காங்கிரஸ் போடும் கணக்கு

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

அக்னிப்புத்திரன்


அண்மையில் தமது கூட்டணி கட்சியான திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு.ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது காங்கிரஸ். பிரதமர் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஆகிய தரப்புகளின் ஒப்புதலுடன் தான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்துள்ளது. ஆனால், கூட்டணியின் மிக முக்கிய அங்கமான தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சரின் அமைச்சகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்து நடத்திய திடீர் ரெய்டுக்கு என்ன காரணம்? திடீரென்று திமுகவின் மீது தனது பார்வையைத் திருப்ப வேண்டியதன் அவசியம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?
மத்திய காங்கிரஸ் தலைமையைத் திமுக கோபப்படுத்தியதன் விளைவே இந்த அதிரடி அரசியல் விளையாட்டு. பலவீனமான போது பதுங்குவதும் பலம் அடையும்போது சீறுவதும் காங்கிரஸ் கட்சியின் வழமை.
சரி, காங்கிரஸ் கட்சியின் இச்செயலுக்கு முக்கியக் காரணங்கள் யாவை?
1.அண்மைய காலத்தில் இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் தரும் கடுமையான அழுத்தம் (முள்வேலியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மறு குடியேற்றம் செய்ய இந்திய அரசு இலங்கைக்கு கடும் எச்சரிக்கை தர வேண்டும் என்பது போன்ற அழுத்தமான கோரிக்கைகள்)
2. அண்மையில் இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலைவர் திரு. தொல்.திருமாவளவனை இடம் பெற வைத்த கலைஞரின் செயல்
3.முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் மத்திய அரசுடனான மோதல் போக்கு
4. இந்தியாவை ஆள்வது ஒரு குறிப்பிட்ட மாநிலமா என்று கேள்விக்கணை தொடுத்து கலைஞர் எழுதிய அனல் பறக்கும் கடித வரிகள்.
5. காங்கிரஸ் கட்சியின் தொடர் வெற்றிகள். பல்வேறு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவதால் தமிழகத்தின் மீதும் ஒரு கண் (காங்கிரஸ் ஆட்சி, ராகுல் காந்தியின் ஆசையும் கூட)
6. திமுக இல்லாவிட்டால், கணிசமான வாக்குவங்கி இருந்தும் தற்போது பலவீனமாகி துவண்டு கிடக்கும் அதிமுக தங்களுடன் கூட்டுச்சேருவதற்குத் தயாராக இருப்பது (இன்றைய சூழலில் அதிமுகவை எவ்வகையான கூட்டணி பேரத்திற்கும் படிய வைப்பது மிகவும் சுலபம். ஏன்னென்றால் எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு துடியாய்த் துடிக்கிறார் செல்வி. ஜெயலலிதா)
7. நடிகர் விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆலாய்ப்பறப்பது
8. மருத்துவர் இராமதாசும் காங்கிரஸ் கட்சிக்குத் தூண்டில் போடுவது
இத்தனை சாதகமான சூழல் தமக்கு இருப்பதால் மாநிலத்தில் பலம் வாய்ந்த திமுகவைச் சற்று மிரட்டிப்பார்த்து, ஒரு குட்டு குட்டினால் என்ன என்று காங்கிரஸ் கட்சிக்குத் தோன்றியிருக்கிறது.
“காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் கூட்டணி இருந்து வரும் நிலையில், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு ஆரம்பமாக இவ்விஷயத்தை காங்கிரஸ் கையாண்டுள்ளதோ, காரணம் மாயாவதி, முலாயம் மற்றும் லாலு பிரசாத் போன்றவர்களை அடக்குவதற்கு, அவ்வப்போது சி.பி.ஐ., என்ற அமைப்பை திடீர் திடீரென கையில் எடுத்து சற்று பயம் காட்டுவது காங்கிரசின் வழக்கம். அதுபோல தி.மு.க.,வையும் ஒரு விதமான நெருக்கடியிலேயே வைத்திருக்க வேண்டுமென காங்கிரஸ் எண்ணியதன் விளைவு தான் இந்த ரெய்டு”என்று தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மாயாவதி, முலாயம் மற்றும் லாலு பிரசாத் போன்றவர்களையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து ஒன்றாகவே எடைபோட்டு அரசியல் வைத்தியம் அளிக்க முற்பட்டிருப்பது அதன் அறியாமையைத்தான் காட்டுகிறது.
முன்பு காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது நாற்பது தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வர வழிவகுத்த கட்சி திமுக என்பதை மறந்துவிட்டது. காங்கிரசை மத்தியில் ஏற்றிவிட்ட திமுக அக்கட்சியை இறக்கிவிடும் ஆற்றலும் இல்லாமல் இல்லை. ஐம்பதாண்டுக்கால அரசியல் அனுபவம் மிக்க கலைஞரைப் பகைத்துக்கொள்ள அல்லது மிரட்டிப்பார்க்க யாரோ தவறான ஆலோசனையைக் காங்கிரஸ் தலைமைக்குக் குறிப்பாக திருமதி சோனியாகாந்திக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுவே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முதல் சறுக்கல்.
கலைஞருக்கு வயதாகிவிட்டது. முன்புபோல் அவரால் சுறுசுறுப்பாக எதிர்ப்பு அரசியல் செய்ய இயலாது என்று எண்ணுவார்களேயானால் அவர்களுக்கு கலைஞரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றுதான் பொருள். எதிர்ப்பு அரசியலிலேயே வளர்ந்தவர் கலைஞர். உடல் நலம் குன்றினாலும் உள்ளம் உறுதி படைத்தவர். அவரின் சுறுசுறுப்பான முளைத்திறனுக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக ராகுல்காந்தி கூட ஈடாகமாட்டார். ராகுல் பாட்டியுடன் அரசியல் செய்தவர், ராகுல் தந்தையுடனும் அரசியல் நடத்தியவர். ராகுல் அம்மாவுடன் அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர். அவலை நினைத்து உரலை இடிக்கிறது காங்கிரஸ்.
பிரதான எதிர்க்கட்சியான பஜகவே பலவீனப்பட்டுக் கிடக்கும் இத்தருணத்தில், தேசியகட்சியான காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மாநில கட்சிகள் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமும் காங்கிரஸ் கட்சியைச் செயலில் இறங்கத் தூண்டியுள்ளது. முதுகில் குத்துவது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். இது ஒன்றும் இன்று நேற்று ஏற்பட்ட ஒன்று அல்ல. எப்போதும் காங்கிரஸ் கட்சியின் செயலாகவே இது தொடர்கிறது. மிரட்டுவது, கட்சிகளை உடைப்பது, பலமான கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்ற சகல அரசியல் அநாகரிக செயலையும் செய்ய தயங்காத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சிதான். இந்தக் கட்சியுடன் கூட்டணி சேர தன்னால் முடிந்த அத்தனை செயல்களும் செய்து வருகிறார் அதிமுக தலைவி ஜெயலலிதா. திமுகவோ இதைத் தடுக்கவும் மாநிலத்தில் தனது பெரும்பான்மையைக் கட்டிக்காக்கவும் காங்கிரசை சுமக்கிறது.
அரசியல் காற்று ஒரே திசையில் அடிக்கும் என்று தப்புக்கணக்கு போடும் காங்கிரஸ் கட்சிக்கு நேரம், காலம், இடம், பொருள், ஏவல் பார்த்து ஆப்பு வைக்க மாநில கட்சிகளும் தயங்காது என்பதை காங்கிரஸ் கட்சி மனதில் பதிய வைத்து கொள்வது நல்லது. காங்கிரஸ் போடும் அரசியல் கணக்கு கைகொடுக்குமா? காலை வாரிவிடுமா? காலம் பதில் சொல்லும்.
– அக்னிப்புத்திரன்

Series Navigation

author

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்

Similar Posts