இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)


மேற்கத்திய நாடுகளில், வேசிகளுக்கு நலத் திட்டங்களும் அரசு ஆயுள்காப்பீடும் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இதர வசதிகளும் கிடைக்கிறது. இங்கே நமக்கு வாழ்வதற்கே உரிமையில்லை . . . ஏன்? நாங்களும் கூட உழைப்பாளர்கள்தான் தெரியுமா . . .

தனது உடலை விற்க நிர்ப்பந்திக்கப்பட்ட மற்றொரு பெண் அவரிடம் சொல்லுகிறார்:

எனது சேவைகளுக்காக, கடைக்காரர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், கல்வியறிவற்றவர்கள் என எல்லா வகையான ஆண்களும் என்னிடம் வருகின்றனர் . . . அடிப்படையில், யாருக்கெல்லாம் ஒரு பெண்ணை சிறிது காலம் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறதோ அவர்களெல்லாம் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையில் எங்களை மிக மோசமாக நடத்துகின்றனர் . . . எங்களுக்கு அவர்கள் பணம் தருவதாலேயே, தாங்கள் எங்களிடத்தில் என்னவும் செய்யலாம் என்கிற உரிமை தங்களுக்கு இருப்பதாக நினைக்கிறார்கள் . . . நாங்களும் அதை சகித்துக்கொள்கிறோம்.

இன்றைக்கு நமது சமூகத்தில் எவருமே பொருளாதார வகையில் பாதுகாப்பாக இல்லை. நான் எனது (வீட்டு) வாடகையைக் கொடுக்க முடியவில்லை . . . நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். இன்றைக்கு இரவு எனது உடலை நான் விற்கவில்லை என்றால் நாளைய செலவுக்கு என்னிடம் பணம் கிடையாது . . . வேலை வாய்ப்பில்லாத, பாதுகாப்பு இல்லாத, உரிமைகள் இல்லாத ஒரு சமூகத்தில், ஒருவர் என்னதான் செய்யமுடியும்? தெருவிலே நீங்கள் நடந்து செல்லுங்கள். இஸ்லாமியப் பாதுகாவலர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் உங்களைக் கைது செய்யக்கூடும் என்று எப்போதுமே உங்களுக்கு பயம் இருக்கும். உங்களின் முக்காடுக்கு வெளியே ஒரு முடிக்கற்றை வெளியே தெரிவது, ஒரு மெல்லிய உதட்டுச் சாயம், என எதற்காகவும் . . .

யாரையும் சார்ந்திராமல் தன்னந்தனியாக நானே வேலை செய்து எனது செலவுகளைப் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற உத்தரவாதம் இருக்கின்ற ஒரு சமூகத்தில் நான் வாழ்ந்திருந்தேன் என்றால், எனது உடலை விற்கின்ற செயலில் நான் ஒருபோதும் இறங்கியிருக்க மாட்டேன். அப்போதும் எனக்கு உடல் தேவை இருந்திருக்கக்கூடும் என்கிற நிலையில் நான் யாரோ ஒருவரைத் தேர்தெடுத்திருப்பேன் . . . எனது உணர்வுகளுடன், நான் விரும்பிய வகையில் . . . மகிழ்ச்சியாக வாழ முடிந்திருக்கும் . . . ஆனால் இப்போதிருக்கிற நிலையில், ஆண்களை வாங்குவோராகவும் என் போன்றவர்களை விற்போராயும் அரசாங்கம் ஆக்கியிருக்கிறது . . .

அந்தப் படத்தை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் தயாராக இல்லை என்பதால் மோஸ்லெம் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். கட்டாமியின் ஆட்சியை நிலைகுலையச் செய்ய அவர்கள் விரும்பவில்லை! மோஸ்லெம்மேயும் கூட புரட்சியின் ஒரு குழந்தைதான். அது நிகழ்ந்திராவிட்டால் அவர் ஒரு படத் தயாரிப்பாளர் ஆகியிருக்கமாட்டார். அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார். மோஸ்லெமின் தந்தை ஒரு தொழுகை அழைப்புக் குரலாளர் (muezzin) என்பதுடன் தீவிர-மதவழியில் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். தற்போது அவர் அதிதீவிரமாக மதத்தை வெறுக்கிறார். என்னாலும் கூட திருப்பிச் சொல்லமுடியாதபடிக்கு அவரது வெறுப்பு இருக்கிறது. ஈராக்குக்கு எதிரான போரில் சண்டையிட மோஸ்லெம் மறுத்துவிட்டார். அதற்காக கைது செய்யப்பட்டார். இந்த அனுபவம் அவரை மாற்றிய விதம் வருமாறு:

சங்சாவில் மக்கள் கூட்டம் நிறைந்த வீதியொன்றின் மூலையில் சிறிய செய்தித்தாள் விற்பனைக் கடை ஒன்றை நான் தொடங்கியது 1978-79ம் ஆண்டு. ஒவ்வொரு வாரமும் அரசியல் குழுக்களின் செய்தித் தாள்களும், வார, மாத இதழ்களும் புத்தகங்களும் எனக்கு வந்து சேரும். அவற்றை நான் எனது கடையில் வைத்து விற்பனை செய்து வந்தேன். சிறிது காலத்திற்குப் பிறகு ஆர்வமுள்ள இளைஞர்கள் கூடி, அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கின்ற ஒரு இடமாக அது ஆயிற்று.

தங்களை ஹெஸ்பொல்லா என்று சொல்லிக்கொண்ட இஸ்லாமியப் பாதுகாவலர்கள், ஓரிரவில் செய்தித் தாள் கடையைத் தாக்கி அதை எரித்துவிட்டனர். பாதி எரிந்த புத்தகங்களை நான் எடுத்துவைத்து அவற்றை ஒருவாரத்திற்கு அன்றாடம் எனது கடையின் முன் (காட்சிக்கு) வைத்திருந்தேன். பிறகு அவர்கள் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.சிறை கடினமாக இருந்தபோதிலும் அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவு முதிர்ச்சியின் ஒரு கட்டத்தை நான் அடைந்து கொண்டிருப்பதாக சிறையில் இருந்தபோது நான் நினைத்தேன். நான் தாங்கிக்கொண்டிருந்ததுடன், எனது வலிமை குறித்த உணர்வினை அனுபவித்தேன். மத குருக்களின் ஊழல் நிறைந்த உலகிலிருந்து எனது வாழ்க்கையை நான் காத்துக்கொண்டதாக நினைத்ததுடன் அதற்காக நான் கொடுக்கின்ற ஒரு விலையாக இதை (சிறை வாழ்க்கையை) நினைத்தேன். இதற்காக நான் பெருமைப்பட்டேன். சிறையில் ஓராண்டு கழிந்த பின்னர், வெள்ளிக் கிழமை தொழுகையிலும் மத நடவடிக்கைகளிலும் நான் பங்கேற்பேன் என்று உறுதி கூறுகின்ற தாள்களில் நான் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் என்னை விடுவிப்பதாக அவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். நான் கையெழுத்திட மறுத்தேன். மேலும் ஓராண்டுக்கு என்னை சிறையில் வைத்தனர்.

சிறையிலிருந்து என்னை விடுவித்தபோது எனக்கு, நான் பிறந்த ஊர் மிகவும் சிறியதாகத் தெரிந்தது. அங்கே மூச்சுமுட்டுவதைப் போலிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே, நான் டெஹ்ரானுக்கு வந்து சேர்ந்தேன். பகல் நேரங்களில் நான் வேலை பார்த்தேன், இரவுகளில், ‘இலவசப்’ பல்கலைக் கழகத்திற்குச் சென்றேன். (இலவசப் பல்கலைக் கழகம் என்பது அதிக கட்டணம் வசூலிக்கின்ற தனியார் பல்கலைக் கழகம்.)

எண்பதுகளின் முற்பகுதியில், சினிமாவில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. எனது ஆழ்மனச் சிந்தனைகளும் போராட்டங்களும் சினிமாவில் கவனம் செலுத்தவோ அல்லது எந்த ஒரு நீண்ட காலத் திட்டத்தை வைத்திருக்கவோ என்னை அனுமதிக்கவில்லை. ஈரானில் உள்ள நிலைமைகளுக்குத் தக ஒருபோதும் என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதாக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த சமூக – அரசியல் நிலைமைகள் மிகக் கடுமையாக என்னை கவலைக்குள்ளாக்கியது.

போர் முடிந்த பின்னர் (1989) தங்களின் பழைய பிறப்புச் சான்றுகளைப் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் புதியதொரு சட்டம் கொண்டுவந்தது. எனது பிறப்புச் சான்றை மாற்றுவதற்காக நான் சென்றால், எனது போலி ஆவணங்களை நான் ஒழித்துவிட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நியமிக்கப்பட்ட ஒரு இராணுவ வீரரான நான் போருக்குச் செல்லவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். மறுபக்கத்தில் பல்கலைக் கழகக் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. எனவே எனது இராணுவ சேவையை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். நான் திரும்பி வந்த பிறகு, ஒரு வேலை தேடினேன். திரைப்பட இதழ் ஒன்று, ஒரு நிருபரைத் தேடிக் கொண்டிருப்பதை தற்செயலாக நான் பார்க்க நேர்ந்தது. அந்த வேலையை நான் ஏற்றுக்கொண்டேன். அரசு சாரா படத் தயாரிப்பாளர்களையும் இலக்கியக் கர்த்தாக்களையும் பேட்டி எடுக்க நான் முயற்சித்த போதிலும், நான் எதையாவது -விமர்சனமாக இருந்தாலும் கூட- எழுதினால், தாங்கள் விமர்சனத்தைக் கூட அனுமதிப்பதாக, அதனால் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லி, ஆட்சியாளர்கள் ஜம்பம் அடித்துக்கொள்ள வாய்ப்பாகி விடும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். திரைப்படம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் படத் தயாரிப்பாளர்கள் அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.

மெர்ஜூயி, மக்கமல்ப•ப் அல்லது கியரோஸ்டமி போன்ற படத் தயாரிப்பாளர்களை நான் பேட்டி எடுப்பேனாயின், இறுதியில் அது அரசியல் அமைப்பிற்கே சாதகம் செய்யும். இருப்பினும் என் மூலமாக அத்தகைய சாதகத்தை அது (அரசாங்கம்) எடுத்துக்கொள்வதைத் தற்காலிகமாக அனுமதிப்போம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் . . . ஊடகத்திலான எனது பணி, எனது சொந்தத் திட்டங்களுக்கான – எனது திட்டங்கள், ஆட்சி அதிகாரத்தின் இரகசியக் குற்றங்களை ஆவணப்படுத்துவது – ஒரு திரையாக இருக்குமென நான் நினைத்தேன். உண்மையில் நான் விரும்புவதைப் போன்ற படங்களைத் தயாரிப்பது தணிக்கைக் கட்டுப்பாடுகளின் காரணமாக என்னால் இயலாதென்று எனக்குத் தெரியும். நான் எழுதக்கூடிய காட்சி எதற்கும் இஸ்லாமியத் தணிக்கை அலுவலகத்தின் அனுமதி ஒருபோதும் கிடைக்காது, எனது நேரமும் உழைப்பும் வீணாகிப்போகும் என்பது எனக்குத் தெரியும். எனவே இரகசியமாக, எட்டு ஆவணப் படங்களைத் தயாரிக்க நான் முடிவெடுத்தேன். 1994-1998க்கும் இடைப்பட்ட காலத்தில் நான் எனது காட்சிகளைப் படமாக்கி, ஈரானுக்கு வெளியே அதைக் கடத்தினேன். நிதிப் பிரச்சினைகளின் காரணமாக, எனது படங்களில் இரண்டை மட்டுமே எடிட் செய்ய முடிந்தது. அதில் ஒன்று, க்ளோஸ் அப், லாங் ஷாட், மற்றொன்று ஷாம்லூ, பொயட் ஆ*ப் லிபர்ட்டி.

முதலாவது படம், கியரோஸ்டமி தயாரித்த க்ளோஸ் அப் என்ற நாடக-ஆவணப்படத்தின் பிரதான பாத்திரமாக இருந்த ஹோசெய்ன் சாப்ஜியன் பற்றியது. பிந்தையது, ஒரு குடும்பத்திடம், தன்னை மக்மல்ப•ப் ஆகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற, அவரைப் போலவே உருவச் சாயல் கொண்ட ஒரு இளைஞனின் கதை. அந்தக் குடும்பம், அவன்தான் பிரபல மக்மல்ப•ப் என்று நினைத்து, அவனது கதையை வாங்கிக்கொண்டதுடன் அவனது திரைப்படம் ஒன்றுக்கு நிதி ஆதரவு செய்ய முயன்றது. அவன் அந்தக் குடும்பத்துடன் நான்கு நாட்கள் தங்கியிருந்ததுடன் இறுதியில், அவன் செய்கின்ற அனைத்துமே ஏமாற்று வேலை என்பதை அக்குடும்பத்தினர் உணருகின்றனர். அவர்கள் அவனைக் கைதாக வைக்கின்றனர். கியரோஸ்டமியின் படத்திற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகள் கழித்து நான் சாப்ஜியனை சந்திக்கச் சென்றேன். அவர் சினிமாவை நேசிக்கிறார். அவரது மனைவியும் குழந்தைகளும் அவரிடத்தில் வெறுப்பு கொள்வதுடன் இறுதியில் அவரைப் பிரிந்து செல்கின்றனர். இன்றைக்கு அவர் டெஹ்ரானின் புறப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். திரைப்படத்தின் மீதான தனது நேசம் துயரைத் தவிர வேறெதையும் விளைவிக்கவில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். எனது படத்தில் அவர் சொல்கிறார்: ‘நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு சமுதாயத்தில் என்னைப் போன்றவர்கள் அழிந்து போகிறார்கள். ஒருபோதுமே நாம் நம்மை முன்வைக்க முடியவில்லை. இரண்டு வகையான மரணங்கள் உண்டு. ஒன்று பிரேதமாகக் கிடத்தப்பட்டிருப்பது, மற்றது நடமாடிக் கொண்டிருப்பது. நாமெல்லாம் நடைபிணம்தான்ம்’

ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் இது போன்ற கதைகளையும், இன்னும் மோசமான கதைகளையும் நாம் காண முடியும். மேலும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு நான் முடித்துக் கொள்கிறேன். மேற்கு நாடுகளுக்குக் குடிப்பெயர்ந்த பெற்றோர்களின் வாரிசுகளுக்கும்… இப்போதும் இஸ்லாத்தின் பிறப்பிடத்தில் வாழ்கின்றவர்களுக்குமான . . . இஸ்லாமியப் பிரிவினர்களுக்கிடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. பிந்தையவர்கள் அதிகமும் விமர்சனப் பார்வை கொண்டிருக்கின்றனர்; அதற்குக் காரணம் அவர்களின் அடையாளத்திற்கு மதம் தீர்மானகரமானதல்ல. அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது சொல்லாமலே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விஷயங்கள் மாறுபட்டு இருக்கின்றன. மற்ற அனைவரின் செலவில், அதிகாரப்பூர்வமான ஒரு பன்முகப் பண்பாடு, வேறுபாட்டை அழுத்தமாக ஆக்கியிருக்கிறது. அதன் எழுச்சி, முற்போக்கு அரசியலின் ஒரு வீழ்ச்சியுடன் அப்படியே தொடர்புடையதாகிறது. ஏற்றத் தாழ்வை விட வேற்றுமையைப் போல தோன்றக் கூடிய- இடக்கரடக்கலாக, ‘கலாச்சாரம்’ மற்றும் ‘மதம்’ என்பதாக, மென்மையான மாற்றுச் சொற்களால் குறிப்பிடப்படுகின்ற சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மைதான் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சமூகத்தின் மையப் பிரச்சனையாக இன்றைக்கு இருக்கிறது. (•ப்ரான்ஸில்) மக்ரெப்பிலிருந்து வந்த, (ஜெர்மனியில்) அனடோலியாவிலிருந்து வந்த, (பிரிட்டனில்) பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்த, (ஐக்கிய அமெரிக்காவில்) எல்லா இடங்களிலிருந்தும் வந்த மற்றும் ஸ்கேண்டிநேவியாவிற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெற்காசியாவிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்களிடம் நான் பேசினேன். பலரும் உங்களைப் போல இருப்பது ஏன் என்பதாக எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். நான் மிகவும் நன்றாக அறிந்த, உடலுரம் மிக்க, சுறுசுறுப்பாயும் உள்ள கஷ்மீர் மற்றும் பஞ்சாப் விவசாயிகளை விட மிகவும் மதம் சார்ந்தவர்களாக, கடுமையாக அதைக் கடைப்பிடிப்போராக அவர்கள் ஆகியிருக்கின்றனர். பிரிட்டன் பிரதமர், ஓரிறைக் கோட்பாட்டில் மாபெரும் நம்பிக்கைக் கொண்டவர். அமெரிக்க அதிபர், தனது ஒவ்வொரு உரையையும் ‘கடவுள் அமெரிக்காவைக் காப்பாற்றட்டும்’ என நிறைவு செய்கிறார். ஒசாமாவோ, ஒவ்வொரு தொலைக்காட்சிப் பேட்டியின் தொடக்கத்திலும் இறுதியிலும் அல்லாவைப் போற்றுகிறார். அறிவொளியின் விழுமியங்கள் பலவற்றிலும் ஈடுபட்டிருக்கின்ற உரிமை எனக்கிருப்பதைப் போலவே, அவர்கள் மூவருக்கும் அவ்வாறு செய்வதற்கு உரிமை இருக்கிறது. அறிவொளி, இரண்டு காரணங்களுக்காக மதங்களை -முதன்மையாகக் கிறித்துவத்தைத்- தாக்கியது. ஒன்று, அது கருத்தியல் பிரமைகளின் ஒரு தொகுப்பாக இருந்தது. இரண்டாவதாக, நிறுவன வகை ஒடுக்குமுறைக்கான ஒரு அமைப்பாக, தண்டனையளிப்பதற்கான அளவிலா அதிகாரம் பெற்றதாயும் சகிப்புத்தன்மையற்றதாயும் இருந்தது. அப்படியானால், பிறகு நான் ஏன் மதத்தை விமர்சிக்காமல் இருக்கவேண்டும்?

இவ்விரு மாண்புகளையும் நாம் ஏன் இன்றைக்கு ஒழித்திட வேண்டும்? ஹோல்பாக் மற்றும் கிப்பானின் காலத்திலிருந்து மதங்கள் வெறும் ஒரு மாயைக்கும் குறைந்ததாக ஆகிவிட்டதென யார் கற்பனை செய்வார்? இன வழி உறவையோ அல்லது சிறப்பு வேண்டுதலையோ நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஒவ்வோர் ஆண்டும் பௌதீகவியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்போது ஒரேயொரு இஸ்லாமியப் பெயர் கூட ஒருபோதுமே இல்லாதது ஏன் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஊக்கம் ஆகியன இஸ்லாமிய மரபணுக்களில் இல்லாதிருக்கின்றனவா? கடந்த காலத்திலும் அவை இருந்திருக்கவில்லை. இந்தப் பிண விரைப்பு எதை விவரிக்கிறது?

வேடிக்கையான சோகம்: பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்ற ஒரேயொரு இஸ்லாமியர் எனக்குத் தெரிந்த ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பாகிஸ்தானியக் குடிமகன், பேராசிரியர் அப்துஸ் சலாம். அனைத்துக்கும் பிறகு, அவர் அஹமதி பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் பிரிவு இஸ்லாமியர் எனும் தகுதி அளிக்கப்படாத ஒரு பிரிவாகும். பரிசு பெற்றபோது அவர் ஒரு இஸ்லாமியர், சில ஆண்டுகள் கழித்து, அவர் இஸ்லாமியர் அல்ல என்பதாக சட்டத்தினால் அவருக்குச் சொல்லப்பட்டது. வருத்தத்துடன் அவர் நகைச் சுவையாகச் சொல்வதுண்டு, பாகிஸ்தானில் நான் இஸ்லாமியன் இல்லை என்கிற போதிலும், இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இப்போதும் நான் இஸ்லாமியன்தான் என்பார் அவர்.

நீங்கள் என்னை தவறாகப் புரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. மதம் குறித்த எனது வெறுப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாமிய மதத்துடன் மட்டும் கட்டுப்பட்டதில்லை. அன்றியும், இந்தப் புத்தகம் குறித்துக் காட்டுவதைப் போல, உலகை முன்னேற்றுவதில் மதங்களின் சித்தாந்தங்கள் கடந்த காலத்தில் ஆற்றியுள்ள பங்கினை நான் புறக்கணிக்கவுமில்லை. கிறித்தவம் குறித்த -புரோடஸ்டண்ட் சீரமைப்பு மற்றும் கத்தோலிக்க சீரமைப்பு எதிர்ப்பு ஆகிய- இரு போட்டி விளக்கங்களுக்கிடையிலான சித்தாந்த மோதல்கள் ஐரோப்பாவில் மாபெரும் எரிமலை வெடித்தது போன்ற நிலைக்குக் கொண்டு சென்றது. உள்நாட்டுப் போருக்கும், அதைத் தொடர்ந்து புரட்சிக்கும் இட்டுச்சென்ற இறையியல் வெறியினால் உந்தப்பட்ட அறிஞர்களுக்கிடையிலான கத்தி போன்ற கூர்மையான விவாதங்களின் ஒரு உதாரணம் இதோ: ஸ்பானிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பதினாறாம் நூற்றாண்டிலான டச் எழுச்சி, பாவமன்னிப்புத் திருத்தத்தின் பெயரால் புனித உருக்களின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலினால் தூண்டிவிடப்பட்டது. புதியதொரு வேண்டுதல் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது, பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தூய்மைவாதப் புரட்சிக்கான காரணங்களில் ஒன்றாகும். கத்தோலிக்க மதத்தைச் சகித்துக்கொள்ள மறுத்தது, 1688 இல் அதை அடுத்து வந்தவரைத் தூண்டிவிட்டது. அறிவொளிப் பெருக்கு நின்று விடவில்லை; அத்துடன் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அறிவொளியின் கருத்துகள் புரட்சிகர •ப்ரான்ஸ்-ன் உலைகளுக்குத் தீமுட்டியது. ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தின் சர்ச்சும் வாடிகனும் தற்போது இணைந்துகொண்டன. ஆனால், இறையாண்மை மற்றும் குடியாட்சியின் பிரபலமான கருத்துகள் எளிதில் ஓரங்கட்ட முடியாதபடி மிக வலிமையாக இருந்தன.

உங்களின் வினா கிட்டத்தட்ட என் காதில் விழுகிறது. இவையனைத்துக்கும் எங்களிடம் என்ன வேலை? ஒரு மாபெரும் விஷயத்தைச் செய்யவேண்டியிருக்கிறது எனது நண்பர்களே. மேற்கு ஐரோப்பா இறையியல் வெறியினால் எரிக்கப்பட்டது, அவை இப்போது மாற்றிவிடப்பட்டுள்ளது. புதுமை தற்போது தொடுவானில் இருந்தது. ஓட்டோமான் அரசாட்சியின் பண்பாடும் பொருளாதாரமும் ஒருபோதும் மீண்டும் ஏற்படுத்த முடியாத ஒரு இயங்குதலாக இது உள்ளது. சுன்னி-ஷியா பிரிவினை வெகுவிரைவிலேயே வந்துவிட்டதுடன் போட்டி நம்பிக்கைகளில் உறைந்திருக்கிறது. இந்நேரத்தில் எதிர்ப்புகள், இஸ்லாத்திலிருந்து முழுமையாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. தனது மத அறிஞர்களால் வழிகாட்டப்பட்ட சுல்தான், உதிர்ந்து இறந்து போகவிருக்கிற அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இதுதான் நிலவரமெனில், இன்றைக்கு எவ்வளவு அதிக உண்மையாக இது இருக்கும். ஒருவேளை, ஈரானைப்போல, இஸ்லாமியர்கள் இதைத் தெரிந்துகொள்ள ஒரே வழி தங்களின் சொந்த நடைமுறைகளின் மூலம்தான் என்றிருக்கலாம்.

நவீன-தாராளமயத்தின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு வேறெந்த மாற்றும் இல்லை என்பது மத எழுச்சியைப் பகுதியளவு விளக்குகிறது. உலக நாடுகள் நுழைவதற்கு இஸ்லாமிய அரசாங்கங்கள் தங்களின் நாடுகளை திறந்து வைக்கின்ற வரை சமூக-அரசியல் தளத்தில் தாங்கள் செய்ய விரும்புவதைச் செய்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அமெரிக்கப் பேரரசு இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. அதைப்போலவே அது மீண்டும் செய்யக்கூடும். இங்கேதான் சவால் இருக்கின்றது. அடிப்படைவாதிகளின் பயித்தியக்காரத்தனமான பழமைவாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் துடைத்தழிக்கின்ற ஒரு இஸ்லாமியச் சீர்திருத்தத்திற்கான அத்தியாவசியத் தேவை நமக்கிருக்கிறது. ஆனால் அதற்கும் அதிகமாக மேற்கில் இருந்து தற்போது அளிக்கப்படுவதைக் காட்டிலும் இன்னமும் முன்னேறியதாகத் தெரிகிற புதிய கருத்துகளுக்கு இஸ்லாமிய உலகைத் திறந்துவிடுகின்ற அத்தியாவசியத் தேவை நமக்கிருக்கிறது. அரசையும் மசூதியையும் உறுதியாகப் பிரிக்கின்ற ஒரு தேவையையும்; மத குருக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதையும்; இஸ்லாமியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த சொத்தாக இருக்கின்ற நூல்களுக்கும் முழுமையாக விளக்கமளிக்கின்ற தங்களின் உரிமையை இஸ்லாமிய அறிவுஜீவிகள் உறுதிப்படுத்திக்கொள்வதையும்; தளையின்றி, பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற சுதந்திரத்தையும் கற்பனை செய்வதற்கான சுதந்திரத்தையும் அவசியப்படுத்தும். இந்த வழியில் நாம் நகரவில்லையெனில், இன்னும் வசதி-வாய்ப்புகள் நிறைந்த, மனித மாண்புகள் நிறைந்த எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையின்றி, நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் செல்லுகிறபடியாகப் பழைய சண்டைகளிலேயே உழன்றுகொண்டிருக்க விதிக்கப்பட்டுவிடுவோம். இது ஏற்கமுடியாத ஒரு பார்வையாகும்.

எனது எழுதுகோலை எனது சிந்தனையின் போக்கில் விட்டு, மதத்துடன் முரண்பட்ட எனது கருத்துகளை நெடுநேரம் போதித்துள்ளேன். நான் மாறுவேனா என்பதில் எனக்கு ஐயம்தான், ஆனால் நீங்கள் மாறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

(நன்றி: The Clash of Fundamentalisms – Crusades, Jihads and Modernity, Tariq Ali, Verso, 2002.)

Series Navigation

author

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

Similar Posts