நேசகுமார்
ஹமீது ஜாஃபர் எனக்கு பதிலளித்து மே 14,2009 திண்ணை இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905123&format=html).
கடிதத்தில் இருக்கும் எள்ளல் தொணியையும், பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளையும் தவிர்த்து விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கிய காலத்திலிருந்து வசவுகளையும் மிரட்டல்களையும் சந்தித்து வருவதால் இது பெரிதாகவோ, மனம் வருந்தவைக்குமளவுக்கோ இல்லை. அதற்காக ஹமீது ஜாஃபரை நான் நொந்து கொள்ளவும் இல்லை. ‘நம்பிக்கையாளர்களின்’ விசேஷ குணாம்சம் இது. எதிராளியை அடித்து மிரட்டுவதும், முடியாவிட்டால் வசைபாடுவதும், அதுவும் முடியாவிட்டால் மனதிற்குள்ளே வெறுத்து புலம்புவதும் ஈமானின் அம்சம் என்று ஒரு ஹதீஸில் முஹம்மது குறிப்பிடுகிறார். அதை அப்படியே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல ஈமானிகள் பின்பற்றிவருகின்றனர். இதில் ஹமீது அவர்களை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை என்பது எனக்கு தெரியும். இது எனக்கு இன்னொரு நம்பிக்கையாளரை நினைவுக்கு கொண்டு வருகிறது. அது ஒரு விசித்திரமான கதை, நம்ப முடியாத அளவுக்கு, மேஜிக்கல் ரியலிஸ கதைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கான ஆனால் நிஜக்கதையது.
***
பல வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் பண்பான மனிதர், மனித நேயமிக்கவர், ஆன்மீகவாதி இன்றிருக்கும் பெரிய மனிதர்களைப் போலில்லாமல் நிஜமாகவே பெரிய மனிதர். தற்போது அவரது எழுத்துக்கள் எல்லாம் நூல்களாகவும் வந்துள்ளன.
வெறுமையாய்த் தெரிந்த நாளொன்றில் அவரது நூல் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு இடத்தில், ‘இறைவனுக்கான வழியை காட்டுபவர் சொன்னால் கொலையும் செய்ய வேண்டும்’ என்று எழுதியிருந்தார். தூக்கிவாரிப் போட்டது.
இதைத் தொடர்ந்து அந்த கல்ட் தலைவரை, வழிநடத்துபவரின் எழுத்துக்களை, பிரசங்கங்களை படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெரிய விழிப்புணர்வுக்கு அது இட்டுச் சென்றது.
***
நண்பர் அவரை சந்தித்தபோது முதல் பார்வையிலேயே நண்பரின் ஆன்மீக அனுபவங்கள் குறித்து அந்த கல்ட் தலைவருக்கு தெரிந்திருக்கிறது. நண்பருக்கு அப்போது மண வாழ்வுக்கு வெளியே ஒரு தொடர்பும் இருந்திருக்கிறது. அதையும் அந்த தலைவர் சொல்லி, இந்த ஆன்மீக குழுவில் இருப்பவர்களிடம் அது போன்ற வழக்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லி இரண்டாவது மனைவியாக முறைப்படி, வெளிப்படையாக அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
இதைத் தவிர எண்ணற்ற அற்புதங்களை அவர் தமது ஆன்மீக வழிகாட்டியிடம் நேரடியாக கண்டிருக்கிறார். தியானத்தில் அமர்ந்தால் நாள் கணக்கில் அப்படியே இருப்பாராம். ஒருவித இறை ஆவேச நிலையில் அவரிடமிருந்து குழறலாக சொற்கள் வெளிப்படுமாம். அந்த தலைவர் சொன்னதை ஒரு நூலாக தொகுத்திருக்கின்றார்கள், சாதாரண தமிழர்களே தடுமாறும் அளவுக்கு கடினமான, வித்தியாசமான நடை- அது போன்ற ஒன்றை இயற்றுவது மனிதர்களால் சாத்தியமானது இல்லை என்ற நம்பிக்கை அந்த குழுவினரிடையே இருக்கிறது.
தலைவரின் பாக்கள் நிரம்பிய அந்த நூலைப் படிக்கும்போது அதை இயற்றியவருக்கு தமிழக சித்தர் பாரம்பரியத்துடன் நிரம்ப பரிச்சியம் இருந்திருக்கிறது, நிறைய தமிழ் ஆன்மீக நூல்களை கற்றவரால் தான் இப்படியெல்லாம் இயற்ற முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், வழிகாட்டியோ பாரம்பரிய ஆன்மீகக் கல்வி இல்லாதவர். வியாபாரம் செய்துவந்த அவர் ஒரு குருவிடமிருந்து நேரடியாக சில ஆன்மீக வழிமுறைகளை கற்றிருக்கிறார். இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார், அவ்வளவே. சைவ சித்தாந்தங்கள் பற்றிய கல்வியோ, சித்தர் பாரம்பரியத்துடன் தொடர்போ அற்றவர் அவர்.
***
அவரது பிரசங்கங்கள் சிலவற்றை படித்தேன். மிக முக்கியமான மறந்துபோன, மறைக்கப்பட்ட ஆன்மீக அடிப்படைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘முப்புரி நூல்’ என்பது உள்ளே இருக்கும் சில சக்தியோட்டங்களின் புற அடையாளம்; காயத்ரி மந்திரம் உள்ளே இருக்கும் ஆன்மீக ஒளியை தரிசிப்பதை குறிக்கிறது; ஆலயங்கள் என்பன உள்ளார்ந்த பயணத்தின் புறக்குறியீடு இப்படி பலவும் சொல்லி, “இதையெல்லாம் மறந்துவிட்டு, புறக்கணித்துவிட்டு குறியீடுகளையும், சடங்குகளையும் பிடித்துக்கொண்டு தவறான பாதையில் பயணிக்கின்றீர்களே, நீங்கள் நேர் வழிக்கு, சத்திய மார்க்கத்திற்கு வாருங்கள்” என்ற கோரிக்கையை அவர் அவநம்பிக்கையாளர்களிடம் விடுக்கின்றார்.
தாம் வள்ளலார், திருமூலர் போன்ற தமிழக சித்தர்களின் பாரம்பரியத்துடன் வந்தவர் எனவும், அந்த சித்தர்களெல்லாம் சொன்னவற்றை பிறர் திரித்துவிட்டார்கள், மறைத்துவிட்டார்கள் எனவும் சொல்கிறார். கடவுள் என்று எல்லோரும் ஏத்தும் மறைபொருளை தம்மால் நேரடியாகக் காட்டிட முடியுமென்றும் சொல்கிறார். அவருடன் இருந்த நண்பரைப் போன்ற பல நம்பிக்கையாளர்களுக்கு தியான நிலையில் ஒரு வித அதிசய நிகழ்வை நிகழ்த்திடவும் அவராம் முடிந்திருக்கிறது.
இதுவும் எனது நண்பரின் நம்பிக்கைக்கு ஒரு மிக முக்கிய காரணம் என்று தோன்றியது. முறையான கல்வியில்லாத, சித்தாந்தங்களுடன் சிறிதும் முறைப்படியான பயிற்சி இல்லாத ஒருவர், இறை நிலையிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர்கிறார், ஒரு அற்புதமான, initiationன் போது வாங்குபவர்களை அதிசயிக்க வைக்கும் உணர்வலைகளை எழுப்புகிறார், முந்தய வேதங்களின் உண்மைப் பொருள்களை எல்லாம் சுட்டிக் காட்டுகிறார் – இது அமானுஷ்யமான விஷயமில்லாது வேறென்ன என்ற நம்பிக்கை எனது நண்பரின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
***
அந்த கல்ட் தலைவருடனேயே வசிக்க ஆரம்பித்தார் நண்பர். அதற்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தற்போது முழுக்க முழுக்க ஆன்மீகவாதியானார். அந்த ஆன்மீக குழுவை சேர்ந்தவர்கள் தமது தலைவரை சுற்றியே தமது வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். தலைவர் ‘ராஜ கம்பீரத்துடன்’ சிம்மாசனத்தில் அமர சுற்றி வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருக்கும் புகைப்படத்தையும் ஒரு நாள் நான் பார்த்தேன்.
தலைவரை சுற்றி எழுந்த சமுதாயம், தனக்கென ஒரு விசேஷமான புற அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. ஜாதி/மத வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயம் கட்டியமைக்கப் பட்டது. ஆனால், இந்த சமுதாயம் மூடப்பட்டதாகவும், பிற சமுதாயங்கள் வழிகேட்டிலும், தவறான பாதையிலும் உள்ளன என்ற முன்முடிவிலும் இருந்தது.
அநேகமாக என்ன நிகழ்ந்தது என்று துல்லியமாக எனக்கு தெரியாவிட்டாலும், அந்த கல்ட் , நபித்துவ கோட்பாட்டை பின்பற்றியே அமைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. ஃபார்முலா அதே தான் – பிறர் தவறான பாதையில் இருக்கிறார்கள், பிறரது ஆன்மீகம் தவறானது, தம்முடைய பாதை அறிவுபூர்வமானது – சரியானது என்ற நம்பிக்கை, அங்கே அந்த கல்ட் தலைவரை ஏற்ற ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்து இறக்கும் வரை அவர்கள் ஏகப்பிடிப்புடன் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், மரணமே அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. அங்கே மரணிப்பவர்களின் மரணம், வித்தியாசமான ஒன்றாக மல-ஜலம் வெளியாகாமல், உடல் நாறாமல், மரணத்தை வென்றவர்களாக, மரணமே இல்லாதவர்களாக, நித்திய வாழ்வு வாழ்பவர்களாக தம்மை அவர்கள் கருதிக்கொண்டனர்.
அந்த கல்ட் தலைவரை கல்கி அவதாரமாக, கடைசி நபியாக, கலியுக மீட்பராக விவரித்து எழுதிய நூல்கள் எல்லாம் இருக்கின்றன. அவரும் மாற்று சமுதாயத்தினரால் துன்புறுத்தப்பட்ட கதைகள் இருக்கின்றன, அவரது சமூகமான ராவுத்தர் சமுதாயமே அவரின் வீட்டை எரித்ததாம். தப்பி ஹிஜரத்து செய்தாராம் என்றெல்லாம் (அதே நபித்துவ கதைகள், அவை உண்மையாக இருக்கலாம் – ஆனால் அந்த ஒப்புமையை நினைத்துக் கொள்கிறேன்) சொல்லப் படுகின்றன.
***
ஒரு சரியான பாதைக்கு சனங்களை கொண்டு வருவதற்கு தாம் எவ்வித பாதையையும் கையாளலாம் என்ற இஸ்லாமிய கோட்பாடு அவர்கள் உள்ளத்தில் பதிந்திருந்ததா என்ற எனது சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை, தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், கிட்டத்தட்ட வஹி உட்பட எல்லாவற்றிலும் முஹமதின் பாணியை நான் கண்டேன். இஸ்லாமிய ஆய்வுக்குப் பின்புதான் இந்த உளவியலை நான் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த உளவியல் தம்மை தாம் தேர்ந்தெடுத்த ஆன்மீகப்பாதையின் காரணமாக உயர்வானவர்களாக கருதுகிறது, பிறரது பாதை அவர்களை படுகுழியில், இருள் நரகத்தில் தள்ளிவிடும் என்று அச்சுறுத்துகிறது. தமது கல்ட் தலைவரே விடுவிக்க, காப்பாற்ற வல்லவர், அவர் மூலமே இறைப்பாதை திறக்கும் என்று போதிக்கிறது. இதையே இன்று ஹமீது ஜாஃபர் சொல்கிறார், கொஞ்சம் மாறுதல்களுடன். (முஹம்மதுக்கான சில விசேஷத்தன்மைகளை தவிர்த்து) இதையே வஹ்ஹாபிகள் சொல்கின்றனர். இதையே அஹமதியா முஸ்லீம்கள் சொல்கின்றனர், (பஹாவுல்லாஹ் என்ற நபியின் நம்பிக்கையாளர்களான, அந்த நம்பிக்கையின் காரணமாக ஈரானின் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்படும்) பஹாய் முஸ்லீம்கள் சொல்கின்றனர். ஒரு அளவில் கிறிஸ்துவமும் இதையே சொல்கிறது.
இந்த நபித்துவ கோட்பாட்டை பின்பற்றும் ஒவ்வொரு குழுவும் இதையே சொல்கிறது. ஆனால், இங்கே ஹமீது ஜாஃபருக்கும் மற்றவர்களுக்கும் அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. ஒரு மதத்தில் தவறு என்றால், அடுத்த மதம் சரியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கரூராரும், பட்டினத்தாரும் கோவில் சிலையை உடைத்ததில்லை. மாறாக தஞ்சைப் பெரிய கோவிலின் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தது, இராஜராஜனின் குருவான கருவூரார் என்ற கதையே தமிழகத்தில் புழங்குகிறது; அதை ஊர்ஜிதம் செய்வது போல கருவறையில் கருவூராரின் ஓவியம் இன்றும் இருக்கிறது, கருவறைக்குப் பின்னால் கருவூராரின் சமாதியும் இருக்கிறது. ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று சடங்குகளில் ஆழ்ந்திருந்தோரை தட்டியெழுப்ப முயன்ற தமிழகச் சித்தர்கள், தான் முத்தமிடும் கல்லை முத்தமிடுவது உயர்ந்த வழக்கு என்றும், பிறரது கடவுள்கள் அடித்து நொறுக்கப்பட வேண்டிய கற்கள் என்ற இருமை நிலையை பின்பற்றவில்லை. இந்த இருமையே ஆபிரகாமியத்தில் இருண்மையை ஏற்படுத்தி, இன்றுவரை வன்முறையை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது, நம்பிக்கையாளர்களின் மனதிலும், அவர்கள் பெரும்பான்மை நிலையை அடையும்போது அந்த சமூகங்களிலும்.
***
மேலும் ஒரு முக்கிய அடிப்படை வாதத்தை இங்கே எதிர்கொண்டாக வேண்டும். ஹமீது ஜாஃபரின் வாதத்தை, வாதத்துக்காக வேண்டியாவது ஏற்று இந்து மதத்தில் ‘உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன’ , யாம் வழிகேட்டிலிருக்கிறோம் என்பதை ஏற்றால், அதற்காக முஹமது சொன்னதெல்லாம் முழுமையான உண்மைகள், அதுதான் சத்திய மார்க்கம் என்பது உண்மையாக இருக்க வேண்டியதில்லை, அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
முஹம்மதுவை விமர்சிப்பவர்கள் எல்லாம் அவரது காலத்தில், அவரது தூண்டுதலினாலே கொல்லப்பட்டார்கள். அது சுன்னாஹ்வாக ஆனதினால், அது இன்றளவும் அவரை நம்புபவர்களினால் பின்பற்றப்படுகிறது, ஜிஹாதாக, இறைக்கடமையாக ஆகிறது. அஹமதியாக்களின் நபியான மிர்ஸா குலாம் அஹமது தன்னுடன் வாதிட்ட ஆரிய சமாஜிகளை தனது நம்பிக்கையாளர்களை அனுப்பி கொலை செய்தார். அடிப்படையில் ஒரு நபியின் வாழ்வே பிற சமுதாயத்தை விமர்சிப்பது, அவர்களது நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவது, அவர்களை தூற்றுவது, அவர்களை அவதூறு செய்வது என்றுதான் இருக்கிறது. குரானின் ஏராளமான வசவு வசனங்களே இதற்கு அத்தாட்சி. ஆனால், இப்படி விமர்சிக்கப்படுவோர், நபியென்று தன்னை பிரகடப்படுத்திக் கொள்பவரை கேள்வி கேட்பதோ, விமர்சிப்பதோ அவதூறாக பார்க்கப்பட்டு நம்பிக்கையாளர்கள் அப்படிப்பட்ட விமர்சனங்களை தடுத்து நிறுத்துவது இறைக்கடமையாக சித்தரிக்கப்படுகிறது, இந்த கல்ட்களினால்.
அப்துல் கையூம் எள்ளி நகையாடுவது போன்று குஷ்புவையும், நயந்தாராவையும் இந்துக்கள் கோவில்கட்டி கும்பிடுகிறார்கள் என்றால், அது நகைப்பிற்குரியது என்றால், முஹமதையும் அஹமதையும், பஹாவுல்லாஹ்வையும், முஸலமாவையும், ஏசு கிறிஸ்துவையும், நாகூர் ஆண்டவரையும், புதுக்கோட்டை ஆண்டவரையும் ஏக நபியாக, உலகின் ஒரே வழிகாட்டியாக , ஒரே மீட்பராக, ஒரே வழிகாட்டியாக, ஒரே வழியாக ஏற்பதும் நகைப்புக்குரிய ஒன்றுதான். குஷ்புவிற்கு கடவுள் தன்மை இருக்கிறது அல்லது குஷ்பு கடவுள் என்பது நகைப்பிற்கிடமான விஷயமென்பதை சொல்ல முடிகிறது, விவாதிக்க முடிகிறது. ஆனால், இந்த நபிமார்களை – மெஸய்யாக்களை – மீட்பர்களை பற்றி விவாதிப்பது அவதூறு என்று அவர்களது அடியார்களால் ஆவேசமாக கண்டிக்கப்படுகிறது, கொலையையும் செய்ய இவர்களை தூண்டுகிறது. அப்படி கொலை செய்வது கடவுளின் பணி என்று தம்மை நபியாக முன்னிறுத்துவர்கள் மூளைச்சலவை செய்தது போல இந்த நடிகைகள் செய்வதில்லை.
முன்னது மூடத்தனம் என்றால் பின்னது பெரும் மூடத்தனம். இந்த ஒப்புமை, மனப்பாங்கின் நகை முரண் இஸ்லாமியர்களுக்கும் ஏனைய ஆபிரகாமிய வழியினருக்கும் புலப்படாமல் போனது அவர்களுடன் சேர்ந்தே வரும் வன்முறையினால் தான். இதற்கு அஞ்சி, அல்லது பெருந்தன்மையின் காரணமாக, அல்லது வேறு வழியின்றி அமைதி காக்கும் உலகம் என்றாவது ஒருநாள் முழுமையாக திரும்பினால் இந்த விமர்சனமற்ற கோட்டைகள், வெறும் நம்பிக்கையின் மீதும் கற்பனைக்கதைகளின் மீதும், ஆவேச உணர்வுகளின் மீதும் கட்டப்பட்ட கற்பனைகள் வெடித்துத் தகர்ந்துபோகும், சோவியத் யூனியனின் கம்யூனிஸம் தகர்ந்தாற்போன்றே என்றே தோன்றுகிறது.
அது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், எந்தவொரு மோசமான கோட்பாட்டிலும் நல்ல தன்மைகளும் கலந்திருக்கின்றன. இது மிகவும் இயல்பான ஒன்று. ஏனெனில் எப்படி நல்ல தன்மை என்ற ஒன்று மட்டுமே இருப்பது இயலாத ஒன்றோ அது போன்றே எவ்வளவு கொடூரத்தன்மை இருந்தாலும், வெறும் தீமை மட்டுமே இருக்கும் ஒரு சித்தாந்தம், கோட்பாடு, சமுதாயமும் இல்லாத ஒன்றுதான். எல்லா அமைப்புகளுமே காலவாக்கில் தம்மிடையே ஒரு பாதையை அமைத்துக்கொண்டு முன்னேற முயல்கின்றன. இஸ்லாத்திலும் சூஃபியிஸம் அப்படியே தம் அடியார்களை ஓரளவிற்காவது முன்னேற்ற முயன்றது.
குஷ்புவையும் நயந்தாராவையும் கடவுளாக கருதி வழிபட்டால், கடவுள் தன்மை என்பது வணங்குபவர்களின் இயல்பான குணாம்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த கடவுள் தன்மை, மனதின் சரணாகதித் தன்மையின் காரணமாக இயல்பாகவே வெளிப்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே எல்லா மதங்களையும் ஏற்கின்றனர் இந்துக்கள், அந்த நம்பிக்கையின் விளைவாகவே சகிப்புத்தன்மை இன்னும் இந்த மண்ணில் இருக்கின்றது. அது நகைப்பிற்குரிய விஷயமாக தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும்போது அது எப்பேற்பட்ட அரக்கத்தனத்தையும் நாளாவட்டத்தில் மாற்றிவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது புரியும். எல்லா வழியும் இறைவழியே என்பது பலகீனமல்ல, வழிகேடு அல்ல, அசத்தியம் அல்ல, தொன்று தொட்டு இருந்து வரும் இந்த சமூகம் தமது நெடிய பயணத்தின் விளைவாக சோதித்து, செயல்படுத்தி பார்த்து கண்டு பிடித்த உண்மை . இது தவறு என்பது, வன்முறையின் காரணமாக ‘இதோ கடவுளின் வழிகாட்டி, இதைத்தவிர மற்றதெல்லாம் சைத்தானிஸம், இதுதான் கடவுளின் வசனம், மற்றதெல்லாம் கடவுளின் எதிரியின் வசனம்’ என்று எவ்வித அடிப்படையும் இல்லாமல் திடீர்க்கண்டுபிடிப்பு நிகழ்த்திய அல்லது இந்த கண்டுபிடிப்பை ஏற்றவர்களின் காமாலைக் கண்ணோட்டமே.
இதுவும் ஒரு நம்பிக்கைதான், ஆனால் கடவுளைப் பற்றிய கற்பனைகளைப் போன்றதுதான் இதுவும். பல கடவுள்கள் இருக்க முடியாது ஒரே கடவுள் தான் இருக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை, கடவுள் பல வடிவத்தில் தோன்றலாம், வடிவம் இல்லாமலும் இருக்கலாம், வணங்கலாம், உருவாய் அருவாய் உளதாய் இலதாய் இருக்கலாம் என்பதும் ஒரு நம்பிக்கையே. எல்லாமே நம்பிக்கை எனும்போது இதில் உயர்வென்ன, தாழ்வென்ன, சரியென்ன தவறென்ன. உனது பாதை உனக்கு எனது பாதை எனக்கு என்று ஒதுங்கிப் போவதே பண்பாடு. அது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. இஸ்லாத்தில் வெறும் வசன அளவில் இருக்கிறது என்பதே ஹமீது ஜாஃபருக்கு நான் சொல்ல விரும்பும் பதில்.
***
கடைசியாக, நண்பர் இப்போது இறந்துவிட்டார். ‘மரணமில்லாப் பெருவாழ்வை’ போதித்த நபியும் இறந்துவிட்டார். கோவிலை கிண்டல் செய்த நபியின் நம்பிக்கையாளர்கள் தற்போது அவரது வாசகங்கள் அடங்கிய நூலை பாராயணம் செய்கிறார்கள். ‘நட்ட கல்லும் பேசுமா நாதனுள்ளிருக்கையில்’ என்று ஏளனம் செய்து தியானத்தில் அமர்ந்து இறைநிலையை நேரடியாக தரிசிப்பதே ஈடேற்றத்திற்கு வழி என்று வாதிட்டவர்கள் இன்று அந்த நபியின் சமாதியை நம்பிக்கையுடன் சென்று வழிபடுபவர்களுக்கும் அதிசயப்பாதை திறக்கிறது, மரணத்திற்குப் பின்பு உடலில் அதிசயங்கள் தென்படுகின்றன என்று சொல்கிறார்கள். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் “அப்படியென்றால் இதற்கும் கோவிலில் சென்று ‘கல்லை’ கும்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்” என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன். வெளியில் சொல்லவில்லை, ஏனெனில் இன்னொரு நம்பிக்கையாளரை புண்படுத்த நான் விரும்பவில்லை, காலம் அவருக்கு இதை புரியச் செய்யும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கிறது. இந்தியாவின் நெடிய வாழ்வு இதையே நமக்கு கதை கதையாக, காலம் காலமாக சொல்லி வருகின்றது.
நேசகுமார்
http://nesakumar.blogspot.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- திமிர் பிடிச்சவ
- பட்டறிவு
- ஞாபக வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- வேத வனம் விருட்சம் 36
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- மலைகளின் பறத்தல்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்