‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


II
மீள்வாசிப்புகள், மீள் கண்டுபிடிப்புகள்

காந்தி உயிருடன் இருந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், பலரால் வெகுவாக பாராட்டப்பட்டார்.மறைவிற்குப் பின் அவரது கருத்துகள் தொடர்ந்து ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டுவருகின்றன. மீள் வாசிப்புகள்/மீள் கண்டுபிடிப்புகள் என்று கூறப்படுபவதற்றை இதன் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.அதாவது காந்தி சில பத்தாண்டுகள் மறக்கப்பட்டு, யாராலும் பேசப்பாடாமல், பின் சிலரால, குறிப்பாக சில வெள்ளைக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டார் என்ற நிலை இல்லை. 1948க்குப் பின் காந்தி/காந்தியம் பற்றி தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளது.

இன்னும் சொல்வதென்றால் இந்த வாசிப்புகளை எப்படி புரிந்து கொள்வது என்பதையும் ஆராய வேண்டும்.காந்தியை ஒருவர் பின் நவீனத்துவ நோக்கில் இன்று அணுகினால் நாளை வேறொருவர் வேறொரு கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது தத்துவ பிண்ணயில் அணுகலாம்.காந்தி ஒரு பின் நவீனத்துவர் இன்று எழுதப்பட்டால் நாளை காந்தி மீது வேறொரு முத்திரை நாளை குத்தப்படலாம்.

என்னைப் பொருத்தவரை இந்த முத்திரைகள் முக்கியமன்று, என்ன கூறப்படுகிறது, அது எந்த அளவு சரி/ஏற்கக்கூடியது என்பதே முக்கியம்.ஆகவே இன்று ஒருவர் காந்தி ஒரு பின் நவீனத்துவவாதி என்று எழுதினால், அதற்காவே,அதாவது பின் நவீனத்துவாதி காந்தி என்பதற்காகவே அல்லது அதை எழுதியவர் அமெரிக்கர் என்பதற்காக awesome என்று கூறி வியக்கமாட்டேன். ஏனென்றால் அந்த முத்திரை குத்தாமல் காந்தியின் சிந்தனைகளையும், பின் நவீனத்துவ சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவரின் கருத்துக்களையும் சில வாக்கியங்களில் ஒப்பிட்டு எழுதி படிக்கிறவர்களின் சிந்தனையை தூண்டும் கட்டுரையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாசித்துள்ளேன். ஜெயமோகன் தன்னுடைய கட்டுரைகளில் POSTMODERN GANDHI AND OTHER ESSAYS — Gandhi in the World and at Home: Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph; Oxford University Press, என்ற நூலினை குறிப்பிடுகிறார். ஜோதிர்மய சர்மா எழுதியுள்ள அதற்கு எழுதியுள்ள மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.
The volume rests, therefore, on a double burden, namely, postmodernism as a desirable way of understanding the world, and establishing Gandhi as a prime postmodernist. The evidence for the latter comes in the form of reading Hind Swaraj as an anti-modern text, an exchange of letters between Gandhi and Nehru in 1945 regarding economic issues, and the idea that Gandhi subverted the `ritual order of upper caste Hinduism’. While there is little by way of fresh insights into the reading of Hind Swaraj itself, the assumptions inherent in the essay are problematic.
Gandhi as postmodern thinker -JYOTIRMAYA SHARMA-The Hindu-Tuesday, Jul 04, 2006

ஜோதிர்மயி சர்மா மட்டுமே இத்தகைய கேள்விகளை எழுப்புகிறார் என்றில்லை.காந்தியின் சிந்தனைகளில் பின் நவீனத்துவ கூறுகளைக் காண்பதற்கும், காந்தியை பின் நவீனத்துவர் என்பதற்கும் உள்ள வேறுபாடு முக்கியம்.2006ல் வெளியான நூலை 2009ல் ஜெயமோகன் அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கலாம் ,ஆனால் 2006ல் வெளியான நூல் அப்போதே கவனம் பெற்று விவாதிக்கப்பட்டது. பலர் அதைப் பற்றி எழுதியுள்ளனர்.

ஜெயமோகன் இந்த விவாதங்களையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை.இத்தகைய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன, நான் இதில் இதை அதாவது காந்தி பின் நவீனத்துவர் என்பதை இன்ன காரணங்களுக்காக ஏற்கிறேன் என்று விரிவாக தன் தரப்பினை எழுதவில்லை .மாறாக அமெரிக்க பேராசிரியர்கள் சொல்கிறார்கள் என்ற அளவில் எழுதுகிறார். காந்தியை பின் நவீனத்துவர் என்று சுட்டும் போதும், காந்தியின் சிந்தனைகளை பின் நவீனத்துவ சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது பல கேள்விகள் எழும். அத்தகைய ஆய்வுக் கேள்விகள் எதுவும் அவரிடம் இருப்பது போல் தெரியவில்லை.

காந்தியத்தைக் கேள்விக்குட்படுத்தவும் பின் நவீனத்துவத சிந்தனைகளைப் பயன்படுத்தலாம். நவீனத்துவம் குறித்த பின் நவீனத்துவ விமர்சனங்களை காந்தியின் சிந்தனைகளுடன் ஒப்பிடலாம்.பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்டு காந்தியின் கருத்துக்களையும் விமர்சிக்க முடியும்.

மீள் கண்டுபிடிப்புகள்/மீள் வாசிப்புகள் என்று அழைக்கப்படுவற்றில் கூட யார் எதை எப்போது எழுதினார்(கள்), அதன்/அவற்றின் தாக்கம்/முக்கியத்துவம் என்ன என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். படிக்கின்ற நூல்கள்/கட்டுரைகளின் அடிப்படையில் இன்று இந்தக் கருத்து புதிது ஆகவே சரியானது, நாளை அந்த கருத்து புதிது ஆகவே அதுவே சரியானது என்று தாவிக் கொண்டிருப்பது எனது அணுகுமுறையல்ல.காந்தி/காந்தியதிற்கும் இந்த மீள் கண்டுபிடிப்புகள்/மீள் வாசிப்புகளுக்கும் எனது அணுகுமுறை இதுதான்.

சுந்தர ராமசாமிக்கும், தனக்கும் காந்தி குறித்து இருந்த கருத்துக்களை, நடந்த விவாதங்களை ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் படித்தவற்றில் உள்ளவற்றை, பிறர் கூறுவதை எப்படி அணுகுவது, பலவேறு கருத்துகள் காந்தி/காந்தியம் குறித்து முன் வைக்கப்படும் போது அவற்றை எப்படி புரிந்து கொள்வது, அதிலிருந்து ஒரு கண்ணோட்டத்தினை உருவாக்கிக் கொள்வது என்பது குறித்த ஆய்வு முறையை இருவரும் கைக் கொண்டது போல் தெரியவில்லை. உதாரணமாகச் சொல்வதென்றால் ஒருவர் காந்தி கூறிய கருத்தின் அடிப்படையில் ஒர் ஆய்வினை மேற்கொண்டு சிலவற்றை எழுதுகிறார். அதற்கு மறுப்பும், விமர்சனமும் வருகிறது. அவர் கூறுவதையும், விமர்சனத்தையும் படித்து அதிலிருந்து எப்படி ஒரு புரிதலைப் பெறுவது என்பதை இருவரும் யோசித்தது போல் தெரியவில்லை. அத்தகைய விமர்சனம் இருப்பது என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு தரப்பு கருத்தினைக் கொண்டே சில முடிபுகளுக்கு இருவரும் வந்தனர் என்று யூகிக்க இடமுண்டு.

ஜோதிர்மய சர்மா கூறுகிறார்
Gandhi becomes all things to all people. His interpreters have seen him variously as a traditionalist, modernist, feminist, socialist, communist, environmentalist, and so on.

காந்தியைப் பற்றிய இந்தக் கட்டுரை வேறொரு கோணத்தில் காந்தி, நவீனத்துவம்,பின் நவீனத்துவம் குறித்த கேள்விகளை அணுகுகிறது.(3). இப்படி பல பார்வைகள் இருக்கும் போது
அவற்றை மதிப்பிட்டு எதை, எந்த அளவு ஏற்க முடியும்/முடியாது என்று எப்படி தீர்மானிப்பது? constructive post-modernsim vs.deconstructive post-modernism
என்ற பாகுபாடு கொண்டு காந்தியை வேறொரு கோணத்தில் அணுக முடியுமா?. இப்படி கேள்விகள் எழுகின்றன. ஜெயமோகனின் கட்டுரைகளில் அத்தகைய கேள்விகளே இல்லை. ஏனெனில் அவரால் ஆய்வு பூர்வமாக காந்தி குறித்த மதிப்பீடுகளை,ஆய்வுகளை அணுகமுடிவதில்லை.நாளை காந்தி நவீனத்துவர்தான், அவர் பின் நவீனத்துவர் அல்ல, பின் நவீனத்துவ amorality காந்தியத்திற்கு எதிரானது என்று அமெரிக்கா/ஐரோப்பாவில் இருவர் எழுதினால் ஆமாம் அதிலிலும் இருக்குது நியாயம், காந்தி பின் நவீனத்துவர் என்பதை விட நவீனத்துவர் என்பதே சரி என்றே இன்று அறிஞர்கள் கூறுகிறார்கள் என்று அவர் எழுதக்கூடும்.அதற்கு அடுத்த நாள் காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட் என்று ஐரோப்பாவிலிருந்தோ அல்லது அமெரிக்கவிலிருந்தோ யாரவது எழுதி ஒரு நூல் வந்தால் ஆமாம் காந்தி ஒரு மாபெரும் காஸ்மோபோலிடனிஸ்ட் என்று நமக்கு அவர் அறிவிக்கக் கூடும்.

III

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு

பல சமயங்களில் காந்தி எழுதியவை அப்போது எழுந்த கேள்விகள் ,சர்ச்சைகளுக்கான பதில்கள் அல்லது நடைமுறையில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். மேலும் அவரது முக்கியமான நூலான ஹிந்த் ஸ்வராஜ் சிலவற்றை முன் வைத்தாலும், கோட்பாடு ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக அதையெல்லாம் வளர்த்தெடுத்து பின்னர விரிவாக அவர் எழுதவில்லை. காந்தியம் என்றால் என்ன- அது கருத்தியலா, வாழ் நெறியா, இரண்டும் கலந்த, ஒன்றொடு ஒன்று முரண்படாகக்கூடாத ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. பாலி(யஸ்டர்)கதர் கதரா என்பதிலிருந்து அகிம்சை இயக்கம் என்பதை எப்படி வரையரை செய்வது என்று பல கேள்விகள் இருக்கின்றன.

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்று 2009ல் எழுதலாம், யாராவது 1979ல் எழுதியிருக்கக் கூடும், யாராவது 2020ல் எழுதக்கூடும்.பொருத்தப்பாடு என்று பார்த்தால் எதனுடன், எந்த விதத்தில், எப்படி என்று துவங்கி பலவற்றைப் பேச வேண்டும். காந்தி/காந்தியம் எந்த அளவிற்கு 1948ல் தேவைப்பட்டாரோ அதை விட அதிகமாகவே அன்று அம்பேத்கரும்,நேருவும் தேவைப்பட்டனர் .புதிதாக சுதந்திரமடைந்த ஒரு தேசத்திற்கு அவர்கள் இருவரும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இந்தியா என்கிற குடியரசை உருவாக்கியதில் அவர்கள் வகித்த பங்கு மகத்தானது.அதற்கு அதாவது ஒரு குடியரசை உருவாக்க, அரசியல் சட்டத்தினை உருவாக்க காந்தியம் மட்டும் போதாது.1948ல் காந்தியும் தேவைப்பட்டார், காந்தி/காந்தியம் மட்டுமே போதும் என்ற நிலை இருக்கவில்லை.

இன்றைய உலகில் காந்தியம் தேவை அல்லது காந்தியத்தின் பொருத்தப்பாடு என்று பேசும் போது காந்திக்குப் பின் காந்தியம் குறித்த புரிதல்கள்/சிந்தனைகளையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். சமயம் காந்தியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதில் கிடைத்த அனுபவங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஷுமாக்கர் இடை நிலை தொழில் நுட்பம் (intermediate technology) என்பதை முன்வைத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில் கிடைத்த படிப்பினைகளையும் விவாதிக்க வேண்டும்.

காந்தி vs அம்பேத்கர், காந்தி vs நேரு,காந்தியம் vs நவீனத்துவம் என்று வெறும் எதிர்-எதிராக பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. நேருவின் சில கோட்பாடுகள் 1960களில் தேவையாக இருந்திருக்கலாம், இன்று அவை தேவையற்றவை என்று கருத இடமுண்டு. இதே போல் 1947ல் அம்பேத்கர் முன் வைத்த சில யோசனைகள் (உ-ம் அரசு அனைத்து விவசாய நிலங்களையும் கையக்கப்படுத்தல், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயிரிடுவோராக அரசு அதை குத்தகைக்கு விடுவது) அன்றைக்கும் சரியான தீர்வுகள்தனா என்ற கேள்வி எழுகிறது.இன்றைக்கு அம்பேத்கரியத்தை ஆதரிப்பவர்கள் இதையெல்லாம் முழுமையாக ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். அது போல் காந்தியின் சிந்தனைகளை மதிப்பவர்கள் இன்றைக்கு காந்தியம் என்ற பெயரில் முன் வைக்கப்படுவது எதுவானாலும் அதை முழுமையாக ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.ஏனெனில் அன்று பொருத்தமானதாகத் தோன்றியவை இன்று அர்த்தமற்றவை என்று கருதப்படலாம். ஆனால் ஹிந்த் ஸ்வராஜ் அத்தகைய நூல் அல்ல. அதை காந்திய சிந்தனையின் ஆணி வேர் எனலாம். இருப்பினும் அதையும் விமர்சனபூர்வமாகவே அணுக வேண்டும்.

நீ காண விரும்பிய மாற்றமாக நீ இரு என்று சொன்னவர் அவர். காந்தியம் என்பதை கோட்பாடாக கருதி பக்கம் பக்கமாக எழுதலாம். அதை நடைமுறைப்படுத்துவதில், நம் தனிப்பட்ட வாழ்வில், பொது வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள சவால்கள் அதிகம். பிறர் தேவைகளுக்காக உன் ஆசைகளை குறைத்துக் கொள் என்று சொல்லப்படும் போது யாருடையது தேவை, யாருடையது ஆசை என்று எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வி வருகிறது. உதாரணமாக எனக்கு ஒவியங்கள், ஒவியக்கலை மீது விருப்பம் அதிகம். ஒவியங்களை வாங்க,சேகரிக்க, அதை என் வீட்டில் வைத்து பார்த்து ரசிக்க எனக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக சமரசங்கள் செய்து கொண்டாவது சிலவற்றை செய்வேன் அதன் மூலம் பணம் சம்பாதிப்பேன் என்று ஒருவர் சொன்னால் அதற்கு, காந்தியவாதி, அதை ஏன் தனிச்சொத்தாக உன் வீட்டில் வைத்து பார்க்க என்று சொல்கிறாய், ஒரு பொதுச்சொத்தாக ஒரு ஒவிய் கண்காட்சியகம் அமைக்க பிறருடன் சேர்ந்து நீ பணம் திரட்டலாமே, அதற்காக உழைக்கலாமே அதுவே சரியான காந்திய அணுகு முறை என்று கூறக் கூடும். ஒவியம் என்பதற்கு பதிலாக ஆய்விற்கான நூல்களை திரட்டுவது, உலகை, மக்களைப் புரிந்து கொள்ள பயணங்கள் மேற்கொள்வது என்று வேறு சிலவற்றை முன்னிறுத்தினால் கிட்டதட்ட அதையொத்த பதில்கள் கிடைக்கலாம்.ஏன் ஒரு பொது நூலகம் நிறுவ பிறருடன் சேர்ந்து உழைக்கக்கூடாது, பயணம் மேற்கொள்ளவதையும் சிக்கனமாக செய்ய முடியுமே, அந்த அளவு பணம் சேர்த்தால் போதுமே என்றெல்லாம் பதில் வரலாம்.விரிந்தொடும் கங்கையில் குளிக்கும் போது எனக்குத் தேவை அல்லது இதில் எனக்கு உரியது இத்தனை சொம்பு நீர்தான்,அதைக் கொண்டே நீராடுவேன் என்றவர் காந்தி. வாழ்வில் சொல்லிற்கும், செயலிற்குமான இடைவெளியை தன்னால் இயன்ற அளவு குறைக்க முயன்றவர் அவர்.

எனவே காந்தியத்தை வெறும் தத்துவமாக குறைப்பது எளிது. அதை செயல்முறை (praxis) ஆக மாற்றி அதில் தொடர்ந்து முயல்வது, தன் வாழ்வையே அதற்கான சாதகமாக, பரிசோதனையாகக் கொள்வது எளிதன்று.ஆசைகளை சுருக்கி, தேவைகளையும் குறைத்துக் கொள்வதும் கடினம்; அதெல்லாம் தேவையில்லை, காந்தியத்தை பற்றி பேசினால், எழுதினால் போதும் என்றும் சிலர் கருதலாம் .அது அவர்கள் தெரிவு. காந்தி ஒன்றை சொல்லியிருக்கிறார். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“I will give you a talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test. Recall the face of the poorest and the weakest man [woman] whom you may have seen, and ask yourself, if the step you contemplate is going to be of any use to him [her]. Will he [she] gain anything by it? Will it restore him [her] to a control over his [her] own life and destiny? In other words, will it lead to swaraj [freedom] for the hungry and spiritually starving millions?
Then you will find your doubts and your self melt away.”

http://www.mkgandhi.org/gquots1.htm

ஆயிரம் பக்கங்கள் காந்தி/காந்தியம் குறித்து எழுதுவதை விட இதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் கடினம்.என்னைப் பொருத்தவரை காந்தியம், காந்தி முன்வைத்த சில கோட்பாடுகள்/கருத்துக்கள் சிலவற்றிற்கு பொருந்தும், சிலவற்றில் முடிவு செய்ய அல்லது மதிப்பீடு செய்ய அவை உதவும். அவை எங்கெல்லாம் உதவும், எப்படியெல்லாம் பயன்படும் என்பதில் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த முயலலாம்.உதாரணமாக ஒரு தொழில் நுட்பத்தினை மதிப்பிடுவதில் காந்தியம் உதவக்கூடும், அதை மதிப்பிட அது ஒன்றே ஒரே அளவுகோல் என்று இல்லாத போதும் கூட.சில போராட்டங்களுக்கு அகிம்சை வழி,சத்தியாக்கிரகம் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.அதை அனைத்து சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்குமான பொதுவான விதியாக நான் கருத மாட்டேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சே காந்தியாக மாறாதது அவர் தவறு, காந்தியத்தைக் கடைப்பிடித்திருந்தால் அப்படி செத்திருக்க மாட்டார் என்று எழுதமாட்டேன், சே, கிராம்சியை அல்லது காந்தியை நூறு முறை படிக்க் வேண்டும் என்று ‘தண்டனை’ விதிக்க மாட்டேன்.

இவான் இலிச் உடலில் கட்டி ஏற்பட்ட போது நவீன மருத்துவ முறை சிகிச்சையை நாடவில்லை. வலியைப் பொறுத்துக் கொண்டார். அநவீன மருத்துவ சிகிச்சை முறையை நாடினார். பாரம்பரிய மருத்துவர் ஒருவர் கட்டிக்குத் தேவையான சிசிச்சை பாரம்பரிய மருத்துவத்தில் இல்லை அல்லது அது போதுமானதாக/பொருத்தமானதாக இல்லை என்று கருதி நவீன மருத்துவ சிகிச்சையை நாடக் கூடும். நவீன மருத்துவ முறை குறித்த இலிச்சின் விமர்சனங்களிலிருந்து சிலவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும், அவற்றின் போதாமைகள், வரையரைகள் குறித்த புரிதலுடன். ஆனால் இலிச் எழுதியதன் அடிப்படையில் அல்லது அதற்கு ஒத்திசைவாக ஒரு நாட்டின் மருத்துவக் கொள்கையை, மருத்துவ ஆராய்ச்சிக்கான கொள்கையை உருவாக்க முடியாது.அந்த முயற்சியில் இலிச்சின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளலாம். இலக்கிற்கும் அதை அடைய உதவும் முறைகளுக்கும் உள்ள் உறவை,அதில் உள்ள அறம் சார் கேள்விகளை கருத்தில் கொள் என்று காந்தியம் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதுதான். அனைத்து அறம்சார் கேள்விகளுக்கும் காந்தியம் மூலம் தீர்வு காண முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

பாரம்பரிய வேளாண் முறைகளும் தேவை, உயிரியல் தொழில் நுட்பமும் தேவை என்று சிலர் கருதலாம். சிலர் பாரம்பரிய வேளாண்மையும், வேளாண்மையில் உயிரியியல் தொழில் நுட்பமும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவை என்று கருதலாம். சிலர் பாரம்பரிய /இயற்கை வேளாண்மை மட்டும் போதும் என்று கருதலாம். சிலர் உயிரியல் தொழில் நுட்பத்தை பொருத்தமான தொழில்னுட்பமாக (appropriate technology) மாற்ற முடியும் அல்லது அது அத்தகைய தொழில் நுட்பம் என்று கருதலாம். காந்தியம்/காந்தியக் கண்ணோட்டம் என்ற பெயரில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மை மட்டும் போதும், நவீன அறிவியல் தொழில் நுட்பத்திற்கு வேளாண்மையில் இடமிருக்க வேண்டியதில்லை என்பது ஒரு கண்ணோட்டம்.உயிரியல் தொழில்னுட்பத்தையும் தேவையான போது தேவையான வகையில் மட்டும் பயன்படுத்தலாம், அது காந்தியத்திற்கு இசைவானது என்று இன்னொரு கண்ணோட்டம் இருந்தால் இவற்றைஎப்படி காந்திய ரீதியாக மதிப்பிடுவது?. காந்திய விழுமியங்களின் அடிப்படையில் தொழில் நுட்பங்களை மதிப்பிடுவது எப்படி?. காந்திய அணுகுமுறையில் நவீன அறிவியல்- தொழில் நுட்பத்தினை எப்படி மதிப்பிடுவது?.

இவற்றிற்கு விடை காண்பதுதான் சவால். காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை இவற்றின் மூலம் பரிசோதிக்க முடியும் என்றால் எப்படி முடியும் என்று பார்க்க வேண்டும். இதை விடுத்து நவீன அறிவியல் தொழில் நுட்பம் காந்தியத்திற்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டையடியாக எழுதுவது எளிது. அது காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை அறிய உதவாது. ஏனெனில் அங்கு விவாதமே எழ வாய்ப்பில்லை. நிராகரிப்பது எளிது, அதுவும் கோட்பாட்டு ரீதியாக. நடைமுறையில் ?.

காந்தியம், நவீன விஞ்ஞானம்,தொழில் நுட்பம் குறித்து ஜெயமோகன் எழுதியவை அவர் ஏற்கனவே எழுதியவற்றின் மறு சுழற்சி செய்யப்பட்டவைகளாக உள்ளன.சில பெயர்கள்,சராம்சவாதம் போன்றவைகளைக் கொண்டு ஒரே கருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார். அவருக்கு இதில் தெளிவான புரிதல் இல்லை. தன் எழுத்தில் உள்ள முரண்பாடு கூடப் புரிவதில்லை.

காந்தியம் குறித்தும் சொல்லும் போது ஒரு கோட்பாடாக சிலவற்றை சொல்லலாம்,சில விழுமியங்களை முன் வைக்கலாம், நடைமுறை என்று வரும் போதோ அல்லது ஒரு கொள்கையை வகுப்பது என்று வரும் போதோ எழும் கேள்விகள், சவால்கள் வேறு.ஒற்றைத் தீர்வும், ஒற்றைக் கண்ணோட்டமும் பல சமயங்களில் சரியான தீர்வுகளை காண வழி வகுக்காது. சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்கு, இன்றைய உலகின் முன் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காந்தியம் அல்லது மட்டுமே போதும் என்று சொல்ல முடியாது.

காந்தியம்/காந்தியர்கள் முன்னிறுத்தும் இடைநிலைதொழில் நுட்பம் எங்கு பொருந்தும், எப்படிப் பொருந்தும் என்பதை விவாதிக்க வேண்டும். இடை நிலை தொழில் நுட்பம் என்று வரும் போது இடை நிலை என்று எதைக் குறிக்கிறோம்,எதை இடை நிலை என்று எப்படி எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறோம் என்று விவாதிப்பது தவிர்க்க இயலாதது. இடைநிலைத் தொழில் நுட்பத்தினை உருவாக்க இடை நிலை தொழில் நுட்பம்,எளிமையான கைத் தொழில்கள் மட்டுமே போதுமா என்ற் கேள்வியும் எழுகிறது. அன்று காந்தி கதரை முன் வைத்தார்.

இன்று கதர் வேறொரு பரிமாணத்தினை எட்டியுள்ளது. அதை எப்படி அணுகுவது. கதர் உடை/ஆடைகள் பாஷன் ஷோக்களில் இடம் பெறுவதை எப்படி மதிப்பிடுவது. கதரை சர்வதேச பாஷன் சந்தையில் வெற்றிகரமாக புகுத்தி, கதர் ஆடைகளுக்கான உலக சந்தையை வளர்த்து அதன் மூலம் இந்தியாவில் இத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிட்டால், காந்திய கண்ணோட்டத்தில் அதை எப்படி மதிப்பிடுவது. கதரை உலகம் ஏற்பதும், உலக சந்தையில் கதர் துணிகள்/ஆடைகள் பல லட்சக்கணக்கில் விற்கப்பட்டால் அதை காந்தியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று கொள்ள முடியுமா. அல்லது வேலை வாய்ப்பினை பெருக்க, கைத்தொழில்களை ஊக்குவிக்க இதையெல்லாம் செய்வதுதான் சரியான காந்திய அணுகுமுறை என்று கூற் முடியுமா. காந்தி முன் வைத்த சுதேசி/ஸ்வதேசி என்பதன் பொருள் என்ன?. அனைத்து உள் நாட்டுத் தயாரிப்புகளையும் சுதேசி(ய)ப் பொருட்கள் என்று அழைக்க முடியுமா?. கூட்டுறவு இயக்கம் என்பது காந்தியத்திற்கு ஏற்புடைய ஒன்று. கூட்டுறவு அமைப்பு என்பது பெரிய தொழிற்குழுமம் போல் செயல்படுவதும், தேசிய சந்தைக்கு பொருட்களை உற்பத்தி செய்வதும், சந்தைப்படுத்தி விற்க விளம்பரம் செய்வதும், மக்களின் ஆசைகளை நிறைவேற்ற புதிய பொருட்களை அறிமுகம் செய்வதும் காந்தியின் கருத்துக்களுக்கு ஏற்புடையதா?.

பொருத்தப்பாடு என்று வரும் போது அவர் கிராம சுயராஜ்யம் குறித்து எழுதியவை, கல்வி குறித்து எழுதியவை, கிராமத் தொழில்கள் குறித்து எழுதியவை, அதிகாரப் பகிர்வு என அனைத்தையும் பேச வேண்டும். காந்தி முன் வைத்த ராமராஜ்யம் என்ற கனவுலகம் உண்மையிலேயே சாத்தியமா, அது விரும்பத்தக்கதா என்பதையும் ஆராய வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு என்று வரும் போது காந்திய சிந்தனை பிரம்மாச்சாரியம் அல்லது உடல் உறவை ம/கட்டுப்படுத்தல் என்பதையே ஒரு விரும்பதக்க தீர்வாக முன் வைக்கும் என்றால் நடைமுறையில் இது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது. காந்திக்கும், மார்கரெட் சாங்கருக்குமிடையே நடந்த உரையாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுபடுத்த கருத்தடை மாத்திரைகள், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கல்,தேவையான தொழில் நுட்பங்களை கிடைக்கச் செய்தல்,குறைவான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஊக்குவித்தல் என பலவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.அதுதான் காரியவாத அணுகுமுறையாக இருக்க முடியும்.காந்தியம் இதில் எந்த அளவு உதவும்?. இன்றும் காந்திய அணுகுமுறை இதில் காந்தி அன்று சொன்னதுடன் நின்றுவிடுமா அல்லது அதன் போதாமையைப் புரிந்து கொண்டு வேறு சிலவற்றை முன்னிறுத்துமா?. அல்லது இன்றைய இந்தியாவில் மக்கள் தொகை பெரிய பிரச்சினை, அதைக் கட்டுப்படுத்த காந்தி சொன்னது மட்டும் தீர்வல்ல என்பதால் அரசு புதிய முறைகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் அவை திணிக்கப்படக் கூடாது, பெண்களின் உடல்நலத்திற்கு கேடாகக் கூடாது என்று கருதுமா. இதில் பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்தும் சிலவற்றைக் கூற முடியும், காந்தியின் நிலைப்பாட்டினை பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து விமர்சிக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் பிரச்சினை என்பதாகக் கொண்டு முன்னிறுத்தப்படும் தீர்வுகள், அறிமுகப்படுத்தப்படும் சாதனங்கள்/முறைகள் குறித்து பெண்ணிய விமர்சனமும் வைக்க முடியும். நானும் அப்படி விமர்சித்திருக்கிறேன். மேலு, இதையெல்லாம் நான் வேறொரு கோணத்திலிருந்தும் அணுகுவேன். அங்கு பின் நவீனத்துவ சிந்தனை உதவும்.

இளம் பெண்களை கவர ஆண்களுக்கு காந்தியம் எப்படி உதவும் என்று ஒருவர் எழுதினால் அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கான சான்றாக கொள்ள முடியுமா?. காந்தி இலக்குகள், அவற்றை அடையும் வழிமுறைகள், இதில் உள்ள அறம் சார் பிரச்சினைகள் குறித்து விவாதித்தவர்.சரியான இலக்கு என்றால் அதை அடைய எந்த வழிமுறையையும் மேற்கொள்ளலாம் என்று வாதிட்டவர் அல்ல.

சந்தைப்படுத்தலுக்கு உதவும் காந்தியம், நிர்வாக மேலாண்மைக்கு உதவும் காந்தியம் அல்லது காந்தியத்தைப் பயன்படுத்தி நுகர்வோரை பொருட்களை வாங்கச் செய்வது எப்படி என்றெல்லாம் எழுதப்பட்டால் ஆஹா, காந்தியத்தை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமென்றால் அதன் பொருத்தபாடு எத்தகையது என்று காந்தியத்தை அரைகுரையாக புரிந்து கொண்டவர் வியக்கலாம், அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கு சான்றாக எழுதலாம்.மாறாக இலக்கு, வழிமுறைகள் குறித்த காந்திய அணுகுமுறையை அறிந்தவர்கள் அப்படி வியக்க மாட்டார்கள்.அவர்கள் காந்தியத்தினை வெறும் கருவியாக அல்லது இன்னொரு யுக்தியாக பயன்படுத்துவத்தை கேள்விக்குட்படுத்துவார்கள்.நவீன நிர்வாக முறைகள்,ஆசைகளின் பெருக்கம், தொழிலுற்பத்தி போன்றவை தொடர்பற்றவை என்று கருத மாட்டார்கள். மாறாக நவீன பொருளாதரம், நவீன உற்பத்தி,நிர்வாக முறைகள் நுகர்வினை விரிவுபடுத்தவும், மூலவளங்களை சுரண்டவும், தேவைகளை விட ஆசைகள்க்கு முன்னுரிமை கொடுத்து, சந்தை மூலம் சமூக மதிப்பீடுகளில் பொருளாசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே விழைகின்றன என்று விமர்சிப்பார்கள். ஜெயமோகனிடம் இந்தப் புரிதல் அறவே இல்லை. இந்தப் புரிதலுடன் இந்தியர் அல்லோதாரால் எழுதப்பட்ட நூல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை போலும்.

காந்தியத்தின் போதாமைகள், பலவீனங்களையும் நாம் பேசியாக வேண்டும். ஹிந்த் ஸ்வராஜ் என்ற நூல் காந்திக்கு ஒரு லட்சிய நூலாக இருந்திருக்கலாம். ஒரு சமூகத்திற்கு/தேசத்திற்கு வழிகாட்ட அது பயன்படாது. அதன் அடிப்படையில் ஒரு சமூகம் உருவானால், காந்தியைக் குறித்து எழுதிய ஒருவரின் வார்த்தைகளை ப்யன்படுத்திச் சொன்னால் அது தார்மீக சிறையாக இருக்கும்.

யார் விமர்சித்தாலும், விமர்சிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பெரியாரியாவாதிகள்,அம்பேதக்ரியவாதிகள ஜெயமோகன் எழுதியதை விமர்சிப்பார்கள், அதை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும் என்றே தோன்றுகிறது. கடந்த 20 /25 ஆண்டுகளில் காந்தி, காந்தியம், தேசிய இயக்கம், குறித்து தலித்திய,பெரியாரிய, இடதுசாரி, பெண்ணிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவற்றையும்/விமர்சனப் பார்வைகளையும் கருத்தில் கொண்டே இன்று காந்தி/காந்தியம் குறித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும். மேலும் இன்று பலவேறு பகுதிகளில் அன்று அதாவது சுதந்திரப் போராட்ட காலத்தில் நிலவிய அரசியல் நிலைமைகள், இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் பல கிடைக்கின்றன.(3). காங்கிரஸ்மையவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்படாத இவை கவனத்திற்குரியவை. அவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது.

(1) http://www.kalachuvadu.com/issue-97/index.asp

(2) http://jamalantamil.blogspot.com/2008/04/blog-post_10.html
(3)GANDHI’S PHILOSOPHY: PREMODERN, MODERN, OR POSTMODERN?-Nick Gier (ஜெயமோகன் சமீபத்திய கட்டுரையில் இவர் எழுதிய நூலைக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கோணத்தில் அவர் காந்தியை அணுகுயிருப்பதை குறிப்பிடவில்லை)
http://www.class.uidaho.edu/ngier/gpm.htm
(4)உ-ம் Partition Politics and Achhut Identity: A Study of the Scheduled Castes Federation and Dalit Politics in U.P., 1946-48.Ramnarayan Singh Rawat

பி.கு: 1, இந்த விமர்சனம் ஒரு பூர்வாங்க விமர்சனம்தான், உதாரணத்திற்காக சிலவற்றை எழுதியுள்ளேன் பலவற்றை வேண்டுமென்றே சுட்டிக்காட்டவில்லை, விரிவாக விமர்சிக்கவில்லை. இப்போது அவற்றை எழுதினால் ஜெயமோகன் நூலில் அவைகளை கருத்தில் கொண்டு மாற்றம் செய்ய வாய்ப்பளித்தது போலாகிவிடும். இந்தக் குறைகள் இன்னாரால் சுட்டிக்காட்டப்பட்டன, இந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டன, அவற்றினை கருத்தில் கொண்டு மாற்றி எழுதியுள்ளேன் என்று வாசகர்களுக்கு உண்மையை சொல்கிற நேர்மையை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதும் விரிவான விமர்சனத்தினை இப்போது வைக்காததற்கு இன்னொரு காரணம்.
2,ராஜதுரையின் வரட்டு பெரியாரியத்தை நான் ஏற்கவில்லை. சுந்தர ராமசாமி காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது.இந்த விமர்சனக் கட்டுரையில் ஜெயமோகன் எழுதியுள்ளதையே எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன்
3,காந்தி/காந்தியம் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு. அவற்றை விரிவாக எழுதியதில்லை. பின்னர் ஆங்கிலத்தில் எழுத எண்ணம்.

http://ravisrinivas.blogspot.com

தொடரும்

Series Navigation

author

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்

Similar Posts