Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

கே. ஆர். மணி


திருதிராட்டினுக்கு மிகச்சோர்வாயிருந்தது. வெயில் காலம் வேற. வயதுமாகிவிட்டது. விதுரனும் இப்போது வருவதில்லை.
ஏதாவது எந்த பத்திரிக்கையிலாவது எழுதி மாட்டிக்கொள்கிறான். வர்க்க குழப்பம் அவனுக்கு அதிகமாகிவிட்டது. தருமம் சில சமயம். வன்மன் சில சமயம். ஆனாலும் அதை வைத்து இப்போது பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிட்டான் போலிருக்கிறது. பக்கத்திலிருக்கும்போதுதான் செய்யமுடியவில்லை, எப்படியோ பிழைத்துப்போகட்டும்.

பக்கத்தில் காந்தாரிகளையும் காணோம். ரொம்பநாளாகவே காந்தாரிகளை அந்தப்புரத்திற்கப்பால் அநுமதிப்பதேயில்லை. இப்போதெல்லாம காந்தாரிகளை நம்பமுடிவதில்லை. நம்பாமலிருக்கவும் முடிவதில்லை. சின்ன வயதிலே நுழைத்திருக்கலாமோ? ஹீம்… குழந்தைகளுக்குத்தான் ராஜ்யத்தை பட்டாபோட்டு கொடுத்துவிட்டோமே இன்னும் என்ன பிரச்சனை. தடையாய் இருந்த பக்கத்து நிலத்து களைகளை பிடுங்கியாகிவிட்டது. இன்னமும் பொழுது முடிந்து பொழுது புலர்ந்தால் பிரச்சனைமேல் பிரச்சனை. மஞ்சள் அங்கவஸ்திரத்தால் துடைத்துக்கொண்டார். கறுப்புக்கண்ணாடியையும் துடைக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு துடைத்தாலும் அது கறுப்பாய்த்தான் காட்டப்போகிறது. என்னத்தை துடைத்து என்ன செய்ய..

நாம் நினைப்பதையே சொல்கிற தனது சேனலை பார்த்துத்தான் என்ன பயன். மற்ற சேனல்கள் என்ன சொல்கின்றன. சூரியவெப்பம் தகித்தது. விஜயமான தொலைக்காட்சி சிரிக்கச்சொல்லி கிச்சுகிச்சு மூட்டியது. இப்போதெல்லாம் எவருமில்லாதபோது இப்படியான நடுநிலை தொலைக்காட்சி அலைவரிசைகள் பார்ப்பதுதான் பழக்கமாய் போயிற்று. சூரியன் அலைவரிசை நினைத்து, திருதிராட்டினக்கு வயிறு புழுங்கியது. எவ்வளவு பெரிய அட்சயபாத்திரத்தை வளர்த்து
மலிவு விலைக்கு கொடுத்துவிட்டோமே.. நட்சத்திர ஆங்கில சேனல் என்ன சொல்கிறது ?. பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். இது ஒன்றும் புதிதல்ல.

தண்ணிக்கும் தனது அரசுக்கு கொஞ்சநாள் கண்டமிருந்தது. குழாயில், தளமைப்பதில் என்று ஒன்று மற்றி ஒன்று. பேராசிரியர் துரோணர் அதிகமாக பேசாமலிருந்தாலே வந்த பிரச்சனைகள் பனிபோல் உருகிடும், சூரிய சந்திரர்கள் எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள், அதனால் இதைவிட நாற்றெமெடுக்கிற குட்டைபிரச்சனையோ, முட்டைபிரச்சனையோ வந்தவுடன்
குழாய் அமுங்கிவிடும் என்று சொன்னது அப்படியே நடந்தது. இழவு பிடிச்ச கிரகணம், அதுவும் பதினாலு ஆண்டுகளுக்கு மேலாக சந்திரகிரகணம் அதையும் தாண்டி வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. சந்திரன் ஐந்துவருடத்திற்கு ஓருமுறைதான் மோசமாயிருந்தானே தவிர ஏதோ ஓரு இணக்கம் இருக்கத்தான் செய்தது.

இப்போதைய பிரச்சனை குறுநில மன்னர்களான குழந்தைகளிடமிருந்தல்ல. அந்த அமைச்சன் வந்திருந்தான். ஆயில்பாலத்தூவாபனன்.
அவன் மீதுதான் மேல்சபையிலிருந்து புகார். எதிர்கட்சிகளுக்கு வேலையில்லை. அங்கேயும் ஏதோ மருத்துவர் குட்டையை குழப்பிக்கொண்டிருக்கிறார். மருத்துவர்களாலும் இப்போதெல்லாம் நமக்கு கண்டம் ஆரம்பித்திருக்கிறது. படித்து டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் அவர்கள். அதனாலென்ன.. ஆயில் பாலத்தூவாபனன், தன்னோடு முன்னாளிலிருந்தேயிருப்பவன். விசுவாசி. ஏற்றம், இறக்கம் தெரிந்தவன். இப்படியா தவறு செய்வாய், கண்ணாலே கேட்டார் திருதிராட்டினன். கறுப்புக்கண்ணாடி தாண்டியும் என் கண்களை அவனால் படிக்கமுடியும்.

அவன் படித்தான். அரசனின் கேள்விகள் கேட்கப்படாமலே அவனுக்கு எட்டியது. அவனும் மெளனத்தாலே பதில் சொன்னான்.
‘ அரசரே, இதை நீங்கள் கேட்கக்கூடாது. உங்களுக்காக பேசிய வாய்கள், உங்களுக்காகவே உழைத்த கரங்கள். நீங்கள் நமது சிற்றரசர்களுக்காக பெரிய கீரிடங்களை கொடுத்தபோது, நான் அணிவிக்க முயன்றது சின்ன அணிகலன்கள்தானே. இதுகூட செய்யாமல் எப்படி ஒரு தந்தையிருப்பது. ஒரு தந்தை தமயன்களுக்காக எப்படி பாசமாய் பகிர்வுகளை செய்வது என்று காட்டியவர்கள் நீங்கள்தானே. எங்களிடமிருப்பதும் உங்கள் இதயம்தானே.’

‘அதற்காக. இப்படியா.. மாட்டிக்கொள்வது..’ சொல்ல நினைத்த திருதிராட்டினர் அமைதிகாத்தார்.
ஆயில்பாலத்தூவாபனன் கையை அமைதியாய் தடவி அழுத்தினார். ஆயிரம் யானை பலம் வந்ததுபோலிருந்தது ஆயில்பாலத்தூவாபனனுக்கு.
எவ்வளவு பெரிய கை. இதுபோதும். இதுதான் வேணும். உடுக்கை இழந்தவன்கை போல.. சிரிப்போடு வெளியே வந்தார்.
திருதிராட்டினர் பணியாளை அழைத்து பாத்திரத்தில் கை கழுவிக்கொண்டார். மஞ்சள்துண்டால் கையை துடைத்துக்கொண்டார்.
அறையெங்கும் தேர் சக்கரத்தில் பயன்படும் திரவத்தின் வாசனம் நிரம்பியது.

********
மரணத்தை நோக்கிப்போகும் இடஓதுக்கீடு விவாதங்கள் :

மாற்றுக்கருத்துக்கள்:
இடஓதுக்கிடுபற்றி நல்ல கருத்து தளத்தை உருவாக்கிய பலதளங்களில் ஒன்று. பத்ரியால் எழுதப்படும்

http://thoughtsintamil.blogspot.com/2008/04/vs.html

எல்லாரும் கிட்டத்தட்ட சில தீர்வுகளை நோக்கி நகர்வதாய் தெரிகிறது.

அ) நல்ல தரமான கல்விக்கான அதீத கட்டுப்பாடு வரும்காலத்தில்(10 வருடத்தில்) ஓரளவு கட்டுப்படுத்தப்படும். குறைந்தபட்சம் தொழிற்கல்விகள், மற்றும் அடிப்படைக்கல்வித்தேவைகள் அதீக சிரமமின்றி பூர்த்திசெய்யப்படலாம்.
ஆ) சமச்சீரான கல்வி முழுவதுமில்லாவிட்டாலும் ஏட்டளவிலாவது ஒரு தொடக்கமாக செய்யப்படலாம்.(15 வருடம்)
இ) கட்டாயக்கல்வியை எல்லா மாநிலங்களும் ஏற்று, 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறலாம் (20 வருடம்)
ஈ) உயர் கல்விக்கு தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதைத்தவிர தற்போது வேறெந்த வழியுமில்லை.
உ) கீரிமிலேயர் – விவாதம் அரசாங்கத்தை இடஓதுக்கிடு விவாகாரம் வெறும் அரசியல்வாதிகளின் வெற்று கோசமாய்
மாறிவிடாது, அர்த்தபுஸ்டியான தொலைநோக்கான எண்ணமாயிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளும். அதிலிருந்து
புள்ளிவிவரங்கள், தற்போதய புதிய பார்வைகள், மாறுபாடுகள் கொண்ட உண்மையான இடஓதுக்கீடு திட்டம் உருவாகலாம்.
தற்போதயைய தொழில்நுட்பத்தை வைத்து அதை அடைவது அத்தனை கடினமானதல்ல. உணர்வுப்பூர்வமான கொள்கையிலிருந்து
அறிவுப்பூர்வமான செயலாக்கத்திட்டமாய் மலருவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றது. ( 10 வருடம்)
ஊ) அப்வர்மேட்டிவ் Affarmative ஆக்சன் என்று சொல்லப்படுகிற சமுதாய சேவைகள் தொழில் நிறுவனங்களாலும், சேவை நிறுவனங்களாலும் தொடங்கப்பட்டு இடஓதுக்கீட்டுக்கான தேவையை குறைக்கவைக்கலாம். ( 10 வருடம்)
எ) மேல்தட்டிலிருக்கிற கீரிமிலேயர்களுக்கு இது பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தப்போவதில்லை. அவர்கள் ஏற்கனவே மேலை நாடுகளில் தங்களது அடுத்ததலைமுறையை அனுப்பி படிக்கவைத்துவிடுவார்கள். பட்ட மேற்படிப்பு மட்டுமின்றி, பட்டபடிப்பும் நல்ல Eliteஆன கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
ஏ) நிறுவனங்களே தங்களுக்கு தேவையான தொழிற்திறமைகளை உருவாக்கிக்கொள்ளலாம். பட்டப்படிப்பிற்கோ, மேற்படிப்புக்கோ கல்வி நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்கவேண்டிய கட்டாயங்கள் குறைந்துவிடலாம்.
ஐ) கல்வி, தகுதிபற்றி புதிய சிந்தனைகள். எல்லாதிசையிலும் மாறும். மாற்றப்படும்.
ஓ) வளரும் தொழில்நுட்பங்கள் கொஞ்சம் அதிவேகமாக துரிதப்படுத்தப்பட்டால் கொடுக்கப்படுகிற கல்வி

தமிழகத்தின் தொழில், கல்வி வளர்ச்சிக்கு சமூக நீதியின் வெற்றிக்கு பெரும்காரணம் இடஓதுக்கீடு 69% இருந்ததால் மட்டுமே சாத்தியமானதாய் பேசப்பட்டது. சிறந்த சிந்தனையாளரான ப சிதம்பரமும் கூட இப்படியே சொன்னதாய் ஞாபகம். தமிழகத்தின் வளர்ச்சியும் இதனால் மட்டுமே என்கிற கருத்தாக்கம் போகிற போக்கில் உருவாக்கப்பட்டு போகிறது. இடஓதுக்கீடானால் கெடுதல் மட்டுமே என்கிற சிந்தனை எத்தனை அபத்தமோ, அதனால் மட்டுமே எல்லா நன்மைகளும் என்கிற கருத்தும். இடஓதுக்கிடு ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான சில காலத்தீர்வாக மட்டுமேயிருக்கமுடியும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இந்த இடஓதுக்கீட்டுக்கும் பெரிதான சம்பந்தமிருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இடஓதுக்கிடு தவிர்த்து வேறுசில காரணங்களும் உண்டு. தமிழகம் பொதுவாக படிப்பிற்கு அதீதமுக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த சமூதாயம். ஓரு குஜராத்திலோ, ராஜஸ்தானிலோ இத்தனை முக்கியத்துவம் கொடுத்ததாய், இன்னும் கொடுப்பதாய் தெரியவில்லை. மற்றும் தொடக்கப்பள்ளிகளை அதிகமாய் நிறுவியதாலும், மதிய உணவு திட்டத்தாலும் அதன் அடிப்படை கட்டமைப்பு சரியாக அமைந்ததால் மட்டுமே கல்வி தளத்தில் அதன் முதன்மை நிலைக்கு காரணம். அதனது தொழில்வளர்ச்சிக்கு, தமிழக தொழில் முனைவர்களுக்கு, நிறைய கடினங்களுக்கிடையே முனைவருக்கான மிக நல்ல சூழல் இல்லாத நிலையிலும் முன்னேறி வந்த அவர்களின் மனதிடத்திற்கு நன்றி சொல்லப்படவேண்டும். இப்படியான கருத்தை சொல்பவர் ஜனார்த்தனன். இவர் DNAவின் சிறந்த கட்டுரையாளர். ஒரு வெற்றிக்கு பல தகப்பன்கள், தோல்விதான் அநாதையாயிருக்கும் போல.

நிறைய மாற்றுக்கருத்துக்களை லாஜுக்கலாக அலசும் ஜனார்த்தன் இடஓதுக்கீடு பிரச்சனை கிட்டத்தட்ட மரணத்தை நோக்கி பயணிப்பதாகவே சொல்கிறார். ‘என்ன அப்பு.. அப்படி சொல்லிட்டிங்க.. சின்ன புள்ளையாட்டம். அப்படியெல்லாம் விட்டுரவாமா.. அடுத்த தனியார் துறை, மத இடஓதுக்கீடு, அயல்நாட்டு இடஓதுக்கீடு அப்படின்னு போயிட்டேயிருப்போம்ல.’. என்று சொல்லி
அரசியல்வாதிகள் தங்களது கடைசி சிரிப்பை சிரிக்கமாட்டார்களா என்ன ? வோட்டுக்கும் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லாதபோது
மட்டுமே அதன் தீவிரமட்டுப்படுத்தப்பட்டு தேவையான தீர்வை நோக்கி பிரச்சனைகள் நகர்கின்றன. பிரச்சனைகள் இறக்கின்றனவா,
வேறுவிதமாய் பிறக்கின்றனவா.. என்பதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும் என்று பழம்பஞ்சாங்க நாட்டமை தீர்ப்பை சொல்வதைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை என்றே தெரியவருகிறது என்பதால் File closed for now.


Series Navigation

author

கே ஆர் மணி

கே ஆர் மணி

Similar Posts