் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் நொபிலி என்று காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘கிறுத்துவமும் சாதியும்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். [திராவிட மாயை (முதல் அத்தியாயம்; பக்கம் 19) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]
இத்தாலிய முனிவர் பெஸ்கி
இவருக்கு அடுத்தவர் கான்ஸ்டண்டைன் ஜோசெஃப் பெஸ்கி (1680-1746) என்கிற வீரமாமுனிவர். ராபர்ட்-டி-நொபிலி தன்னைப் பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டதைப்போல் இவர் தன்னை முனிவராக்கிக் கொண்டார். அதுவும் வீரமுள்ள மாமுனிவராக! அவரைப்போலவே, இவரும் தன்னை ஒரு ஹிந்து சன்யாஸியைப் போலக் காட்டிக்கொண்டார். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மதமாற்றங்களில் ஈடுபட்டார். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு “தேம்பாவணி” என்னும் உரைநடையில் எழுதப்பட்ட புனித ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு. கம்ப ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து அதைப்போல் கிறுத்துவத்திலும் ஒரு காப்பியம் வேண்டும் என்று எண்ணி தேம்பாவணியை இயற்றினாராம். தேம்பாவணியால் தமிழ் வளர்ந்ததா அல்லது கிறுத்துவம் வளர்ந்ததா என்று பார்த்தால், கிறுத்துவம் வளர்ந்து, புனித ஜோசப் பெயரும் தமிழகத்தில் நிலைநாட்டப் பட்டது, என்பதுதான் உண்மை. இந்தத் தேம்பாவணியால் தமிழுக்கு எதுவும் பிரயோசனம் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் அதோடு நிறுத்தவில்லை தன் தமிழ்ப் பணியை! நம் பாரத தேசத்தில் வேத காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்த குரு-சிஷ்ய பரம்பரை என்று போற்றப்பட்ட கல்வி முறையைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும்’ என்ற நூலையும் எழுதினார். முனிவர் என்று பெயர் வைத்துக்கொண்டு குரு-சிஷ்ய பரம்பரையைக் கிண்டல் செய்தவரைத் தமிழுக்குச் சேவை புரிந்துள்ளார் என்று கொண்டாடிய திராவிட இனவெறியாளர்கள், இவருக்குச் சென்னைக் கடற்கரையில் சிலையும் எடுத்தனர்.
ஜெர்மானிய ஐயர் ஸீகன்பால்கு
ஜோஸஃப் பெஸ்கி காலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, மற்றொரு பாதிரி பார்த்தலோமியோ ஸீகன் பால்கு (1683-1719) என்கிற ஸீகன் பால்கு ஐயர். ஆம், பிராம்மணர், முனிவர் வரிசையில் அடுத்ததாக ஐயர்! இவர் ஜெர்மனியிலிருந்து வந்த பிராடஸ்டண்டு பாதிரியார். 1706-ல் தரங்கம்பாடியில் வந்து இறங்கிய ஸீகன்பால்கு, அங்கு ஏற்கனவே இருந்த ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த அச்சு இயந்திரங்களை வைத்து அச்சகம் நட்த்திக்கொண்டிருந்த ஒரு டேனிஷ் கத்தோலிக்க நிறுவனம் சார்பாக, விவிலியத்தின் புதிய ஏற்பாடை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். பெருமளவில் மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வந்திறங்கிய இவருக்கு டேனிஷ் (Danish) கத்தோலிக்கர்களுடன் சண்டை போடுவதிலேயே பாதி நாட்கள் கழிந்தது. டேனிஷ் நிறுவனம் இவரைச் சிறையிலும் அடைத்தது.
பிராம்மணர்களிடம் மற்ற சமூகத்தவர்கள் வெறுப்பு கொள்ளுமாறு பிராம்மண துவேஷத்தை முதன் முதலில் தமிழகத்தில் உண்டாக்கியவர் என்கிற “பெருமை” உடையவர் இந்தப் பாதிரி. அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்ட இவர் 1719-ல் தன்னுடைய 36-வது வயதில் இறந்து போனபோது, தரங்கம்பாடியில் இரண்டு சர்ச்சுகளும், இந்தியப் பாதிரிமார்களுக்கான பயிற்சி மையத்தையும், தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட 250 இந்தியக் கிறுத்துவர்களையும் விட்டுச் சென்றார். இவர் சார்ந்திருந்த “லுதெரன் சர்ச்சு” பெருமளவு வளர்ந்து ஜூலை 2006-ல் இவர் வரவின் 300-வது ஆண்டு விழாவை சென்னையில் விமரிசையாக்க் கொண்டாடியபோது, தமிழக கவர்னர் சுருஜித் சிங் பர்னாலா இவருடைய “சேவையை” பாராட்டிப் பேசினார். இவர் நினைவாகத் தபால் தலையும் வெளியிடப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg )
1906-ல் ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஆங்கிலேய அரசு கூட இவர் வரவின் 200-வது ஆண்டைக் கொண்டாடவில்லை. ஆனால் இந்திய மண்ணிற்கு வந்து, இந்திய மக்களிடையே ஜாதித் துவேஷங்களை வளர்த்து, மதமாற்றம் செய்து, இம்மண்ணின் கலாசாரத்திற்குப் பாதகம் செய்த ஒருவருக்கு லுதெரன் சர்ச்சு நிறுவனம் இந்திய மண்ணில் விழா எடுக்க அதில் இந்திய அரசியல் பதவி வகிக்கின்ற ஒரு தலைவரே கலந்து கொள்வதென்பது எவ்வளவு வேதனையான விஷயம்! மற்றபடி இவர் தமிழில் மொழி பெயர்த்த விவிலியத்தால் தமிழ் வளரவில்லை, கிறுத்துவம் மட்டுமே வளர்ந்தது!
(தொடரும்…)

Series Navigation

author

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

Similar Posts