கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

வாஸந்தி“நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?”

நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள். மாநிறம். மையிட்ட வட்டப் பெரிய கரிய விழிகள். நான் ஆம் என்று தலையசைத்ததும் ” நான் ·பிஜி இந்தியன். பெயர் அனீதா” என்று கரம் நீட்டி கைகுலுக்கினாள். “இந்தியாவிலிருந்து வரும் இந்தியர்களைப் பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். என் தாத்தா இந்தியாவிலிருந்து வந்தவர், வங்காளி என்று நினைக்கிறேன்” என்று வெள்ளையாகச் சிரித்தாள். சமயம் கிடைத்த போதெல்லாம் என் சீட்டைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து என்னைப் பற்றி ,என் பயணத்தைப் பற்றி இந்தியாவைப் பற்றிச் சின்னக்குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டாள்.
நான் சிட்னியைலிருந்து ·பிஜி தீவின் நாண்டி என்ற நகரத்துக்குப் பயணிக்குமுன் விமான நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு ·பீஜி இந்தியரை சந்தித்திருந்தேன். என்னை அழைத்திருந்த ‘சங்கம்’ என்ற அமைப்பின் அங்கத்தினர் அவர் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு அந்த அமைப்பைப்பற்றி எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. நான் பயணித்த விமானத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி இடையில் என் இருக்கைக்கு வந்து சில விவரங்கள் சொன்னது சற்று தெளிவைத் தந்தது.
” ‘சங்கம்’ என்பது தமிழ்ச் சங்கம் இல்லை. தென்னிந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் என்று பெயர் கொண்ட தென்னிந்தியர்களின் அமைப்பு. தென்னிந்திய கலாச்சாரம் வட இந்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது , அது காப்பாற்றப்பட வேண்டும் என்று ஐம்பது [நான் 1986-ல் சென்றேன்] வருடங்களுக்குமுன் ஒரு தமிழருக்குத் தோன்றியதால் உருவாயிற்று. அதில் தென்னிந்தியர்மட்டும் உறுப்பினர்கள் என்றாலும் அதன் சலுகைகள் எல்லா ·பிஜி வாழ் இந்தியர்களுக்கும் உண்டு.”
அங்கு தென்னிந்தியர்களும் பேசும் மொழி ஹிந்தி என்று நான் அறிந்திருந்தேன். [அங்கு யாருக்கும் தமிழ் தெரியாது என்றும் எனக்கு ஆங்கிலமோ ஹிந்தியோ தெரிந்தால் மட்டுமே அனுப்பும்படியும் ICCR ருக்குத் தகவல் வந்திருந்தது] அதற்கான விளக்கத்தைக் கிருஷ்ணமூர்த்தி அளித்தார்.
“·பீஜி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவின் பல பாகங்களிருந்து ஆண்களையும் பெண்களையும் கங்காணிகள் வலைவீசிப் பிடித்துக்கொண்டு போனார்கள். ·பீஜியில் ‘லைன்’ என்று சொல்லப்பட்ட வரிசை வரிசையான கூலிக்காரக் குடில்களில் சேர்த்து வைக்கப் பட்டார்கள். அதிகபட்சம் ஹிந்தி பேசுபவர் இருந்ததால் ஹிந்தி பொது மொழியாகிவிட்டது. தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தினாலும் ஹிந்தி பொது மொழியாயிற்று. ·பீஜி இந்தியரின் இன்றைய வளர்ச்சியில் ‘சங்கத்’திற்கு முக்கிய பங்கு உண்டு “என்றார் கிருஷ்ணமூர்த்தி. அந்தச் சரித்திரம் ஒரு சகாப்தம் போல என்முன் விரிந்தது.
அங்கு தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் ஆங்கிலேய கம்பெனிக்காரர்களுடன் ஐந்து வருட ஒப்பந்தத்தில் [அக்ரீமெண்டு] கையெழுத்திட்டு வந்தவர்கள். படிப்பறியா ஏழைகளுக்கு அதைப்பற்றி என்ன விளங்கியிருக்கும்? அதைக் கொச்சையாக ‘கிரிமிட்’ காலம் என்றார்கள். விருப்பமிருந்தால் தொடர்ந்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்யலாம் என்றும் விருப்பமில்லாதவர்கள் திரும்ப இந்தியாவுக்குச் செல்லலாம், அதற்கு ஒரு வழி டிக்கெட் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. வெகு சிலரே திரும்பிச் செல்ல விரும்பினார்கள். அநேகமாக அனைவருமே அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். வசதியான வாழ்வு கிடைத்துவிட்ட நினைப்பில் அல்ல. திரும்பிப் போனால் இந்தியாவில் அதைவிட மேலான வாழ்வு காத்திருக்காது; மாறாக சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு வாழ வேண்டியிருக்கும் என்ற பயத்தினால். அவர்களில் பெரும்பான்மையோர் ஜாதிக்கொடுமைக்கு ஆளானவர்கள். அதிலிருந்து தப்பிக்கவே கப்பலில் கண்காணாதேசத்துக்குப் பயணித்தவர்கள். இப்போது ‘கடல் தாண்டிய’ பாவத்துக்கு வேறு ஆளாகியிருந்தார்கள். தவிர லைனில் வசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் ஜாதி விட்டு ஜாதி திருமணமும் கலப்பும் ஆகியிருந்தது. வந்த விகிதத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவு என்பதால் பல ஆண்கள் ஒரு பெண்ணுடன் வாழ்ந்த அவலமும் உண்டு. இதனாலெல்லாம் கூச்சப்பட்டுக்கொண்டு தங்கிவிட்டவர்கள் தான் அதிகம். ·பிஜியிலேயே தங்கிவிடத் தீர்மானித்து அடுத்த ஐந்து ஆண்டுகளும் ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு ஆங்கிலக் கம்பெனி பத்து ஏக்கரா நிலம் கொடுத்தது. கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைத்து காசு பார்த்தவர்களின் சந்ததியினர் தான் இப்போது வழும் இந்தியர்கள்.
‘கிரிமிட்’ கால கட்டத்தில் இந்தியர்கள் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள் என்றார் கிருஷ்னமூர்த்தி. நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்குப் பழக்கமில்லாத சீதோஷ்ணம்; பிரம்படியைத்தவிர வேறு விதமாக அவர்களுடன் பேசாத கம்பெனி முதலாளிகள், ராட்சசர்கள் போல் தோற்றமுள்ள [ ·பீஜி குடிமக்கள் சற்று ஆ·ப்ரிக்கர்கள் போன்ற தோற்றமுள்ள பாலினீஷிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்] உள்ளூர் வாசிகள்; உற்றார் உறவினர் என்ற பந்தமில்லா இந்திய லைன் வாழ்க்கை; இத்தகையச் சூழலில் வாழ்க்கை தார்மீக ரீதியிலும் மிக மோசமாகிப் போனது. அவர்களிடையே ஒரு மகானைப்போல குப்புசாமி என்று ஒரு தமிழர் இருந்தார். அவரும் அங்கு கூலி ஆளாகச் சென்றவர்தான். “சாது குப்புசாமி என்று அழைக்கப்பட்ட சாத்வீக குணம் கொண்ட குப்புசாமி அங்கு வந்து சீரழியும் தென்னிந்தியர்களைக் கண்டு கவலை கொண்டார். அவர்களுடைய சந்ததியினரின் எதிர்காலத்துக்கு ஏதேனும் வழி செய்யாவிட்டால் கலாச்சாரமும் அழிந்து எதிர்காலம் ஒரு நம்பிக்கையற்ற சூன்யமாகிப்போகும் என்று பயந்தார். கல்வி ஒன்றே அதற்கான மாற்று என்று அவர் ஒருத்தருக்கு மட்டுமே தோன்றியது. அவருடைய முயற்சியால் சில தென்னிந்தியர்கள் கூட்டு சேர்ந்து ‘சங்கம்’ ஜனித்தது. மாலை வேளைகளில் அவர்களுக்கு நினைவு இருந்தவகையில் ராமாயணமும் மகாபாரதக்கதைகளும் சொல்லப்பட்டன. கூலிப் பண்டாரங்கள் வாழ்ந்த பகுதிகளில் சின்னச் சின்ன பள்ளிகள் தோன்றின. அவர்களில் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் ஆர்வத்துடன் கல்வி பரப்பினார்கள். சில வருஷங்களில் இந்தியாவிலிருந்து ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வந்து போதித்தார்கள். குடிசைப்பள்ளிகள் கல் கட்டிடங்களுக்கு மாறின. ·பீஜி இந்தியர்களின் இன்றைய தார்மீக லௌகீக வளர்ச்சியில் எங்கள் சங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உண்டு.”
நான் ·பிஜித் தீவுகளுக்குச் சென்ற சமயத்தில் மொத்த ஜனத்தொகை ஏழு லட்சத்தைவிடக் குறைவு. அதில் 51 சதவிதம் இந்தியர்கள். அதாவது ·பிஜிக்களைவிட அதிகம். ·பிஜிக்களின் வாழ்க்கைத்தரத்தைவிட இந்தியர்களின் தரம் உயர்வாக இருந்தது, இந்தியர்கள் அதிக உழைப்பாளிகளாக ,படித்தவர்களாக இருந்ததால். கூலித்தொழிலாளர்களின் சந்ததிகளின் வாழ்க்கைத்தரம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் ஒப்புக்கொண்ட இந்தியர்கள் அவர்களது முன்னோர்களின் விவேகமும் தொலை நோக்குமே அதற்குக் காரணம் என்று நன்றியுடன் சொன்னார்கள்.பாதி வயிறுகூட நிரம்பாத நாட்களில் தியாக உணர்வுடனும் கரிசனத்துடனும் தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்துக்குப் பாதை வகுப்பதில் அவர்கள் காட்டிய தீவிரம் பிரமிப்பை ஊட்டும் விஷயம் என்றார்கள். இப்போது சங்கம் இரண்டு பிரதான தீவுகளிலுமாக முன்னூறு பள்ளிகளை நடத்துவதாகத் தெரிவித்தார்கள்.
·பிஜி ,ஆங்கிலத்துடன் ஹிந்தியும் அங்கு ஆட்சி மொழி. தமிழ் கற்க விரும்புவர்கள் ஆரம்பப் பள்ளியில் கற்கலாம். தமிழில் ஆரம்பப் புத்தகங்கள் அதிகம் இல்லாததால் அதிலும் சிரமம் இருந்தது. தமிழ் நாடு அரசிடம் உதவி கோரி அலுத்துவிட்டது என்றார்கள். “தமிழ் நாட்டிலிருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள். வந்தார்கள் அவர்களிடமும் எங்கள் வேண்டுகோளைச் சொன்னோம்.நிறைய உறுதி மொழி அளித்துவிட்டுச் சென்றார்கள் ஆனால் எதுவும் செய்யவில்லை. இத்தனைக்கும் நாங்கள் இலவசமாகக் கேட்கவில்லை.”
நமது அரசியல் வாதிகளின் தகுதி அவர்களின் பேச்சு ஒன்றுமட்டுமே என்று ·பிஜி இந்தியர்களுக்குத் தெரிந்திராது. அத்தனை இக்கட்டிலும் தமிழ் வகுப்பு ஆரம்பப் பள்ளிகள் சிலவற்றில் நடந்தன. நான் சென்ற ஒரு பள்ளியில் சின்னஞ்சிறு பிள்ளைகள் ‘வாழ்க நிரந்திரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே’ என்று பாடுவதைக்கேட்டு என் கண்ணில் நீர் நிறைந்தது.
கூலி ஆட்களாய் வந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருந்தால் சந்திக்க ஆசைப்படுவதாக நான் சொன்னதன் பேரில் ஒரு மூதாட்டியிடம் அழைத்துச் சென்றார்கள். அதிசயமான ஞாபகசக்தி இருந்தது தொண்ணூறுகளில் இருந்த அந்தப் பெண்மணிக்கு. நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.[அதன் குறிப்பு இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது] ” என் பேர் ராம்பியாரி. பிறந்தது எந்த கிராமம்னு நினைவில்லே.ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தது நினைவிருக்கு. அப்பா செத்துப் போனார். அம்மாவுக்கு அதுக்கப்புறம் ரொமபக் கஷ்டம். அப்பாவுடைய அம்மா ரொம்பக் கொடுமைப் படுத்தினாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் நா தெருவிலே விளையாடும்போது எங்கம்மா என்னை எங்கேயோ அழைச்சிட்டுப்போனாள். பிறகு கப்பல்லே ஆறு வாரம் பிரயாணம் செஞ்சோம். நா பயத்திலே வழி முழுக்க அழுதது நினைவிருக்கு.எனக்கு அப்ப ஏழு வயசு. ·பீஜியிலே கரும்புத்தோட்டத்திலெ வேலை செய்யப்போறோம்னு பேசிக்கிட்டாங்க. கப்பல் பேரு மல்தா-1. [ அரசாங்கக் குறிப்பில் மல்தா-1 1911-ல் ·பீஜிக்கு வந்ததாக பதிவாகியிருந்தது] என்னையும் வேலை செய்யச் சொல்வாங்களோன்னு பயந்து அம்மா எனக்கு நாலு வயசுன்னு கம்பெனி சர்தார்கிட்ட பொய் சொன்னாள். அம்மாவுடைய சம்பாத்தியம் சாப்பாட்டுக்குப் பத்தல்லே. இரண்டு வருஷம் கழிச்சு நானும் வயற்காட்டிலே வேலை செய்ய ஆரம்பிச்சேன். வேலை ரொம்பக் கஷ்டம். இந்திய சர்தாரே ஈவு இரக்கமில்லாமெ உதைப்பான். கேவலமாத் திட்டுவான். வெள்ளைக்கார சர்தார் அதுக்கும் மேலப் பாய்வான். கூலி ஆட்கள் சில சமயம் கொடுமைத் தாங்காமெ வேலை நிறுத்தம் செய்வாங்க. உதை வாங்கி ஜெயிலுக்குப் போவாங்க. நானும் அம்மாவும் வேலை நிறுத்தத்திலே கலந்துக்க மாட்டோம். வேலை செய்யும் போதே வயித்துக்குப் பத்தாது. வேலை நிறுத்தினா முழுப் பட்டினிதான்.”
கதைபோல தாம் பட்ட கஷ்டத்தைச் சொல்லும் அந்த மூதாட்டியைப் பார்த்து எனக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது. எல்லா அவமானத்தையும் எப்படித் தாங்கினார்கள் ? வாயே திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல்?
ராம்பியாரியின் கண்களில் ஒரு விஷமச்சிரிப்பு பொக்கைவாயுடன் மலர்ந்தது. ” ஒரு தடவை நானும் என் சினேகிதிகளும் ஒரு வெள்ளைக்கார சர்தாருக்கு செம அடி கொடுத்தோம். ஒரு நாள் நாங்கள் ஆற்றோரமாக நடந்துகிட்டிருந்தோம். அப்போ ஒரு பரங்கி வந்தான். எங்களைப் பார்த்து அசிங்கமாகப் பேசி ‘பிட்ச்’ அப்படின்னு இங்கிலீஷ்லெ திட்டினான். எனக்கு அதனுடைய அர்த்தம் தெரியல்லே. ஒருத்திக்கு தெரிந்திருந்தது.எங்களுக்கு அவ அர்த்தம் சொன்னதும் மகாக் கோபம் வந்தது. எல்லாரும் கையிலிருந்த தடியாலெ அவனை நன்றாய் அடித்து ஆற்றிலே தள்ளிட்டோம்.!”
நேற்று நடந்த விஷயம்போல் அதைச் சொல்லி கிழவி சிரித்தார்.
“தண்டனைக் கிடைக்கல்லியா உங்களுக்கு?”
” கிடைக்காமெ? ஏழு நாள் சிறையிலே அடைச்சாங்க. அம்மா திட்டினாள் என்னை. ஆனா எங்களுக்கு வருத்தமில்லே.”
‘க்ரிமிட்’ காலம் முடிந்ததும் நாகைய்யா என்ற தென்னிந்தியரை ராம்பியாரி திருமணம் செய்துகொண்டார். இப்போது பிள்ளைகள் பேரன்கள் மிக சௌகர்யமாக இருக்கிறார்கள்.
பல மின் உபகரணங்கள் கொண்ட பெரிய வீட்டில் உயர் ரக சோபாவில் அமர்ந்து பழைய கதைகளை அவர் அசைபோடும்போது நிஜமாகவே அது ஒரு கற்பனை உலகம்போல் தோன்றிற்று.

ஜாதிக் கொடுமையும் ஏழ்மையும் ஒரு தலைமுறையை பிறந்த மண்ணிலிருந்து கண் காணாத நரகத்திற்கு விரட்டக் காரணமாக இருந்ததென்றால் இந்தியர்களின் மரபணுக்களிலிருந்து விலக மறுக்கும் ஒற்றுமை இன்மையும் போட்டியும் பொறாமைக் குணமும் இன்றைய ·பீஜி வாழ் இந்தியர்களின் சரிவுக்குக் காரணமானது என்று சொல்லலாம். மேலோட்டமாக இந்தியர்கள் வெகு வசதியாக நிம்மதியாக வாழ்வதாகத் தோன்றினாலும் அங்கு ஒரு அரசியல் கொந்தளிப்பில் அவர்கள் சிக்கியிருந்தது பல அறிவு ஜீவிகளுடன் பேசியதில் தெரிந்தது. பூகோள சரித்திர ரீதியில் அது தவிர்க்க முடியாததாகப் பட்டது எனக்கு. ஆர்.டி.பட்டேல் என்ற மூத்த வழக்கறிஞரை சந்தித்த போது அது உறுதியாயிற்று. 1940-ல் ·பிஜிக்கு வந்த அவர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த மக்கள் சரியான தொழில் சட்டங்கள் இல்லாததால் அவதிப்படுவதைக் கண்டு பல சட்ட மாற்றங்களைப் போராடி கொண்டுவந்தார். ‘இந்தியர்களின் உழைப்பால்தான் ·பீஜி இன்றைய நிலைக்கு வளர்ந்திருக்கிறது என்பது வெள்ளையரும் ·பீஜியரும் அறிந்த உண்மை. 64-ல் இந்தியர்கள் ·பெடரேஷன் பார்ட்டி என்று ஒரு கட்சியை ஆரம்பித்து சுதந்திரத்தைக்’ கோரினதாகப் பட்டேல் சொன்னபோது இது ·பீஜியரிடையே சந்தேகத்தை எழுப்பியிருக்காதா என்று நான் நினைத்தேன்.
அப்படித்தான் ஆனதாகப் பிறகு அறிந்தேன். ஜனத்தொகையில் இந்தியர்களின் சதவிதம் அதிகமாக இருந்ததால், தங்கள் மண்ணில் பிழைக்க வந்த அன்னியர்களின் கை ஓங்கிவிடும் என்று அவர்கள் பயந்ததில் ஆச்சர்யமில்லை. தங்களுக்கு சுதந்திரத்தில் ஆர்வமில்லை என்று சொல்ல பிரிடிஷ் அரசு அதை சாதகமாக்கிக் கொண்டது. இருந்தும் இந்தியக் கட்சி மிகத் தீவிரமாக முயன்றதால் 75ல் சுதந்திரம் வந்தது. ஆனால் அதன் விளைவு இந்தியர்களுக்கு பாதகமாக முடிந்தது. இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாததால், வடக்கு தெற்கு என்று அவர்களிடையே புதிய பேதம் ஏற்பட்டுப் போனதால் , 51% இருந்தும் பலர் ·பீஜிக் கட்சிக்கு வாக்களித்ததில், தேர்தலில் இந்தியக்கட்சி தோற்று ·பிஜியரின் கட்சி ஆட்சிக்கு வந்தது. அது வந்ததும் தங்களுக்கு அச்சுறுத்தலாகப் போகக் கூடிய இந்தியர்களின் வாலை ஒட்ட நறுக்கும் பணி துவங்கிற்று. அதன் படி சட்டம் இயற்றப்படது. மொத்த நிலத்தில் 83% ·பீஜியருக்கே சொந்தம் 10% பிரிட்டிஷ் அரசுக்கு. 7% மட்டுமே சுதந்திர நிலம். அதில் வெகு சொற்பமே இந்தியர்கள் வம்சாவழியாக அனுபவிக்க இயலும். கல்வித் துறையில், வேலை வாய்ப்பில் எல்லாவற்றிலும் ·பீஜியருக்கே முன்னுரிமை என்று ஆகிவிட்டது. அன்றிலிருந்து இரு பிரிவினருக்கும் தீராத பகை நிலவி வருகிறது.
எதிர்காலம் ஒரு கேள்விக்குறி என்று ஆனதும் நிறைய குடும்பங்கள் ஆஸ்திரேலியாவுக்கும் நியூஜிலாந்துக்கும் குடிபெயர ஆரம்பித்து விட்டன. கல்வி பெருக்கத்தினால் குடும்பக்கட்டுப்பாட்டும் சேர்ந்து இந்திய ஜனத்தொகை விகித வசதியும் இனி இருக்காது என்று பட்டேல் வருந்தினார்.
·பீஜியரின் எதிர்வினைக்கு இந்தியர்களின் பேராசையே காரணம் என்று நான் நினைத்துக் கொண்டேன். குடிபுகுந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதும் ஆள நினைப்பதும் நியாயமற்ற செயல். இந்தியக் கட்சி என்று தனிக் கட்சி ஆரம்பிக்காமல் ·பீஜியரையும் இங்கிதத்துடன் சேர்த்துக்கொண்டிருந்தால் பின்னால் நடந்த பல சங்கடங்களை ஒருவேளைத் தவிர்த்திருக்கலாம். எங்களால்தான் நீங்கள்
முன்னேறினீர்கள் என்று அடைக்கலம் தேடிவந்தவர்கள் சுட்டிக்காட்டுவதை [ அது உண்மையாக இருந்தாலும்] மண்ணின் மைந்தர்கள் தாங்க மாட்டார்கள். உலகத்து எல்லா மூலைகளிலும் இப்படிப்பட்ட உரசல்களினால் தான் சண்டை மூளுகிறது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

author

வாஸந்தி

வாஸந்தி

Similar Posts