தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

லதா ராமகிருஷ்ணன்


(நிகழ்வு குறித்த சில தகவல்கள் – கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்)

தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் கடந்த இரண்டாண்டுகளாக சீரிய முறையில் தமிழ் இலக்கிய வெளி குறித்தும், இலக்கியவாதிகளின் சமூக, அரசியல் பார்வை, பங்கேற்பு குறித்தும் அக்கறையோடு இயங்கி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கண்டனக் கவிதை இயக்கம், தில்லியில் கண்டனப் போராட்டம் முதலிய செயல்பாடுகளை சீரிய முறையில் மேற்கொண்ட இந்த அமைப்பு ஜூன் 13-14 அன்று கவிதை-ஒன்றுகூடல்-உரையாடல் என்ற இருநாள் கலந்துரையாடல் அரங்கை வால்பாறையில் ஏற்பாடு செய்திருந்தது. சமீபத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகள் சில குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை தொடர்பான கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடந்தேறின. அதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழ்க்கவிஞர்கள் சிலரின் கவிதைத் தொகுப்புகள் குறித்த அரங்கம் நிகழ்வு -2 : பன்முக வாசிப்பில் ஈழக் கவிதைகள் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள AICUF அரங்கில் கடந்த 16ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. அ.மங்கை தொகுத்த ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்துப் பேசும் ‘பெயல் மணக்கும் பொழுது’ என்ற நூல் குறித்து கவிஞர் வ.ஐ.சு.ஜெயபாலன் பேசினார். கவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதைத்தொகுப்பு குறித்து எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா கருத்துரைத்தார். “புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்தார். சந்திரா. “எனக்குக் கவிதை முகம் என்ற அனாரின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞர் செல்மா பிரியதர்ஷன் பேசினார். கருத்துரைத்தார். தனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். நாடற்றவனின் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிஞர் இளங்கோவின் கவிதைத் தொகுப்பு குறித்து நாடகக் கலைஞரும், படைப்பாளியுமான சோமீதரன் பேசினார்.

கவிஞர் ஜெயபாலன் : அ.மங்கை எழுதிய பெயல் மணக்கும் பொழுது என்ற தலைப்பிலான ஈழத்தமிழ்ப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்த நூலைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அ.மங்கை ஒரு சிறந்த பெண்ணிய எழுத்தாளர் என்று பாராட்டியவர் அவருடைய மணிமேகலை நாடகம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்றார். 1976-86 காலகட்டங்களில் இலங்கையில் பல பெண்கள் திறம்படக் கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள் என்றவர் அவர்களில் செல்வி, சிவரமணி ஆகியோரின் கவிதைகள் தன்னை மிகவும் பாதித்தவை என்றார். சமூக, அரசியல் மற்றும் இயக்க முரண்பாடுகளால் தூண்டப்பட்ட தற்கொலை சிவரமணியுடையது என்று வேதனையோடு குறிப்பிட்டவர் அவருடைய கவிதையொன்றை வாசித்துக் காண்பித்தார். இந்தக் கவிதைகள் எம்முடைய துயரங்களும், அவமானங்களும் எங்களைப் புதையுண்டு போகச் செய்வதில்லை, முன்னைக் காட்டிலும் வலுவடையச் செய்கின்றன என்று குறிப்பிட்டவர் இப்போதைய சூழலில் அந்தக் கவிஞர்களின் கவிதைகளுக்குள் உட்புக இயலவில்லை என்றும் அவை தன்னை மீண்டும் மீண்டும் வெளியே வலியும், வேதனையுமாக வெளியே தூக்கியெறிவதாகவும் அதுவே அந்தத் தொகுப்பின் வெற்றியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

பொதுவாக தமிழகம் ஈழம் ஆகிய இரண்டு நிலங்களில் கவிதை எழுதும் கவிஞர்களை ஒப்புநோக்குபவர்கள் ஈழக் கவிதைகள் மேலானவை என்பார்கள் என்றும் அதற்கு முக்கியக் காரணம் ஈழப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும் அக்கறையும் இருந்தது , அவர்கள் ஒரு குடையின் கீழ் பல முகங்களாக இருந்தார்கள், ஆனால், இங்கோ பல குடைகளின் கீழ் பல முகங்கள் என்றவர் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும், அக்கறையும் இருந்தாலும் அதனால் அவர்களுடைய பன்முகத்தன்மை தொலைந்துவிடாமல் காப்பாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒப்புநோக்க, தமிழகக் கவிஞர்கள் ஒருவிதமான ‘standardized’ கொண்ட கருப்பொருள்களையே கையாள்கிறார்கள் என்று அவர் கூறியது விவாதத்திற்குரியது.

கவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத்தொகுப்பு குறித்துப் பேசிய எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா “இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்ததும் இயல்பாக இருக்க முடியாமல் போயிற்று. வகுப்பில் மாணவிகளிடம் படித்துக் காண்பித்தேன். அவர்களாலும் அதன் பாரத்தைத் தாங்க இயலவில்லை. ‘நமக்குச் சொரணையிருக்கா?” என்று மட்டும் கேட்டேன். “இருக்கு” என்றவர்கள் ” இதுவரை இந்த விஷயத்தை சரிவர உள்வாங்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்கள். தொலைக் காட்சிகளில் அதிகமாக மானாட-மயிலாட, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அதிகம் பார்ப்பது வழக்கம் என்றார்கள். நாம் இனியும் இப்படித்தான் சொரணை கெட்டு இருக்கப்போகிறோமா?” என்ற கேள்வியை முன்வைத்த அரங்க மல்லிகா ஈழ விடுதலையின் பல குரல்களும் தீபச்செல்வனின் தொகுப்பில் ஒலிப்பதாகக் கூறினார். அம்பேத்கார் தமிழனுக்கு வலிமையைத் தரக்கூடியது சிங்கள பௌத்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை இன்றைய சூழலில் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனக் கருத்துரைத்தார்.

“புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்த சந்திரா அந்நியராய் உணரும் வலி மஜீத்தின் கவிதை வரிகளில் பரவித் தெரிகிறது என்று குறிப்பிட்டார். தமிழின பேரினவாத அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்-திரைப்பட இயக்குனர் என்பது மஜீத்திற்கான அறிமுகக் குறிப்பாகத் தரப்பட்டது. எனது சகோதரனை/ புலி கொன்றது/ எனது நண்பனை/சிங்கம் கொன்றது / எங்கள் பெண்களை இரண்டும் கொன்றன’ – ‘இன விடுதலைக்கான/ போராட்டத்தில்/ எல்லாத் துரோகங்களும்/ மறக்கடிக்கப்படும்’ – ‘எனது வெளியை பங்கு போட்டு/ சிங்கங்களும் புலிகளும்/ பங்கு போட்டுக் கொண்டன முதலிய வரிகளை எடுத்துரைத்த திறனாய்வாளர் சந்திரா ‘கருத்தியல் ரீதியாகப் பார்க்கும்போது இது மிகைப்படுத்தப்பட்ட பதிவாகத் தோன்றுகிறது. மஜீத் இசுலாமியராகவே இலங்கைப் பிரச்னையைப் பார்த்திருக்கிறார், தமிழ்க் கவிஞராக இன்னொரு கோடைச் சித்திரத்தை அவர் வரைவாரா’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

கவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞரும், தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் சீரிய முறையில் இயங்கி வருவதில் முக்கியப் பங்கு வகிப்பவருமான செல்மா பிரியதர்ஷன் பேசினார். ‘பெண் எழுத்து ஆண் எழுத்தை விட முற்றிலும் மாறுபட்டதே. அதேபோல் தான், வாசகரின் வாசிப்பிலும் இந்த பால் தன்மை கண்டிப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் ‘ அனாரின் இந்த கவிதைத் தொகுப்பை வாசித்தது ஆண் என்ற உணர்வோடு தான் என்ற புரிதலை வெளியிட்டார். போர்ச்சூழலில் இருக்கும் பெண்ணால் எப்படி காதல் கவிதைகளை எழுத முடிகிறது என்று தனக்கு ஏற்படும் ஆச்சரியத்தைத் தெரிவித்த அவர் கேள்விகளற்று சரணடையும் பெண் குரலையே அவருடைய கவிதைகளில் அதிகம் கேட்க முடிவதாகவும் குறிப்பிட்டார். தன் உடல் என்பதை தனக்குள்ளிருக்கும் அங்கமாக, ஒரு மனோநிலையாக உருவகப்படுத்துகிறார் அனார் என்ற செல்மா பிரியதர்ஷன் உலகின் பொதுவெளியை ஆண்களே அதிகம் அனுபவிக்கிறார்கள். ஆனால், பெண்களைப் போல் அவர்கள் தங்களை இயற்கையின் அம்சமாக உனர்வதில்லை; உருவகித்துக் கொள்வதில்லை. எனில், இந்தத் தன்மை பெண்களுடைய எழுத்தாக்கங்களில் அதிகம் காண முடிகிறது என்றவர் அனாரின் கவிதைகளில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு பேச்சாளரையும்/திறனாய்வாளரையும் அவர்கள் பேசப்போகும் தொகுப்பை எழுதிய கவிஞர்களையும் பற்றி சுருக்கமாக எனில் கச்சிதமாக லீனா மணிமேகலை அறிமுகப்படுத்தினார். இந்தக் கூட்டம் பற்றி சக-படைப்பாளி என்ற முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதற்கு ‘பேஷ்!பேஷ்! செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்ற குறுஞ்செய்தி அவரிடமிருந்து கிடைத்த தகவலை சபையில் தெரியப்படுத்தி அதற்கு கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் தனது கண்டனத்தையும் அவையில் அழுத்தமாகப் பதிவு செய்தார் லீனா.

நான்கு தொகுப்புகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்/விரிவுரைகளுக்குப் பிறகு அவை தொடர்பான கருத்துரைக்கும் அமர்வு நடைபெற்றது. கருத்துரையாளர்களில் ஒருவராக நானும் இடம்பெற்றிருந்தேன். கூட்டம் நடைபெறும் அன்று காலை மின்னஞ்சலில் தமிழாராய்ச்சி குழுமம் சார்பாக அனுப்பப்பட்டிருந்த தாமரையின் ‘கண்ணகி மண்ணின் கருஞ்சாபம்’ என்ற கவிதை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுத்த இந்தியா மண்ணோடு மண்ணாய் போகட்டும், அதன் ஆறுக ளெல்லாம் வற்றிப் போகட்டும், காடு கழனிகளெல்லாம் கருகிப் போகட்டும் என்று, இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களையெல்லாம் எண்ணப்புகாமல் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையின் ஆங்காரமும், மிகையுணர்ச்சியும் கைத்தட்டலை வேண்டுமானால் தருவிக்குமே தவிர பிரச்னைகளை எந்தவிதத்திலும் தீர்க்க உதவாது என்பது என் உறுதியான கருத்து. {மின்னஞ்சலில் வந்த கவிதையை எழுதியது இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது இலங்கைத் தமிழ்க் கவிஞர் யாரேனும் அந்தப் பெயரில் உள்ளார்களா என்று எனக்கு அப்பொழுது உண்மையிலேயே தெரியவில்லை என்பதால் அந்த என் சந்தேகத்தை அவையில் எடுத்துரைத்தேன். (எனக்குப் பின்னர் பேசிய எழுத்தாளர் சுகுணா திவாகர் யாரிடமாவது கேட்டு நான் கவிஞர் இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது ஈழத்தமிழ்க்கவிஞர் தாமரையா என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க முடியும், அப்படிச் செய்திருப்பது தான் முறை என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.)

அந்தக் கவிதையின் சில வரிகளை அவையில் வாசித்துக் காட்டி ஒரு கவிஞரின் மனிதநேயம் என்பது இத்தனை வன்மமானதாக இருக்கலாகாது என்ற எனது கருத்தை முன்வைத்தேன். அதேபோல், ‘இலங்கைப் பிரச்னை குறித்து இங்கே மக்கள் சொரணையில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதும் தவறு. இது குறித்த உண்மையான அக்கறையோடு விவாதிப்பவர்களும், எழுதுபவர்களும் செயல் படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் இந்தப் போர் குறித்து மிகவும் மேம்போக்கான, ஒருதலைப்பட்சமான கருத்துகளையே முன்வைத்தன என்பதும் உண்மை. மேலும், இந்த விஷயத்தில் அதீத சொரணை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்களால் தான் பிரச்னை தீவிரமடைகிறது” என்றேன். இலங்கைப் பிரச்னையை, போர்ச்சூழலைப் பற்றி ‘பாதுகாப்பான தொலைவிலுள்ளவர்கள் எழுதுவதற்கும், அந்த சூழலின் மத்தியில் இருப்பவர்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் காணக்கிடைக்கின்றன. பாதுகாப்பான தொலைவில் இருந்துகொண்டு ‘மொக்கைச் சிங்களவன்’ என்றெல்லாம் எழுதுவதும், பேசுவதும் அங்கே முகாம்களில் அல்லலுறும் தமிழ்மக்களைப் இன்னும் பாதிப்புக்காளாக்க வழியுண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். போர்ச்சூழலில் இல்லாமல், அந்த அவலத்தை அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ‘போரை ‘ரொமான்டொஸைஸ்’ செய்து, அதை மறத்தமிழனின் மாண்பாக, மனித நாகரீகத்தின் வளர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள் என்றேன். இந்திய ராணுவத்தினர் எல்லோரையும் வன்புணர்ச்சியாளர்களாய் விவரித்தல், தமிழர்களை சுரணை கெட்டவர்களாய் ஒட்டுமொத்தமாய்ச் சாடுதல், சாபமிடுதல் போன்ற Sweeping generalizations தவிர்க்கப்பட வேண்டியவை என்ற கருத்தை முன்வைத்தேன்.

{ஒரு சொட்டு தண்ணீருக்காக/விக்கி மடிந்த/ எங்கள் குழந்தைகளின் ஆத்மா/சாந்தியடைய/இனி ஒரு நூற்றாண்டுக்கு/உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்/போகட்டும் !/ மழைமேகங்கள் மாற்றுப்பாதை கண்டு/மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடிச் சோற்றுக்கு எங்களை/ஓட வைத்தாய்/ இனி உன் காடு கழனிகளெல்லாம்/ கருகிப் போகட்டும்’

இப்படி சாபமாய் கொடுத்துக் கொண்டே போகிறார் கவிஞர் தாமரை. இந்தக் கவிதை குறித்த எனது பார்வையை தமிழ் ஆராய்ச்சிக் குழுமத்தினருக்கும் அனுப்பி வைத்தேன். எனக்கு ஆதரவாய் ஓரிருவர் எழுதியிருந்தார்கள். என்றபோதும், நிறைய கடிதங்கள் இந்தியா மண்ணோடு மண்ணாகப் போக வேண்டும், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை வீழ்த்திச் சாய்க்கும் நாள் வெகுதூரத்திலில்லை. அன்று நாங்கள் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரிப்போம் என்ற ரீதியில் அமைந்திருந்தன. வேறு சில கடிதங்கள் இந்தியாவில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், இந்திய தேசியம் என்பதன் அடிமைகளாக இருப்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் இந்தியாவிலுள்ள தமிழர்கள் என்று பேசியிருந்தன. (அப்படித்தான் இங்குள்ள தமிழர்கள் உண்மையாகவே கருதுகிறார்களா? அப்படித்தான் அவர்கள் உண்மையிலேயே நடத்தப்படுகிறார்களா? இதன் மறுபக்கமாக இன, மத, நிற, சாதி முதலான பல்வேறு பேதங்களை மீறிய அளவில் ‘all are equal; some are more equal’ என்ற நிலை தானே உலகெங்கும் நடப்புண்மையாக இருந்து வருகிறது?) இன்னும் சில கடிதங்கள் “அவர் தமிழச்சி. அப்படித்தான் எழுதுவார். ஆனால் நீங்கள்???” என்று என்னை இடித்துரைத்திருந்தன. இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் தமிழையும், தமிழுணர்வையும் யாரும் தங்களுடையதே தங்களுடையதாக்கிக் கொண்டுவிட முடியாது !}.

இங்கே நமக்கு சொரணையே இல்லை என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? இங்கும் ரத்த ஆறு ஓட வேண்டுமா? தொப்புள்கொடி உறவு என்ற சொற்பிரயோகத்தை உபயோகிக்கும் நாம் போர் என்பது உடனடியாக மக்களைக் கொன்று குவிக்கிறது என்றால் வறுமை மக்களை நாளுக்குநாள் நலிவடையச் செய்து கொன்றழிக்கிறது. தேர்தல் காலத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசியது, அந்த சமயத்தில் அம்பத்தூர் முதலான பல பகுதிகளில் ஏரி ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அது குறித்தெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில் (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்க) மிகவும் குறைவாகவே பேசப்பட்டது. இவ்வாறு, மிக அதிகமாக ஈழப் போர்ச்சூழல் குறித்துத் தரப்பட்ட கவனம், இங்கு பற்றாக்குறை வாழ்வு வாழ்ந்து வரும் மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வழியுண்டு என்றேன். உரிமைப் போர், ஆதிக்கப் போர் என்ற வேறுபாடுகள் நாம் அறிந்தவையே. ஆனால், எந்த வகைப் போரானாலும் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக முடித்துவைக்கப் படுவதற்கான முயற்சிகள் உண்மையான அக்கறையோடு மேற்கொள்ளப் பட வேண்டும். அப்படியில்லாமல் போர் தான் மனிதனின் சொரணையுணர்வை நிரூபிப்பது என்பதான பார்வை எந்தவிதத்தில் சரி ?
மனிதன் அதிகபட்சமாக முப்பது நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம். அந்த குறுகிய வாழ்நாள் முழுக்க அவனைப் போர்ச் சூழலிலேயே இருக்கும்படி நிர்பந்தித்தல் எத்தனை அவலமானது? இங்கே இருபது வருடங்களுக்கும் மேலாக அகதிகளாகவே முகாம்களில் வாழ்ந்து வருபவர்களின் நிலை எத்தனை துயரமானது. அவர்கள் இங்கேயும் நினைத்த இடத்திற்குப் போய் வர முடிவதில்லை. அவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாகவே உள்ளது

(நான் கருத்துரைத்துக் கொண்டிருக்கும்போது கவிஞர் ஜெயபாலன் ‘தமிழ் மீனவர்கள் தொடர்ந்து சாகடிக்கப்படுகிறார்களே, அது குறித்தும் பேசுங்கள்” என்றவிதமாய் இரண்டு மூன்று தடவைகள் என் பேச்சில் குறுக்கிட்டார். நான் கூறிய கருத்துக்களில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் என்ன பேச வேண்டும் என்று வகுத்துரைக்க வேண்டிய தேவையென்ன? தமிழக மீனவர்கள் குறித்து அவர் எதுவும் அங்கே கருத்துரைக்கவில்லை. இன்று தமிழக மீனவர் நிலையைப் பற்றிப் பேசுவதென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளாகவில்லையென்ற நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருக் கிறதல்லவா? சில மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதால் உடனே இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அராஜகங்களை ஆதரிப்பதாகவோ, தமிழுணர்வு இல்லையென்றோ, ஈழத்தமிழர்களின் துயரம் குறித்த அக்கறை இல்லையென்றோ அர்த்தமல்ல. அப்படிப் பகுப்பதிலுள்ள அரசியல் அவதானிப்பிற்குரியது).

இறுதியாக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாக்கங்கள் இந்தியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை விட தரமானவை என்ற கருத்து திரும்பத் திரும்ப எந்தவித முறையான ஒப்பாய்வும் இல்லாமல், போர்ச்சுழலைப் புகழ்ந்தேத்துவதே குறியாய் முன்வைக்கப்படுவதற்கும் என்னுடைய ஆட்சேபத்தைத் தெரிவித்தேன்.

(நான் பேசி முடித்ததும் லீனா மணிமேகலை ஒருவர் தனது கருத்துகளை முன்வைக்கும்போது மற்றவர்கள் குறுக்கிட வேன்டாம் என்று அவையோரி டம் கேட்டுக் கொண்டார்).

தனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். அவற்றில் சில:

கவிஞரின் பிற ஐந்து கவிதைத் தொகுப்புகளோடு ஒப்புநோக்க இது காத்திரம் குறைந்ததாகவே எனக்குப் படுகிறது. வழக்கமான காதல் வர்ணணைகள் , விடலைக் காதல் கவிதைகளே இதில் அதிகம். ஈழக் கவிஞர் என்றால் நமக்கு ஒரு எதிர்பார்பு இருக்கும். அது இந்தத் தொகுப்பில் நிறைவேறவிலை என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. ஈழக் கவிஞர்கள் என்றால் போர் பற்றி, புலப்பெயர்வு பற்றிக் கவிதைகள் இருக்க வேண்டும் என்று எண்ணும் விதத்தில் நம் மனங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஈழக் கவிஞர் ஏன் காதலைப் பற்றி எழுதக் கூடாது? ஆனால், முதிர்ச்சியான காதல் கவிதைகளை இந்தத் தொகுப்பில் காண முடியவில்லை.

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை அவை வெளிப்படையாகப் பேசாத, தன்னைத் தனக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ளும் கவிதைகளாக அமைந்திருக்கின்றன. வேறு தன்னிலைகள் இடம்பெறுவதில்லை. வன்முறையை எதிர்க்கும் கவிதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. நிச்சயமற்ற வாழ்க்கைத்தன்மையை பேசும் கவிதைகளும் சில உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், அகிலனின் கவித்துவம் இத்தொகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படலாகாது.

· ஈழக் கவிஞர்களின் விரிவான புலம்பெயர் அனுபவங்கள் அவர்களுடைய கவிதைகளில் அரிதாகவே இடம்பெறுகின்றன. நாட்டைப் பிரிந்த ஏக்கமே அவர்களுடைய கவிதைகளில் அதிகம்

தலித் கவிஞர்கள் என்னும்போது கவிஞர் மதிவண்ணன் போன்றவர்களை ஒதுக்கி விடுவது தான் நம் வாடிக்கையாக உள்ளது.

தாமரை, சீமான் போன்றவர்களின் தொனியும், மொழியும் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால், சாபமிடுவது கவியின் உரிமை. பாரதி சாபமிடவில்லையா? அது ஆதங்கத்தில் பிறந்ததல்லவா?

பௌத்தம் நேசமிக்கது என்றாலும் அதன் யதார்த்தத்தையும் பார்க்க வேண்டும்.

· இந்தியர்களை சாபமிட்டது நியாயம் தான். இந்திய தேசியம் என்பதே ஒரு பார்ப்பனீயக் கட்டமைப்பு தான்.

தமிழ் நாட்டுத் தமிழ்க் கவிஞர்கள், ஈழத் தமிழ்க் கவிஞர்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒப்புநோக்குவதும் தவிர்க்கமுடியாதது. அதேசமயம், ஈழத்தமிழ்க் கவிஞர்கள் என்ற ஒருபடித்தான அடையாளத்தையும் மறுக்கிறோம்.

ஒரு பக்கம், நம் அத்தனை செயல்களும் இன்று கண்காணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஈழப் படுகொலைகள் வெகு சுலபமாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. இந்த வினோத சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

*(கட்டுரையாளர்கள், கருத்துரையாளர்களின் முக்கியக் கருத்துகளில் சில பதிவு செய்யப்படாது விடுபட்டிருந்தால் அது என் நினைவுகூரலின் குறைபாடே தவிர உள்நோக்கம் கொண்டதல்ல. முடிந்தவரை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன்)

எழுத்தாளர் சுகன் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:-
பௌத்தம் அன்புமயமானது. கோபமான மனநிலையிலிருந்து நாம் உரையடலைத் தொடங்கினால் பயன் விளையாது. ஆனால், ‘ காட்டிக் கொடுப்பவன் எங்கே- சாகும் வரை அடி’ என்ற திரு.காசி ஆனந்தன் கவிதையிலிருந்து தான் ஆரம்பத்தில் ஈழக் கவிதை கட்டமைக்கப் படுகிறது. அதற்கு அடுத்த தளம் சேரனது கவிதைகள். போரை கவிதையில் வலியுறுத்தினார்கள் கவிஞர்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்கே நிலைகொண்டிருக்கிறார்கள்.
போர் எல்லாவற்றையும் அழித்துவிடும். இலக்கியம் வாழ்க்கை எதுவுமே மிச்சமிருக்காது.
தமிழர்கள் வேறு, தலித்துகள் வேறு என்று எழுதும் கவிஞர் எப்படி நியாயமாவார்? சாதிகள் இன்னும் அங்கே இருக்கின்றன.
மலைவாழ் தமிழக மக்கள் வெறும் இலக்கமாகப் பார்த்து அனுப்பப்பட்டார்கள். இரண்டாம் தலைமுறையாக முஸ்லீம்கள் அகதிகளாக இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.

Series Navigation

author

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts