ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்


பெரியார் ஜின்னாவை 1944ல் பம்பாயில் சந்தித்தாரா?: ஜின்னாவின் வாழ்க்கையை எழுதிய ஏ.கே.ரிபாயி என்பவர் 1944ம் ஆண்டு மத்தியில், பெரியார் ஜின்னாவை பம்பாயில் அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரியாரின் 09-08-1944 தேதியிட்டக் கடிதம் மற்றும் ஜின்னாவின் 17-08-1944 தேதியிட்ட பதில் கடிதம் முதலியவற்றைக்குறிப்பிட்டு, அவைகள் அப்பொதைய அரசியல் விவகாரங்களை கூடிபேசியதாகக் குறிப்பிடுகிறார்: “1944 மத்தி வாக்கில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் அறிஞர் அண்ணாவும் பம்பாயில் ஜின்னா சாகிப் இல்லத்தில் அவரை சந்தித்து அன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார்கள். 1944 ஆகஸ்டு 9ம் தேதி பெரியார் அவர்கள் ஜின்னா சாகிபுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு ஆகஸ்டு 17ம் தேதி ஜின்னா சாகிப் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்”. திராவிட எழுத்தாளர்கள் இச்சந்திப்பினைக் குறிப்பிடுவதில்லை .

பெரியாருடன் திடீரென மாறுபட்ட ஜின்னாவின் போக்கு:
பெரியார் முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாகயிருந்தும், அவர்களுக்குப் பலவிதங்களில் ஆதரவாக பேசி, அனுகூலமாக இருந்து வந்தபோதும், ஏன் திடீரென்று பெரியாரிடம் ஜின்னா தலைக்கீழாக மாறி தமது கருத்தை வெளியிட்டதுடன், “தீர்மானமே எடுக்க முடியாத நிலையில் உள்ளீர்”, என குற்றம் சாட்டி தான் “திராவிடர்களுக்காக” ஆதரவு தர, போராட முடியவே முடியாது, என திட்டவட்டமாக தெளிவு படுத்தினார், என்பது புதிராக உள்ளது. பெரியார் பாகிஸ்தானுடன், திராவிடஸ்தான் பிரச்சினையினையும் எடுத்துக்கொள்ள 1944 ஆகஸ்டு 9ம் தேதி பெரியார் அவர்கள் ஜின்னாவிற்க்கு ஒரு கடிதம் எழுதினார் (பின்னிணப்பு-2). அதற்கு ஆகஸ்டு 17ம் தேதி கடிதத்தில் ஜின்னா வெளிப்படையாக தனது நிலையை எடுத்துக் காட்டினார். அதே மாதிரி, பி.பி.முதலியார் என்ற கோவாச் சங்கத்தைச் சேர்ந்தவர் அனுப்பிய தந்திகளுக்கும் ஆதரவாக எதையும் செய்யவில்லை. கோவாச் சங்கம், கோவா மஹாராஷ்டிரத்துடன் இணையவேண்டும் என்ற கோரிக்கையை ஜின்னாவிடம் கூறி அதற்கு உதவியை நாடினர். வி.எஸ்.டி பாம்பியோ வியகாஸ், கோவாச் சங்கத்தின் காரியதரிசி தமது ஜூலை 30, 1942 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டதாவது , “தாங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையிலுள்ள சிறுபான்மை மக்களின் தலைவராக உள்ளதால், தாங்கள், இந்நாட்டிலுள்ள எல்லா இந்தியர் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க உமது மதிப்புள்ள ஆதரவை எதிர்பார்க்கிறோம்”.

பி.பி. முதலியார், “சண்டே அப்சர்வர்” தலமையாசிரியரும், முஸ்லீம்களுக்குத் தனிநாடு கேட்கும்போழுது பிராமணரல்லாதவரின் தனிநாடு கோரிக்கைக்கும் ஆதராவாக இருக்குமாறு கோரி, அக்டோபர் 13, 1946ல், ஒரு கடிதம் எழுதினார் . ஆனால், ஜின்ன கண்டுகொள்ளவேயில்லை. மேலும், காந்தியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது, “…………நீதிகட்சியின் தலமை மிகவும் சக்தியற்ற கைகளில் உள்ளது” என்று குறிப்பிடுகிறார்! எனவே, எதற்காக பெரியாரின் தலமையினை சந்தேகித்தார் எனத்தெரியவில்லை.

இருப்பினும், முஸ்லீம்-அல்லாதவரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அவரது தந்திரம், வைஸ்சிராய் நிர்வாக கவின்சிலுக்கான ஒதுக்கப்பட்ட முஸ்லீம்-லீக் அங்கத்தினர்-இடத்தை ஜோகேந்திர நாத் மண்டல் என்ற செட்யூல்டு-சாதியைச் சேர்ந்தவருக்குக் கொடுக்கப் பரிந்துரைத்தார். இது, முகமதியர் 1910ல், லார்ட் மின்டொவிடம், தமது எண்ணிக்கை அதிகமாக இருக்க்கவேண்டும் என்பதற்காக, இந்துக்கள், பழங்குடியினர், இயற்கைவழிபாடு-செய்பவர், தீண்டத்தகாதவர் என இந்து-மக்களைப் பிரிக்கவேண்டும் என்று வலியுரித்தியதைப் போன்றதாகத் தெரிகிறது. இதனை, அம்பேட்கரே எடுத்துக் காட்டியுள்ளார் . ஆகவே ஜின்னா, ஒரு தனி-நாட்டில், அதாவது பாகிஸ்தானத்தில், முகமதியர் மற்றும் பிராமணரல்லாதவர் சேர்ந்து இருக்கக்கூடிய “ஒரு பரந்த இஸ்லாமிய நாட்டை” உருவாக்க அவ்வாறுக் கேட்டிருக்கலாம். அல்லது, நேரிடையாகவே, அம்பேட்கர், பெரியார் தங்களது ஆதரவாளர்களை, முகமதியராக மதமாறச் சொல்லியிருக்கலாம் . ஏனெனில், இருவருமே, இந்துமதத்தை ஏற்கெனவே இழித்தும்-பழித்தும் பேசியும்-எழுதியும் வந்துள்ளனர். மேலும், ஜனவரி 1940 கூட்டத்திற்குப் பிறகு, அவர்களுக்கு அத்தகைய ஆசை, அரசியில் ரீதியில்-தனி-நாடு கிடைக்குமே என்ற இச்சையில் ஆதரவாகப் பேசியிருக்கலாம். உதாரணத்திற்கு, அம்பேத்கர் “பாகிஸ்தான் பிரச்சினையை’ அணுகும்போது, அத்தகைய முடிவை சூசகமாகத் தருகிறார். மேலும், பம்பாய் மாகாண மஹர் மாநாடு மே 30, 1936ல் நடந்தபோது, இந்துமதத்தைத் துறக்கவேண்டிய நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார் . அண்ணாதுரை எப்பொழுதுமே, திராவிடரும், முகமதியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஏனனில் அவர்கள் இந்துக்கள்-ஆரியர்களுக்கு வேறுபட்டவர்கள் என பேசிவருபவர், இதோ அவரது பிரபலமான வாதங்கள்:

“மேலே பாகிஸ்தான்! தெற்கே திராவிடநாடு: இடையில் இந்துஸ்தான்”

“பாகிஸ்தான் என்பதின் எதிரோலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம், மூலம் திராவிடஸ்தான் முழக்கமே! அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம், பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது, 22-3-40ல்! திராவிடநாட்டைத் தனி நாடாக்க்க. வேண்டும் என்பது, ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடியபோது பெரிடாரின் பேருரையொலிருப்பது. இது 1938 டிசம்பரில்!”

“அவர்கள் ஆரியர்-நாம் திராவிடர்? அதே ஆராய்ச்சியே, முஸ்லீம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட-இஸ்லாமிய கூட்டுப்படை கிளம்பியது””

“ஆங்கிலேயரும்-ஆரியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! திராவிடரும்-இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! “பெரியார் இராமசமி நாயக்கர் பாகிஸ்தானத்த்துட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக் கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார்..”

ஆகையால், ஜின்னா பெரியாரை ஏன் குற்றம் சாட்டுகிறார் என்பது மர்மமாகயிருப்பினும், அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் காங்கிரஸுக்கு எதிராக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றாகச் செயல்பட்டாலும், பெரியார் “திராவிடஸ்தான்” தனிநாடு கோரிக்கையை 1938ல் வைத்து, 1939ல் தீர்மானத்தையும் மொழிந்தார். ஆகையால், தென்னிந்தியாவில் அல்லது திராவிடருக்கு தாம் தனித்தத் தலைவராக இருக்கமுடியாது என்பதனை, ஜின்னா உணர்ந்திருப்பார். மேலும், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக, கங்கிரஸுடன் பலவிதமாக பேரம் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில், இவரது தலமையினையே, முகமதியர் கேள்விக்குறியாக்கிய நிலையினையும் அறிந்திருந்தார். அம்பேட்கருடைய நிலைப்பாட்டையும் அறிந்திருந்தார். ஆகவே ஒரு பக்கம் உலேமாக்களுக்குப்பணிந்து, மறுபக்கம், ஒரு தந்திர அரசியல்வாதியாக, மற்றவர்களுக்கு வாக்க்குரிதிகளை மட்டும் அள்ளி வீசியுள்ளார் எனத்தெரிகிறது. இந்த மாற்றத்தை, அம்பேட்கர் மூலமாக அறியப்படுவதாவது :

“ஜின்னா இதற்கு முன்பு, வெகுஜன மக்களின் மனிதாகயிருந்ததில்லை. அவர் மக்களை பாதித்துள்ளார். அவர்களை அரசியல் அதிகாரத்திலிருந்து வேறுபடுத்தி, ஒரு பெரிய முயற்சிற்கு எடுத்துச் சென்றார். அவர் என்றுமே பக்தியுள்ள, சிரத்தையுள்ள பின்பற்றும் முஸ்லீமாக இருந்ததில்லை. எப்பொழுதெல்லாம், இவர் M.L.A”வாகப் பதவி ஏற்கிறாரோ, அப்பொழுதெல்லாம் குரானிற்கு முத்தமிடுவதோடு சரி, அதில் என்ன உள்ளது, அதன் சிறப்பு யாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைக் கூடப்பட்டதில்லை. எந்த அல்லது யாதாவது ஒரு பள்ளிவாசலுக்கு ஆர்வத்தூண்டுதல் மூலமோ அல்லது மத வேட்கையினாலோ ஒதுங்கியதாகவோ, சென்றதாகவோ சந்தேகமாகவே உள்ளது. அதேபோல, ஜின்னா என்றுமே முகமதிய மத-அரசியல் கூடுதல்கள்-கூட்டங்களில் இருந்ததில்லை. ஆனால், இன்றோ ஜின்னாவிடம் முழுமையான மாற்றத்தைக் காணமுடிகிறது. இன்று அவர் மக்களின் நாயகன். அவர்களுக்கு மேலேயில்லை என்றாலும், அவர்களில் ஒன்றாகவுள்ளார். மக்களே அவரை தம்மையும் விட உயர்த்தி “காயிதே ஆஜம்” என அழைக்கின்றனர். அவர் இஸ்லாமில் ஒரு நம்பிக்கையுள்ளவராகவர் மட்டுமல்லாது, இஸ்லாத்திற்காக, உயிர் விடவும் தயாராக உள்ளார். இப்பொழுது, அவர் கலிமாவைத் தவிர, இஸ்லாமை அதிகமாகத் தெரிந்துள்ளார். இப்பொழுதெல்ல்லாம் பள்ளிவாசலுக்குச் சென்று “குட்பா” கேட்கிறார், “ஈத்” முதலிய கூடுதல்களில் பங்கு கொண்டு மகிழ்ச்சியடைகிறார். இன்று, அவர்கள் அவரது இருக்கும் நிலையினை உணருகின்றனர். அதன்படியே, இன்று, பம்பாயில் எந்த முகமதிய கூட்டமும் “அல்லா-ஹோ-அக்பர்” மற்றும் “காயிதே-ஆஜம் வாழ்க” என்ற கோஷங்கள் இன்றி ஆரம்பிப்பதும் இல்லை, முடிவதும் இல்லை”. ஆகவே அத்தகைய “நம்பிக்கையுள்ள இஸ்லாமியர்”, எப்படி “காஃபிர்” தலைவர்கள், அதிலும் பெரியார் போன்ற நாத்திகவாதியுடன் உறவு வைத்துக்கொள்ள உலேமாக்கள் சம்மதியளித்திருப்பர்?

பெரியார் அம்பேட்கரை மூன்று முறை சந்தித்துள்ளார்: மேலே குறிப்பிட்டபடி, பெரியார் முதன்முதலாக அம்பேட்கரை 06-01-40, 07-01-40, 08-01-40 தேதிகளில் சந்தித்தார். அப்போது, மூன்று மக்கள் குழுமங்களுக்கு, மூன்று தனி-நாடுகளை உருவாக்க்குவது, அதற்கான கோரிக்கைகளை வைப்பது முதலியன விவாதிக்கப்பட்டன. இரண்டாவது முறை, சென்னையில் 21-09-44 அன்று, வைஸ்ராய் கவுன்சில் அங்கத்தினர் என்ற முறையில் வந்தபோது சந்தித்தார். அப்பொழுது, நீதிகட்சியில் இரண்டு பிரிவுகள் இருந்தன, ஒன்று பெரியாருக்கு எதிராக இருந்தது. மூன்றாவது முறையாக, 05-12-44 அன்று ரங்கூனில் மூன்றாவது பௌத்த மாநாடு நடந்தபோது சந்தித்தார். அப்போது, அம்பேட்கர் தாம் பௌத்தமதத்தைத் தழுவத் தீர்மனித்துள்ளதாகவும், பெரியாரையும் பௌத்தத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், பெரியாரோ, தாம் இந்து மதத்திலேயே தொடர்ந்திருப்பதாகவும், அப்பொதுதான், தான் இந்துமதத்தை விமர்சனிக்க முடியும் என்றார்.

பாகிஸ்தான், திராவிடஸ்தான், மஹர்ஸ்தான்: ஆகவே, மூன்று தலைவர்களும், மூன்று மக்கள் குழுமங்களுக்குத் தனித்தனியாக மூன்று நாடுகளை- முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான், திராவிடர்களுக்கு திராவிடஸ்தான், தீண்டத்தகாதவர்கள்-செட்யூல்ட்-சாதியினருக்கு மஹர்ஸ்தான் / பௌத்தஸ்தான் என- கேட்க முடிவு செய்தது, தீர்மானித்தது திண்ணம். இருப்பினும், அம்மாதிரியான கனவு-நாடுகளில் தம்மக்கள் ஒன்றாகயிருக்கமுடியாது என்பதும் தெரிந்தது.

அம்பேட்கருடைய இஸ்லாம் மற்றும் முஸ்லீமுடைய மனம் பற்றிய அவரது எண்ணங்கள் தெளிவாக இருந்தன:

1. இஸ்லாமிய சட்டப்படி, இவ்வுலகம் தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாமியரின் வாழும் இடம்) மற்றும் தார்-உல்-ஹரப் (போர் நடக்கும் இடம்) என இரண்டாகப் பிரிக்கப்படுகிறன. முஸ்லீம்கள் ஒரு நாட்டை ஆளும்போது, அது தார்-உல்-இஸ்லாம் ஆகிறது. ஆனால் முஸ்லீம்கள் மட்டும் இருந்து, அவர்கள் அந்நாட்டை ஆளவில்லையென்றால் அது தார்-உல்-ஹரப் ஆகிறது. இஸ்லாமிய சட்டம்(ஷரீயாத்) அவ்வாறு இருக்கும்போது, இந்தியா, இந்துக்கள் மற்றும் முசல்மான்களுக்கு பொதுத் தாய்நாடாக இருக்கமுடியாது .
2. இது ஏதோ படிப்பதற்கு மட்டும் என்று கருதிவிட வேண்டாம், ஏனெனில், அது ஒரு வலுவான செயல்படும் சக்தி மற்றும் முஸ்லீம்களின் நடத்தையை ஊக்குவிக்க வல்லது.
3. இஸ்லாமிய சட்டப்படி, இன்னொரு மதக்கட்டளை – ஜிஹாத் (க்ரூஸேட்) என்ற புனிதபோராகும். அதாவது ஒரு முஸ்லீம் ஆட்சியாளர், இந்த முழு உலகத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்கு வரும்வரை தொடர்ந்து போராடும் போராகும்…..ஆகவே இந்தியாவில் முஸ்லீம்கள் ஜிஹாத் பிரகடனத்தை செய்யாமலிருப்பார்கள் என்று சொல்லமுடியாது………
4. அதுமட்டுமல்லாது, அவர்கள் ஜிஹாத் பிரகடனத்தையும் செய்யலாம், அதன் வெற்றிக்கு, ஒரு அந்நிய முஸ்லீம் நாடு/சக்தியையும் துணை கோரலாம். அதேமாதிரி ஒரு அந்நிய முஸ்லீம்நாடு/சக்தி ஜிஹாத் பிரகடனத்தை செய்தால், அதற்குத் துணைபோகலாம்.
5. மேலும் இஸ்லாம் நாட்டின்-எல்லைகளை மதிப்பதில்லை, எனெனில் அது, எல்லைப் பிணைப்புகளைக் கடந்தது. அது சமூக-மதப்பிணைப்புகளால் கட்டுண்டு இருப்பதால், இஸ்லாம் எல்லைகளைக் கடந்துள்ளது.
6. ஆகையால், இந்திய முசல்மான் தான் முதலில் முஸ்லீம், பிறகு இந்தியன் என்ற நிலையிலுள்ளான்.
7. முஸ்லீம்களைப் பொறுத்தவரையிலும், இந்து ஒரு காஃபிர். அவன் எந்த மரியாதையுமற்ற மதிப்பற்றவன். அவன் கீழ்பிறப்பாளன், மற்றும் அவனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆகவேதான், ஒரு நாடு காஃபிர்களால் ஆளும்போது, முசல்மனிற்கு அது தார்-உல்-ஹரப் ஆகிறது. இதனால், முசல்மான் ஒரு இந்து/இந்துக்களால் ஆளப்படுகிற அரசாங்கத்தை மதிக்க/பணிந்து நடக்கமாட்டான் என்று மெய்ப்பிக்க வேறு எந்த அத்தாட்சியும் தேவையில்லை .
8. சமீபத்தில் ஒரு இந்து மாணவன் காந்தியை ஹஸரத் ஈஸா (ஏசு)வுடன் ஒப்பிட்டதும், முசல்மான் மாணவர்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்களது மதநம்பிக்கையை அவமதிப்பதாகக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் கடும் விளைவு நேரிடும் என எச்சரித்தனர். மாணவர் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் அத்தகைய எதிர்ப்பில் பங்குகொண்டனர் (301).
9. 1923ல் முகமதியர் “மஹாத்மா” என்று யாரையும் மதிக்கலாமா கூடாதா என்ற விவாதம் வந்தபோது, அவ்வாறு கூடாது என்ற முடிவிற்கு வந்தனர்.
10. 1924ல் மொஹம்மது அலி சொன்னதாவது, “திரு. காந்தியின் நடத்தை எந்த அளவிற்குத் தூய்மையாக இருந்தாலும், அவர் எந்த ஒரு முசல்மானையும், அவன் எந்த அளவிற்கு நடத்தைக்கெட்டவனாக இருப்பினும், அவனைவிடத் தாழ்ந்தவர், என்றே என்னுடைய மதரீதியில் என் கண்களுக்குப் தெரியப் படுகிறார்”.

ஜின்னா நிச்சயமாக அம்பேட்கருடைய கருத்துகளை ஜிரணித்துக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும் டிசம்பர் 1940ல் வெளிவந்த “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற புத்தகத்தில் மேற்குறிப்பிடப் பட்டவைத் தவிர, இன்னும் அதிகமாகவே எழுதியுள்ளார். ஆகவே, அம்பேட்கர் பாகிஸ்தானை விமர்சனம் செய்தவுடன், அவரை விட்டு விலகியிருப்பார், உறவையும் துண்டித்திருப்பார். மேலும், ஜின்னாவே காஃபிர்களுடன் சுற்றிவருகிறார், உறவாடிகிறார் என்று அவர் மீது குறைகள்/பழிகள் சுமத்தப்பட்டன. ஆகையால், அத்தகைய குற்றச்சாட்டுகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ள மோமின்களின் (நம்பிக்கயுள்ளவர்கள்-இஸ்லாமியர்) நலன்களுக்கு மட்டும் வேலை செய்வது எனத் தீர்மானித்து, காஃபிர்-திராவிடர், காஃபிர்-தீண்டத்தகாதவர், இவர்களை மெதுவாக ஒதுக்கியிருப்பார். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், காஃபிர், காஃபிரி வார்த்தைகள் அரேபிய குஃப்ர் அல்லது குஃப்ரு என்ற சொல்லிலிருந்துப் பெறப்பட்டவை. எனவே காஃபிர்கள் சுத்தமற்ற, அசுத்தமான, தகுதியற்ற தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், மோமின்கள் (முஸ்லீம்கள்) அவர்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஜின்னா, காந்திக்கு எழுதிய தனது கடிதங்களில் இக்கருத்தை பல முறை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அதேமாதிரி, பெரியாருக்கு எழுதிய கடிதத்திலும் மறைமுகமாக, அதாவது “தான் முஸ்லிம்களுக்குத்தான் உழைக்கமுடியுமேத்தவிர, திராவிடர்களுக்கு ஆதரவு கொடுக்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பேட்கர் தான் படித்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சித்தாந்தகளுடன் நம்பிக்கைக் கொண்டிருந்ததால், அரசியல் சட்டத்தின் சரத்துகளுக்குள் போராட முடிவு செய்திருப்பார். ஆகவே, ஆங்கிலேயர் ஆட்சியில், வைய்ஸ்ராய் கவின்சிலில் உறுப்பினராக இருந்ததுடன், சுதந்திரத்துக்குப் பிறகு சட்ட மந்திரியாக இருந்தார். அதாவது, அவர் என்றுமே தனிநாடு கொள்கையை வைத்ததில்லை.

அதேமாதிரி திராவிட கழக வேர்கள், கட்சிகள் மற்றும் பெரியாரின் வழிவந்தவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், தமது தனிநாடு கோரிக்கயை மறந்துவிட்டனர்.

மூவருக்கும் உள்ள ஒற்றுமைகள்: இவ்வாறான மூன்று தலைவர்கள், வெவ்வேரான சித்தாந்தங்கள், பல வித்தியாசங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருந்த ஒற்றுமைகள் ஆச்சரியமாக உள்ளன. அவை அடையாளங் கொள்ளப்பட்டு விவாதிக்கப் படுகின்றன:

1. அதிகமாக சாதிக்கத் துடித்தவர்கள்: அம்பேட்கர் தமது உயர்ந்த படிப்புடன் ஒரு மக்கள் விரும்பும் தலைவராக விரும்பினார் என்பது அவரது எழுத்துகள், மற்றும் சாதி-உணர்வுகளை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்டாரோ எனத்தோன்றுகிறது. வட்டமேஜை மாநாடுகளில் கலந்துகொண்டு, காந்திக்கு எதிராக வாதித்தாலும், ஆங்கிலேயர் அவரை ஒரு தலைவராக உருவாக்கவேண்டும் என்ற முயன்றபோதும் (சுபாஸ் சந்திர போஸ் கூற்றுப்படி), அரசியல் ரீதியில் காந்தியை மீறி அவ்வாறு உருவாக முடியவில்லை. ஒருவேளை, பூனா உடன்படிக்கை (செப்டம்பர் 24, 1932) அவரது அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலாகியது. ஜின்னாவின் குறிக்கோள் வெளிப்படையாகயிருந்தது. அவர் இஸ்லாமிய வகுப்பு, அடிப்படை மற்றும் மத-வாதங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது அரசியல்-லட்சியத்தைப் பூர்த்தி செய்து கொண்டார். ஒருமுறை, தான் “முகமதிய கோகலேவாக” வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினாலும், பாகிஸ்தானின் தந்தையாகி விட்டார்! அவர் நினைத்தபடியே இந்தியாவை இரண்டாக்கி, பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆனார்! பெரியாருக்கும் அவ்வாறே பெரியத் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால், அவரிடத்தேயிருந்த பல முரண்பாடுகள் அவருக்கு எதிராக இருந்தன. இருப்பினும், பிறகு, அவர் “தென்னாட்டு காந்தி” என அழைக்கப்பட்டார்! ஆகவே, ஜின்னாவைத்தவிர, மற்ற இருவரும் அரசியல் மற்றும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை-சூழ்நிலைகள் இவற்றால் தமது சித்தாந்தங்களை நீர்த்துக்கொள்ள வேண்டியதாகியது.
2. ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் காவலன்: ஜின்னா, அம்பேட்கர் மற்றும் பெரியார் முறையே முஸ்லிம்கள், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பிரமணரல்லாதோர் மக்களின் காவலராகச் சித்தரிக்கப் பட்டனர்.
3. கம்யூனிஸ-சித்தாந்தத் தாக்கம்: மூவருமே கம்யூனிஸ சித்தாந்தத்திற்குட் பட்டது தெரிகின்றது . பெரியார் ருஸ்யாவின் குடிமகனாக வேண்டும் என்று வரை சென்றதும், ஜின்னா தமது “இரு-நாட்டு சித்தாந்தத்திற்கு” உபயோகப்படுத்தியதும் மற்றும் அம்பேட்கர் “வகுப்புவாரி ஓட்டு உரிமை” தத்துவத்திற்கு பயன் படுத்தியதும், கம்யூனிஸத் தாக்கத்தைக் காட்டுகிறது.
4. காங்கிரஸ்காரர்கள்: முவருமே காங்கிரஸிலிருந்துதான் தமது அரசியல் வாழ்க்கையினைத் துவங்கினர். அவர்கள் காந்தியை வகுப்புவாத-சாடியவாத-மதவாத கொம்பினைக்கொண்டு அடிக்க முயற்சித்தாலும், காந்தியை விட பெரியத் தலைவராக முடியவில்லை. காங்கிரஸை “பிராமணர்கள் கட்சி”, “இந்துக்களின் கட்சி” என்றெல்லாம் குறைக்கூறி விமர்சித்தனர்.
5. சிறுபான்மையினர்-ஆதரவு – பிறகு – முஸ்லீம்-ஆதரவாகமாறியது: பெரியார், அம்பேட்கர் முஸ்லீம்களிடமிருந்து தமக்கு ஆதரவு கிடைக்கும் என, முஸ்லீம்களுடன் உறவு வைத்துக்கொண்டனர். ஆகையால், இருவருமே, “விடுபடும் நாளை” ஆதரித்தனர். அம்பேட்கர், முஸ்லீம்களுடைய மதவாத-பிரிவினைப் போக்கை அறிந்து, அவர்களுக்கு எதிராக எழுதினாலும், முஸ்லீகளுக்கான தனிநாடு கொள்கையினை ஆதரித்தார். பெரியாரோ, அம்பேட்கரைப் போலயன்றி, முகமதியர்களை சாதாரணமாக ஆதரித்தார். இஸ்லாமிய பண்டிகைகளில் கலந்து கொண்டு, இந்து பண்டிகைகளை பழித்தும்-அவதூறு பேசியும் வந்தார். பிராமணர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசி முஸ்லீம்களின் உணர்வுகளைத் தூண்டி தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் முயன்றார் . பெரியார் ஜின்னாவிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்தார். அனால், அவர் முழுவதுமாக மறுத்தாலும், முஸ்லிம்-ஆதரவு கொள்கையை கடைபிடித்தார்.
6. காங்கிரஸ் மற்றும் காந்தி எதிர்ப்பு: மூவருமே காங்கிரஸ் மற்றும் காந்தியை தமது பேச்சு, எழுத்து மற்றும் செயல்களால் மிகவும் கடுமையாக, ஏன் கொடுமையாகவும் விமர்சித்தனர். காங்கிரஸில் உள்ளேயும், வெளியேயும் காந்திக்கு மிகுந்த அளவில் தொந்தரவு கொடுத்தனர். 1931ல் அம்பேட்கர், யார் தீண்டத்தகாதவர்களின் நலன்களைக் காப்பவர் என்பது குறித்து காந்தியுடன் மோதி, அவரது தலமையினை அடியோடு எதிர்த்தார். ஜின்னாவின் விஷயத்திலும் அத்தகைய போக்கே இருந்தது. உலேமாக்கள், காந்தி முசல்மான்களுக்குத் தலைவராக இருக்க முடியாது, என பிரகடனம் செய்தவுடன், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு வெளி வந்து காந்தியையும், காங்கிரஸையும் சாடினர். காந்தியைத் தாக்கும் முயற்சியில், முதலில் இந்தியப் பாரம்பரிய சின்னங்களை குறிவைத்து எதிர்த்தனர், பிறகு அது இந்து-எதிர்ப்பு முறையாக மாறியது.
7. இந்து-எதிர்ப்பு சித்தாந்தம் மற்றும் எழுத்துகள்: மூவரது எழுத்துகளுமே இந்து-மத எதிர்ப்பாக இருந்தது. ஜின்னா தான் முஸ்லீம் என்ற நிலையில் விமர்சித்தாலும், அம்பேட்கர், பெரியார் மிகவும் மோசமாக எழுத-பேச ஆரம்பித்தனர். அம்பேட்கர் டிசம்பர் 25, 1927ல் மனு ஸ்மிருதியை எரித்தார். அந்நாள், ஜின்னாவின் பிறந்த நாளாக இருந்தது. அம்பேட்கர் பௌத்தமதத்தைத் தழுவத் தீர்மானித்தபோது, பெரியார், இந்துமதத்திலேயே இருந்து கொண்டால்தான், தான் தாராளமாக விமர்சனம் செய்யமுடியும் என்று சொல்லிக்கொண்டார். ஜின்னா “முஸ்லீமாகவும்”, அம்பேட்கர் “பௌத்தனாகவும்”, பெரியார் “நாத்திகனாகவும்” இறந்தனர்!
8. தமது குழுமம் / சமூகம் / மதத்தில் இருந்த எதிர்ப்பு: ஜின்னா “ஷியா” முஸ்லீமாக இருந்து, முதலில் ‘செக்யூலார்” விஷயங்களுடன் இருந்தபோது உலேமாக்கள், அவரை “காஃபிர்” எனச் சாடியது! முஃப்தி கிஃபாயதுல்லா முதலில், அவரை காஃபிர் என கருதி, பிறகு “முஸ்லீமாக” ஏற்றுக்கொண்டார்! ஒருவேளை, உலேமாக்கள் மற்றும் AIUML அவரை அவ்வாறு தொடர்ந்து குறை கூறி வந்ததால், தான் முஸ்லீம் என நிரூபிக்க பாகிஸ்தான் விஷயத்தில் வேகமாக செயல்பட்டார் எனலாம்! பெரியார் சட்டரீதியாக ஒரு இந்துவாக இருந்தாலும் இந்து-எதிர்ப்பு முறையைக் கையாண்டு வந்தார். இருப்பினும் நீதிகட்சி தலைவர்கள் அவரது நாத்திகப் போக்கைக் கண்டு கொள்ளாமல், தங்களது கூட்டங்களை தேவாரம் பாடியே ஆரம்பித்து வந்தனர். அம்பேட்கர் தமது 56வது வயதில் ஒரு பிராமணப்பெண்ணை மணந்து கொண்ட போது எதிர்ப்பு எழுந்தது! மேலும் தனது முதல் மனைவி ரமாபாய் இறந்தபோது, இறுதி சடங்குகள் இந்து முறைப்படியே நடந்தன. அவரும் மொட்டையடுத்துக் கொண்டு, காவியுடையணிந்து சில காலம் திரிந்தார்! விமர்சகர்கள் அவர்களிடையே இருந்த இத்தகைய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவர்.
9. ராஜாஜி கண்காணிக்கப் பட்டார்: ராஜாஜி என்ன பேசுவார், எங்கு செல்வார் என அறிய அவர் கண்காணிக்கப்பட்டது தெரிகின்றது. “நான் திரு. ராஜகோபாலாச்சாரியாருடைய திட்டத்தின் மூலம் எவ்வாறு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவார் என அவரது நடவடிக்கைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து வருகிறேன். உமது பம்பாய் வீட்டில் காந்தியை வரவேற்பதும் அறிவேன்…………” என்று, பெரியார் தனது ஆகஸ்டு 9, 1944 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடுகின்றார். இவர் ராஜாஜியின் நண்பர் என்பது, அனைவரும் அறிந்ததே! முஹம்மது இஸ்மாயிலின் சொந்தக்காரர், முந்தைய ராஜ்ய சபா அங்கத்தினர் – ஏ.கே.ரிபாயி குறிப்பிடுவதாவது: செய்யது முட்ஸா ஹஸரத் MLA (தில்லி) 1940ல், திருசியிலுருந்து சென்னைக்கு ரயிலில் வரும்போது, ராஜாஜி மற்றும் டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீரங்கம் ஸ்டேசனில் ரெயிலில் ஏறுகின்றனர். மேல் படுக்கையில் இருக்கும், செய்யது ஹஸ்ரத், இருவரும் என்ன பேசிக்கொள்கிரார்கள் என மிகவும் ஆர்வத்துடம் ஒட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார். குறிப்பாக, அவர்கள் முஸ்லீம்களைப் பற்றி பேசுபோது, தூங்குகின்றமாதிரி நடித்து அவைகள் பேசியதைக் கேட்டுக் கொண்டார். சென்னை எழும்பூரில் இறங்கியதும் நேராக இஸ்மாயில் வீட்டிற்குச் சென்று, அவரிடம் தான் ஒட்டுக் கேட்டதை தெரிவித்தார் . இஸ்மாயில் ஜின்னாவை சந்தித்து தான் கேள்விபட்டதை கூறியிருப்பார். ராஜாஜி இந்த திட்டத்தை 1943ல் காந்தியின் ஒப்புதை பெற்று, 1944ல் “ராஜாஜி திட்டம்” என வெளியிடப்பட்டது! பிறகு ஜின்ன்னாவிற்கும் தெரிவிக்கப்பட்ட்டது. அம்பேட்கர் இத்திட்டத்தை விமர்சிக்கின்றார் .

பாகிஸ்தான், ஒரு வெற்றியா? ஜின்னாவின் கனவு பாகிஸ்தான் வெற்றியா எனப் பார்க்கும்போது, “இஸ்லாம்” அந்த நாட்டை ஒன்றாக வைத்துக் கொள்ளமுடியவில்லை எனத்தெரிகின்றது. மதரீதியில் பிரிவினை பேசும் பிரிவினைவாதிகளுக்கு “பங்களாதேசம்” ஒரு பெரிய கேள்வியினை எழுப்புகிறது – ஏன் “இஸ்லாம்” பாகிஸ்தானை ஒன்றாகயிருக்க வைத்திருக்க முடியவில்லை? இதைத் தவிர, பாகிஸ்தான் பல “இஸ்லாமிய” குழுமங்களையே, “காஃபிர்கள்” என பிரகடனம் செய்து, அவர்களது பள்ளிவாசல்களை உடைத்து, நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது . சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான், பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துபோக யத்தனிக்கின்றன. செப்டெம்பர் 17, 2000ல் சிந்தி, பலுக், மொஜாஹிர் தலைவர்கள் லண்டனில் கூடி, பாகிஸ்தானிடமிருந்து “ஆஜாதி” (விடுதலை) கேட்டுள்ளனர்! எனவே, பாகிஸ்தான் வெற்றியா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

திராவிடநாடு ஏன் அடைய முடியவில்லை? அம்பேட்கரே “ஆரியர்-திராவிடர்” இனவாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமது புத்தகங்களில், “ஆரிய படையெடுப்பு சித்தாந்ததை” அறவே பொய் என எடுத்துக் காட்டுகின்றார். “பாகிஸ்தானம்”, “ஹிந்துஸ்தானம்” தவிர, எந்த “ஸ்தானமும்” வரமுடியாது என வாதிட்டார். பெரியாரின் பிரிவினை வாதத்திற்கு, நீதிகட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் தாங்கள் “திராவிடர்” என்றும், மற்றும் அதனால் இந்தியர் / இந்துக்கள் என்பதிலிருந்து வேறுபட்டவர்கள் என்ற கருத்தினையும் ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதியர் உறுதியாகக் கூறும் அளவிற்கு, பெரியார் எந்த மாநிலத்திலும் திராவிடர் அதிகமாக இருந்தனர் என்று எடுத்துக் காட்ட முடியவில்லை. ஆம்பேட்கரே, பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு மற்றும் ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கு என்றே வாதிட்டார். ஜின்னா தெளிவாவாக தான் முஸ்லீம்களுக்கு மட்டும்தான் பாடுபட முடியும், “முஸ்லீம்-அல்லாதவர்”களுக்கு உதவ முடியாது என்றார். மேலும், இவரது தோழர்கள் தனியாகப் பிரிந்து தனி கட்சித் தொடங்கினர். தேர்தலில் வெற்றிபெற்று, அரசாங்கம் அமைத்த பிறகு, பிரிவினை வாதத்தை மூட்டைக்கட்டி வத்துவிட்டனர்.

Series Navigation

author

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

Similar Posts