மைத்ரேயன்
ஜெர்மனி, ஃப்ரான்ஸ் என்று பல யூரோப்பிய நாடுகள் பற்றிய கட்டுரைகள், புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சற்று முன் படித்தது ஒரு புத்தகவிமர்சனம். ஹென்ரி து மோந்தர்லாண்ட் (Henry de Montherlant) என்கிற ஃப்ரெஞ்சு நாவலிஸ்ட் 1963ல் எழுதிய ஒரு நாவலைச் சமீபத்தில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். அவர் 1936-1939களில் எழுதிய 3 நாவல்களை இந்த நாவ்லோடு ஒப்பிட்டு அட்லாண்டிக் மந்த்லி என்கிற பத்திரிகையில் விமர்சனம். ஓரளவு இது அவருடைய இலக்கிய இயக்கத்தையே எடை போடும் முயற்சியாகவும் உள்ளதெனலாம். இவர் பெயரை நான் இதற்கு முன்னர் கேட்டது கூட கிடையாது. உலக இலக்கியத்தில் எத்தனை புதைந்து கிடக்கிறதென்று இப்படி ஏதாவது கிடைத்தால்தான் தெரிகிறது.
கட்டுரையாசிரியர், மயர்ஸ் என்கிற விமர்சகர். சுளுவான நடையில் இலக்கியம், தத்துவம், அரசியல் என்று பல அரங்குகள்/ பரிமாணங்களில் இருந்து வரலாற்று இழைகளைக் கொணர்ந்து நல்ல கட்டுரையைப் பின்னியிருக்கிறார். கூடவே நாவலாசிரியரை முன்னர் விமர்சித்தவர்களையும், பிரசுரித்த நிறுவனத்தின் இயலாமைகளையும் பின்னி எடுத்திருக்கிறார். பிரபலர்களான ஆந்த்ரே ழீட் போன்று மொந்தர்லாண்ட்டை வியந்தவர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்.
இதுவரை இந்த விமர்சகரைப் படித்த, அல்லது பெயரைக் கவனித்த நினைவில்லை. இனி கவனிக்க முடிவு செய்யும்படியான தரமான விமர்சனம். நிறைய கயிற்று மேல் நடக்கும் லாகவமும் கொண்டது. ஒரு புறம் மொந்தர்லாண்ட்டை சிலாகித்த வண்ணம், அவருடைய குறைகளையும் சொல்லி, அவை விமர்சகர்கள் சொன்ன விதமான குறைகள் அல்ல, வேறு வகையானவை என்று சுட்டும் லாகவம். வேறு விதமான குறை என்று நம்மை ஒத்துக் கொள்ள வைத்தால் விமர்சகர்கள் தரமற்ற விமர்சனம் செய்தவர் என்று உறுதி செய்யும் விதமான வாதங்கள். புத்தக விமர்சனத்தில் கூட இத்தனை அரசியல், தத்துவம், சமூக விமர்சனம் எல்லாம் உண்டு, அதுவும் சுருக்கமாக நான்கு பக்கங்களில் (சுமார் 7 1/2 பத்திகள்தாம்.) முடிகிறது என்றால் சாமர்த்தியம்தானே?
இந்த கயிற்றுமேல் நடை ஏனெனில் மோந்தர்லாண்டிற்குச் சம காலப் புனைகதையாசிரியரும், சமீபத்தில் ஃப்ரெஞ்சு தத்துவாளர்களில் குறிப்பிடத் தக்கவர் என அறியப்பட்டு வருபவருமான, சிமோன் து பூவாஹ் (Simon de Beauvoir) இந்த நாவலாசிரியரை திமிர் பிடித்தவர், பெண்களை வெறுக்கும் தரமற்ற எழுத்தாளர் என்று அறிவித்து, அவருடைய ‘பெண்கள்’ என்ற மூன்று வரிசைப் நாவல்களைக் கிழித்திருக்கிறார் என்பதைக் கவனித்து, அதைக் கடக்க வேண்டிய அவசியம் விமர்சகருக்கு எழுகிறது.
இன்றைய இலக்கிய விமர்சனக் காலம் பெண்ணியத்தின் உச்ச கட்டக் காலம். இன்று உலகளாவிய நிலையில் எங்கும் செலாவணி உள்ள ஒரு சில விமர்சனக் கருத்தியல்களில் பெண்ணியம் ஒன்று. இனமைய எதிர் விமர்சனம், ஏகாதிபத்தியம்/ காலனியம் ஆகியவற்றுக்கெதிரான விமர்சனம், மேலும் அடையாள அரசியல் சார்ந்த விமர்சனம் என்று வெகுசிலவே உலகச் செலாவணி உள்ள கருத்தியல்கள். முன்பு போல வலது, இடது என்ற பாகுபாடுகள் அத்தனை வீரியம் உள்ளன அல்ல. மார்க்சியம் போன்ற காலாவதி ஆகி செல்லரித்துப் போன கருத்தியல்களும் இன்று உலகச் செலாவணி அற்றவை.
(செல்லரித்த என்றால் செல் ஃபோன் அரித்த என்று கருத வேண்டாம். ஒரு விதத்தில் அது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் டான் கிஹோட்டே (Don Quijote) போல, செல் ஃபோன் டவர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கிறார்கள் இன்றைய லுட்டைட்களான இந்திய மாவோ-இஸ்டுகள். )
உலக இலக்கிய நூல்களின் பெருவாரி வாசகர்களும் சரி, எழுதுவோரும் சரி பெண் எழுத்தாளர்களே. ஆண்கள் உலகெங்கும் புத்தகம் படிப்பதை நிறுத்தியாயிற்று என்றே கருத்து உலவுகிறது. பிரசுரகர்த்தர்கள் புத்தகங்களைப் பிரசுரிக்குமுன் ‘பெண்’ பார்வையில் அவை விற்குமா என்று யோசித்தே பிரசுரிக்கிறார்கள். மேலும் பிரசுர நிறுவனங்களில், உலகளவில் பெருவாரி பதிப்பாசிரியர்களும் பெண்களே என ஒரு தோற்றம் காணப்படுகிறது. மொத்தத்தில் பார்த்தால் பெண்ணியவாதிகளின் கருத்துகள் உலகச் சந்தையில் அனேக இலக்கியப் புத்தகங்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன என்றே சொல்லலாம்.
திரளுக்கு வைக்கோலாகப் போடப்படும் புத்தகங்கள் மட்டும் இப்படிப் பெண்ணியத்துக்குப் பயந்து ஒடுங்கி நிற்பதில்லை. அவை எப்போதும்போல மிருக உந்துதல்களுக்கு எத்தனை தீனி போடுகின்றனவோ அதைப் பொறுத்து ஏராளமாகவோ அல்லது சுமாராகவோ விற்கின்றன. பெண்ணியத்தால் அச்சுறுத்த முடியாத ஒரு வகைக் கூழ் இலக்கியம் புல்லரிப்பூட்டும் அல்லது கிளுகிளுப்பூட்டும் புனைகதைகள் (Romance fiction) . அவற்றின் இயல்பு சிறிது மாறி இருக்கிறதென்றாலும், அவையும் ஒன்றும் எளிதில் மரிப்பதாயில்லை.
மற்றபடி ‘இலக்கியம்’ என்று மேற்கோள்களில் அடக்கப்பட்டு அறியப்படும் வகை இலக்கியத்தில் ஸ்தானம் வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் சிமோன் து புவாஹ் போன்றாரின் பேனாமுனை தம்மை எப்படிப் பதம் பார்க்கும் என்று பயப்பட்டே ஆக வேண்டும். பூவாஹ் இறந்து போனாலும், அவருடைய புத்தகங்களும், கருத்துகளும் அனேகப் பல்கலைகள், கல்லூரிகள், ஏன் உயர்நிலைப்பள்ளிகளில் கூட போதிக்கப்படுகின்றன அல்லது பாடப்புத்தகங்களைத் தாண்டிய உபரி இலக்கியமாக வற்புறுத்தப்படுகின்றன. க்ல்லூரிகளிலும், பல்கலைகளிலும் சமூக அறிவியல் துறைகள் பெரும்பாலானவற்றிலும் பூவாஹ் ஒரு தலையாய அறிவாளராக அறிமுகப்படுத்தப்பட்டு நாயகியாக பீடத்தில் இருக்கிறார். எனவே அவருடைய கருத்தைத் தாண்டாமல் மயர்ஸ் போன்ற விமர்சகரால் ஒரு புத்தகத்தைச் சிலாகிக்க முடியாது.
இருந்தும் மயர்ஸ் இந்த எதிர்விமர்சனத்தை எளிதே தாண்டி விடுகிறார். எப்படி?
மோந்தர்லாண்ட் தன் நாயகப் பாத்திரத்தை (கோஸ்டல்ஸ் என்ற ஒரு எழுத்தாளப் பாத்திரம்) ஒரு சிங்கம் என வருணித்ததைப் பூவாஹ் முழு இகழ்ச்சியுடன் பார்க்கிறார். எந்தப் பெண்ணையும் மணக்கத் தயாராக இல்லாத கோஸ்டல்ஸ், ஒரு பெண்ணை மணம் செய்ய ஒத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் ஓடிப் போய்விடுகிறார். அதெல்லாம் நடக்கும் அதே நேரத்தில் இன்னொரு மெத்தப் படித்த ஒரு பெண் இவருக்கு மிக ஆர்வமீதூக்கிய காதல் கடிதங்கள் எழுதி வருகிறார், அதை கோஸ்டல்ஸ் இன்னொரு புறம் ஊக்குவித்தும் வருகிறார். இப்படி ஒரு ஓடுகாலி ஆணை அப்படி ஒரு சிந்தனையாளியான பெண் காதலிப்பதை பூவாஹ் அறவே வெறுக்கிறார் என்று சுட்டும் மயர்ஸ், அந்த வெறுப்பு வெறும் கருத்தியல் சார்ந்த வெறுப்பு மட்டுமல்ல, பூவாஹ்ஹின் சொந்த வாழ்வின் பிரதிபலிப்பும் என்று சுட்டுகிறார்.
சமீபத்தில் பூவாஹ் பற்றி எழுதும் விமர்சகர்கள் அவர் தன் சொந்த வாழ்வில் தன் கருத்துகளுக்கு எதிரான நடத்தையைப் பல பத்தாண்டுகள் கடைப்பிடித்தார் என்று சுட்டத் துவங்கி இருக்கிறார்கள். அவருடைய ’இரண்டாம் பால்’ [அல்லது ‘இரண்டாம் வகை’] (The Second Sex) என்று தலைப்புள்ள புத்தகம் உலகப் புகழ் பெற்று விட்ட ஒன்று. பெண்கள் உலகெங்கும் பல நாடுகள், பண்பாடுகளிலும் வரலாறு நெடுகவே, ஆண்களோடு உடற்கூறளவில் ஒப்பிடப்பட்டு, ஆண்களின் உடலை அளவையாக வைத்து மதிப்பிடப்பட்டு, அதற்கு ஈடுகொடுக்க முடியாதவராக நோக்கப்பட்டு அதனால் படிநிலையில் கீழே வைக்கப்பட்டு உள்ளனர் என்று சுட்டும் பூவாஹ், இந்த வகை உறவு, கிட்டத்தட்ட எஜமானர்-அடிமை உறவுமுறை, இதில் குடும்பம், பாசம், உறவு முறை எல்லாம் வெறும் முலாம் என்று கருதுகிறார். பெண்கள் இந்த உறவுச் சிக்கலில் மாட்டி அவதிப்பட்டாலும், தாம் எல்லாம் ஒரு வகை என்பதை அறிந்து ஒன்று திரண்டு தமக்கியல்பாகக் கிட்ட வேண்டிய சமநிலையைப் பெறப் போராடாமல், பல காரணிகளால் பிளக்கப்பட்டு, தாம் சார்ந்த ஆண்களோடு ஒன்றி இருப்பவராகக் கருதியவர் பூவாஹ். (ஹெகலிய வரலாற்றியல் அடிப்படை. மார்க்ஸியமும் இதில் உண்டு. ஆனால் பூவாஹ் தனக்கென தனிப்பாதையையும் வகுத்தே எழுதினார்.) தனிநபர் அளவில் தமக்காகவும், பெண்கள் என்ற தம் பாலாருக்காகவும் ஒன்றிணையும் உணர்வோடு எழுந்தால்தான் பெண்கள் சமநிலை அடைவர் எனக்கருதி அதற்கான வழிகள் பற்றித் தொடர்ந்து யோசித்து எழுதியவர் பூவாஹ்.
இப்படிப் பெண்களின் ‘விடுதலை’க்காகப் புத்தகங்கள் எழுதியவர் பெண்களைத் தொடர்ந்து மோசடி செய்யும் அப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி வேறெப்படி எழுதுவார்? அந்த விமர்சனத்தை மேயர்ஸ் நிராகரிக்கவில்லை. மாறாக, கோஸ்டல்ஸை இன்னொரு இடத்தில் மோந்தர்லாண்டே ஒரு கடுவாய் (கழுதைப்புலி, Hyena) என்றும் சித்திரிக்கிறாரே என்று சுட்டுகிறார். அத்தோடு, ஓரிடத்தில் உடலுறவு கொள்வதற்காகத் தன் முன்னால் படுக்கையிலுள்ள பெண்ணை இந்தக் கதாபாத்திரம், அறுப்புக்காக மேஜையில் கிடத்தப்படும் தவளை போல இருப்பதாக்க் கருதுவதாக மோந்தர்லாண்ட் எழுதுவது அந்தப் பாத்திரத்தை மெச்சவோ அல்லது உயர்த்தவோ அல்ல என்றும் சுட்டுகிறார். அதாவது மொந்தர்லாண்ட் தன் கதாநாயகரை மட்டும் இப்படிக் கறாராகப் பார்க்கவில்லை, ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் அவரால் எல்லாரும் கடும் விமர்சனப் பார்வையில்தான் பார்க்கப்படுகிறார்கள். மொந்தர்லாண்ட் வெறும் பெண் வெறுப்பாளர் இல்லை, ஆண்களும் அவரிடம் தப்பிப் பிழைக்கவில்லை. மொந்தர்லாண்ட் மனிதர்கள் மீது அத்தனை நம்பிக்கை உள்ளவரல்ல, தன் சொந்த வாழ்வில் அவர் தன் நட்பு வட்டத்திடம் அருமையாகவே பழகினார் என்ற போதும், அவர் மனிதரிடம் இருண்ட நோக்கைச் செலுத்தியவர் (Misanthropic not Misogynist) என்பது மயர்ஸின் வாதம். இத்தகைய அவநம்பிக்கை இரண்டாம் உலகப் போர், தவிர போருக்குப் பிந்தைய பல பத்தாண்டுகள் ஃப்ரெஞ்சு எழுத்தாளரிடம் நிறையவே வெளிப்பட்டன என்பதை மயர்ஸ் சுட்டி, இது ஒரு நீண்ட கால ஃப்ரெஞ்சு இலக்கிய மரபு என்றே கருதுகிறார்.
இதில் விசித்திரம் என்னவென்றால், பூவாஹ் மொந்தர்லாண்ட்டையும் அவரது பாத்திரத்தையும் பெண் வெறுப்பாளர் என்று கருதி ஒதுக்க முயல்கிறார். மயர்ஸ் இல்லை, இல்லை, அவர்கள் இருவரும் பெண் வெறுப்பாளர் மட்டுமல்ல, ஆண்களையும், ஏன் எல்லா மனிதர்களையுமே ஒன்றும் நேசிக்கவில்லை என்று பூவாஹ்ஹின் விமர்சனத்தை விடக் கடுமையான ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார். அதே நேரம் அந்த விமர்சனம். பூவாஹ்ஹின் இலக்கிய நுட்ப அறிவுணர்வு அத்தனை சிலாக்கியமானதல்ல என்று நமக்குச் சுட்டி விடுகிறது மட்டுமல்ல, இப்படி ஒரு இருண்மை ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் 20 ஆம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்களிடம் சகஜமாகக் கிட்டுவதுதான், இதை ஏதோ தனிப்பட்ட களங்கம் என ஒதுக்கி விட முடியாது என்றும் சுட்டி, பூவாஹ்ஹின் இழிப்பிலிருந்து மொந்தர்லாண்டை மீட்டும் விடுகிறார். இதைத்தான் கயிற்று மேல் நடை என்று முன்னால் சுட்டினேன்.
இது பூவாஹுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது வேறு விஷயம் என்பது மயர்ஸின் வாதம். அதற்கும் மேல் போய் மயர்ஸ் இன்னொன்றும் செய்கிறார். அதுதான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணமே.
கோஸ்டல்ஸ் என்ற பாத்திரத்தை விமர்சிப்பதையும் விட பூவாஹ் மேலும் எரிச்சலுடன் விமர்சித்த ஒரு பாத்திரம், கோஸ்டல்ஸுக்கு காதல் கடிதம் எழுதிய மெத்தப் படித்த பெண் பாத்திரம் (Blue stocking என்று வருணிக்கப்படுபவர்). இந்தப் பெண் பாத்திரத்தை விமர்சிக்க பூவாஹ் போன்ற ஒரு நபருக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே அவருடைய வாதம். பூர்சுவா மரபுகளை நிராகரித்தவர் பூவாஹ்ஹும், சார்த்தரும், இன்னும் பல இடதுசாரி விமர்சக/எழுத்தாளர்களும் மட்டுமல்ல. காம்யு, ழீட் மற்றும் மொந்தர்லாண்ட் போன்ற பல கட்சி அல்லது சாரிச் சார்பு இல்லாத எழுத்தாளர்களும் இந்த வகை விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பூவாஹ் மறக்கிறார் அல்லது கவனிக்கவில்லை.
பூவாஹ் ஒரு புறம் பெண் விடுதலை குறித்துப் புத்தகங்கள் எழுதிக் கொண்டு, இன்னொரு புறம் தன் நெடுநாள் காதலனும், தன்னெறி தவிர வேறு எந்த நெறியும் மனிதருக்குத் தேவை இல்லை என்றும் வாதிட்டுக் கொண்டிருந்த சார்த்தருக்கு (Jean Paul Sartre) அவர் அனுபவித்துக் களிக்க இளம் பெண்களை ‘அனுப்பிக்’ கொண்டிருந்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரின் ‘அறிவுஜீவி’ ஸ்தானம், மேலும் ’புரட்சிகர’ எழுத்துகளைப் படித்துப் புளகாங்கிதம் அடைந்து இவர்களிடம் சிட்சை பெற்றால் தம் வாழ்வு உன்னதமாகும் என்று மூடத்தனமாக நம்பி வந்து சேர்ந்த இளம்பெண்கள் பலர். அவர்களைத் தானும் ’கெடுத்து’ (seduce) அனுபவித்து, தனக்கு ருசி தீர்ந்தபின், சார்த்தருக்கும் அனுப்பி வைத்த பெருமாட்டி பூவாஹ் என்று அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகளை வெளியிட்டு உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள் ஃப்ரெஞ்சுப் பிரசுரகர்த்தர்கள். ஆம், பூவாஹ் இரு பாலாரிடம் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர். எனினும் நெடுநாள் உறவுகள் அல்லது தொடர்ந்த உறவுகள் என்பதை ஆண்களோடுதான் அதிகம் கொண்டிருந்தார். வரம்பு மீறுதல், அல்லது மரபை உடைத்தல் என்ற கணக்கில் இருபாலுறவுகளைப் பயின்றாரா என்பதை மேலும் படித்தால் காணலாம்.
இதை அவதூறு என்று விலக்க தமிழக அறிவு சீவிகள் யாரும் எழுந்து வரக்கூடும். இந்தக் கடிதங்களைப் பிரசுரிக்க வழி செய்ததே பூவாஹ்ஹின் வாரிசு, வளர்ப்புப் பெண் சீல்வீ லு பான் (Sylvie Le Bon) என்பவர்தான்.
பூவாஹ் உடைய பல முக்கியக் கருத்தாக்கங்களில் அவருடைய அறம் குறித்த விசாரணைகள் மெச்சிக் கவனிக்கப்பட்டவை. எது அறம் என்பதைக் குறித்து ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். ஆனால் அதன் தலைப்பு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ’இருதலைக் கொள்ளி நிலையின் அறம்’என்று அதை மொழிபெயர்க்கலாம். (The Ethics of Ambiguity) இன்னும் செம்மையாக மொழி பெயர்க்க முடியலாம். ஆனால் இங்கு நாம் கருதவிருக்கும் பொருளைக் குறித்தவரை இந்தத் தலைப்பு பொருந்தும் என்பதால் இத்தோடு விடுகிறேன். இருதலைக் கொள்ளி நிலை என்பது ஒன்றும் மோசமில்லை, கறாராக முடிவு எடுத்து, பிடிவாதமாக அதில் ஊறி இருந்து பெரும் தவறுகளைச் செய்வதை விட இருதலைக் கொள்ளியாக இருப்பது மேல் என்பதாக முடிவு செய்கிறார். அதைத் தவிர அறம் என்பதே எப்படி பலவகையில் கத்தி முனை நடப்பு, அதில் கறார் நிலைபாடுகள் சாத்தியமில்லை என்பதாகவும் இவருக்குத் தோன்றுகிறது. என்றாலும் இவர் ஒரு மாவோயிஸ்டாக இருந்திருக்கிறார் என்றால் அதை என்ன சொல்வது?
அதேபோல, இவருடைய நெடுநாள் அன்பரான-(சரி, காதலர், மணம் செய்துகொள்ளாது இணையாக வாழ்ந்தவர், ஆனால் பூவாஹ் என்றும் தனக்கென ஒரு வீடு (அபார்ட்மெண்ட்) வைத்திருந்தார்.)- சார்த்தர்தான் உலக மானுடருக்கு விடுதலை பெற்றுத் தர ஸ்டாலினியம் நல்ல வழி என்றும், ஸ்டாலினின் கொடும் பாசறைகள் பற்றிய விவரங்களெல்லாம் உலகுக்குத் தெரிந்த பின்னும் ரஷ்யக் கொடுங்கோலுக்கு ஆதரவு தெரிவித்தும் நின்ற பெருமான்.
இதைச் சொல்வதற்கும் நம் நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவிப்பர். உண்மை என்னவென்றால் சார்த்தர், பூவாஹ் சொன்ன வகை இருதலைக் கொள்ளி அறத்தைக் கைப்பிடிக்க மாட்டாதவர். ஏனெனில் அவருக்கு ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டும் என்பதான ஒரு மனநிலை இருந்திருக்கிறது. இதனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக நிறைய நிலைப்பாடுகளைக் கைக் கொண்டிருக்கிறார். சாராமல் விலகி நிற்பதை அவர் குற்றம் எனவே கருதுகிறார், என்றாலும் தன் வாழ்நாளில் பல பத்து வருடங்கள் உறுதியான நிலைபாட்டைக் கொள்ள முடியாத இருதலைக் கொள்ளி நிலையில் இருந்தவர்தான் அவர். முதலியமும், சமூக ஜனநாயகமும், சோவியத்தியமும், மாவோயிசமும் எல்லாமே தோற்றுப் போனது மட்டுமல்ல, மானுடருக்கு மனிதம் லபிக்காத வகைகளில் எதிரிடைகளாகவே இருக்கின்றன என்பதை அவர் கண்டிருந்தும் அவ்வப்போதைய பிரச்சினைகளுக்கு அவ்வப்போதைய நிலைபாடுகள் எடுப்பது சரியே என்று கருதியவர். ஃபூகோ பற்றிச் சொல்கையில் மற்றவர்கள் அவசியமான நிலைகளில் கவனம் செலுத்தி பிறழ்வுகள், நெருக்கடிகளை ஓரம் கட்டி வரலாறு, தத்துவம், சமூகவியல் போன்றனவற்றை இயக்கியபோது, பிறழ்வு, நெருக்கடி நிலைகளில் உள்ள அவசியத்தைக் கவனித்துத் தம் ஆய்வுகளை நடத்தியவர் அவர் என்று சொல்கிறார்கள். அதே போல சார்த்தர் மனித வாழ்வில் உள்ள தற்காலிக நெருக்கடிகளில் கவனம் செலுத்தியவர்.
இப்படி எழுதினால் அவர் என்ன செய்தார் என்பது சட்டெனப் புரியாது. விளக்கினால் புரியலாம். நேற்று சோவியத் யூனியனில் முழு விமர்சன சுதந்திரம் இருக்கிறது என்று எழுதுவார். இன்று ஸ்டாலினியத்தால்தான் கம்யூனிசம் மலட்டுச் சிந்தனையாயிற்று என்று எழுதுவார். ஹங்கேரியில் ஸ்டாலினிய அடக்குமுறை மனித விடுதலைக்கே இழுக்கு என்று நாளை எழுதுவார். ஆனால் ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒரே மேடையில் இணைந்து உலகப் புரட்சிக்குக் கொடி பிடிப்பார். பின் ரஷ்யக் கம்யூனிசத்தைக் கைவிட்டு மாவோயிஸ்டுகளின் பத்திரிகையைத் தெருவில் கூவி விற்று ஸ்டண்ட் அடிப்பார். இப்படி ஒருவர் இருந்தால் நம் ஊரில் அவரை நம்பி எதையும் செய்ய முடியாது, மண் குதிரை என்று சொல்வார்கள். ஏன் ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களே அவரை நாயே பேயே என்றெல்லாம் ஏசி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், மேடைப் பிரசங்கங்கள் செய்திருக்கிறார்கள்.
பாமரர் நம்பகத்தன்மையை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் பாமரருக்கு எப்படி விடுதலையை அடைவது என்று சொல்லிக் கொடுப்பதே தம் வாழ்நாளின் மொத்த லட்சியமும் என்று பறை சாற்றும் ‘புரட்சியாளர்களோ’ சார்த்தரின் இந்த அந்தர்பல்டிகளெல்லாம் ‘இயங்கியல்’ சிந்தனை என்றும், வரலாற்று நிர்ப்பந்தங்கள் என்றும் வெள்ளை அடித்து மறைக்கப் பார்ப்பார்கள். உண்மை இரண்டுக்கும் நடுவில் உள்ளது, அதாவது சார்த்தருடைய கருத்துகள் எல்லாம் கோணல் அல்ல. ஏதோ ஒரு கோணத்தில் அவர் மனித விடுதலையை விரும்பினார், அதற்கே செயல்பட்டார். ஆனால் எப்படி அதை அடைவது என்று அறிய அவரை நம்பி எதிலாவது நாம் இறங்கினால் நாம்தான் வடிகட்டின முட்டாள்களாவோம். அவருக்கு அப்படி எந்த வழியும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ‘விடுதலை’ என்ன குணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விலாவாரியாக அவர் விளக்கியும் இருக்கிறார் என்று தெரிகிறது. அவற்றை நாம் படிப்பது நமக்கு உதவக் கூடும். அவருக்கு ஊகமாகத் தெரிந்த எதையும் அவர் சொற்களால் போட்ட பாதைகள் வழியே அடையத் தீவிரமாக முயன்றிருக்கிறார். 3000 பக்கங்களுக்கு மேலாக ஒரு இலக்கிய விமர்சனம் எழுதியவர் அவர். கூஸ்தாவ் ஃப்ளூபேர் (Gustave Flaubert) என்கிற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் பற்றிய ’குடும்ப மூடன்’ (The Family Idiot) என்ற விமர்சனப் புத்தகக் கொத்து ஒன்றை பல ஆண்டுகள் எழுதினார். காஃப்கா, நபகோவ், குட்ஸீய (Coetzee), ஜேம்ஸ் உட் போன்ற பல பிரபல எழுத்தாளர்களால் உலக நவீன இலக்கியத்தில் ஒரு பெரும் ஆளுமை என்று புகழப்படும் ஃப்ளூபேரை சார்த்தர் உள-ஆய்வியல் பார்வையிலும், மார்க்சியப் பார்வையிலும் இணைந்து விமர்சிக்க முயன்ற பெரும் கொத்துப் புத்தகம் அது. அது பூர்த்தி செய்யப்படாது நின்றது. மூவாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியும் அவரால் எதையும் விளக்கவோ நிறுவவோ முடியவில்லை என்று பலர் விமர்சித்திருக்கிறார்கள். இப்படி சார்த்தரின் உளைச்சல்களின் மையத்தில் இருந்த பலவும் 19ஆம் நூற்றாண்டின் கருத்தியல் பிரச்சினைகள். ஃபூகோ ஒரு கட்டத்தில் சார்த்தர் 19ஆம் நூற்றாண்டின் மனிதர், 20 ஆம் நூற்றாண்டை அறிந்து அது குறித்து சிந்திக்க முயன்று தோற்றவர் என்றே குறிக்கிறார்.
இந்த அறிவுத் திலகங்களின் சொந்த வாழ்க்கையை அதிகம் ஆழமாகப் பார்த்து விடக் கூடாது. ஒரே இருட்டாகத் தெரியும், அல்லது நிறைய மனோவக்கிரங்கள்தாம் நம் கண்ணில் படும். ஏனெனில் உலக மனிதருக்கு அறம், தனிமனிதப் பொறுப்பு என்பது குறித்துப் பெரிய லெக்சரெல்லாம் அடித்த இவர்கள் இருவரும் தம் சொந்த வாழ்வில் தம்மைச் சுற்றிய பலரைச் சுரண்டத் தயங்கவில்லை என்பதாகவே நான் அறிகிறேன். இது குறித்து நிறைய பேர் பேசுவதில்லை. ஆனாலும் தகவல் இன்று கிட்டி வந்துள்ளது. அதே நேரம் எல்லாரையும் இவர்கள் சுரண்டவும் இல்லை. சார்த்தர் தன் ‘வைப்பாட்டிகளாக’ இருந்த சில பெண்களுக்கு அவர்களோடு தொடர்பு விட்டுப் போன பின்னும் பல பத்தாண்டுகள் தொடர்ந்து ‘மானியங்கள்’ கொடுத்துக் கொண்டிருந்தார் எனவும் தகவல் கிட்டுகிறது. ஆக பாம்பும் இல்லை, பழுதையும் இல்லை. எப்போது கொட்டுவார் என்பதை மட்டும் நம்மால் ஊகிக்க முடியாத விசித்திரங்கள் இருவரும்.
தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இந்த இரண்டு ‘அறிவுத் திலகங்களுக்கு’க் கொடி பிடிக்க ஏராளமான பல்கலை மாணவர்களும், அறிவு சீவிகளும் உண்டு. அதாவது இவர்களுடைய கொள்கைகள், கருத்துகளுக்கு எதிராக அவர்களே நடந்ததை எல்லாம் சுத்தமாகக் கவனிக்க மறுத்து, அவர்கள் என்ன சிந்தித்தார்கள் என்பதைப் பாருங்கள், எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்க்காதீர்கள் என்று வாதிடவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். எனக்கு அந்த வாதம் ஏற்புடையது அல்ல. ஆனாலும் இந்த இரு சிந்தனையாளர்களும், தம்மளவில் என்ன குப்பை மனிதர்களாக இருந்தாலும், சிந்தனை என்று வரும்போது நிறைய நுட்பமாகச் சிந்திக்க முடிந்தவர்கள் என்பதை நானும் ஒத்துக் கொள்வேன்.
மேற்படி நம் நாட்டு அறிவு சீவிகளுக்கு என் கேள்வி என்னவாக இருக்கும்? இப்படி அன்னிய அறிவு ஜீவிகளுக்கு நீங்கள் கொடுக்கும் உரிமைகளை இந்திய சமூகத்தில் இருக்கும் அறிவாளர்களுக்கோ, இந்து மதஸ்தாபனங்களில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? இரண்டும் கெட்டான் நிலை மேற்படி ‘திலகங்களின்’ அற்புதச் சிந்தனையாகக் கருதப்படும் என்றால் இரண்டும்கெட்டான் நிலை இந்தியர்களுக்கு மட்டும் ஏன் இழிவாகக் கருதப்படுகிறது? வெள்ளையருக்குக் கூடுதல் உரிமம், இந்தியருக்கு அதெல்லாம் கிடையாது என்பதாலா? அல்லது முற்போக்கு என்ற முலாம் பூசிக் கொண்டு சமத்துவம், புரட்சி என்று சொற்களை உதிர்த்துக் கொண்டு தனிப்பட்ட வாழ்வில் எல்லா வக்கிரங்களையும் கடைப்பிடித்தால் அது சாமர்த்தியம் அறிவுத் தீவிரம் என்றாகி விடுமா?
மரபு நிறுவனங்களின் பிறழ்வுகள் எதையும் உடனே பெரும் ஆரவாரத்துடன் கண்டிக்கும் மேற்படி அறிவு ஜீவிகள் தம் வாழ்வில் எந்தப் பிறழ்வையும் சமூகமும் தம் சக அறிவு ஜீவிகளும் கண்டுகொள்ளாமல் போவதோடு, அவற்றைத் தம் அசாதாரண மேதமையின் விளைவு என்றே ஏற்கவேண்டும் என ஏன் கருதுகிறார்கள்?
நித்யானந்தாவைத் தூக்கில் போடவும் இக் கூட்டம் துடியோ துடி என்று துடிக்கும், ஜயேந்திரர் என்று பெயர் சொன்னாலே பெண் எழுத்தாளர் பெயரைச் சொல்லி நக்கீரப் பார்வையும் பார்க்கும். (திண்ணையில் அது குறித்த கட்டுரை பார்க்க).
மோடியைத் தூக்கில் போடு, அஃப்ஸல் குருவை விடுவி, மதானியை விடுவி என்று சொல்லும் தமிழ் பத்திரிகையாளர்களை ’நேர்மையானவர்கள்’ உண்மையே பேசுபவர்கள் என்று சொல்லி, அமெரிக்க வாசிகளான தமிழ் அறிவு ஜீவிகள் வரவேற்பது போலத்தான் இதெல்லாமும்.
கருத்து நேர்மை என்பது என்ன? சார்த்தரே ழான் ஜெனே என்னும் குற்றம் செய்வதே வழக்கமான ஒரு ஃப்ரெஞ்சு எழுத்தாளரை ‘புனித ஜெனே’ என்றழைத்துக் கட்டுரை எழுதி அதற்கு ஒரு பாரம்பரியத்தையே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதாவது பிக்-பாக்கெட் அடிப்பதில் துவங்கி சிலரைக் கத்தியால் குத்துவது வரை சென்ற ஜெனே, தற்பால் உறவுக்காரர் என்பதால் சமூகத்தால் புறமொதுக்கப்பட்டவர், அதனால் குற்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது போன்ற அரைகுறை சமூக உளவியல் பார்வை சார்த்தருடையது. ஜெனேயே கூட தன்னால் குற்றம் செய்யாமல் இருக்க முடியவில்லை என்று ஒத்துக் கொண்டு எழுதியதாக என் நினைவு. அதாவது அவருடைய நாவல்கள் நன்கு வரவேற்கப்பட்டு நல்ல வருமானம் வந்து சமூக அந்தஸ்து கிட்டிய பின்னும் கூட ஜெனே, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை உடைப்பதில் குறியாக இருந்தவர். ஆனால் அவருடைய க்ஹெல்லென் டு ப்ஹெஸ்ட் (Querelle de Brest ) என்ற நாவலை ரைனர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் சினிமா இயக்குநர் எடுத்த ஒரு படத்தை அவர் இறுதி வரை பார்க்கவே இல்லையாம்- காரணம், திரைஅரங்குகளில் புகை பிடிக்கக் கூடாது என்று ஒரு விதி இருந்ததால் என்று சற்றும் நகைச்சுவை உணர்வின்றி விக்கிபீடியாவில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஜெனே இந்தக் குறிப்பைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
ஜெனே ஏதோ சாதாரணக் குற்றவாளி என்று நான் ஒதுக்குகிறேன் என வாசகர் கருத வேண்டியதில்லை. இத்தனை பேர் விரும்பிப் படித்து, புகழ்ந்து எழுதி, நாடகங்கள் அரங்கேற்றி, சினிமாக்களுக்கு மூலக்கதையாக எழுதியதாக இருந்த ஒரு எழுத்தாளர் ஏதோ தரமானவற்றை எழுதி இருப்பார் என எடுத்துக் கொள்கிறேன். அவருடைய இருநாவல்களை மொழிபெயர்ப்பில் என் இளமையில் படித்துப் பார்த்து இரண்டையும் பாதியில் கைவிட்டவன் நான். இன்று மறுபடி படித்தால் ஒருவேளை புரியுமோ என்னவோ. அவர் ‘முற்போக்கு’ என நாம் கருதும் ஒருவர் செய்யவேண்டிய பல செயல்களையும் தவறாமல் செய்திருக்கிறார் என்பதை மட்டும் இங்கு சுட்டுகிறேன். இந்த ஜெனே தொடர்ந்து தான் வாழ்ந்த சமுதாயத்தின் சாதாரண நெறிகளை உடைப்பதையும், அழிப்பதையும் கொண்டாடினார் என்பது மட்டும் இங்கு என் கருதுபொருள்.
இந்தவகை உடைப்பும் அழிப்பும் சோவியத் சமுதாயத்திலோ, மாவொயிசச் சீனாவிலோ, க்யூபாவிலோ, ஏன் இஸ்லாமிய சமுதாய்ங்களிலோ நடந்தால் ஜெனேயின் பாடு என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சில மாதங்கள் கூட உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். பூர்சுவா சமுதாயம் என்று இழிவு செய்யப்படும் சந்தை சமுதாயம் தன் அனைத்து வக்கிரங்கள், அசமத்துவங்கள், கொள்ளைகள், கொடுமைகள், வறுமைகள் நடுவே ஜெனேயின் ஒரு நாடகத்தை சுமார் 1400 நாட்கள் நிகழ்த்தி ஆதரித்திருக்கிறது என்பதைக் கவனிக்கக் கோருகிறேன். கருத்து சுதந்திரம் என்பதை பூர்சுவா சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது, அதே சுதந்திரம் ‘சோசலிச சமுதாயத்தில்’ எப்படி இருக்கிறது என்பதையும் காணக் கோருகிறேன். சார்த்தரை ‘பேனா பிடித்த கழுதைப்புலி (Hayena)’ என்று சோவியத் விமர்சகர் ஒருவர் எழுதினார். அந்த சார்த்தர் இறுதி வரை தன் ஆதர்ச சோசலிச சமுதாயம் எதிலும் வாழ இடம் பெயர்ந்து விடவில்லை. எப்படி சூஸன்னா ராய் தன் ஆதர்ச இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடம் பெயராமல் இந்து, ஜனநாயாக இந்தியாவில் இருந்து கொண்டு தன் உளறல் கருத்துகளைப் பொதுவில் கொட்டிக் கவிழ்த்துப் பொதுவெளியை ஆபாசமாக்கிக் கொண்டிருக்கிறாரோ அதே போன்ற நிலைதான் சார்த்தருடையது, ஜெனேயுடையது. தம் சமுதாயங்களைத் தாம் விரும்பும் புரட்சிகளுக்கு உள்ளாக்குவதே இவர்களுடைய லட்சியமே தவிர சோசலிச நாடுகள் எக்கேடு கெட்டால் என்ன? அவற்றில் போய் வாழ்ந்து அவற்றின் குறைகளை விமர்சிப்பது ஒன்றும் இவர்கள் வேலை இல்லையே. அங்கு மட்டும் ‘ஃப்ரெஞ்சு தேசியம்’ தலை தூக்குகிறது. தேசியம் என்பது இதரரிடம் இருந்தால் அது குறை, குற்றம். முற்போக்குகளிடமும், இந்துமதம் அல்லாத மதவாதிகளிடமும், சீனரிடமும், ரஷ்யரிடமும் இருந்தால் அது பெரிய வளம். இதுதான் இந்திய முற்போக்கு அறிவு சீவிகளின் வக்கிர மனோபாவம்.
யூரோப்பிய சமுதாயங்களில் ஓரளவு சமத்துவத்தைக் கொணர்ந்த நாடுகள் எனப்படும், யூரோப்பிய, ஸ்காண்டிநேவியப் பொருளாதாரங்கள் (எண்ணெய்=நார்வே, இரண்டாம் உலகப் போரில் குவித்த சம்பத்து=ஸ்வீடன், காலனியத்தில் அடித்த கொள்ளை=டச்சு, இன்னும் ஃபின்லந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் என்று நான் ஆராயப் போகவில்லை. அந்த நாடுகளெல்லாம் எந்த வளத்தின் பேரில் சமத்துவத்தை அடைய முயல்கின்றன என்று இன்னும் பார்க்கவில்லை.) முந்தைய சேமிப்பை சமத்துவம் என்ற பெயரில் வேட்டு விட்டுக் கொண்டிருந்தன. இப்போது உலகச் சந்தை நொறுங்கத் துவங்கியதும், ஜனத்தொகை விழத்துவங்கியதும், சீனாவுக்கு உற்பத்தி நகர்ந்ததும் இந்த நாடுகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. இங்கு இனவெறி மறுபடி தலை தூக்குகிறது. இந்த நாட்டு இடதுசாரிகள் திடீரென்று ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசி நாடகம் போடத் துவங்கி உள்ளனர். தம் வழி சோசலிஸ அமைப்பை எதிர்த்தனர் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான குடியானவர்களைக் கூட்டமாகக் கொளுத்திக் கரியாக்கிய ட்ராட்ஸ்கியை ஆதர்ச புருடராகக் கொள்ளும் ட்ராட்ஸ்கியைட்களெல்லாம் ’ஜனநாயகம்’ பற்றிப் பேசினால் அதை என்னவென்று எடுத்துக் கொள்வது?
இளைஞர்களை எல்லாம் ஒரு ‘கூறு’ என்று வைத்துப் பார்த்தால், ஏகப்பட்ட பொதுமைப்படுத்தல் செய்யாமல் இருந்தால் கூட, 20 வயதினருக்கு குறைந்தவர்களுக்குச் சில பிரச்சினைகள் உண்டு என்பது எனக்குத் தெரிகிறது. குறிப்பாக உளநிலைச் சமன்பாடு, பிறரை எடை போடுதல், எதிர்காலத்துக்குத் திட்டமிடுதல், வாழ்வுத் தேர்வுகள் குறித்த தொலைநோக்கு கொள்ளுதல் [emotional balance, judgement of others, planning for the future, perspective about life choices] என்பன இன்னும் சரியாகக் கூர்மைப்படவில்லை, அல்லது ஒருங்குபடுத்தப்படவில்லை என்பது அவர்களுடைய இயக்கங்களையும், வாதங்களையும், கருத்துகளையும், தேர்வுகளையும் பார்க்கையில் தெரிகிறது. சாமர்த்தியம், அல்லது வாதத் திறமை அல்லது கற்கும் திறன் அல்லது தர்க்கச் சுழல்களைக் கடப்பது என்பன ஒரு அருவப் பிரச்சினை [academic problem] ஆக இருக்கையில் இவர்களால் அவற்றை எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் நேரடி மனித உறவுகளில் இவற்றைப் பொருத்திப் பார்த்து,நல்ல தேர்வுகளைச் செய்ய இவர்களில் பெரும்பாலாருக்குக் குறைபாடுகள் உள்ளன.
பல தரப்பட்ட மூத்தவர்களோடு பழகி, அவர்களின் பல நிறை குறைகளை அறிந்த அனுபவம் குறைவாக இருப்பதால் இந்நிலை என்று நான் நினைக்கிறேன். ‘வளர்ந்தவர்கள்’ என்று அறியப்படுவோர் பலரும் அத்தனை சமநிலை அடைந்தவர்கள் [balanced people] அல்ல, அறம் சார்ந்த (Ethical) மனிதர்களும் அல்ல, பல நேரம் தம் நலனுக்காக எவரையும் பலி கொடுக்கும் மனிதராகவும் இருப்பவர்கள் என்றும் நிறைய வளர்ந்தவர்கள் உள்ளதால் சமுதாய்த்திலும் மனிதக்குழுக்களிலும் நிறையக் குறைகள் உள்ளன. அந்தக் குறைகள் இளைஞர்களின் குறைகளோடு சந்திக்கும் போது இளைஞர்கள் தம் வக்கிரங்களைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களிடம் எளிதே சிக்கிப் பலியாகும் வாய்ப்பு கூடுகிறது.
பூவாஹ், சார்த்தர் போன்றார் இளம் பெண்களைப் பலியாடாக்கியதில் இரண்டு பிரச்சினைகள் உண்டு. ஒன்று, இளைஞர்கள் இவர்களிடம் ’பெருநாயகர்களை அணுகுகிறோம்’ என்ற மனோபாவத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி வருபவர்களைத் தம் கட்டுப்பாடற்ற நடத்தைக்குப் பலியாக்குவதில் இந்த இருவருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை என்பதோடு, அப்படிப் பலியாகுபவர்கள் பற்றி இந்த இருவரும் தமக்குள் கடிதப் பரிமாற்றத்தில் இழிவாகப் பேசிக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொன்னேன், அந்த நடத்தை மோசமான நடத்தை என்று. அதை ஒழுக்கக் கண்ணோட்டத்தில் பார்த்து பலரோடு பாலுறவு கொள்ளுதல் தவறு என்ற பார்வையில் சொல்லவில்லை. சார்த்தரும், பூவாஹ்ஹும் மணம் செய்து கொள்ளவில்லை, சேர்ந்து வாழ்ந்தார்கள், அல்லது தொடர்ந்து ஒரு ஜோடியாக இருந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு ஊர் மேய உரிமை இருந்தது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் <20 மாணவர்களைத் தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக் கொண்டு தூர எறிவது முதிர்ச்சியுள்ள மனிதர் செய்யும் வேலை அல்ல. அதற்குச் சுரண்டல் என்றுதான் பெயர். இதற்கு ஒப்பாக இன்று கதோலிக்கப் பாதிரிகள் பலர் உலகெங்கும் பல நாடுகளில் தம்மிடம் அறபோதனைக்கோ, இசைப் பயிற்சிக்கோ அல்லது மதச் சடங்குகள் கற்கவோ வந்த சிறுவரையும், இளைஞரையும் பாலுறவுக்கு அழைத்து அல்லது வற்புறுத்திய குற்றச் செயல்களைச் செய்தவர்கள் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கதோலிக்கச் சர்ச் அமைப்பு நெடுங்காலமாகப் பத்திரப்படுத்தியோ, அல்லது காத்தோ வந்திருக்கிறது, முறையாகக் காவல் துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று உலகெங்கும் கதோலிக்க ம்த அமைப்புகள் மீது பலரும் குற்ற வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வெகு காலமாக இவற்றை மறுத்தும் மறைத்தும் வந்த கதோலிக்க மத அமைப்பு இன்று போப்பரசரே பகிரங்கமாகத் தம் சபையினரிடம் மன்னிப்பு கோரும் நிலையில் கொண்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தம் சொந்த வாழ்வில் அறப்பிறழ்வுகளைச் செய்தும், அப்படிப் பிறழ்வுகளைச் செய்யும் அரசியல்வாதிகளையும், அமைப்புகளையும் ஆதரித்தும் நின்ற, நிற்கும் இந்திய முற்போக்குகளும், சூஸன்னா ராய் போன்ற சிந்தனையாளரும், இந்து ச்முதாயத்தைத் தினம் இழிவு செய்யும் பிற மத விமர்ச்கர்களும், இந்தியரிடம் இதே போன்ற மன்னிப்பைக் கேட்பார்களா என்றால் அப்படி ஒரு கருத்து நேர்மையோ, நா நயமோ இந்த மனிதர்களிடம் எதிர்பார்ப்பது பகல்கனவு என்றுதான் என் கருத்து. இவர்களுக்குக் கருத்து நேர்மை என்றால் என்னவென்றே தெரியாது என்பது என் முடிவு.
ஏனெனில் தாம் மட்டுமே நீதிபதிகளாக இருக்கத் தகுதி உள்ளவர், ம்ற்றெல்லாரும் இழிபிறவிகள் என்பதே இவர்கள் கருத்து. பிறரின் சட்டம் ஒழுங்கு எல்லாம் தமக்குப் பொருந்தாது, ஆனால் தாம் கருதும் ஒழுங்கு, சட்டம், அறம் எல்லாம் பிறருக்குப் பொருந்தும், ஏன் அதுவே கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூட இவர்கள் கருதுபவர்கள். உலகை இவர்களுடைய கண்ணாடிகள் வழியே மட்டுமே பார்க்கலாம், பிறருடைய கண் ஆடிகள் எல்லாம் கோணல். தாம் வழி பிறழ்ந்தால் அது சகஜமான மனிதக் குறைபாடு, பிற ‘எதிரிகள்’ பிறழ்ந்தால் அது மாபெரும் குற்றம், உடனே எல்லா சமுதாயங்களும் புரட்டிப் போடப்பட்டு, லட்சக்கணக்கான மனிதர் கொல்லப்பட்டு சமத்துவ சமுதாயம் நிறுவப்பட வேண்டும். யார் அந்த சம்த்துவ சமுதாயத்தை நிர்வகிப்பார்? இந்த ’மனித பலவீனம் சகஜம், அதனால் நான் பிறழ்ந்தேன், அதற்கு என்னைக் குறை சொல்ல முடியாது, நான் புனித ஜெனே போன்றவன்,’ என்று சொல்லும் ஆயுதபாணிப் புரட்சியாளர்கள். ஆட்சியாளர்களாகவோ, ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துபவர்களாகவோ அவர்களிருந்தால், அவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் உரிமையாவது யாருக்காவது உண்டா? நிச்சயம் கிடையாது. ஏனெனில் இவர்களுக்கு மட்டுமே உலக மனித உய்வு என்பது என்ன என்று தெரியும். மற்றெல்லாரும் மாக்கள். அப்படி யாரும் இருந்தால் அவர்கள் தெளிவாகவே ‘மக்கள்’ எதிரிகள். ஏனெனில் ‘மக்கள்’ என்ற சொல்லே இவர்களை மட்டும்தான் குறிக்கிறது.
இதையேல்லாம் சற்று விடுவோம். சார்த்தர், பூவாஹ் ஆகிய இருவருக்கு மீண்டும் வருவோம்.
ஏதோ சரவணபவன் முதலாளி போன்றவர்கள் அல்ல இந்த இருவரும். அதிகார மமதையில் குற்றம் புரிந்து அகப்பட்டுக் கொண்டவர்கள் அல்ல. குற்றம் என்று நாம் ‘மத்திய வர்க்கப் பார்வையில்’ கருதும் எல்லாவற்றையும் புரிந்தபடியே, நம் போன்றவர்கள் இழிவானவர்கள் என்று நம்மிடம் சொல்லிய்வர்கள் இவர்கள். அதோடு, நம் போன்றவர்களின் அன்றாட உழைப்பால் ’ஒழுங்காக’ இயங்கும் உலகத்தின் எல்லா வசதிகளையும் துய்த்தபடி, அதன் பாதுகாப்பை அனுபவித்தபடியே, அதை இழிவு செய்தவர்கள். அதே நேரம் இந்த ஏற்கனவே ஏதோ காலப்போக்கில் அமைந்த ஒழுங்கில் இயங்கி வரும் சமுதாயத்தின் ஊழல்களை வெளிச்சமாக்கி, ’உண்மையில்’ அறம் என்பது என்ன என்று சொல்ல முனைந்ததோடு, யாரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியாத சுழல்சிக்கல்கள் கொண்ட மொழியில் தடித்த புத்தகங்கள் எழுதி பல்கலைகள், மேலும் அரசியல் சமூக பண்பாட்டுப் போராட்ட இயக்கங்களில் எல்லாம் ‘தாரகைகளாக’ பவனி வந்தவர்கள்.
வியத்நாம் போரில் சில கிராமங்களில் இருந்த பெண்கள், சிறாரை அமெரிக்க ‘ஏகாதிபத்தியப்’ படையினர் கொளுத்தியதற்கு, குண்டு வீசிக் கொன்றதற்கு மொத்த அமெரிக்காவும், ஏன் உலகுமே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் சார்த்தர். ஒவ்வொரு மனிதரும் பிற உலக மனிதரின் நலன் குறித்த பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டியது அவசியம், அப்படிப் பொறுப்பேற்க முடியாத நிலையில் நாமெல்லாம் இருக்கக் காரணம் இந்த வக்கிரமான சமூக அமைப்புகள் நம்மை நம் சக மனிதரிடம் இருந்து அன்னியமாக்கியது காரணம் என்று வாதிட்டவர். ‘The other is hell’ என்ற அவரது அறிக்கை வெறும் கதை வரி அல்ல. சரி சார்த்தர், நம் ஊரில் சொல்வார்களே, சவ ஊர்வலத்தில் கூட தானே நாயகமாக, சவமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் வகை மனிதர் ஆக இருக்கக் கூடும், எதையும் நாடகத்தனமாக அறிவித்துப் பழகியவராக இருக்கக் கூடும். அதற்காக, இந்த வஜனத்தை எடுத்து விட்டாரென்று நாம் அதை ஊதிப் பெருக்காமல் இருக்கலாம்தான். ஆனால் அவரும் சரி, பூவாஹ்ஹும் சரி, ‘மற்றவர்’ என்ற ஒரு கருத்து வடிவை மிகவுமே முக்கியமாகக் கருதிச் செயல்பட்டவர்கள் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டி இருக்கிறது. மற்றவர்களிடம் உறவு கொள்வதில் ஒரு வன்முறை தவிர்க்க முடியாதது என்று கூட பூவாஹ் எழுதி இருக்கிறார். அத்தனை தூரம் தன்மயம் என்பது சான்னித்தியம் கொண்டதா என்று நாமெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பின்னெப்படி ஸ்டாலினியம், கூட்டு சமுதாயம் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன? சார்த்தரைத்தான் கேட்க வேண்டும்.
பல நேரம் அப்படித்தான் சமூக அமைப்பு உள்ளது, அதாவது வன்முறை நிறைந்துள்ளது, மற்றவர் எல்லாம் நம் வாழ்வை நரகமாக்கவே முயல்கிறார் என்று இருவருமே கருதியவர். அதை நீக்க வேண்டும் அப்போதுதான் மனிதர், மனிதத்தை அடைந்ததாகக் கருத முடியும் என்று சொன்னவர்கள் சார்த்தர், பூவாஹ். அப்படி ஒரு மனிதர் தம்மிடம் கற்க வரும் மாணவர்களைத் தம் பாலுறவு ஆசைகளுக்குப் பலியாக்குவது இரு வளர்ந்த மனிதர்களின் சுதந்திரத் தேர்வு குறித்த பிரச்சினை அல்ல. உலகை அறப் பார்வையில் கண்டித்து விமர்சித்தவர் தம்மளவில் எந்த அறமும், பொறுப்பும் இல்லாத கேவல மனிதர் என்பதால் எழும் பிரச்சினை.
சார்த்தர் தம் உடல் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாதவர், கட்டுப்படுத்துவது தேவையில்லாத ஒழுக்கப் பார்வை என்று கருதியவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் உலக மனிதருக்கு புரட்சி சமுதாயம் வெற்றி பெறக் கட்டுப்பாடும், தனிமனித விழைவுகள் ஒடுக்கப்படுவதும் அவசியம் என்று பேசியது ஒரு கேவலம் என்றுதான் நான் பார்க்கிறே. தன் கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொள்ள முடியாதவர், பல லட்சம் மக்கள் தம் வாழ்வைப் புரட்சிக்கு அடகு வைக்கவேண்டும் என்று கோர என்ன உரிமை கொண்டவராகிறார்?
இவரை விடக் கேவலம் பூவாஹ் உடைய நடத்தை. எந்தக் காரணங்களால் பெண்கள் ‘அடிமைப்படுத்தப்’ படுகிறார்களோ அவற்றை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி, இரண்டாம் குடிமக்களாக எல்லாச் சமூகத்திலும் உள்ள பெண்களின் நிலையை மாற்றுவதே வாழ்நாளின் குறிக்கோள் என்று பேசிய மனிதர், இன்னொரு ஆணின் பொறுப்பற்ற சுரண்டலுக்குத் தம்மை ஆதர்ச மனிதராகத் தேடி வந்த இளைஞரைப் பலியாக அனுப்புவது வெறும் ஒழுக்கப் பிரச்சினை அல்ல. அடிப்படை மனித்நேயமற்ற மனிதர் அவர் என்றுதான் சுட்டுகிறது. அவருடைய மையக் கருத்தான அறப் பொறுப்பைப் போலிக் கருத்துப் பிரச்சாரம் என்று வெளிப்படுத்துகிறது இது.
இதைச் சும்மா தேர்வுகளில் எழுந்த குறை என்று ஒதுக்க முடியாது. இது சந்தையல்ல. மனித உறவுகளில் நேர்ந்த சுரண்டல்.
எங்கல்ஸ் எப்படிச் சுரண்டலால் மோசமான நிலைக்கு வந்தவர்களை (விலைமாதரைத்) தாமும் அவர்களுடைய உடல்களை விலைக்கு வாங்கிச் சுரண்டினாரோ அதே போனற அறப்பிறழ்வுதான் இதுவும். எங்கல்ஸும் கூடத் தம் உடல் உந்துதலுக்கு வடிகாலாக இந்தியாவிலும், உலகிலும், குறிப்பாக மாவோயிசம் வழிநடத்திப் பூலோகச் சொர்க்கமாக இன்று உள்ள சீனாவிலும் பல கோடி இளைஞர்கள் பாலுறவுக்கு எந்த வழியும் இன்றி என்ன செய்கிறார்களோ அதைச் செய்து சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு விலைமாதர்களை அனுபவிப்பது அவசியமாக இருந்திருக்கிறது. இது தன் மையக் கருத்தியலின் மறுதலிப்பு என்பது அவருக்கும் விளங்கியதில்லை, அவருடைய குருநாதர் மார்க்ஸுக்கும் அதைக் கண்டித்து ஏதும் சொல்லத் தெரியவில்லை.
கருத்துப் பரிமாற்றம் சுதந்திரமாக உள்ள இடத்தில்தான் கருத்து நேர்மை அவசியமாகிறது. சீனாவிலும், ரஷ்யாவிலும் சமரசம் செய்வாரை என்னால் ஏற்கக் கூட முடியும். வன்முறை அச்சுறுத்தும் போது எதிர்ப்பது பெருநாயகத் தன்மை என்பது உண்மையானாலும், அணு குண்டுகள் நாசமாக்கிய உலகில் பிழைத்து வரப்போகும் கரப்பான் பூச்சிதான் உண்மையில் சக்தி வாய்ந்த ஜீவராசி என்பதில் எனக்கு ஐயம் இல்லை. நாஜியிசம், ஃபாசிஸம், ஸ்டாலினியம் ஆகியவற்றில் ஓரத்தில் ஒளிந்து இருந்து தப்பியவர்கள் மீது எனக்கு எந்த இழிவுணர்வும் கிடையாது. தாமும் வன்முறை, சுரண்டல், காட்டிக் கொடுத்தல், அல்லது கொலை, கொள்ளையில் ஈடுபட்டாரை என்னால் ஏற்க முடியாமல் இருக்கலாம். கூட்டத்தோடு ஊர்வலம் போய் கோவிந்தா போட்டு விட்டு வீட்டுக்குப் போய ஒளிந்து கொணடவர்களின் ‘கோழைத்’ தனத்தை நான் வெறுத்ததில்லை.
நான் முன் சொன்ன கருத்து நேர்மை தமக்கில்லாதவர், சுதந்திரச் சூழலில் பத்திரிகையாளராகவோ, கருத்துப் பிரச்சாரகர்களாகவோ, ஆய்வாளராகவோ இருக்கும் பட்சத்தில் பிறருக்கு அற போதனை செய்யாமல் இருந்தால், அவர்களை வெறுக்க அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் அடிப்படையில் நேர்மை அற்றவர்கள் என்று அறிந்து, அவர்களை ஆதரிக்காமல் இருக்கலாம். அதுவே போதும் என்று நினைக்கிறேன். தற்கொலைப் படைவாதி கருத்து நேர்மை கொண்டவனாக இருப்பது கடினம். சுற்றி உள்ள சாதாரண மனிதர்களைக் கொல்வதைக் குறித்து எந்த தர்மச் சங்கடமும் இல்லாத வெடிகுண்டுமனிதன், தான் கொல்லும் அக்கிரமக்காரர்களோடு எந்த விதத்திலும் வேறுபட்டவன் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு கொலையால் பல கோடி மனிதரை விடுவிக்கிறேன் என்று வீரம் பேசுவது எனக்கு ஏற்புடையதில்லை.
ஆனால் எல்லாத் தருணங்களிலும் கத்தி வெட்டாக எது தார்மீகம் எது அறம் என்று தீர்மானிப்பது கடினம் என்ற் ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு எல்லா அறப்பிறழ்வுகளையும் நியாயப் படுத்துதல் நல்லதல்ல. கருத்து நேர்மை இல்லாதவர்களை அமெரிக்கச் சந்தை நுழைய விடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அமெரிக்க அரசே ஒரு மோசமான ஒட்டுண்ணியாக்த்தான் இருக்கிறது, அது என்ன பிற ஒட்டுண்ணிகளை சீர்தூக்க? ஆனால் சாதாரண மனிதரான நாம் இத்தகைய மனிதரைப் பூரண கும்பத்தோடு வரவேற்கப் போகத் தேவை இல்லை என்று கருதுகிறேன். அவ்வளவுதான்.
சார்த்தர், பூஹ்வா போன்றாரை விதந்தோதும் அறிவு சீவிகள், இந்து மடாதிபதிகள், மதப்பிரசாரகர்களின் நெறிப் பிறழ்வுகளைத் தாக்கி அவர்களைச் சிறைப்படுத்தியாக வேண்டும் என்று துடிக்கிறவர்கள். சார்த்தரின் ஸ்டாலினியம் சற்றும் உறுத்தாதவர்கள் என்பதில் எனக்கு வியப்பில்லை. ஆனால் பல லட்சம் மனிதரைக் கொன்றவரை நாயகராகக் கருதுபவர்கள், சில பத்துப் பேரைச் சுரண்டிய ஒருவரை ஏன் தூக்கில் போட்டால்தான் தம் ஜன்மம் சாபல்யமாகும் என்று வெளியில் நாடகம் ஆடுகிறார்கள்? அதிலும் குறிப்பாகப் பெண்ணியவாதிகள் சீமோன் டு பூவாஹ்ஹின் புத்தகங்களை ஏன் விவிலிய நூல போலத் தம் வகுப்புகளில் போதனைக்குப் பயன்படுத்துகிறார்கள்?
திருடனுக்குப் போலிஸ் வேலை கொடுத்தால் அவன் திறம்பட நிர்வாகம் செய்வான் என்று ஒரு நம்பிக்கை உண்டு. இவர்களையும், இவர்களின் நூல்களையும் வைத்துக் கொண்டு, எது அறம், எது நேர்மை, எது சமத்துவம் என்றெல்லாம் போதிப்பது அப்படி ஒரு முரண் நிலை என நினைக்கிறேன். ஆனால் இந்த முரணை முன்வைத்து விட்டுப் பேசினால் இவர்களுக்குப் பெருநாயகத் தோரணை இல்லாது சாமானிய மனிதர்கள் என்ற நிலை பொதுவில் இருக்கும். அதாவது நீதி போதனை செய்வது அவர்களின் அறிவுத் திறன் குறித்தது. நடத்தையில் இழிவு காட்டுவது அவர்களின் உளநிலையில் முதிர்ச்சி இல்லாதது என்றாவது இந்த வகுப்புகளில் சுட்டுவார்களா என்றால் எனக்கு அதிலும் ஐயமே எஞ்சுகிறது. ஏனெனில் நாயக உருக்களைக் கவிழ்ப்பது அத்தனை சுலபம் இல்லை, அதிலும் முற்போக்குச் சாயம் பூசிய நாயக உருக்கள் ஏசுவாகவும், இறைதூதராகவும் கூட ஆகி விடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ ஸ்டாலினின் சகாப்தம் ரஷ்யாவில் மறுபடி துவங்கி இருக்கிறது, மாவோ ஒரு சுவரில் மாட்டி வணங்கப்படும் இறை உருவாகி விட்டிருக்கிறார். இந்தியப் புரட்சியாளருக்கு, வனவாசிகளுக்குக் காவலராகத் தாம் மட்டுமே என்று நடிக்க, வனவாசிகள், குடியானவர் ஆகியோரைக் கிள்ளுக் கீரையாக நினைத்த மாவோதான் நட்சத்திரமாகத் தெரிகிறார்.
மனித மனத்தின் இருண்மை என்னென்னவோ விசித்திரங்களைக் கொண்டது.
அதே நேரம் எந்த மனிதரும் ஏதோ தருணங்களில் அசாதாரண நிலைகளை எட்டக் கூடும் வாய்ப்பும், ஏன் சாதனையையும் கூட அமையக் கூடியவ்ர் என்றும் இவர்களை வைத்து நிறுவ முடியுமோ என்னவோ.
இவர்களை முன்வைத்துக் கொண்டு சமகால மனிதர்களைச் சீர்தூக்குவதைத்தான் நான் கண்டிக்கிறேன், அபத்தம் எனவும் சொல்கிறேன். இவர்களை என்று சொல்லும்போது இந்த இருவரை மட்டும் சொல்லவில்லை, இவர்களே போன்ற மேற்கின் நாயக முன்மாதிரிகளை எல்லாம் இப்படி ஆராய்ந்து நோக்குதல் வேண்டும் என்று சொல்கிறேன். இந்த மாதிரி மேற்கின் நாயக உருக்களைக் கொண்டுதான் தாம் ஊக்கம் பெறுவதாகச் சொல்லும் பல தமிழக அறிவு சீவிகளைக் கொண்டாடுவதையும் நாம் நம்மளவிலாவது நிறுத்திக் கொள்ளுதல் நம ஆளுமைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும் என்பதும் என் நிலை.
______________________
மேலும் கருதச் சில மேற்கோள்கள்.
“The erotic experience is one that most poignantly discloses to human beings the ambiguity of the condition; in it they are aware of themselves as flesh and as spirit, as the other and as the subject” (The Second Sex, 449).
இன்னொரு கட்டுரையில் இருந்து. இதைக் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். மூலம் எது என்று குறிக்க விட்டுப் போயிற்று.
The liberated woman must free herself from two shackles: one is the idea that to be independent she must be like men and the other is her socialization in passivity which makes her adverse to risking herself for her ideas/ideals.
பயன்படுத்திய சில கட்டுரைகள், புத்தகங்கள்:
Sartre against Stalinism- Ian Birchall (Berghahn Books, 2004)
http://www.slate.com/id/2088648/pagenum/all/
http://www.thenation.com/article/sartres-roads-freedom
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- உஷ்ண வெளிக்காரன்
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்
- நடக்கப்பழகியிருந்தேன்…
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- அன்புடையீர்
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- To Kill a Mockingbird
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- நடப்பு
- வேத வனம் விருட்சம் 89 –
- கால தேவன்
- நண்பர்கள் வட்டம்
- நடுக்கடலில்…
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- காகிதக் கால்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- முள்பாதை 33
- அந்தமானில்……
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- சுவடு
- ரிஷி கவிதைகள்
- காதலில் விழுந்தேன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3