“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

அருணகிரி


மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்தப்புத்தகம் குறித்து திண்ணையில் வந்த
கட்டுரைகளைப் படித்தபின் இதனைப்படிக்க வேண்டும் என்று முடிவு செய்து,
ஆங்கில மூலத்திலேயே சில வாரங்களுக்கு முன் படித்து முடித்தேன். அருமையான
நூல். தலையணை அளவில் பண்டித பயமுறுத்தல்கள் இல்லாமல் எளிமையாக
எழுதப்பட்ட நூல். இப்படியும் இருக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள் என்று
சொல்கிறார் மார்வின் ஹாரிஸ். பல சமூகங்களின் கலாசார வழக்கங்களுக்கு
ஒரு பொருளாதார அல்லது உபயோக (லோகாயத) அடிப்படை இருக்கிறது என்று
பல எடுத்துக்காட்டுகள் மூலம் வாதிடுகிறார். பிற கலாசாரங்களில் காணப்பட்ட
சில வழக்கங்களை ஒரேயடியாக ‘அர்த்தமற்ற முட்டாள்தனங்கள்’ என ஒதுக்கிய
ஐரோப்பிய மைய மார்க்ஸிஸம் தோய்ந்த பல்கலைக்கழக வறட்டுப் பண்டிதர்களுக்கும்,
பிற கலாசாரங்களை நற்செய்தி பரப்பி “நாகரீகப்படுத்த” வேண்டிய
காட்டுமிராண்டித்தனங்களாகக் கண்ட மதவாத அடிப்படைவாதிகளுக்கும் இந்த புத்தகம்
ஏன் எரிச்சல் தந்தது எனப்புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இந்தப்புத்தகம் தொடாமல் விட்டு விட்ட முக்கியப்புள்ளிகளும் உண்டு.

பல நேரங்களில் ‘ஏன் ஒரு விஷயம் இவ்வாறு இருக்கிறது’ என்பதற்கு இணையான
முக்கியக்கேள்வி ‘ஏன் இவ்விஷயம் இவ்வாறு இல்லை’ என்பதும் கூட. அதனை இந்த
நூலில் மார்வின் ஹாரிஸ் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு
ஆராய்ந்திருந்தால், கலாசார பொருள்முதல்வாதம் என்பதைத் தாண்டி, வெவ்வேறு
சமூகங்களிலும் நாகரீகங்களிலும் நிலவும் அறநெறி குறித்த நிலைப்பாடுகள்
மற்றும் சமூகத்தில் வேரூன்றிய தொன்மக்கூறுகள் ஆகியவை, ஒரே விதமான
பிரச்சனையை வேறுபட்ட சமூகங்கள் எவ்வாறு வெவ்வேறு விதமாக அணுக உதவின
என்பதை வெளிச்சம் போட்டிருக்கலாம்.

ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் எல்லாக்காலத்திலும் ஒரு சமுதாயம் முன்பு
இருக்கத்தான் செய்கின்றன. எந்தத் தீர்வை ஒரு சமுதாயம் தெரிவு செய்கிறது
என்பதனை அந்தச்சமுதாயத்தின் பொது உளவியலும் அந்த உளவியலை உருவாக்கிய சமூக
அறநெறித் தத்துவங்களுமே தீர்மானம் செய்கின்றன.

இந்திய சமூகம் பசுக்களைப்புனிதமாகக் கருதியதையும் அரேபிய சமூகம் பன்றிகளை
கடவுளால் விலக்கப்பட்டதாகக் கண்டதற்கும் உணவு வளம் (food resource) என்ற
லோகாயதப் பிரச்சனையின் அடிப்படையில் ஹாரிஸ் விடை காண்கிறார். அதாவது,
உணவுப்பிரச்சனை என்ற, அடிப்படையில் ஒரே விதமான பிரச்சனையைத் தீர்க்க இரு சமூகங்கள் இரு
வேறு விதங்களாக அப்பிரச்சனையை அணுகியிருக்கின்றன. ஒரு சமூகம் (இந்திய
சமூகம்) ஒரு விலங்கைப் புனிதமாக்கி பிரச்சனையைத் தீர்க்க முயல, மற்றொரு
சமூகம் (அரேபிய சமூகம்) ஒரு விலங்கை வெறுக்கத்தக்கதாக ஆக்கி பிரச்சனையைத்
தீர்க்க முயல்கிறது. சமூகங்கள் ஒவ்வொன்றும் பிரச்சனைகளைத் தீர்க்க
வெவ்வேறு விதமான சமூகவியல் தீர்வை உபயோகப்படுத்துகின்றன. ஒரு
சமூகத்தீர்வு இன்னொரு சமூகத்தில் வலுவிழந்து போகலாம். ஏனெனில், வெவ்வேறு
சமூகங்கள் ஒரே வித பிரச்சனைக்கு வெவ்வேறு விதமான தீர்வைக்
கண்டுபிடிப்பதில் அந்தந்த சமூகங்களின் உளவியலும் அந்த உளவியலை
வியாபிக்கும் தத்துவக்கூறுகளும் முக்கியக் காரணிகள் ஆகின்றன.

விவசாய இந்தியாவில் பசுக்கள் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு
புனிதப்படுத்தப்பட்டதன் மூலம் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் பொருளாதாரப்
பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. வேறு எந்த விவசாய சமூகமும் இது போன்ற
தீர்வைக் கண்டறியவில்லை. சொல்லப்போனால் இந்தப்புத்தகத்தில் உள்ள அனைத்து
கலாசார புதிர்களிலும் இந்திய கலாசாரத்தின் பசுப்புதிர் மட்டும் ஒரு
விதத்தில் தனித்தே தெரிகிறது. இந்தியப் பசு உதாரணத்தில் மட்டுமே
விலங்குகூட அதன் நிலையிலிருந்து உயர்த்தப்பட்டு தெய்வீகமாக
நிலைநிறுத்தப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வாக அமைவது
சாத்தியப்பட்டிருக்கிறது.

இந்திய தத்துவ சிந்தனையில் இயற்கை முழுவதும் எல்லா விலங்குகள், பறவைகளுமே புனிதமாகத் தான் கருதப் படுகின்றன. சேவலும், மயிலும், காளையும், புலியும், சிங்கமும், யானையும், மூஞ்சூறும், நாயும், வராகமும் இப்படி விலங்குகள் மட்டுமல்ல, கடலும், மலையும், மரமும் என்றவாறு அசைகின்ற மற்றும் அசையாத உயிரினங்கள் என்று இப்படி அனைத்தும் தெய்வங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வழிபடும் நிலையில் வைக்கப்படும் ஒரு தத்துவ சிந்தனையைத் தன்னகத்தே கொண்ட ஒரு சமூகமானது, பொருளாதாரப்பிரச்சனை என்று வருகையில் தன் வாழ்வியலுடன் இணைந்த ஒரு விலங்கைப் புனிதப்படுத்தி அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முற்பட்டதில் ஒரு வியப்பும் இல்லை.

இதே போன்ற பொருளாதாரம் மற்றும் உபயோகக் காரணங்கள் இருந்தும், பிற
சமூகங்களும் பசுக்களைப் புனிதமாக்குவதன் மூலம் தீர்வு காண
முயன்றிருக்கலாம், ஆனால் ஒரு நாடும் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில்
அவ்வாறு செய்ய அந்தந்த சமூகங்களின் உளவியலை வியாபித்த தொன்மங்களிலும்,
தத்துவங்களிலும் அற உணர்வுகளிலும் இடம் இருக்கவில்லை.

மற்ற எந்த கலாசாரப்புதிரிலிருந்தும் தனித்துத் தெரியும் இந்த உதாரணம்
எதனால் இந்திய சமூகத்தில் மட்டும் சாத்தியப்பட்டது என்று மார்வின்
ஹாரிஸ் கேட்டிருந்தால் இந்த சமூகவியல் ஆய்வின் வேறு சில பரிமாணங்களும்
புலப்பட்டிருக்கலாம்.

மேலும் ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம். மார்வின் ஹாரிஸ் சொல்கிறார்:
‘சர்ச் மற்றும் அரசின் மீதான வெகுஜன அதிருப்தியைத் திசை திருப்ப
“சூனியக்காரிகள்” ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்”. மேலும்
“பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து போர்கள், நோய்கள் ஆகியவை அதிகரித்தபோது
சூனியக்காரிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அதிகரித்தது” என்கிறார். இந்த
ஆய்வில் அவர் கேட்காமல் விட்ட கேள்வி “ஏன் சூனியக்காரிகள் கண்டுபிடிப்பு
ஐரோப்பிய சமூகத்தில் மட்டும் நடக்க வேண்டும்?” என்பது. அதிகாரங்களின்
மீதான அதிருப்தி என்பது உலக சமுதாயங்கள் அனைத்திலும் எல்லாக்
காலங்களிலும் ஏதோ ஒரு வகையில் இருந்து வருவதுதான். போரும், வறுமையும்
மற்ற சமூகங்களுக்குப் புதிதும் அல்ல. ஆயின், ஐரோப்பிய சமூகத்தில் மட்டும்
ஒரு குறிப்பிட்ட கூட்டம் பலிகடாவாக ஆக்கப்படுவது ஏன் சாத்தியப்பட்டது?
எந்தத் தத்துவ உளவியல் இந்தக் குறிப்பிட்ட வழியை அக்கால ஐரோப்பாவிற்கு
அடையாளம் காட்டி உகந்ததாக்கியது? இந்தக் கேள்விக்கான விடையில் கடந்த
நூற்றாண்டில் யூதர்கள் பலிகடாவாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதற்கான
விடையும் உள்ளது.

ஒரு பிரச்சனைக்கு, சமூகங்களின் முன்னிலையில் ஆக்கபூர்வ தீர்வும் உள்ளது
அழிவியல் தீர்வும் உள்ளது. அழிவியல் தீர்வைத் தெரிவு செய்கின்ற ஒரு
சமூகத்தைக் கட்டமைக்கும் தத்துவங்களுக்கு தொடர்ந்து பலி கடாக்கள்
தேவைப்படுகின்றன. மார்வின் ஹாரிஸ் விளக்கும் சூனியக்காரிகளுடன்
பலிகடாக்கள் நின்று விடவில்லை. சிலை வழிபாட்டாளர்கள், இணை வைப்பவர்கள்,
நம்பிக்கையற்றவர்கள் என்று இத்தகைய சமூகங்களில் பலிகடாக்கள் இன்றும்
தொடர்கின்றன.

சட்டம் அனுமதித்தால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை வைத்து (உயிர் வாழ்வதும் இந்த விலையில் அடங்கும்) அதன் மூலம் எந்தப் பிரச்சனையையும் தீர்த்து விடலாம் என்கிறார் ஃப்ரீக்கானமிக்ஸ் ஆசிரியர் ஸ்டீவன் லெவிட். நவீன சட்டங்கள் இல்லாத பழம் சமூக அமைப்பிலோ ஒரு சமூகக் கட்டமைப்பையும் ஒழுங்கையும் கொண்டு வந்தவை அந்தந்த சமூகங்களின் சிந்தனைத்தளங்களும்,
தொன்மங்களும், அவை உருவாக்கிய சமூக அற உணர்வு நிலைகளும்தான். ஒரேவகை கலாசாரப்புதிருக்கு சில சமூகங்கள் வெறுத்து அழிக்கும் பன்றித்தீர்வையும் சில சமூகங்கள் உன்னதமாக்கிப் பாதுகாக்கும் பசுத்தீர்வையும் கண்டதற்கு அந்தந்த சமூகங்களின் சமூக அற உணர்வு நிலைகளே காரணமாக அமைந்தன.

கலாசாரப்புதிர்களுக்கான விடையை லோகாயதத்தில் தேடுவதில் தவறில்லை. ஆனால் அந்த விடைகள் மட்டுமே கலாசாரங்கள் குறித்த முழுமையான சித்திரத்தைத் தந்து விடுவதில்லை. பல நேரங்களில் லோகாயத விடைகளை விட அப்புதிர்களின்
பின்னுள்ள விழுமியங்களே அந்தந்த சமூகங்கள் மற்றும் கலாசாரங்களைப்பற்றிய பல ஆதார உண்மைகளை வெளிச்சம் போடுகின்றன.


arunagiri_123@yahoo.com

Series Navigation

author

அருணகிரி

அருணகிரி

Similar Posts