விளம்பர இடைவேளைகள்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



பத்தாண்டு கால அளவில் ஒரு சமுதாயத்தில் மதிப்பீடுகளும், போக்குகளும் மாறும் என்பது பொது கணிப்பு. அதைவிட வேகமாக மாற்றங்கள் உட்புகும் காலம் இது.

இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? இது தகவல் புரட்சிக் காலம். உலகின் எந்த மூலையில் ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதிக பட்சம் சில மணி நேரங்களிலேயே அது உலகம் முழுதும் பரவி விடுகிறது. இந்தோனிஷிய பூகம்பமோ, சோமாலியக் கரையோரம் கடற்கொள்ளையோ ஒரு சாதாரணக் குடிமகனுக்கே எட்டிவிடுகிறது. தில்லியில் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தை தோல்வி, என சில நிமிடங்களிலேயே செய்தி கிடைத்து தென்மாநிலங்களில் வேலைநிறுத்த அறைகூவல்கள் கேட்கின்றன…

வீடியோ கான்·பரன்சிங் வேறு வந்திருக்கிறது!

உலகத் தலைவர்கள் உடனே அதுபற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலகெங்கிலும் அதன் தாக்கங்கள், எதிரொலிகள் தெரிகின்றன. பத்திரிகைகளோ, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களோ அவசர அவசரமாக அதை ‘·ப்ளாஷ்’ செய்கிறார்கள். தொலைக்காட்சியில் செய்திச் சேனல்களே நிறைய வந்து விட்டன. 24 மணி நேர செய்திச் சேவை. வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் அதை ஊடுருவி நாடாச் செய்திகள் என முக்கிய விஷயங்களை வெளியிடுகிறார்கள்.

இன்றைய சாமானியன் கண்ணும் காதும் வாயுமான செயல்வேகத்துடன் வளர்ந்திருக்கிறான். வெளிநாட்டு விவகாரமோ, அல்லது உள்நாட்டு நிகழ்வோ, எந்தப்பிரச்னை குறித்தும் தன் அரசாங்கம் இது பற்றி என்ன முடிவு செய்கிறது என அவன் கவனிக்கிறான். அதைப் பற்றி சிந்திக்கிறான். வெளியே பேசி விவாதிக்கிறான். மூளைப் பரபரப்பானவன் இந்தக்கால மனிதன்.

அவரவர் உலகம் அகலப்பட்டு விட்டது. அல்லது உலகம் நம் உள்ளங்கைக்குள் சுருங்கிக் கொண்டு வருகிறது, எனவும் சொல்லலாம்.

இரவு பகல் கிடையாது. இரவுப்பொழுது இங்கிருந்துகொண்டு அமெரிக்கப் பகலைத் தொலைக்காட்சியில், கணினியில் பார்த்து ரசிக்கிறார்கள். தொடரபு கொள்கிறார்கள். கடுமையான வெயிலில், இமயமலைக் காட்சிகளை மனதுக்கு இதமாக தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள்.

வீட்டில் குளிர்சாதன வசதிகள் வந்து விட்டன. வெப்பம் பாதிக்காதவாறு மனதன் உள்ளே முடங்கிக் கொண்டு ஆசுவாசப் படுகிறான். பனி நாடுகளில் வீட்டில் மின்சார வெப்பமேற்றிகள் கையாளுகிறார்கள்… விஞ்ஞான வளர்ச்சியின் வசதிகள் பெருகி விட்டன.

உலகம் சார்ந்து தான், என்கிற காலம் போய், தன் சார்ந்த உலகத்தை தன் வசதிப்படி மனிதன் நிர்ணயித்துக் கொள்கிறான். சிருஷ்டித்துக் கொள்கிறான்.

உடலின் சகல உள்ளுறுப்புகளையும் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, என்ன பிரச்னை என்று மருத்துவர்கள் தெளிவாகக் கண்டறிகிறார்கள். சாவின் விளிம்பு வரை போனவனை மீட்டுத் தர அவர்களால் முடிகிறது.

உலக நாடுகளிடையே பரஸ்பர பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டன. முக்கியமாக வானிலைச் செய்திகளை அவர்கள் சிறப்பாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். பக்கத்து நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விட, அவர்களால் உதவிசெய்ய முடிகிறது.

விண்கலங்கள் வானில் மிதந்தபடி செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புயலையும் மழையையும் துல்லியமாக கணிக்கிறார்கள். விவசாயி மழை பார்த்து விதைக்க முடியும். புயல் ஆபத்துகளை முன்கூட்டியே அறிய முடியும். கோடையில் செயற்கை மழையை வருத்துகிறார்கள்!

இருந்த இடத்தில் இருந்தபடி உலகின் எந்த மூலையையும் தொடர்புகொள்ள முடிகிறது நம்மால். தொலைத் தொடர்பு வசதிகள் அபாரமாய் வளர்ச்சியடைந்து விட்டன.

எந்தவொரு கால மாற்றமும் சமுதாய மாற்றமும் தன்னளவில் முழு வெற்றிகளைக் கொணர்வது இல்லை. இந்த ஊடக வளர்ச்சி, தொலைத் தொடர்பு வளர்ச்சிகளின் பாதிப்பு என்ன?

இந்தியா ஓர் ஆன்மிகக் கலாச்சார நாடு. மக்கள்தொகை நெருக்கம் மிக்க நாடு. இந்திய கலாச்சாரம் தொன்மை மிகுந்தது. இந்திய மொழிகள் தொன்மையானவை. இந்த் தொன்மையின் ஆகச் சிறந்த விஷயங்கள் நம்மிடையே இருக்கின்றன. அதைப் பெருமையோடு நாம் தாங்கிக் கொண்டு உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறோம்.

நமது வேதங்களையும், கணித சூத்திரங்களையும், இலக்கியச் செழுமையையும் வியந்து பாராட்டினார்கள் வெளிநாட்டினர். நமது கலாச்சாரத்தை ஆன்மிகத்தை கற்றுக்கொள்ள விரும்பி அவர்கள் இந்தியா வந்தனர்.

ஊடகத்துறை வளர்ச்சி பல கலாச்சாரங்களை ஒன்று கலக்கிறதாய் இருக்கிறது. பேச்சுவழக்குகள், பாவனைகள், உடையுடுத்துதல், முக அலங்காரம்… என இந்த ஊடகங்கள் வேறு கலாச்சாரத்தை நம்மீது திணிக்கின்றன. நமது மொழிகளை மறந்து ஆங்கிலத்தில் பேசுவதை கெளரவமாகக் கருதுகிறோம்..,

ஊடகங்கள் வணிக வளாகங்களாகச் செயல்படுகின்றன.

சீயக்காய் என நாம் பயன்படுத்தும் கூந்தல் பராமாரிப்புப் பொடியை அவை ஷாம்பூவால் வீழ்த்த முயற்சிக்கின்றன. கண்ணைப் பறிக்கிற, மூளையைப் பறிக்கிற விளம்பரங்கள். வெயிலுக்கு மோர் குடிக்கிற மனிதனை, குளிர்பானம் குடி, ஐஸ்கிரீம் சாப்பிடு என அவை கையைப் பிடிக்காத குறையாய் அழைக்கின்றன. சாதாரணமாகவே புதுமையை விரும்பும், மாற்றத்துக்கு ஆவல்படும் மனம் இதில் வீழ்ந்துபடுகிறது. இதுரீதியாய் யோசிக்க அவனுக்கு அந்த விளம்பரங்கள் இடந்தருவதில்லை.

செய்திகளே கூட, அதைத் தொடர்ந்த பிற சித்தரிப்புகளால் இந்த ஊடகங்களில் திசைதிருப்பப்பட்டு விடுவதையும் பார்க்க முடிகிறது. ஒரேசெய்தியை விதவிதமாகச் சொல்கிறார்கள். – கருணாநிதிக்கு தில்லி கண்டிப்பு, என ஒருவர் சொல்வார். கருணாநிதி தில்லி விரைந்தார் – என மற்றொருவர். கருணாநிதி தில்லியில் அவசர ஆலோசனை – என இன்னொருவர். ஒரே செய்தியை சாதகமாகவும், பாதகமாவும் வெவ்வேறு ஊடகங்கள் வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றன. இந்த அரசியல்வாதிகள், தலைவர்கள் அவர்களே பேசிக் குழப்புவது வேறு விஷயம்.

ஊடகங்கள் வணிக வளாகங்களாகி விட்டன. எந்த நிகழ்ச்சியிலும் இடையே ஊடறுத்து விளம்பரங்கள் போடுகிறார்கள். ”ஜெயலலிதா மீது கருணாநிதி கடும் தாக்கு! – விளம்பர இடைவேளைக்குப் பிறகு”… என்கிறார் செய்தி வாசிக்கிறவர். செய்தி வாசித்து முடிந்ததும், வாசித்தவரின் உடைகள், நகைகள் ஸ்பான்சர் செய்தவர், என விளம்பரங்கள்.

பிறந்தநாள் வாழ்த்து, கட்சிப் பிரச்சாரம் என்று தெருவில் சுவரில் சுவரேதெரியாமல் நெருக்கமாய் போஸ்டர்கள். டிஜிடல் பேனர்கள்.

நுகர்வுக் கலாச்சார மேல்நாட்டு பாணி அப்படியே உலகையே கவ்விப் பிடித்து ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. விற்பனை உத்திகளாக அவர்கள் கடைகளில் செய்யும் நேர்த்தியான அலங்காரங்கள், விளம்பர உத்திகளை மீறி. நம்மாட்கள் ஒருபடி மேலே போய், டிஜிடல் பேனர், போஸ்டர் என பிறந்தநாளுக்கும் கண்ணீர் அஞ்சலிக்கும் தெருவையே சுவர்களையே சூறையாடுகிறான். ”எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன இவர்களுக்கு நன்றி” என ஒரு போஸ்டர்!

நுகர்வுக் கலாச்சாரத்தின் மாய வலையில் உலகம், குறிப்பாக நாம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறோம். குடும்ப நலத் திட்டங்கள் போன்ற சமூக நலத் திட்டங்கள் இங்கே தேவையாய் இருந்தன. மேலை நாடுகளில் ஜனத்தொகை இத்தனைக்கு மிரட்டுவதாக இல்லை. நாம்தான், நாமிருவர் நமக்கு இருவர், என முழங்க ஆரம்பித்து, இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் – என நிற்கிறோம். இதைவிடக் குடும்பத்தைக் குறைத்து விட முடியாது அல்லவா?

உறவுகளின் மேன்மை, அண்ணன் தம்பிகளோடு, அக்கா தங்கைகளோடு வளர்வதால் மனம் பெறும் அழகிய பண்புகள், விட்டுக்கொடுத்தல், கூட்டாகக் கலந்து மகிழ்தல், கூட்டுக் குடும்பம் எனப் பெரியவர்களை மதித்தல், பேணுதல் – எல்லாமே கைவிட்டுப் போய்விட்டன. முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

நுகர்வு கலாச்சாரத்தின் பாதிப்பினால் நமது குடும்ப உறவுகள் வீர்யமிழந்து விட்டன. வசதிகளைப் பெருக்கிக் கொள்கிற ஆவலில் தேவையில்லாத எத்தனை சாமான்கள் வீட்டில் குவிகின்றன. இதல் அடுத்த வீட்டில் ஒரு சாமான் வாங்கி, அது நம்மிடம் இல்லாததில் எத்தனை இழப்பாய் உணர வைத்து விட்டார்கள்!

எதற்கெடுத்தாலும் புதுமை தேடுகிற உள்ளாவேசத்தைத் திணிக்கின்றன அவை. ஒரு வருடம் பயன்படுத்தி விட்டால் அதை மாற்றி புது செல்போன் வாங்கு – எக்ஸ்சேன்ஜ் ஆ·பர் என்கிறார்கள். பழைய நகைகளை மாற்றி புது மோஸ்தரில் அணிந்து கொள்ள விளம்பரங்கள். சாமானியனின் ஆசை எனும் சிறு பொறியை ஊதிப்பெரிசாக்கி அவர்களை சுயநல அடிப்படையிலேயே வைத்திருக்க இந்த நுகர்வு கலாச்சாரம் உந்துகிறது.

பாசம் ஒட்டுதல் விட்டுக்கொடுத்தல் இரக்கம் பரிவு, பிறரிடம் நேசம் என அழகிய மானுடப் பண்புகளை ஒளிமங்கச் செய்கின்றன நுகர்வு வேட்கை.

உனக்குப் பிறந்த நாளா – நண்பர்கள் கூடி போஸ்டர் அடி. தெருவில் ஒட்டு. ஒட்டாத நண்பன் அன்பில்லாதவனாக ஆகிவிடுகிறான்!

கல்யாண நாளா கடையில் போய் ஒரு வாழ்த்து அட்டை வாங்கி, அதை சஸ்பென்சாஸ் காலையில் அவளிடம் அவன், அவனிடம் அவள் தர வேண்டும். தராதவர்கள் அன்பில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள்.

எதையுமே பெரிசு படுத்தி விகாரப்படுத்தி விட்டார்கள்.

மகளிர் தினம், தந்தையர் தினம், தாய் தினம் – எல்லாம் வியாபாரப் பின்னணியுடன். வியபாரத் தந்திரத்துடன் அவை பெருவேட்டையாடுகின்றன மக்களை. அட்சய திருதியை நன்னாள் – நகை வாங்கிச்செல். புத்தாணடா, பொங்கலா… எதையோ சொல்லி தள்ளுபடி விற்பனை என அவசரமாய் மக்களை அழைக்கிறார்கள். பொய்கள் விளம்பர உத்திகள் என்கிற நியாயம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது.

ஒருகாலத்தில் ஒருநாட்டின் மேன்மை மெல்ல அடுத்த நாட்டுக் கலாச்சாரத்துடன் கலந்து முயங்கி இரண்டு நாடுகளும் அதனால் பயன்பட்டன, என்றிருந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கலாச்சார மேன்மைகள் இற்று வீழ்ந்தன. மனிதனின் பலவீனங்களை, வியாபாரப் போட்டி உலகம் அங்கீகரிக்கிற பாவனையுடன் மக்களை வீழ்த்தி வருகிறது…

மீள்தல் இனி சாத்தியமா?

(நன்றி – கல்கி வார இதழ் 07 06 2009)

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts