அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

எஸ். நரசிம்மன்


சின்னமன்னுர் சுப்ரமண்யம் செல்லப்பா(1912 – 1998 )

தற்காலத்திய தமிழ் இலக்கியம் எப்போதெல்லாம் நினைக்கப்படுமோ அப்போதெல்லாம் சில பெயர்கள் நினைவு கூறப்படும். அவர்களில் சிலர் தமிழ் எழுத்தாளர்கள். சிலர் தமிழ் இலக்கியம் வளர்த்தவர்கள். இன்னும் சிலர் தமிழ் இலக்கியமாகவே வாழ்ந்தவர்கள். சி சு செல்லப்பாவை மூன்றாம் வகையில் சேர்க்கலாம். ஒரு எழுத்தாளர், ஒரு பத்திரிகையாளர், ஒரு விமர்சகர், ஒரு பிரசுரகர்த்தா, சுதந்திரப் போராட்ட வீரர், தன் மானம் மிக்க தனி மனிதர். அதிகம் பேசப்படாத என்ணற்ற தமிழறிஞர்களில் ஒருவர். இலக்கியம்தான் என் வாழ்வு என்ற மூர்க்கத்தனத்தோடு 84 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

“வாடி வாசல்” “ஜீவனாம்சம்” “சுதந்திர தாகம்” போன்ற நாவல்களையும், “முறைப்பெண்” நாடகத்தையும், ந,பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றிய “ஊதுவத்திப் புல்”, “மாயத் தச்சன்” மற்றும் “பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி” போன்ற பல நூல்களைப் படைத்திருந்தாலும் அவரது சரியான அறிமுகம் “எழுத்து” பத்திரிக்கைதான். எப்படி “மணிக்கொடி” காலம் என்று ஒன்று சொல்லப்படுகிறதோ அதே போல் “எழுத்து” பேசப்பட வேண்டியது ஆகும்.

“எழுத்து” பிறந்த கதை விசித்திரமானது. 1956 இல் சுதேசமித்திரன் தீபாவளி இதழில் செல்லப்பா ஒரு கட்டுரை எழுதிருந்தார். தலைப்பு : “தமிழ்ச் சிறுகதையில் தேக்கம் “. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்.வீ., அகிலன் போன்றோர் எழுதினார்கள். கடுமையான உழைப்புக்கும், துணிச்சலான செயல்களுக்கும் சொந்தக்காரர் ஆயிற்றே. செல்லப்பாவால் உடன் பட முடியவில்லை. செயலில் இறங்கினார். விளைவாக தமிழில் விமர்சனத்திற்காகவே ஒரு சிற்றேடு வேண்டும் என்று உருவானது தான் “எழுத்து”. “மக்களுக்கு பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம்” என்ற குரல் இலக்கிய உலகத்தையும் அரித்துக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் மக்களுக்குப் புதியவைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தோற்றத்தில் எளிமையாகவும், குறைந்த பக்கங்களைக் கொண்டும் வெளிவந்த “எழுத்து”, விமர்சனத்துக்கு என்று தொடங்கி பிற்பாடு “புதுக்கவிதை”களின் களம் ஆகியது. “மரபை அறிந்து அதை மீற வேண்டிய அவசியம் வருகிறபோது மீறித்தான் ஆக வேண்டும்” என்று கருதியவர் சி சு செல்லப்பா.

அப்போது, புதுக் கவிதைகளுக்கு இரண்டு விதத்தில் எதிர்ப்பு வந்தது . ஒன்று, தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து -இவர்கள் அதன் புதிய வடிவத்தை உதாசீனப் படுத்தினார்கள். முற்போக்கு முகாம்களிலும் புதுக் கவிதைக்கு எதிர்ப்பு இருந்தது. சி சு செல்லப்பா எத்தனையோ தலையங்கங்களில் தனது எதிர்ப்புகளுக்கும் ஏளனங்களுக்கும் பதில் சொல்லியுள்ளார். “தமிழ்க் கவிதையில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இலக்கணத்தையும் அழிக்க வந்து விட்டான் இந்த பார்ப்பான்” என்று சில பண்டிதர்களும், “அமெரிக்க முதலாளித்துவத்தின், சீரழிந்த கலாச்சர்ரத்தின் கைக்கூலி” என்று சில கம்யூனிஸ்டுகளும் இவரை வசைபாடினர். சி சு செல்லப்பாவைப் பார்த்து , “இது ஒரு அசடு, ஆர்வக் கோளாறினால் ஏதோ செய்கிறது” என பரிதாபப்பட்டவர்களும் உண்டு.

எழுத்து மிகப் பெரிய பணத் தட்டுப் பாட்டுடன் நடத்தப்பட்டது. பத்திரிக்கையின் தொடக்கமே அவரது மனைவியின் முதலீடான ரூபாய் நூறு தான். எழுத்துப் பிரசுரம் எனும் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி, வா.ரா., ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா,.போன்றோர் நூல்களை வெளியிட்டார் செல்லப்பா. ஓயாமல் மைல் கணக்கில் ரயிலிலும், பஸ்சிலும், நண்பர்களின் சைக்கிளிலுமாக எழுத்து பத்திரிக்கைப் பிரதிகளையும், எழுத்துப் பிரசுரம் பதிப்பித்த பல புத்தகங்களையும் சுமந்து சென்றார். கல்லுரிகளிலும் பள்ளிகளிலும் நாவல்களும், சிறுகதைகளும் பாடப் புத்தகங்கள் ஆக வேண்டும் என்பதற்காக உழைத்தார். பல கல்வி நிலையங்களில் புத்தகக் கட்டுடன் ஏறி இறங்கினார். “கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்ற பொதுஜன நிலைதான் அன்றும் கோலோச்சியது.

நாள் ஒன்றுக்கு பதினான்கு மணி நேரம் பற்பல நூலகங்களின் நூல்களைத் தேடிப் பிடித்து குறிப்புகள் எடுத்து கடுமையாக உழைத்தார் சி.சு. செல்லப்பா. தொடக்க காலத்தில், க.நா.சு., சிட்டி, ந.சிதம்பர சுப்ரமண்யம் போன்றோர் எழுதினாலும், பிறகு ஆத்மார்த்த ஒத்துழைப்பு நல்கியவர் ந. பிச்சமூர்த்தி மட்டுமே. பிரமிள், தர்மு சிவராமு, எஸ்.வைத்தீஸ்வரன், சி மணி, ந.முத்துசாமி, வெங்கட் சாமிநாதன் என்று பல புதியவர்களுக்கு இடம் கொடுத்து தனக்கென ஒரு தடம் பதித்தது எழுத்து. பின்னால் வந்த “நடை”,”கசடதபற”, “யாத்ரா” “பிரக்ஞை” போன்ற பல சிற்றேடுகளுக்கு எழுத்து-தான் முன்னோடி. பத்து ஆண்டுகள் நிற்காமல் எரிந்த அந்த வேள்வித்தீ பல எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் கொடுத்தது. “எழுத்து” 1970இல் பணத் தட்டுப்பட்டால் நின்று போனது.

மதுரைப் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு என்னும் போட்டியைக் களமாக வைத்து, கள்ளர் சமூகத்தின் பேச்சு நடையில், “வாடி வாசல்” எழுதிய சி சு செல்லப்பா, இதன் நிமித்தம் போட்டியை பல முறை நேரில் பார்த்தும், நூற்றுக் கணக்கில் போட்டோக்கள் எடுத்தும் யதார்த்தமான நாவல் வடித்தார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் நடக்கும் போராட்டம் என்றாலும்,அது குறியீட்டு முறையில் வலிமைக்கும், அழகுக்கும் வெறிக்கும் இடையேயான போராட்டம் என்றும் கொள்ளலாம் .

“ஜீவனாம்சம்” ஒரு கைம்பெண்ணின் அலை பாயும் மனக் குழப்பங்களைப் பற்றிய நாவல் – முழுக்க முழுக்க “நனவோடை” உத்தியில் எழுதப்பட்டது. (ஜேம்ஸ் ஜைசின் “உலீசஸ்” போல) சி சு செல்லப்பா வீட்டின் மாடியில் விமர்சனம் குறித்து மதக்கூட்டங்கள் நடத்தி வந்தார். பிறகு, நா.பா வுடன் சேர்ந்து “பவர்” என்ற அமைப்பைத் தொடங்கினார். முதலில் புதுக்கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்த நா பா, பின்னர் செல்லப்பாவோடு நண்பரானார். பி .எஸ்.ராமையா, தீபத்தில் “மணிக்கொடி காலம்” எழுத சி சு செல்லப்பாதான் காரணம்.

“எழுத்து” நின்றபோன ஆண்டில் சி சு செல்லப்பா, தனது சுதந்திரப் போராட்ட நினைவுகளை வைத்து சுய சரிதைத் தன்மையுடன் கூடிய மாபெரும் நாவலை எழுதத் தொடங்கினார். அதற்கு முன் மாதிரியாக LIO TOLSTOY எழுதிய ” போரும் அமைதியும்” அமைந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்டும், தொடர்ந்து எழுதி, அது “சுதந்திர தாகம்” என மூன்று தொகுதிகளுடன் இரண்டாயிரம் பக்க நாவலாக பின்னர் வெளியானது. நானூறு சிறுகதைககளைப் பற்றி அவர் எழுதிய “ராமையாவின் சிறுகதை களம்” செல்லப்பாவின் இறுதிப் படைப்பு. செல்லப்பா இலக்கியத்தில் மட்டும் அல்ல-தனி மனித வாழ்க்கையையும் இலக்கியமாகவே வாழ்ந்தவர் எனலாம். தோட்டக் கலை, பொம்மைகள் செய்வது, இயற்கையை ரசிப்பது, கிரிக்கெட் ஆட்டம் என்று பல செயல்களில் ஆர்வம் கொண்டிருந்தது அவரது வாழ்க்கையை கடைசி வரை சுவையாக்கியது. எளிமையான தோற்றம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத குணம், இலக்கியத்திலும் காந்தீயத்திலும் ஈடுபாடு, நேர்மை, மன உறுதி, கடுமையான உழைப்பு, உள்ளார்ந்த துறவு மனப்பான்மை, விருதுகளையோ அல்லது வேறு உதவிகளையோ தேடிச்செல்லாத இயல்பு, என விந்தை மனிதர் தான்- யாரிடமும் கை நீட்டி பணம் பெற்றவர் இல்லை. அவரது தெளிவான, தீர்க்கமான குறிக்கோள்களில் பணம் சேர்ப்பது என்பது அறவே இல்லை.

இலக்கியச்சிந்தனை, ராஜராஜன் விருது, கோவை ஈ எஸ் தேவசிகாமணி, அக்னி அட்சரா விருது என பலவற்றை மறுத்து விட்டவர். கடைசியில் அமெரிக்கா வாழ் தமிழர் அமைப்பு “விளக்கு” வழங்கிய “புதுமைப் பித்தன்” விருதை மட்டும் ஏற்றுக்கொண்டு அதன் பரிசுத் தொகை ( ரூ. 25000) புத்தகம் போடச் சொல்லி அங்கேயே வழங்கி விட்டார். சாகித்ய அகாதமி விருதும் அதன் பின் தமிழக நூலகத் துறையின் லட்சம் ரூபாயும் தேடி வந்த போது அவர் உயிரோடு இல்லை. படைப்பாளி, விமர்சகர், பத்திரிக்கை ஆசிரியர்- “புதுக் கவிதை” என்னும் முயற்சி தமிழில் வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். “நல்ல எழுத்து எங்கிருந்தாலும் கண்டு பரவசமடையும் மனம் கொண்ட செல்லப்பாவை மிகவும் கவர்ந்தவர் பி.எஸ்.ராமையா.

தார்மீகக் கோபம் கொண்டால் எதற்கும் பணிய மாட்டார்.படிக்கத் தெரியாவிட்டாலும் படைக்கப் பட்டதை நியாயமாக விமர்சிக்கத் தெரிய வேண்டும் என்பது அவர் கருத்து. தனி மனிதனாகவே கடைசிவரை கலங்கரை விளக்கம் போல் அவரது முயற்சிகள் இருந்தன- “எழுத்து” உட்பட. அவரது வாழ்வே ஒரு இலக்கியம் போல் தான்.

(எஸ்.நரசிம்மன் ஹாங்காங் இலக்கிய வட்டத்தை நிறுவியவர், தற்போது சென்னையில் வசிக்கிறார். அவரது கட்டுரையைக் கூட்டத்தில் வாசித்தவர்: காழி அலாவுதீன்)

****
ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com
****
snntamil@gmail.com

Series Navigation

author

எஸ். நரசிம்மன்

எஸ். நரசிம்மன்

Similar Posts