கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

வாஸந்தி“இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது.”
நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள ஆய்வு செய்யப் பஞ்சாபுக்குச் சென்ற போது நான் சந்தித்த அனைவரும் சொன்ன பதில் இது. இதைக் கேட்டு எனக்குத்தான் அதிர்ச்சி ஏற்பட்டது. படுகொலை நடந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் அது யாருடைய நினைவிலும் பதிந்ததாகவோ, ஒரு அசம்பாவிதமாகப் பட்டதாகவோ தோன்றவில்லை. அம்ருத்ஸர் பொற்கோவில் வாசலில் பூ விற்ற படிப்பறிவில்லாத கிழவரிலிருந்து படித்த கல்லூரியாளர் வழக்கறிஞர்கள் பத்திரிக்கையாளர்கள் வரை இதையேதான் சொன்னார்கள்- ‘எது நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது’ –“ஜோ ஹோனா , ஹோனாஸி.” அதாவது ஒட்டுமொத்த சமூகமும் அதை அங்கீகரித்தது. இது தில்லிவாழ் சீக்கியர்களின் மன நிலைக்கு வேறு பட்டிருந்தது. படுகொலையைப் பற்றி அவர்களுக்கு சங்கடம் இருந்தது. ‘இப்படி நடக்கும் என்று நாங்கள் பயந்தோம்’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அம்ருத்ஸரில் எல்லோரும் அதை ஒரு பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. அதற்கு மாறாக பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்த ஆணவத்தை, அராஜகத்தை நேற்று நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது போல ஆவேசத்துடன், ஆக்ரோஷத்துடன் பேசினார்கள். அது தெய்வ குற்றம் மட்டுமில்லை சீக்கிய சமூகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமானமாக எல்லோரும் நினைத்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தாங்கள் சிறுபான்மையினர் என்கிற நினைப்பு அவர்களை இப்போது அச்சுறுத்துவதாகப் பலர் சொன்னார்கள்.
நான் சென்ற இடமெல்லாம் அவர்கள் வெளிப்படுத்திய கோபம் என்னை தகித்தது. ஆரம்பத்தில் அது அதீதமானதாக அர்த்தமற்றதாகக் கூடத் தோன்றிற்று. ஆனால் அவர்களுடன் பேசப்பேச அவர்களது கோபத்தின் காரணமும் ‘சீக்கிய சைக்கீ’ என்று பெருமைபட்டுக்கொள்ளும் மனோபாவமும் புரிந்தன. அந்த மனோபாவத்திற்கு சீக்கியமதம் சமீபத்திய மதம் என்பதும் சிறுபான்மையினர் சமூகம் என்பதும் காரணமாக இருக்கலாம்.
நான் அந்தப் புகழ்பெற்ற பொற்கோவிலுக்குமுன் நின்றேன். அதன் பொற்கலசங்கள் காலை இளம் வெய்யிலில் தகதகத்தன.
“தலையைப் போர்த்திக்கொள்ளணும் மகளே!” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பூ விற்று கொண்டிருந்த ஒரு கிழவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
நான் சட்டென்று புடவைத் தலைப்பால் தலையை மூடிக்கொண்டேன். வாயிலுக்குள் நுழைவதற்கு முன் கால்களைக் கழுவுவதற்குசெயற்கை நீரோடையும் கை கழுவ வாஷ்பேஸினும் இருந்தன. நான் கைகழுவும்போது கிழவர் தனது பஞ்சாபி கலந்த ஹிந்தியில் சொன்னார்.
“இங்கு பக்தர்கள் யாரும் இப்போது வருவதில்லை. வருபவர்கள் எல்லோரும் தமாஷ் பார்க்க வருபவர்கள். போ! நீயும் போய் எண்ணு, ராணுவம் போட்டிருக்கும் துப்பாக்கித் துளைகளை! அகால் தக்துக்கு நேர்ந்திருக்கும் கதியைப் போய் பார்!”
அவரது குரலில் தோய்ந்திருந்த துக்கமும் கோபமும் என்னை லேசாக உலுக்கிற்று. கோவில் வளாகத்தில் ராணுவ அதிகாரிகளோ போலீசோ இல்லை. ராணுவத் தாக்குதலில் சேதமான பகுதிகளைப் பழுது பார்க்க வந்த ஆட்கள் அதிகம் இருந்தார்கள். பூக்கடைக்காரக் கிழவர் சொன்னதுபோல சீக்கிய பக்தர்கள்கூட வேடிக்கைபார்க்க வந்தவர்கள் போல எனக்குப் பட்டது. சேதமான பகுதிகளையும் குண்டுபட்டு வடுக்கள் சுமந்த சுவர்களையும் தீவிரமாகப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் காரமாகப் பேசியபடி நகர்ந்தார்கள். இடப்பக்கம் இருந்த வாசகசாலை தீக்கு இரையானதன் விளைவாகக் கரிந்து காணப்பட்டது. வலதுபுறம் மிக முக்கியப் புனிதப் பகுதியான அகால்தக்த் போரில் வீழ்ந்த பரிதாபத்துடன் காட்சி அளித்தது.
‘மக்களின் கோபம் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது’ என்றேன் நான் என்னுடன் எனக்கு உதவ வந்திருந்த நண்பர் பாட்டியாவிடம்.
” அது தீருகிற கோபமில்லை” என்றார் அவர் சாதாரணமாக.”இடிந்துவிட்ட அகால்தக்தைத் திருப்பிக் கட்டுவது அரசுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.ஆனால் சீக்குக்கும் ஹிந்துவுக்கும் இனிமேல் பாலம் கட்டுவது முடியாத காரியம்”.
” பிந்திரன்வாலே செய்தது குற்றமில்லையா? நம்பமுடையாத அளவுக்கு ஆயுதங்கள் சேர்த்து, பொற்கோவிலை ஒரு ஆயுதக்கிடங்கு போல உபயோகித்தானே? மதத்தை அரசியலாக்கினானே ?”
பாட்டியா சிரித்தார். “பிந்த்ரன்வாலே என்ன சொல்வான் தெரியுமா?’சீக்கியனுக்கு கிர்பாண்[பிச்சுவாகத்தி] வைத்துக் கொள்வது குலதர்மம். நான் பகைவர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்கு ஏ.கே.47 வைத்துக்கொள்கிறேன். அதனால் என்ன தப்பு?’ அவன் சொல்வதில் தப்பொன்றும் இல்லை என்று பாமரர்கள் நம்பினார்கள். புது மதத்திற்கு ரோஷம் அதிகம். பாதுகாப்பின்மை உணர்வும் அதிகம். அரசியலையும் அதையும் பிரிக்கமுடியாது. நான் ஒரு ஹிந்து பஞ்சாபி. எங்களுக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட துயரமும் நஷ்டமும் பொதுவானவை.இரண்டு இனங்களும் பேதமில்லாமல் உழைத்து பஞ்சாபை சுபிட்சமாக்க முப்பது வருஷங்கள் ஆயிற்று.. அதை தலைகீழாக மாற்ற இனவெறியர்களுக்கு மூன்று ஆண்டுகள் கூடத் தேவைப்படவில்லை. இப்போது இந்த ராணுவ படையெடுப்பு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது.”
” அதற்குத்தான் இந்திரா காந்தியைக் கொன்று பழிவாங்கிவிட்டார்களே?”
” படுகொலைக்குப்பின் என்ன நடந்தது?” என்றார் பாட்டியா.
நான் வாயை மூடிக்கொண்டேன். தில்லி முழுவதும் தெரிந்த கரிய புகைத் தூண்களின் நினைவு
மீண்டும் ரத்த நாளங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்திற்று.
” சீக்கியர்களைப் பொறுத்தவரை ப்ரதமரின் சாவு நடக்கவேண்டிய ஒன்று.”
தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது இந்த விளக்கம். யாரோ பெரிய குரலில் கத்தினார்கள் .” அமர்ஷஹீத் பிந்த்ரன்வாலே ஜிந்தாபாத்! காலிஸ்தான் ஜிந்தாபாத்!”
அன்று மாலை பஞ்சாபின் மிகப் பிரபல நாடக ஆசிரியரும் இயக்குனருமான குருசரண் சிங்கைப் பார்க்கச் சென்றேன். நான் சென்றபோது அவரது நெடிய உருவம் வரவேற்பறை சோபாவில் படுத்திருந்தது. மதிய வெய்யிலுக்காக ஜன்னல் திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்தன. கண்களை ஒரு கருப்புத்துணியால் கட்டிப் படுத்திருந்தார் சிங்.
நான் வந்த அரவம் கேட்டு எழுந்தார். உள்ளே சென்று தேநீருக்குச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.
“சொல், என்னிடமிருந்து என்ன தெரிந்துகொள்ள வந்தாய்?”
அவர் இடது சாரி முற்போக்குவாதி என்பதும் தனது நாடகங்கள் மூலம் பிந்த்ரன்வாலேயையும் மத்திய அரசையும் துணிச்சலாகத் தாக்கியவர் என்பதும் நான் அறிவேன்.
” உங்களது துணிச்சலான எதிர்ப்பு நாடகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று ஆரம்பித்தேன்.
” எதற்கும் அர்த்தமில்லாமல் போய்விட்டது மகளே!” என்றார் துயரத்துடன். ” எல்லாருமாகச் சேர்ந்து பஞ்சாபின் நாசத்துக்கு சீல் அடித்து விட்டார்கள். நான் இப்போது ஒரு உதவாக்கரையாக என்னை உணர்கிறேன். என் நாடகங்கள் பஞ்சாபின் தலையெழுத்தை மாற்றும் என்று கனாக்கண்டேன். அரசியல்வாதிகள் போடும் நாடகத்துக்குமுன் அவை எடுபடுமா? இத்தனை நாட்கள் மக்கள் அரசியல் நாடகத்தை வேடிக்கைதான்
பார்த்தார்கள். ராணுவப்ரவேசத்துக்குப்பின் இப்போது என்ன ஆகிவிட்டது பார். வேடிக்கை பார்த்தவர்கள் மேடையேறிவிட்டார்கள். கொட்டகையைக் கொளுத்தத்தயாராகிவிட்டார்கள்.”
குருசரண்சிங்கும் பிரதமரின் கொலையைப் பற்றி அலட்டாமல் சொன்னார். ” அது நடக்கும் என்பதை எல்லா முட்டாளும் இங்கு அறிவான். பொற்கோவில் ராணுவப் பிரவேசம் ஒரு பெரிய தவறு என்று நான்
சொன்னால் மத வெறியன் என்பார்கள். தேசதுரோகி என்பார்கள். உண்மையில் நான் தேசாபிமானத்தால் சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியாது. ஜனாதிபதிக்கு- [ ஜெயில் சிங்] நரைத்த தாடிக்கு சாயம் பூசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே , அந்தக் கிழவருக்குப் புரிந்திருக்கவேண்டும். அவர் ஏன் தடுக்கவில்லை? இப்போது ஏற்பட்டுவிட்ட ஹிந்து-சீக் பிளவு நிரந்தரமானதாகிப் போகும். சீக்கியனுக்கு மூளை இயங்கும் முன் ரத்தம் கொதிக்கும். அவனுடைய ரத்தம் அலாதியானதா என்று சிரிக்காதே. அவனுடைய மரபுதான் அதற்குக் காரணம். மத வெறி பிடித்துவிட்டால் யோசனைத் திறன் எங்கே இருக்கும்? சீக்கிய இனத்துக்கும் மதத்திற்கும் இந்துக்கள்னாலெ ஆபத்து என்று பிந்த்ரன்வாலே சொன்னபோது எல்லாரும் அதை நம்பிவிடவில்லை. கோவிலை ராணுவம் தாக்கினதும் கதை மாறிவிட்டது. அதனுடைய காரண காரியங்களை யாரும் ஆராய மாட்டார்கள். தங்கள் இனத்தையே தாக்கிவிட்டதாகத் தோணும். ஏன் அப்படி என்று நீ கேட்டால் அதற்கு பதில் கிடையாது.”
இடையில் எனக்குத் தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்து உபசரித்தவண்ணம் இருந்த குருசரண் ஆற்றாமையுடன் தலை அசைத்தார். “இது பஞ்சாபின் சோகம் மட்டுமில்லே மகளே. இந்தியச் சோகம். எல்லைப்புர மாநிலம் இது. மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலையெடுக்கும் ஆபத்து இருக்கு. எல்லாவற்றையும்விடப் பெரிய சோகம் என்ன தெரியுமா? இந்த நிலை ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.”
ராணுவப் பிரவேசம் ஆனதுமே தில்லியில் சீக்கியர்கள் இதைச் சொன்னார்கள். மிக நவீன வசதிகள் கொண்ட இந்திய ராணுவத்திற்கும் உளவுத்துறைக்கும் ராணுவத்தை கோவிலுக்குள் அனுப்பாமலே பிந்த்ரன்வலேயையும் அவனது ஆட்களையும் வெளியேற்றியிருக்கமுடியாதா? நான் சில நாட்களுக்குப்பின் ராணுவப் படைத் தலைவராக இருந்த ஜெனரல் சுந்தர்ஜியைப் பேட்டி கண்டபோது இந்தக் கேள்வியைக் கேட்டேன். ராணுவத்திடம் அத்தகைய வசதி இருக்கவில்லை என்றார்.
ஆனால் விஷயம் அந்த அளவுக்கு வளர்ந்ததற்கு அரசியலே காரணம். பஞ்சாபில் அகாலிகளிடம் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக காங்கிரெஸ் கட்சி பிந்த்ரன்வாலேயை வளர்த்தது. அவன் பகைவனாக மாறினபிறகு வெகு நாட்கள் வெளியில் தான் இருந்தான். அப்போது அவனை கைது செய்யாமல் பொற்கோவிலுக்குள் புகுந்ததும்
ராணுவத்தை அனுப்புவதில் ஒரு நோக்கம் இருந்தது. வெளியில் இருப்பவனை சிறைபிடித்தாலோ கொன்றாலோ அவனுக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்துவிடும். கோவிலின் புனிதத்தை தனது ஆயுதக்குவிப்பின் மூலம் மாசுபடுத்தினான் என்ற காரணத்துடன் தாக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டது இந்திரா காந்தியின் அரசு. அவனை வெறுத்தவர்கள் கூட இப்போது அவனைத் தியாகி-‘ஷஹீத்’ என்றார்கள்.
விசாலமான தெருக்கள் கொண்ட சண்டீகர் நகரத்தில் ஷௌக்கீன் என்ற இளைஞனை சந்தித்தேன். அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஒரு கவிஞனும் கூட. மிகுந்த பதட்டத்தில் இருப்பவன் போல தொடர்ந்து சிகரெட் பிடித்தவண்ணம் இருந்தான். அவன் சீக்கியனா என்று தெரியவில்லை. குறுந்தாடியாக ட்ரிம் செய்து வைத்திருந்தான். அவன் இடதுசாரி கொள்கை உடையவன், பிந்த்ரன்வாலேயை எதிர்த்தவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவனது தங்கை புருஷன் சீக்கியன் . சுமித் சிங் என்று பெயர். ‘ப்ரீத் லடீ ‘ [நேசத்துக்காகப் போர்] என்ற பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தான். பிந்த்ரன்வாலேயின் போக்கை வன்மையாகக் கண்டித்து எழுதி வந்ததால் பிந்த்ரன்வாலேயின் ஆட்களால் கொலை செய்யப்பட்டான்.
ஷௌக்கீனின் கண்களைச் சுற்றி ஒரு கருவட்டம் இருந்தது, ஒரு நிரந்தர சோகத்தை சுமப்பதுபோல. ” நீங்கள் ஹிந்துவா? ” என்று தயக்கத்துடன் கேட்டேன்.”இந்த அநாகரீகக் கேள்விக்காக
மன்னியுங்கள்.”
“நாகரீகம் என்பது என்ன?” என்றான் ஷௌக்கீன் தீவிரமாக. “எனக்கு மறந்து போச்சு. உண்மையில் நீயும் ஒரு சீக்கியனா என்கிற பழிக்கும் கேள்வியைத்தான் எனக்குக் கேட்டுப் பழக்கம். எந்த லேபிலோடும் நான் பிறக்கவில்லை. நான் பிறந்ததும் எனது நாமகரணத்துக்கு என் அம்மா தான் நம்பும் குருத்வாராவுக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு நான் பொறுப்பில்லை. வேடிக்கை இல்லை? நாம் யாருமே நடக்கும் பல அபத்தங்களுக்குக் காரணமாக இல்லாமலிருந்தும் எத்தனைக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு? எத்தனைக் காயங்களை ஏற்க வேண்டியிருக்கு?”
நான் யோசனையுடன் அவனைப் பார்த்தேன். அவனது காயங்கள் மிக ஆழமானதாக இருக்கும் என்று தோன்றிற்று.
“தெருவில் நடப்பவர்களைப் பாருங்கள். முன்பு இரண்டு சீக் நடந்தால் அவர்களுடன் ஒரு ஹிந்து நிச்சயம் இருப்பான். இப்போது நண்பர்களிடையே சுவர் எழும்பி விட்டது. வீட்டுக்குள் சுவர் எழும்பி விட்டது. எனது மனைவி சுமன் ஒரு ஹிந்து. எப்போது விவாவகரத்து ஆகும் என்று சொல்லமுடியாது.”
சிகரெட்டை மீண்டும் பற்றவைக்கையில் அவனுடைய விரல்கள் நடுங்கின.
“நான் மதச் சார்பில்லாதவன். ஆனால் இனச் சார்பில்லாதவன் என்று சொல்லமுடியாது. நான் பிந்த்ரன்வாலேயைக் கண்டித்தேன். ராணுவப் பிரவேசம் தவறானாலும் அதுதான் தர்க்கரீதியான விளைவு என்கிறேன். இந்திரா காந்தியின் படுகொலையும் தர்க்க ரீதியானது என்று சொல்கிறேன். இதெல்லாம் சுமனுக்கு முரணாகத் தோன்றுகிறது. அவள் சீக்கியர்களைத் தாக்கிப் பேசும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேடிக்கை இல்லை?”
ஜன்னலை இழுத்து மூடிக்கொண்டு அமர்ந்தவர்கள் வீடுகளில் எல்லாம் அரசியல் புகுந்து விட்டது என்றான் சற்று பொறுத்து. “நான் தில்லியில் உளவுத்துறையில் முக்கிய பதவியில் இருந்திருந்தால் பொற்கோவில் ராணுவப்பிரவேசம் ஆன கையுடன் பிரதமரின் சீக்கிய மெய்காப்பாளர்களை நீக்கியிருப்பேன். ராணுவம் போலீஸ் எல்லா வேலையிலிருந்தும். அப்படி முன் எச்சரிக்கை எடுக்காதது முட்டாள்தனம்.”
ஷௌக்கீனின் விவாகம் முறிந்ததா என்று எனக்குத் தெரியாது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் இறந்து விட்டதாக அறிந்தேன். கொலையோ தற்கொலையோ என்றார்கள்.
இந்திராகாந்தியைக் கொலை செய்தவர்களுக்குத் கொலை தண்டனைக் கிடைத்தது. ஆனால் கொலைக்குபின் பின் நடந்த இன வெறியாட்டத்துக்குக் காரணமான வர்களை தண்டிக்க அரசு எந்த அவசரமும் காட்டவில்லை. வெறியாட்டத்தில் பெற்றவர்களையும் உடன்பிறப்புகளையும் உடமைகளையும்
இழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டுதான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிற்று. இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே எழும்பிய சுவர் போய்விடவில்லை. இன்னமும் சங்கடத்துடன் நிற்கிறது.
சென்ற மாதம் நான் தில்லிக்குச் சென்றபோது பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சீக்கிய இளைஞர்கள் இப்பவும் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதுவதாகவும் படிப்பு முடிந்ததும் வேலைபார்க்க வெளிநாடு போய்விட விரும்புவதாகவும் சொன்னார்.
மனிதர்களிடையே இன்று சுவர் எழும்புவது சுய நல அரசியலால்தான். சுவர்களுக்குள் உருவாகும் மௌனப்புயல்கள் ஒரு நாள் சீறிப்பாயும் போது மானுடத்தின் ஆளுமையையே மாற்றும். எல்லா மாநிலங்களின் சரித்திரமும் நமக்குச் சொல்லும் பாடம் அது. ஓட்டு வங்கி அரசியல் வாதிகள் தெரிந்து கொள்ள விரும்பாத பாடம்.
[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

author

வாஸந்தி

வாஸந்தி

Similar Posts