கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

வாஸந்தி


பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது அன்னிய மண்ணில்– கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட கம்போடியா நாட்டின் சியம் ரீப் என்ற நகரத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலிருந்து கடல் கடந்து விமானத்தில் நான்கு மணி நேரம் பறந்து தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்குக்கு வந்து அங்கிருந்து வேறு விமானம் பிடித்து ஒரு மணி நேரப் பயணம். சியம் ரீப்பைத் தொட்ட உடனேயே பூர்வ ஜன்ம தொடர்பு அந்த மண்ணுடன் இருப்பது போலப் பட்டது.
அங்கு சென்றால் உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ப்ரும்மாண்ட கோவில் வளாகங்களும் அப்ஸரஸ்களின் சிலைகளும் பிராகாரச் சுவர்களில் விரியும் மகாபாரத ராமாயணக் காட்சிகளும் இவ்வளவு தூரம் பயணித்து இவை வந்தது எப்படி என்ற பிரமிப்பை ஏற்படுத்தும். பாற்கடலைக் கடைந்தபடி அசுரர்களும் தேவர்களும் தத்ரூபமாக எதிரில் நிற்க அன்னிய மண்ணென்ற உணர்வு அடியோடு மறையும். அங்கு திருவிழாக்கூட்டம் போலக் குழுமியிருக்கும் அமெரிக்க ஆஸ்திரேலிய ஜாப்பானிய டூரிஸ்ட்களுக்கு சுவரில் விரிந்திருக்கும் சிற்பக் காட்சிகளை கம்போடிய டூரிஸ்ட் கைடை நகர்த்திவிட்டு, [உங்களுக்கு ஓரளவு சம்ஸ்க்ரிதம் தெரிந்திருந்தால்] சரியான உச்சரிப்புடன் ஹிந்து புராண கதைகளை நேரிடை ஞ்யானத்துடன் விளக்கும் ஆர்வத் துடிப்பும் ஏற்படும்.
கோவில் வளாகங்களைச்சுற்றி கடலைப்போல் அகன்ற நீர் சூழ்ந்த மதகுகளும் அகழிகளும் சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர ஏடுகளை எனக்கு நினைவு படுத்தி காரணமற்ற பெருமிதத்தைத் தந்தன. தஞ்சையில் பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்டிய கால கட்டத்திற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கூர்வாட் கோவிலை கம்போடிய மன்னன் – இரண்டாம் ஜெய வர்மன் கட்டஆரம்பித்துவிட்டதாகச் சரித்திரம். பெரிய சிவ பக்தன் அவன் என்கிறார்கள். அவனைத் தொடர்ந்து வந்த மன்னர்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்குக் கோவில் வளாகங்களை விரிவு படுத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. நமது பல்லவ மன்னர்களின் பெயர்கள் போல அவர்களது பெயர் பட்டியல் அதிசய ஒற்றுமை கொண்டது. ஜெயவர்மன், யஷோவர்மன், ஹர்ஷவர்மன், ராஜேந்திர வர்மன், பரமேஷ்வர வர்மன் இத்தியாதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு இந்து மதமே புத்த மதத்துக்கு இணையாக அங்கு கோலோச்சியதாகக் கம்போடிய சரித்திரம் சொல்கிறது. ஆனால் அங்கும் இந்து மதத்திற்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையே இடைவிடாமல் போட்டியும் சண்டையும் இருந்தன. சிவ பக்தன் வைத்த லிங்கங்கள் எல்லாம் அடுத்து வந்த பௌத்த உபாசகன் களைந்து விட்டு புத்தரின் சிலையை வைத்தான். மூலவர்தான் இடம் மாறினாரே தவிர கோவிலைச் சுற்றி ஓடும் ரேழிச் சுவர்களின் மஹாபாரத ராமாயணச் சிற்பங்களைச் சேதப் படுத்தவில்லை யாரும். அவை புராண தர்ம கதைகள் என்கிற காரணமாக இருக்கலாம். இப்போது முன்பு கோவிலில் வைக்கப்பட்டிருந்த லிங்கங்கள் எல்லாம் அங்கங்கே கண்டெடுக்கப்பட்டு அருங்காட்சி அகத்திற்குப் போய்விட்டன. இப்போது கம்போடிய மக்கள் வழி படுவது புத்த மதத்தைதான். வங்காளிகளிடையே ‘பர்மன்’ என்பது ஒரு ஜாதிப் பிரிவின் குறியீடு என்ற காரணத்தால் சமீபத்தில் ஒரு இந்திய ஆங்கில நாளேட்டில் ஒரு வங்காள எழுத்தாளர் அங்கூர் வாட் கோவிலைக் கட்டிய அரசனுக்கு வங்காள தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ தமிழ் நாட்டுத் தாக்கமே, முக்கியமாகப் பல்லவர்களின் தொடர்பே அங்கு இருந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாகத் தோன்றிற்று. இது எனது கற்பனை மிகுந்த ஊகம்தான்.

அங்கூர் வாட் என்ற அந்தப் புகழ் பெற்ற உலக அதிசயத்தைப் பார்க்க நானும் என் கணவரும்[இந்தியாவிலிருந்து] இளைய மகன் ஹரியும்[ அமெரிக்காவிலிருந்து] வந்திருக்கிறோம். சில வருஷங்களுக்குமுன் வரை அப்படி ஒரு கலைப் பொக்கிஷம் அங்கு இருப்பது வெளி உலகத்துக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, கம்போடிய மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். நகரங்களை கடல் கொண்டு போனதையும் கோவில்கள் மண்ணில் புதைந்து போனதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். கம்போடியாவிலோ அடர்ந்த காடுகளின் மறைவில் பல நூற்றாண்டுகள் புதைந்து போயிருந்தது அங்கூர் வாட்டின் ப்ரும்மாண்ட கோவில் வளாகம். கம்போடியா ·ப்ரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது ஒரு ·பிரெஞ்சு புதைபொருள் ஆய்வாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எடுத்த விடா முயற்சியில் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டு 1907-ல் உலக மகா அதிசயக் கண்டு பிடிப்பாகப்
பிரகடனமாயிற்று. பல சதுர மைல் பரப்புள்ளதும் பல கோவில் கட்டிடங்களும் கொண்ட அகழி சூழ்ந்த அந்த வளாகம் எப்படி எவர் கண்ணிலும் படாத வகையில் அடர்ந்த காடுகளினால் மறைக்கப் பட்டது என்பது நம்பமுடியாத அற்புதமாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற வளாகத்தில் [ஒன்றரை கி.மீ சுற்றளவு] பல கட்டிடங்களின் மேல் ராட்சஸ மரங்கள் அவற்றுக்குக் கவசம் விரித்ததுபோல ப்ரும்மாண்ட வேர்களைப் பரப்பி விரிந்திருக்கும் காட்சி ப்ரமிப்பை ஊட்டுவது. கம்போடிய சரித்திரம் பயங்கர திருப்பங்களையும் அன்னிய ஆக்கிரமிப்புகளையும் அக்கிரமமான துயரங்களையும் கொண்டது. அதனால் இயற்கையே இந்த அற்புத சிற்பக் கூடங்களை மிருக மனம் கொண்ட மனிதனின் பார்வையிலிருந்து மறைக்க எண்ணி பசுமைப் போர்வை போர்த்திற்றோ என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் வேர்களின் ஊடுருவலினால் பல கட்டிடங்கள் பாழாகிப் போயின என்று கட்டிட நிபுணர்கள் சொல்கிறார்கள். இருந்தும் சுற்றுச் சூழல் ஆர்வலரின் நிர்பந்தத்தால் பல மரங்கள் கவசம் போல் கட்டிடங்கள் மேல் படர்ந்திருப்பதை வெட்டாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். மலைப்பாம்புகள் சோம்பலுடன் படுத்திருப்பதுபோல அதற்கும் ஒரு அழகு இருக்கிறது. அமானுஷ்ய கரத்தின் சக்தியில் நம்பிக்கை உள்ள எனக்கு கம்போடிய மக்களுக்குத் தாங்கொணா துயரமளித்த வெறியாட்டம் மிக்க ஆட்சியாளர்களிடமிருந்து அந்தக் காடுகளே அங்கூர் வாட் என்ற அற்புதத்தைக் காப்பாற்றியதாகத் தோன்றுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே அது விலை மதிப்பற்ற ஒரு மகத்தான கட்டிடக் கலைப் போக்கிஷம் என்பதையும் ஒரு மிக உன்னதப் பண்பாட்டின் சரித்திர ஆவணம் என்பதையும் அனைத்துலக கலாச்சார ஸ்தாபனங்கள் உணர்ந்துகொண்டன. அப்போது கம்போடியா ·ப்ரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது ஒரு வகையில் கம்போடியாவுக்கு வசதியாக இருந்தது. பாரீஸில் தலைமை அகம் கொண்ட கல்வி ,அறிவியல் மற்றும் கலாச்சார ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமான UNESCO உடனடியாக தனது பாதுகாப்பின் கீழ் அங்கூர் வாட் கோவில்களை ஸ்வீகரித்துக்கொண்டு அதன் புனரமைப்புக்கும் பராமரிப்புக்கும் திட்டம் வகுத்தது. இந்து மதம் சம்பந்தப்பட்ட புராதன கோவில்கள் என்பதால் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் ஒரு சில பகுதிகளுக்குக் கோரியது. புனரமைப்பு வேலை மிகக் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். நம் ஊர் கோவில் சிலைகள் ஒரே கல்லில் செய்யப்படுவது போல் இங்கு இல்லை. ஒரே கல்லில் செய்வது சுலபம். அங்கூரில் அத்தகைய கல் இல்லை. ஒரே முகம் பல கல்அச்சுக்களால் ஆனது. சில அச்சுக்கள் இரண்டு அடி கூட இருக்கும். உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தால் அவற்றில் நான்கு பகுதி கொண்ட அச்சுகள் இருக்கும். அதில் சீராக அமைந்திருக்கும் உருவ அமைதி அற்புதமானது. பல நூற்றாண்டுகள் மனித பார்வையில் படாதிருந்து சிதில மடைந்திருக்கக் கூடிய சிற்பங்களை எப்படி சீரமைத்தார்கள் என்பது பிரமிப்பாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற கோவில் ஐம்பத்தாறு ப்ரும்மாண்ட நான்முகங்கள் கோபுரங்கள் போல் நின்று நான்கு திசைகளைப் பார்ப்பதாக அமைந்திருப்பது. [அதைக்கட்டிய ஏழாம் ஜெயவர்மனின் அப்போதைய வயது 56 என்பதையும் அவன் ஆண்ட 56 மாகாணங்களையும் அந்தக் கோபுரங்கள் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ] மாறும் சூர்ய ஒளியில் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்துவது. பல பெரிய கல் அச்சுக்களால் ஆன முகத்தில் இருக்கும் ஒழுங்கும் கலை நேர்த்தியும் , தவழும் சாந்தமும் அருள் சொறியும் புன்னகையும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. வர்ணிக்க இயலாதவை.

அங்கூர் வாட் [வாட் என்றால் கோவில்] கோவிலை சூரிய உதயத்தின் போது பார்த்தால் கொள்ளை அழகாக இருக்கும் என்றதால் ஐந்து மணிக்கு எழுந்து தயராகி அங்கு சென்ற போது எங்களை விட முன்னதாக நூற்றுக்கணக்கான டூரிஸ்டுகள் காமிரா சகிதமாய் நின்றிருந்தார்கள். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் சூரியன் வெளியே வரமுடியாமல் மேகம் மறைத்திருந்தது. அந்த சாம்பல் பூத்த விடியலிலும் அங்கூர் வாட் அற்புதமாகக் காட்சி அளித்தது. ஒரு செயற்கை அல்லிப் பொய்கை ஒன்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் அங்கூர் வாட்டின் பிம்பம் படிவதை காமிரா வைத்திருந்தவர்கள் எல்லாரும் மாய்ந்து மாய்ந்து படம் எடுத்தோம்.
அந்த வளாகத்தில் ஆறு வாசக சாலைகள் இருந்திருக்கின்றன என்ற விவரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்ததற்கான ஆதாரம். அந்தக் கட்டிடங்கள் இன்னமும் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் சர்ப்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பாற்கடல் கடைசல் என்பது ப்ரதானமான
குறியீடாகத் தெரிகிறது.
பன்டே ஸ்ரீ [ஸ்த்ரீகளின் தலைநகரம்] என்ற இளம் சிவப்புக்கல்லாலான ஒரு அழகிய கோவில் வித்தியாசமானது. இதன் முந்தைய பெயர் ‘திரு புவன மஹேஷ்வரன்’ கோவில். அது மற்ற கோவில்கள் போல அரசர்களால் கட்டப்பட்டது அல்ல. 5 ஆம் ஜெயவர்மன் என்ற அரசனின் குருவான ஜன வராஹன் என்ற ஒரு ப்ராம்மணரால் கி.பி.967 இல் கட்டப்பட்டது என்கிறார்கள். அந்த ஆசாமி தமிழ் நாட்டிலிருந்துச் சென்ற வராக இருக்கலாம்! தமிழ் நாட்டுக் கோவில் போல கோவிலின் கர்பக்கிரகத்துக்கு நேர் எதிரில் நந்தியின் சிலை இருக்கிறது. அடர்த்தியான மிக நுட்பமான சிற்பங்கள் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன அற்புதக் கலை அழகுடன்.
கம்போடிய கலைத்திறன் இத்தனை உன்னதத்தை எட்டியிருக்கவேண்டுமென்றால் கோவில் வளாகங்களை ச்சுற்றி மிக உயர்ந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரம் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கல் கட்டிடங்கள் இறைவனுக்கு மட்டுமே என்ற இந்து மத ஐதீகத்தின் வழியை இங்கும் அரசர்கள் பின்பற்றியதால் மண்ணால் கட்டப்பட்ட அரசனின் அரண்மனை மற்றும் இதர கட்டிடங்கள் அழிந்து போயின என்று நம்பப் படுகிறது.
எந்தக் கோவில் வளாகத்தை விட்டு வெளியில் வந்தாலும் இந்தியாவில் பிச்சைக்காரர்களை சந்திப்போம். இங்கு பிச்சைக்காரர்களைக் காணவில்லை.இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பிந்தங்கிய நாடு. சிறுமிகளும் சிறுவர்களும் அங்கூர் வாட்டின் புகைப்படங்களையோ அல்லது சிறிய கலைப்பொருள்களையோ கையில் விற்பனைக்கு வைத்து மழலை ஆங்கிலத்தில் கூவிக்கூவி அழைக்கிறார்கள்.ஒன் டாலர் ·பைவ் டாலர் என்று ராகம் போட்டபடி. அங்கு நேரிடையாக அமெரிக்க டாலரே கொடுக்கலாம். அவர்கள் முகத்தில் இருக்கும் பாசாங்கற்ற புன்னகையும் உற்சாகமும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வகை. பொதுவாகக் கம்போடிய மக்கள் மிக அமைதியான தோற்றம் கொண்டவர்கள். முகத்தில் நட்பு மிகுந்த புன்னகையும் இங்கிதமான பேச்சும் மிக இயல்பாக வெளிப்படுகிறது.டூரிஸத்தினால் சியம் ரீப் நகரம் மிகத் துப்புரவாக சாலைகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. ஹோட்டல்களில் விருந்தோம்பலை உன்னத கலையாக பாவிக்கிறார்கள்.
அங்கூர் வாட் கண்டுபிடிப்பிற்குப் பின் கம்போடிய பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது என்றாலும்–கடந்த இருபது ஆண்டுகளில் சியம் ரீப்பில் 100 ஹோட்டல்கள், ஆயிரம் விருந்தினர் விடுதிகள் வந்துவிட்டன; புதிதாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன– அவர்களது சரித்திரப் பின்புலத்தை எண்ணிப்பார்க்கும் போது இது மிகுந்த வியப்பைத்தரும் விஷயம். கலகக் காரர்களும் அராஜக அரசுகளும் பல்வேறு காலங்களில் புதைத்த நிலச் சுரங்க வெடிகளால் இப்பவும் தினமும் சராசரியாக மூன்று கம்போடியர்கள் சாவதாகச் சொல்லப் படுகிறது. அவர்களது சமீபத்திய வரலாறே நம்பமுடியாத வன்முறை மிகுந்தது.
கம்போடியாவின் ஆரம்பதோற்றத்தைப் பற்றின ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. அது பிறந்ததே அந்த மண்னைச் சேர்ந்த இளவரசிக்கும் அங்கு நீர் வழியாக எதேச்சையாக வந்த கௌண்டின்யன் என்ற ஒரு இந்திய பிராம்மணனுக்கும் ஏற்பட்ட காதலால் என்கிறது புராணம். அவர்களது திருமணத்திற்கு அரசன் கொடுத்த வரதட்சணையே கம்புஜா என்ற நாடாக உருவானது. அன்றிலிருந்து இந்தியத் தொடர்பு ஆரம்பமானதாகச் சொல்கிறார்கள். கடல் வழி வர்த்தகத்தின் மூலமே இந்தியப் பண்பாடும் நாகரிகமும் ஹிந்து மதமும் மன்னன் அசோகனின் தூதர்களால் பௌத்தமும் பரவியிருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அங்கூர் காலம் என்று சொல்லப்படும் முதல் பதினான்கு நூற்றாண்டுக் காலகட்டமே கம்போடிய வரலாற்றின் மிக உன்னதமான காலம். அதற்குப்பின் பலவீனமான அரசர்களால் சரிய ஆரம்பித்தது. வியட்னாம் மற்றும் தாய்லாந்தினால் பல ஆண்டுகளுக்குத் தாக்கப்பட்டு கடைசியில் 1864-ல் ·ப்ரெஞ்சுக்காரர்களின் கட்டுக்குள் வந்தது. க்மெர் என்ற பெயர் கொண்ட கம்போடிய மக்களை அரச குடும்பமே பெயருக்குத் தலைமை தாங்கியது. 1952-ல் சிஹனூக் என்ற அரசன் நாட்டுக்கு சுதந்திரம் கோரியதில் 53-இல் விடுதலைக் கிடைத்தது. அரச பதவியைய்துறந்து சிஹனூக் ஜன நாயகத் தேர்தல் நடத்தி மாபெரும் வெற்றி பெற்று அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கம்போடிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவரானார்.
அண்டை நாடுகளில் அமெரிக்க செல்வாக்கு அதிகரித்த நிலையில் சிஹனூக் அமெரிக்காவை சந்தேகித்தார். க்மெர் ரூஜ் என்ற வன்முறையையே ஆயுதமாகக் கொண்ட இடது சாரிகளுடன் இணக்கமானார். அவரது ஊக்குவிப்பினாலேயே க்மெர் ரூஜ் இயக்கம் வலுப்பெற்றது. சிஹனூக்கின் ஆட்சி ஊழல் மிகுந்த காரணத்தால் மக்களிடையே செல்வாக்கை இழந்தது. அமெரிக்க தாக்குதல் வியட்நாமில் ஆரம்பிக்க அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் கம்போடியாவில் ஒளிந்து கொள்ள சிஹனூக் சீனாவுக்குத் தப்பி ஓடினார். அமெரிக்க
குண்டு வீச்சு கம்போடியாவில் தொடர்ந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஏராளமான கம்போடியர்கள் மாண்டார்கள். இந்த கால கட்டத்தில் க்மெர் ரூஜ் இயக்கம் மிகுந்த பலம் பெற்றது. வியட்நாம் ரகசியமாக அதற்கு உதவியதாகச் சொல்கிறார்கள். வியட்நாமில் சந்தித்த தோல்வியினால் அமெரிக்கா பின்வாங்கியதும் கம்போடியா க்மெர் ரூஜின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ஆண்டது என்னவோ மூன்று ஆண்டுகள் எட்டு மாதம் இருப்பத்தி ஓரு நாட்கள் மட்டுமே. ஆனால் போல் பாட் என்ற தலைவனின் கீழ் அது நடத்திய பயங்கரம்
உலக சரித்திரத்தில் எங்கும் கண்டிராதது. க்மெர்கள் கொண்ட சொந்த இன மக்களையே க்மெர் ரூஜ் ராட்சஸ வெறியுடன் கொல்ல ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் அல்லாதவர் என்று எல்லாரையும் சந்தேகித்து நாட்டை சுத்தப்படுத்தும் வெறியாட்டத்தை அவிழ்த்து விட்டது. முப்பது லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. பல லட்சம் பேர்கள் பஞ்சத்தாலும் வறுமையாலும் இறந்தார்கள்.
க்மெர் ரூஜை அடக்க வியட்நாம் படையெடுத்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கம்போடியா உள்நாட்டுப் போரில் சீரழிந்தது. க்மெர் ரூஜ் கடைசியில் வலுவிழந்து போல் பாட் தப்பி ஓடினான்.[ அவன்
சமீபத்தில் இயற்கையாக இறந்து போன செய்தி வந்தபோது யாரும் வருந்தவில்லை.] கம்போடியாவில் 1998டிலிருந்து ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இப்படிப்பட்ட பயங்கர வரலாற்றைக் கொண்ட மக்களுக்கு அங்கூர் வாட் ஒரு வரப்ரசாதம் போல மிகப் பெரிய தெம்பளிப்பது. சுற்றிலும் நடந்து வந்த ரத்தகளறிகளுக்கு சாந்தம் தவழும் அங்கூர் சிலைகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் சிதறிவிடாமல் உயிர்ப்புடன் இன்று வைத்திருப்பது அந்த அற்புத கோவில் சிற்பங்களின் அமானுஷ்ய சக்திதான் என்று கம்போடிய மக்கள் நம்பினால் வியப்பில்லை.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

author

வாஸந்தி

வாஸந்தி

Similar Posts