விருதுகளும் அதன் அரசியலும்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

அ.வெற்றிவேல்


ஓடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாகப் பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் திரு.ஓபாமாவிற்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் தமிழக அரசின் 2007 மற்றும் 2008க்கான தமிழ்த் திரைப்படத்திற்கான விருது
அறிவிக்கப்பட்டு இருந்தது. 2007 -ன் சிறந்த நடிகராக ரஜினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இரண்டிற்குமே அரசியல் பின்னணி இருப்பதால் இரண்டுமே இந்த ஆண்டின்
மிகப்பெரிய நகைச்சுவையாக எனக்குப்பட்டது.

ரஜினியே சிவாஜியில் வந்து போனதற்கு தனக்கு சிறந்த நடிகர் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார் .அதே மாதிரிதான் ஓபாமாவும் நினைத்திருக்கக் கூடும்.
அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து பேசும் பொழுது ” செயலில் இறங்க வேண்டுவதற்கான அழைப்பாகக் கருதி, இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று
ஓபாமா பேசியுள்ளார். ஓபாமாவின் ஆதரவாளர்களும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

உலகமயமாக்கல் என்றால் இதுதானோ? இந்திய சாகித்ய அகாதெமி குழுவில் உள்ள நோய், நோபல் பரிசுக் குழுவிற்கும் பரவிவிட்டதோ?

ஓபாமாவிற்கு வழங்கியதால், நோபல் பரிசு தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ளது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சென்ற ஆண்டு இதே வருடம் இதே நேரம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அவரை வரவேற்ற உலகத்தினர் மிகுந்த ஏமாற்றத்துடன் தான் உள்ளார்கள். எந்தப்பிரச்ச்னை தீர்க்கப்பட்டது? எதற்காக அவசர அவசரமாக இந்தப்
பரிசு?மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் இதே கேள்விதான்..மத்திய கிழக்கு ஆசியாவின் நிரந்தரமான பாலஸ்தீனியர்களின் பிரச்ச்னை தீர்க்கப்பட்டு விட்டதா? ஈராக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் அனைத்தும் ஈராக்கில் அமைதியை நிலை நாட்டி திரும்பிவிட்டனரா? ஆப்பிரிக்கா முழுவதும் அமைதிப்பிரதேசமாக மாறிவிட்டதா? குறிப்பாக
இந்த வருட ஆரம்ப நாளான ஜனவரி-1 கிளிநொச்சி வீழ்ந்தது முதல் , மே-17 வரை முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 20,000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள் வரை,
ஏதாவது அழைப்பு வராதா? அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் தென்படாதா என்று எதிர்பார்த்து ஏமாந்த ஈழத் தமிழர்களின் துயரம் துடைக்கப்பட்டு
விட்டதா? இந்திய உதவியுடன் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதா?

ஓபாமா பதவியேற்ற நாள் முதல் இன்று வரை, உலகின் எல்லா பகுதிகளிலும் அரங்கேறிவரும் மனித இனத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து
வன்கொடுமைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன சாதித்துவிட்டதாக இந்தப் பரிசு? என்று எனக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு இன்னும்
50000 துருப்புகள் அனுப்பப்போவதாக செய்தி வந்ததே? அதற்காகவா?

எம்.ஜி.ஆருக்கு ரிக்ஷாக்காரனுக்கு சிறந்த நடிகருக்காக தேசிய விருது கிடைத்த பொழுது, சிவாஜிக்கு ஏன் அது கிடைக்கவில்லை என்று நான் முணுமுணுத்தது உண்டு. இது நாள் வரை மகாத்மாவிற்கு நோபல் பரிசு ஏன் கிடைக்கவில்லை?என்பது கூட என் மனதில் உள்ள முக்கியமான உறுத்தலான கேள்வி. நல்ல வேளை .. சில சமயங்களில் சில பரிசுகள் சிலருக்கு கிடைக்காததும் அவர்களுக்கு கிடைக்கிற மிகப்பெரிய மரியாதையோ என நினைக்கத் தோன்றுகிறது.

கொசுறு செய்தி: உளி எடுத்து அம்மி குத்தியதற்காக தனக்குத் தானே பரிசளித்துக் கொண்டதைவிட, இவைகள் எவ்வளவோ மேல் என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதானோ?

vetrivel@nsc-ksa.com

அ.வெற்றிவேல்
ஜித்தா
சவூதி அரேபியா

Series Navigation

author

அ.வெற்றிவேல்

அ.வெற்றிவேல்

Similar Posts