ரவி ஸ்ரீநிவாஸ்
I
ஜெயமோகனின் ‘காந்தி’யும், ‘காந்திய’மும்
ஜெயமோகன் தன் இணையதளத்தில் காந்தி/காந்தியம் குறித்து எழுதி வரும் கட்டுரைகள் குறித்த ஒர் விமர்சனம் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரைகளிலிருந்து ’அறிஞர்’ ஜெயமோகனால் அங்கீகரிப்பட்ட ’அறிஞர்களில்’ அ.மார்க்ஸும் ஒருவர் அல்லது குறைந்த பட்சம் காந்தியத்தைப் பொறுத்தவரை அந்த அங்கீகாரம் உண்டு என்று தெரிந்து கொள்ள முடிந்தது. காலச்சுவடு அஷிஸ் நந்தி எழுதிய ஒரு கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டது, ஜனவரி 2008 இதழில் .அத்துடன் வேறு சில தொடர்புடைய கட்டுரைகளும் அதே இதழில் வெளியாகியுள்ளன.(1) ராமானுஜம் காந்தியின் உடலரசியல் என்ற சிறு நூலை எழுதியுள்ளதாக அறிகிறேன். ஜமாலன் அதைக் சுட்டுகிறார்(2).நான் அதைப் படித்ததில்லை. அ.மார்க்ஸ் காந்தி குறித்து எழுதியுள்ளதை ஒரு வாசகர் குறிப்பிட்ட பின் ஜெயமோகன் தானும் அ.மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், அவரும் ஆங்கிலத்தில் படித்திருப்பார் போலிருக்கிறது என்று தன் கடைக்கண் ‘கருணை’ப் பார்வையை அ.மார்க்ஸ் மீது செலுத்துகிறார்.அ.மார்ஸ் இப்படி எழுதியிருக்கிறார். அது எனக்கு வியப்பளித்தது என்று கூறி சாதி,காந்தி குறித்து நான் எழுதியிருப்பதையும், அவர் இவ்வாறு எழுதியிருப்பதையும் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் எழுதவில்லை.
அ.மார்க்ஸ் அந்தக் கட்டுரையை 2006ல் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார் என்பதால் ஜெயமோகன் மூலம்தான் காந்தி ,சாதியம் குறித்து அண்மையில் வெளியான கருத்துக்களை தமிழ் வாசகர் அறிந்து கொள்ளும் நிலை இங்கில்லை என்பதுதான் உண்மை. அ.மார்க்ஸ் ஒரு கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரை கதாநாயகனாகவும்,அம்பேகாரை கதாநாயகனுக்கு உதவுபவனாகவும், காங்கிரஸ்/காந்தியை வில்லனாகவும் சித்தரித்து எழுதுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். (இதை என் நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன், பிழை இருக்க வாய்ப்புண்டு. அந்த கட்டுரை அ.மார்க்ஸ் எழுதிய ஒரு நூலில் இருக்கிறது).ஆக, எஸ்.வி.ராஜதுரையின் காந்தி குறித்த கருத்துக்கள் மீது அ.மார்க்ஸும் விமர்சனம் வைத்திருக்கிறார்.ஜெயமோகன்தான் எஸ்.வி.ராஜதுரையை இதில் விமர்சித்துள்ளார் என்றில்லை. காந்தியைப் பற்றி எழுதும் போது கூட ஜெயமோகனுக்கு தன்னை முன்னிறுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்கிறது.அவரது அவப்பேறு வாசகர்கள் காந்தி/காந்தியம் குறித்து தமிழில் பிறர் எழுதியுள்ளதையும் படித்து வைத்திருக்கிறார்கள் அல்லது அறிந்திருக்கிறார்கள்.போதாக்குறைக்கு இணையத்தில் தொடர்புடைய கட்டுரைகள், விபரங்கள் வேறு கிடைக்கின்றன .இவையெல்லாம் அவர் வாசகர் மத்தியில் காந்தியத்தை முன்வைத்து தன்னைப் பற்றி உருவாக்க முயலும் பிம்பத்தை கலைத்துவிடுகின்றன.காந்தியைப் பற்றி தமிழில் என்னென்ன வெளியாகியிருக்கிறது, யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை விளக்காமல் ஒருவர் காந்தியம் குறித்து எழுதலாம்.அது புரிந்து கொள்ளக்கூடியதே.அல்லது தான் படித்தவற்றினை அறிமுகப்படுத்தி, அவற்றை விமர்சித்து தன் கருத்தினை எழுதி, அத்துடன் தான் சொல்ல விரும்புவதையும் ஒருவர் விரிவாக எழுதலாம். காந்தியைப் பற்றி தமிழில் வந்ததையெல்லாம் படித்து விட்டுத்தான் ஒருவர் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை.
ஆனால், ஜெயமோகனின் கட்டுரைகளில் வெளிப்படும் தொனி காந்தியைப் பற்றி இங்கு தவறான பிரச்சாரமே மிக அதிகமாக முன் வைக்கப்பட்டுள்ளது, அதை என கட்டுரைகளே முறியடித்து உண்மையை சொல்கின்றன என்பதாக இருக்கிறது. அதனால்தான் அவரால் சாதி,காந்தி குறித்து அ.மார்ஸ் எழுதியுள்ளதை பிறர் சுட்டிக்காட்டாதவரை குறிப்பிட முடிவதில்லை.காந்தி,காந்தியத்தைப் பற்றி எழுதுவதன் மூலம் தன்னை முன்னிறுத்தும் ஜெயமோகனின் முயற்சியாகவே நான் இந்தக் கட்டுரைகளை கருதுகிறேன். எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் காந்திய நிறுவனங்கள் உள்ளன,வெளியீடுகள் வெளிவந்தன, சர்வோதயம் என்ற இதழ் காந்திய இதழ், அதில் சமகாலத்தில் காந்தியத்தின் பொருத்தப்பாடு குறித்த கட்டுரைகள் வெளியானதைப் படித்திருக்கிறேன்.அது இன்று வெளிவருகிறதா என்று தெரியாது. பெரியாரியவாதிகள்,தலித் இயக்கங்கள், ம.க.இ.க போன்ற அமைப்புகள் காந்தி/காந்தியம் குறித்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்துள்ளன. Indian National Congress: How Indian How National போன்ற நூல்கள் தமிழில் சுட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக காந்தி குறித்து இன்று நேர்மறையான கருத்து மட்டுமே நிலவுகிறது என்று சொல்ல முடியாது. காந்தி பகத்சிங் விவகாரத்தில் துரோகமிழைத்தார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. இதை மறுத்து ஏ.ஜி. நூரனி ஆங்கிலத்தில் எழுதினார். அ.மார்க்ஸ் தமிழில் இந்த விவாதத்தில் காந்திக்கு ஆதரவான தரப்பினை முன்னிறுத்தியிருப்பதை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார். தமிழில் நூரனியின் எழுத்துகள் மொழிபெயர்ப்பாய் கிடைப்பதில்லை.வலைப்பதிவுகளில்/இணைய விவாதங்களில் நான் நூரனின் எழுத்தினை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இருப்பினும் காந்திதுரோகமிழைத்தார் என்ற கருத்து இன்னும் பரவலாக எழுதப்படுகிறது. அதற்குக் காரணம் பகத்சிங்கை உயர்த்திப் பிடிக்க காந்தியை துரோகியாக சித்தரிக்கும் உத்தியை இயக்கங்கள்/அமைப்புகள் கைக்கொள்வதே.நூரனி எழுதியதைப் படித்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரம் எவ்வளவு பொய்யானது என்று தெரியும். எனவே தமிழில் இன்று காந்தி குறித்த ஒரு புதிய புரிதல்தேவை.
இதற்கு கடந்த 20/25 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூற்கள்/கட்டுரைகள் பயன்படும். அதற்கு அதாவது காந்தி,காந்தியம் குறித்த புதிய புரிதலுக்கு,ஜெயமோகனின் கட்டுரைகள் பெருமளவிற்கு உதவியிருக்கலாம்,அவர் ஒரு பிரச்சாரத்திற்கு மறுப்பும், எதிர்வினையும் இன்னொரு பிரச்சாரம்தான் என்ற அணுகுமுறையுடன் எழுதாமல் இருந்திருந்தால், அவர் ஏராளமாகப் படித்து உட்கிரகித்திருந்தால், ஏற்கனவே எழுதியதையே மறுசுழற்சி செய்து எழுதாமல் இருந்தால்.
“நாம் இன்னமும் காந்தியை சரிவர புரிந்துகொள்ளவில்லை. ஏன் என்றால் நாம் கவனிக்கவில்லை. வழக்கம்போல அக்கப்பொரொகளாஇ மட்டுமே சிந்தனைகளாக நம்பிக்கொண்டிருக்கிறோம். வெற்றிகொண்டான் தரத்துக்குமேல் எழுதபப்ட்ட கட்டுரைகளே தமிழில் குறைவு. [எஸ்.வி.ராஜதுரை என்ற மகாவெற்றிகொன்டான்!]” என்று ஜெயமோகன் எழுதுகிறார் http://jeyamohan.in/?p=4234
ராஜதுரையின் பெரியாரிய சார்புகள்/சாய்தல்களை அவரது நூற்களை வாசிப்பவர்களால் எளிதில் உணர முடியும்.அதே போல் ஜெயமோகன் எழுதியிருப்பதில் காந்தி/காந்திய சார்புகள்/சாய்தல்களை வாசகரால் அறிய முடியும்.இவர்களது வாதங்கள் ஒருதலைப் பட்சமாகவும்,இன்னொரு தரப்பின் கருத்துகளை திரித்து கூறுபவையாகவும், முக்கியமான தகவல்களை/சான்றுகளை வேண்டுமென்றே மறைப்பவையாகவும் உள்ளனவா என்று கேள்வி எழுப்பலாம். சில கேள்விகள் ஆய்வு நெறி நோக்கில் எழுப்பபடலாம்.சில முடிவுகளை அவை முன்வைக்கும் தரவுகள்,வாதங்களின் அடிப்படையில் சர்ச்சிக்கலாம். இந்த இரண்டும் (அதாவது சில கேள்விகள் ஆய்வு நெறி நோக்கில் எழுப்பபடலாம், சில முடிவுகளை அவை முன்வைக்கும் தரவுகள்,வாதங்களின் அடிப்படையில் சர்ச்சிக்கலாம்) காந்தி குறித்து ஜெயமோகன் எழுதியதற்கும் பொருந்தும், ராஜதுரை எழுதியதற்கும் பொருந்தும். பெரியாரை விதந்தோதி காந்தியை நிராகரிப்பது அல்லது காந்தியை விதந்தோதி, பெரியார்/அம்பேத்கர்/நேருவை நிராகரிப்பது – இரண்டையுமே முன் வைக்கப்படும் வாதங்கள், காரணங்கள், அவற்றின் பலங்கள்/பலவீனங்களின் அடிப்படையில்தான் மதிப்பிட முடியுமே ஒழிய, காந்தி அல்லது பெரியார் அல்லது அம்பேதகர் அல்லது நேரு ஆகிய ஆளுமைகளின் பிம்பங்களின் அடிப்படையில் அல்ல.
பொதுவாகச் சொல்வதென்றால் ராஜதுரையின் நூற்களில் தரவுகள்,சான்றுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது தரப்பட்டிருக்கும். ஜெயமோகனின் காந்தி குறித்த கட்டுரைகளில் அவ்வாறு இல்லை. அவர் குறிப்பிடும் பலவற்றிற்கு அவர் நூற்களைச் சுட்டுவதில்லை அல்லது சான்றுகளை தரவில்லை. எனவே எது அவர் கருத்து,எது யூகம்,எதிலெல்லாம் அவர் பிறர் கருத்துக்களை/ சான்றுகளை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக இல்லை.
ஜெயமோகன் அம்பேதக்ர் குறித்த விவாதத்திற்கு தயாரில்லை என்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தான் இலக்கிய வாசகன் என்கிறார்.இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் வரலாற்றாசிரியர்/வரலாற்றாய்வாளர் அல்ல என்கிறார். ஆனால் எழுத்தில் அவர் பல கருத்துகளை இதுதான் சரி என்று வலியுறுத்திக் கூறுகிறார், தான் காந்தியத்தில் நிபுணர் போல். அவர் எவற்றின், எந்த நூல்கள்/தரவுகளின் அடிப்படையில் தன் கருத்துக்கள்(தான்) சரி என்று வாதாடுகிறார் என்பது தெரியவில்லை.அவர் ஒரு வாசகராக அவற்றை எழுதினால் அவற்றில் உள்ள நிபுணத்துவ தொனி சரியன்று. ஒரு வரலாற்றாய்வாளன் அல்ல என்றால் அவர் முன் வைத்த பல கருத்துக்களை அவர் கருதுகோள்கள் என்று முன்னிறித்திருக்க வேண்டும்.கேள்விகள், விவாதம் என்று வரும் போது ஒரு மாதிரி எழுதுவது, கட்டுரை(கள்) என்று வரும் போது வெறொரு மாதிரி எழுதுவது என்ற யுக்தியை அவர் கையாள்கிறார். இது வாசகர்களுக்கு புரியாதா என்ன. மேலும் அவர் காந்தி/காந்தியம் மீதான அம்பேத்காரிய, பெரியாரிய விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவற்றையும் விவாதித்து தன் தரப்பினை வாதிட்டிருக்க வேண்டும்.கட்டுரைகளில் அப்படி இல்லை. உதாரணமாகச் சொல்வதென்றால் அவர் பெரியாரிய விமர்சனங்களை விரிவாக ஆய்ந்து, அவற்றின் குறைகளைக் குறிப்பிட்டு காந்தியத்திற்கு ஆதரவாக எழுதவில்லை. ராஜதுரையை வெற்றிக் கொண்டானுடன் ஒப்பிடுபவர் ராஜதுரை,வ.கீதா எழுதியுள்ளவற்றில் காந்தியம் குறித்த பெரியாரிய விமர்சனங்களை முன் வைத்து விவாதித்து தன் தரப்பினை முன்னிறுத்தவில்லை. உதாரணமாக காந்தி/காந்தியம் குறித்த பெரியாரிய விமர்சனத்தை வ.கீதா எழுதியுள்ள A Dangerous Play with Time: Brahminism and the Anxieties of History என்ற கட்டுரையில் காணலாம். ஜெயமோகன் இத்தகைய கட்டுரைகளை படித்து தன் தரப்பிலிருந்து விரிவான விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும்.
ராஜதுரை எழுதியுள்ள பெரியார்: ஆகஸ்ட் 15 (விடியல் பதிப்பகம், கோவை, இரண்டாம் பதிப்பு 2006) என்ற நூலில் பெரியார் எடுத்த நிலைப்பாட்டினை ஆதரித்து, அதற்கு சானறாக விரிவாக நிகழ்ச்சிகளை விளக்கி,பல்வேறு தரப்பினசெய்தவை,எடுத்த நிலைப்பாடுகள், இவற்றை பெரியார் எதிர்கொண்டது என பலவற்றையும் நம் முன் வைக்கிறார். சான்றாதாரங்களாக நூற்கள் உட்பட பலவற்றை குறிப்பிடுகிறார். நூற்களிலிருந்து பகுதிகளை சுட்டும் போது தொடர்புடைய பக்கங்களையும் தருகிறார். ராஜதுரை முன் வைக்கும் தர்க்கத்தினை அறிய இவை உதவுகின்றன. ராஜதுரை அதில் பெரியாரித்தின் வழக்கறிஞராக வாதாடுகிறார். அந்நியமாதல், எக்ஸிஸ்டென்ஷியலிசம் எழுதிய ராஜதுரையை அதில் பார்க்க முடிவதில்லை :). மாறாக பெரியாரிய பிரச்சார பீரங்கியாக அவர் குரல் ஒங்கி ஒலிக்கிறது. அவர் வாதத்தில்இன்னொரு தரப்பிற்கும் சில நியாயங்கள் இருக்கும் என்ற பார்வை இல்லை.அது அந்நூலின் பலவீனம்.அதைச் சுட்டிக்காட்டும் போது ஜெயமோகன் கட்டுரைகளிலும் இன்னொரு தரப்பிற்கும் சில நியாயங்கள் இருக்கலாம் என்ற பார்வை பல இடங்களில் இல்லை. பிரச்சாரமே இருக்கிறது. ராஜதுரை வழக்கறிஞர் போல் வாதிட்டால் ஜெயமோகன் பிரசங்கி எழுதுகிறார்.ஒன்று கடுமையான வாதம், இன்னொன்று மோசமான பிரசங்கம் என்று சொல்லலாம். ராஜதுரை காங்கிரஸ் இயக்கம்,தலைவர்களை விமர்சித்து எழுதி பெரியாரியத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் என்றால் ஜெயமோகன் எழுதியுள்ளதில் காந்தியை ஹீரோவாக காண்பித்து, எவரெஸ்ட்டாக காந்தி காட்டப்பட்டு பிற ஆளுமைகள் சிறு குன்றுகளாக காட்டப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றைக் குறித்து எழுதும் போது இதே கண்ணோட்டம்தான் வெளிப்படுகிறது. எனவே ராஜதுரையை வெற்றிக்கொண்டான் என்று ஜெயமோகன் சொல்வது வேடிக்கைதான்.ராஜதுரையின் கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும் நூல்கள்,சான்றுகள் குறித்து அறிய முடிகிறது. ஜெயமோகன் எழுத்தைப் படித்தால் பிரசங்கி திரும்ப திரும்ப ஒன்றையே சொல்லி நாம் கேட்டால் ஏற்படும் சலிப்புதான் மிஞ்சுகிறது.ராஜதுரை வெற்றிகொண்டான் அல்ல, வாதிடும் வழக்கறிஞர்/ஆய்வாளர் என்றால் ஜெயமோகன் அலுப்புதரும் வகையில் பிரசங்கிக்கும் மூன்றாம்தர் பிரசங்கு.
காந்தி/காந்தியத்திற்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு ஜெயமோகன் முன் வைத்துள்ள சித்தரிப்புகள் எவ்வளவு போலியானவை என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட சிகாகோ பல்கலைப் பேராசிரியர் எழுதிய நூலிலிருந்து சானறாக சிலவற்றை என்னால் காட்ட முடியும். இதை அந்நூலின் உதவி இல்லாமலும் செய்யலாம்.இருப்பினும் காந்தி/காந்தியம் குறித்த அனைத்தையும் அறிந்தவராக,எழுதப்பட்டவற்றை மதிப்பிட தனக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் அவருக்கும் அத்தகைய சான்றினை காட்டினாலாவது அவர் எழுதியுள்ளதன் அபத்தம் உறைக்க சிறு வாய்ப்பாவது இருக்கிறது அதைச் சுட்டிக்காட்டுவது நான் என்பதை விட ஒரு அமெரிக்கப் பேராசிரியரின் கருத்துக்கள் என்பதால் அவர் அதை ஏற்கக்கூடும்.
சுருக்கமாகச் சொன்னால் ஜெயமோகன் ‘புது வரலாறு’ ‘படைக்க’முயல்கிறார். [அவர் எத்தனை ‘புது வரலாறுகளை’ படைப்பார்? . தன் இணையதளத்தில் யூத் இனப்படுகொலை குறித்து ’புது வரலாறு’,தமிழ் நாட்டில் ஸ்டாலினியத்திற்கு எதிராக எழுதியவர்களின் பெயர்களையும், பங்களிப்பையும் இருட்டடிப்பபு செய்துவிட்டு தன்னை முன்னிறுத்தி ’புது வரலாறு’ , 1979ல் ஈரானில் நடந்த புரட்சியை ஐரோப்பாவில் உள்ள அனைத்து முற்போக்குவாதிகளும் ஆதரித்தார்கள், அதை மக்கள் புரட்சி என்று கிட்டதட்ட 15 வருடங்கள் கொண்டாடினார்கள் என்று ’புது வரலாறு’ (தென்றலில் வெளினான பேட்டி ) .] இந்த ‘புது வரலாறு’ காந்திக்கும் நியாயமாக இல்லை, காங்கிரஸ் இயக்கத்திற்கும் நியாயமாக இல்லை. ஒருவர் காந்தி, காந்தியத்தை பற்றி எழுத முடியும், பிறரை மட்டம் தட்டாமல். காந்தியம் குறித்து கருத்து ரீதியாக எழுதலாம். ஜெயமோகன் எழுதியிருப்பது பிரச்சாரமாக, மூன்றாம் தர பிரச்சாரமாக, பொய்களையும், அரை உண்மைகளையும் கலந்து எழுதப்பட்டுள்ளது.
காந்தி/காந்தியம் என்று வரும் போது கூட ஜெயமோகனால் இத்தகைய கீழ்த்தரமான உத்திகளை தவிர்க்க முடிவதில்லை. இவை காந்தி/காந்தியத்திற்கு தேவையில்லை, காந்தி/காந்தியம் குறித்து எழுதுவதன் மூலம் தன்னை முன்னிறுத்த ஜெயமோகனுக்குத் தேவை. இவை இல்லாமலும் காந்தி/காந்தியத்தை முன்னிறுத்தி, ஆதரவாக வாதிடலாம். அதைச் செய்வதென்றால் முதலில் செய்ய வேண்டியது, காந்தி தன்னை விமர்சித்தவர்களை எப்படி நேர்மையாக எதிர்கொண்டாரோ அது போல் காந்தி/காந்தியம் குறித்த விமர்சனங்க்ளையும் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.அதற்கான உழைப்பு சாத்தியமில்லையென்றால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
காந்தி தன்னை சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என்று நினைக்கவில்லை. தன்னுடன் கடுமையாக கருத்து முரண்பாடு கொண்டவர்களையும் அவர் அணுகிய விதமும், காந்தியை விமர்சித்தவர்களை ஜெயமோகன் அணுகும் விதமும் முற்றிலும் மாறுப்பட்டவை.கோகலேயைக் குறித்த காந்தியின் கருத்துக்களும், அணுகுமுறையும், கோகலே குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டால் காந்தியை உயர்த்திச் சொல்வதற்காக ஜெயமோகன் பொய் எழுதியிருப்பதைப் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். கோகலேக்கும், காந்திக்கும் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போதே தொடர்பு இருந்தது. Servants of India Society என்ற அமைப்பின் மூலம் கோகலே பல பணிகளை ஆற்றினார். அதன் விதிகளின் படி அரசு விருதை மறுத்தார்.அவரது எளிமையும், நேர்மையும் குறித்து எவரும் குறை கூறியதில்லை.கோகலை காந்தி பெரிதும் மதித்தார்.காந்தி பல பகுதிகளுக்கும் சென்று இந்தியாவில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று ஆலோசனை சொன்னவர் கோகலே.
ஜெயமோகன் எழுதுகிறார்
”கோகலேயிடமும், திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை முன்னுதாரணமான எளிமை”
கோகலே என்ன ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவரா இல்லை பணத்தினை சம்பாதிக்க அறங்களை விட்டுவிடலாம் என்று இருந்தவரா. திலகருக்கும் அவரும் கருத்து வேறு பாடு உண்டு. கோகலே, திலகர் இருவரும் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக உழைத்தவர்கள். அப்போதைய பம்பாய் மாகாணத்தில் காங்கிரசை வலுப்படுத்த தங்கள் ஆற்றலை பயன்படுத்தியவர்கள். இருவரும் பெரும் வணிகர்களோ அல்லது தொழில் அதிபர்களோ அல்ல. அப்போதைய காங்கிரசில் மத்தியதர வகுப்பினைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் உழைப்பின்றி அன்று காங்கிரஸ் வளர்ந்திருக்க முடியாது. அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்ல. அரசின் அடக்குமுறையை சந்தித்தவர்கள், சொத்திழந்தவர்கள் என பலர் உண்டு. காந்தி காங்கிரசை வளர்க்க
அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அவர்கள்.ஏற்கனவே இருந்த அமைப்பினை காந்தி வளர்த்தெடுத்தார். கோகலே, திலகர் பற்றி எழுதியது தகவல் பிழை என்று சொல்லி ஜெயமோகன் சமாளிக்க முடியாது.ஏனெனில் காந்திக்கும் கோகலேக்கும் இருந்த உறவு பல ஆண்டு நீடித்த ஒன்று.கோகலே மறையும் வரை அது நீடித்தது.மிதவாதியான கோகலே கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.காந்தியின் எளிமையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் எதற்கு பிறர் குறித்து இல்லாததையும், பொல்லாதைதையும் எழுத வேண்டும்.
காந்தியைப் பற்றி எழுதும் ஜெயமோகன் உதிர்த்துள்ள இன்னொரு மாபெரும் ’உண்மை’
“இன்று வரை நம்மைச் சூழ உள்ள நாடுகளில் ஜனநாயகம் இல்லை ஏன்? சாமன்யர்களை ஆட்சியாலார்களாக ஏற்க அங்குள்ள அங்குள்ள மக்களின் மனம் ஒப்பவில்லை” (sic).
ராமச்சந்திர குகா காந்தியின் சமகாலத்தவர்களை சித்தரிக்கும் விதம், அவர்களுக்கும் காந்திக்கும் இருந்த முரண்பாடுகளை அணுகி விவாதிக்கும் விதத்திற்கும், ஜெயமோகன் எழுதுவதற்கும் உள்ளவேறுபாடு(கள்) முக்கியமானவை. உதாரணமாக குகாவின் எழுத்தில் தாகூர் காந்தியை விமர்சித்தத்ற்கான காரணம் குறிப்பிடப்படுகிறது, காந்தி அதை அணுகியவிதமும் சொல்லப்படுகிறது. குகா இரு தரப்பு வாதத்தினையும் நமக்கு சொல்கிறார். ஜெயமோகன் எழுத்தில் அப்படி இல்லை,உதாரணமாக வளர்ச்சி குறித்த சர்ச்சையில் நேரு தரப்பு வாதங்கள் விவரிக்கப்படுவதில்லை. ஒரு தரப்பு பகத்சிங்கை உயர்த்திப் பிடிக்க காந்தியை கேவலமாக சித்தரிக்கிறது. அதை விமர்சிக்கும் ஜெயமோகன் காந்தியை உயர்த்திப் பிடிக்க சிலரை மோசமாக சித்தரிக்கிறார்.
அவர் எழுதுகிறார்
’நேருவுக்கு எதிராக எழுந்த வைசியர்-சூத்திரர் தலைவரான சுபாஷ் சந்திர போஸ¤க்கு எதிராக காந்தியுடன் நின்றவர் முக்கியமான வைசிய -சூத்திரதலைவரான வல்லபாய் படேல்’
இதற்கு என்ன சான்று. அன்று காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் பிறந்த சாதி ரீதியாகத்தான் தங்களுக்கான ஆதரவை திரட்டியிருந்தார்களா அல்லது காங்கிரஸ் நிலவிய பிரிவுகளுக்கிடையேயான அரசியல் சாதி ரீதியாகத்தான் இருந்ததா?. போஸ் தன்னை தான் இந்த சாதி/சாதிகளின் தலைவர் என்று அறிவித்தாரா இல்லை அப்படித்தான் அரசியல் நடத்தினாரா?. மேலும் காந்தி தன் உண்ணாவிரதம் கட்சியில் இருந்த இந்த சாதியினருக்கு எதிராக என்று அறிவித்து நடத்தினாரா?. படேலையும் இந்த சாதிய அரசியல் குத்தி எழுதும் ஜெயமோகன் தான் எழுதியதற்கு சான்றுகளை ஜெயமோகன் தருவாரா இல்லை அவை தன் ஊகம் என்று நழுவுவாரா. வாய்ப்புக் கிடைத்தால் காங்கிரஸின் வரலாற்றையே ஜெயமோகன மாற்றி எழுதிவிடுவார். நேருவையும், சுபாஷ் சந்திர போஸ் குறித்தே இப்படி எழுதும் இவர் பெரியாரின் கருத்தினை திரித்து எழுதுவதில் வியக்க ஒன்றுமில்லை. அன்று நடந்த தேர்தலில் போசுக்கு அதிக ஒட்டுக்கள் கிடைத்தனவே, அதன் பொருள் அன்று வாக்களித்தவர்கள் சாதிரீதியாக பிரிந்து வாக்க்களித்தார்களா?.
காந்தி/காந்தியம் குறித்து இப்படி அவர் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக கொண்டு வந்தாலும் அதை அனைவரும் ஏற்பார்கள் என்றில்லை. ஏனென்றால் அவர் தரப்பிற்கு மறுப்பினை வைப்பவர்கள் தரப்பிலும் வலுவான ஆதாரங்களை தர முடியும். இன்று காந்தி,காந்தியம், காந்தி-அம்பேத்கர் குறித்து ஏராளமான நூல்கள்,கட்டுரைகள் உள்ளன. காந்தி-அம்பேத்கர் குறித்து ஜெயமோகன் குஹா,டி.ஆர்.நாகராஜ் எழுதியதை முன்னிறுத்தினால் அதற்கு மறுப்பாக எழுத அம்பேத்கரின் எழுத்துக்கள் உட்பட பல உள்ளன. காந்தியை நேர்மறையாகப் கருதுபவர்கள் கூட அவரின் கருத்துகள்/அணுகுமுறைகள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அகிம்சை என்பதை அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக பயன்படுத்த முடியுமா, காந்தி யூதர்களுக்கு சொன்ன அறிவுரைகள் பொருத்தமானவையா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே காந்தியத்தை நேர்மறையாகப் பார்பவர்களும் அதன் போதாமைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெயமோகனிடம் இந்த அணுகுமுறை இல்லை.
காந்தி/காந்தியத்தைப் பற்றி எழுதி ஜெயமோகன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியாகவே இந்தக் கட்டுரைகளை நான் கருதுகிறேன்.
(அடுத்த பக்கத்தில் தொடர்கிறது)
- முள்பாதை 6
- பூனைக் காய்ச்சல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19
- வேத வனம் விருட்சம் -60
- இரவின் நுழைதலம்
- விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 6)
- புது இதழ் : சூரிய கதிர்
- நினைவுகளின் தடத்தில் – (38)
- குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)
- தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை
- ‘மூன்று விரல்’ மோகம்! – இரா.முருகனின் நாவல்பற்றி.
- மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)
- மெல்லத் தமிழினிச் சாகும்
- பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு
- தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு
- காங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>
- அவகாசம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8
- மழை!
- விதியின் பிழை
- கால்கள்
- “மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”
- போராட்ட ஆயுதங்கள்
- காந்தி: வேறொரு அடையாளம்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- கண்டதைச் சொல்லுகிறேன்
- தேவதைகள் தந்ததொரு பூங்கொத்து
- சம்பவம்
- சொற்கள் நிரம்பிய உலகம்
- அவளுக்கும் ஒன்று