வ.ந.கிரிதரன்
அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. ‘மார்க்ஸியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு’ என்னும் தலைப்பில் 15 பக்கங்களிலொரு ஆய்வுக் கட்டுரை அப்போதிருந்த என் மனநிலைக்கேற்ப 29/12/1982இல் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் ஒன்று: ‘கம்யூனிஸ்ட்டுக்களும், கடவுளும், மதவாதிகளும், பரிணாமமும்’ எனவும், அத்தியாயம் இரண்டு: ‘மார்க்ஸியமும் அதன் மீதான நாத்திகம் பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுக்களும்’ எனவும், அத்தியாயம் மூன்று: ‘மானுட வர்க்கப் பிரச்சினைகளும், அக உணர்வுகளும் பற்றியதொரு கற்பனாவாதம்’ எனவும், இறுதியான அத்தியாயம் நான்கு: ‘புரட்சிகளும், புரட்சிகர எதிர்ப்புரட்சிகர சக்திகளும் (இலங்கைத் தமிழர் பிரச்னையுட்பட)’ எனவும் மேற்படி கட்டுரையானது பிரிக்கப்பட்டுள்ளது. அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் கட்டுரை முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது. இது போல் பல கட்டுரைகள் என் குறிப்பேட்டில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்திற்கு ‘போரும் மனிதனும், இன்றைய உலகும் நாளைய உலகும்’, ‘தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆய்வு’, ‘மனிதனும் கவலைகளும்’, ‘நிர்வாணமும் மானுடமும் (புதிய தத்துவம்)’, ‘இயற்கை மனிதனும், புதியதொரு தத்துவமும்’, ‘இயற்கையின் விதியொன்று’, ‘மனிதனின் இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதனிலிருந்து …(ஒரு சிக்கலான பிரச்னை பற்றிய கண்ணோட்டம்)’, ‘கலையும் மனிதனும்’, ‘மானுடத்தின் வழிகாட்டிகள்’, ‘மனித வாழ்வும் துறவும்’, ‘ஆண் பெண் பற்றிய தொடர்புகள்’, ‘புத்தகங்களும் மனிதனும்’, ‘எனது குருமார்’… இவ்விதம் பல்வேறு தலைப்புகளில் காணப்படும் கட்டுரைகள், கவிதைகளெல்லாம் அன்றைய என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
‘மார்க்சிம் கார்க்கி’யின் புகழ்பெற்ற நாவலான ‘தாய்’ தான் முதன் முதலில் எனக்கு இடதுசாரித் தத்துவத்தினை, மார்க்சியத்தினை முதன் முதலில் கோடிழுத்துக் காட்டியது. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து என் மொறட்டுவைப் பல்கலைக்கழக இறுதியாண்டுகளில் மாஸ்கோ பதிப்பகத்தாரால் தமிழில் வெளியிடப்பட்ட பல மார்க்ஸிய நூல்களைக் குறிப்பாக ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’, ‘டூரிங்கு மறுப்பு’, ‘எங்கெல்சின் குடும்பம், சொத்து, தனியுரிமை’, பல்வேறு மார்க்சிய அறிஞர்களால் எழுதித் தொகுக்கப்பட்ட ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதமும், இயங்கியல் பொருள்முதல்வாதமும்’, லெனினின் பல்வேறு நூல்கள் போன்றவற்றைப் பின்னர் நான் படிப்பதற்கு ஆரம்பத்தில் சுழி போட்ட நூலாக மேற்படி ‘தாய்’ நூலினைக் குறிப்பிட முடியும். பின்னர் இந்தத் ‘தாய்’ நாவல் என் சகோதரன், மற்றும் அவனது நண்பர்களுக்கும், இன்னும் பலருக்குமென எண்பதுகளில் தொடர்ந்தும் தன் பங்களிப்பினைத் தன் இறுதி மூச்சுவரை செய்யவும் தவறவில்லை.
மேற்படி ‘தாய்’ நாவல் எனக்குக் கிடைத்த வரலாறு சுவையானது. என் பால்யகாலத்துப் பருவத்தில் நான் ஈழநாடு மாணவர் மலரில் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘மரங்கொத்தியும் மரப்புழுவும்’ என்னுமொரு உருவகக் கதை எழுதியிருந்தேன். என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்த மிகச்சிறியதொரு சிறுவர் கதை அது. அதனை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘வெற்றிமணி’ என்னும் சிறுவர் மாத இதழ் பிரசுரித்திருந்தது. அச்சஞ்சிகையினை வாங்கும் பொருட்டு வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரும் சமயங்களிலெல்லாம் யாழ் நகரின் சந்தைக்கண்மையிலிருந்த ‘அன்பு புத்தகசாலை’க்குச் செல்வது வழக்கம். அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானின் சகோதரரான அன்றைய பிரபல எழுத்தாளர்களொலொருவராக விளங்கிய ‘புதுமைலோலன்’தான். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வாலிபரே (கோபால் அல்லது பூபால் இவ்விதமொரு பெயர் அவருக்கு இருந்ததாக ஞாபகம்) கோர்க்கியின் ‘தாய்’ நாவலை எனக்கு இரவல் தந்துதவியவர். அவர்கூட யாழ் ‘பி.ஏ.தம்பி லேனி’லுள்ள வீடொன்றில்தான் வாடகைக்கிருந்தார்). அவருடன் ஒப்பிடும்பொழுது வயதில் மிகவும் சிறுவனாகவிருந்த எனக்குத் தனது நூல்களைத் தந்துதவினார் அவர். செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’ நாவலினையும் அங்குதான் வாங்கினேன்.
மேற்படி குறிப்பேட்டிலுள்ள பல கட்டுரைகள், கவிதைகள் முதலான ஆக்கங்கள் அப்போது நான் படித்த மேற்படி மார்க்சிய நூல்கள், நாவல்களின் தாக்கங்களினாலும், அப்போது நாடிருந்த சூழல் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவுகளினாலும் என் எண்ணத்திலேற்பட்ட எதிர்த்தாக்கங்களே. அப்போது, அந்த வயதில் நான் புரிந்து கொண்ட தத்துவங்களினை நிலவிக் கொண்டிருந்த சமூக, அரசியல் மற்றும் பிரபஞ்சச் சூழல்களின் பின்னணியில் வைத்து ஆராய்ந்ததன் விளவான என மனப் பதிவுகளே. ஒருவகையில் அப்போது என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு வடிகால்களாகவும் விளங்கின மேற்படி குறிப்பேட்டுப் பதிவுகளெனவும் கூறலாம்.
மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியர்களான டால்ஸ்டாய், ததாவ்ஸ்கி போன்றோரின் புகழ்பெற்ற நாவல்களான ‘புத்துயிர்ப்பு’, ‘குற்றமும் தண்டணையும்’ போன்றவற்றையும், அண்டன் செகாவ் போன்றோரின் சிறுகதைகளையும் முதன் முதலில் அப்பொழுதுதான் வாசித்தேன். மேற்படி மாஸ்கோ பதிப்பக நூல்களையெல்லாம் கொழும்பின் கொம்பனித்தெருவிலுள்ள இத்தகைய நூல்களை விற்கும் புத்தகசாலையொன்றில் வாங்கினேன். ஒரு சிறு வட்டத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த சிந்தனைகளை முதன் முதலில் அவ்வட்டத்தினை உடைத்து வெளியேற வைத்துச் செழுமையும் விரிவும் படுத்தியவை மேற்படி மார்க்ஸிய நூல்களும், இலக்கியப் படைப்புகளுமே.
இந்த நூல்களில் சிலவற்றை 1983 கலவரத்தின் முன் சந்தித்த பொழுது நண்பர் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் பெற்றுச் சென்றிருந்தார். அன்றைய சூழலில் நான் சந்தித்த சிலரில் ஆழமான நூலறிவும், மார்க்ஸிய சிந்தனைகளும் கொண்டு விளங்கிய இளைஞர்களில் இவரும் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம் இதழுக்கு நான் எழுதிய ‘பாரதி கருத்து முதல்வாதியா பொருள்முதல்வாதியா?’ என்னும் கட்டுரையினை வாசித்து விட்டு என்னுடன் சந்திக்க ஆவல்கொண்டு சந்தித்ததுடன் எமக்கிருவருக்கிடையிலுமான தொடர்பு முதன் முதலில் ஏற்பட்டது. இவர் நல்லதொரு சிறுகதையாசிரியரும் கூட. அப்போது சிரித்திரன் நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் இவரது சிறுகதையொன்று ,’பாஸ்’ என்று நினைக்கின்றேன், பரிசு பெற்றிருந்தது. அவருடன் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் ‘புத்துயிர்ப்பு’ போன்ற நாவல்களுட்படப் பல்வேறு சமூக அரசியல் விளைவுகள் பற்றியெல்லாம், மார்க்சியத் தத்துவங்கள் பற்றியெல்லாம் உரையாடிக் கொண்டிருந்தது ஞாபகத்திலுள்ளது. பின்னர் பல வருடங்களின் பின்னர் நாடு இந்தியப் படைகளின் ஆதிக்கத்திலிருந்த காலத்தில் கடிதமொன்று போட்டிருந்தார். அதில் மறக்காமல் மேற்படி ‘பாரதி..’ பற்றிய கட்டுரையினைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ‘கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பாரதியின் மெய்ஞானம் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. பாரதி கருத்துமுதல் வாதியா பொருள்முதல்வாதியா என நீர் எழுப்பிய கேள்வியை – நீர் அன்று கூறியது போல் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் ஒரு பாலமாக அவர் இருந்ததாக அல்ல – முழுமையாக ஆய்கிறது இந்நூல். அண்மையில் வெளிவந்த ஒரு நல்ல தத்துவார்த்த ஆய்வு நூல் இது என்பதை நான் துணிந்து கூறுவேன். ந.ரவீந்திரன் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல், பாரதி பற்றிய மயக்கங்களுக்கு பூரணமான தெளிவினை ஊட்டுவதாக உள்ளது. பாரதியின் ஆன்மிக நிலையையும், அவரது அரசியலில் அவர் பொருள்முதல்வாத நிலையை எடுப்பதையும் சுட்டிக்காட்டி ஒரு முரண்பட்ட மனிதராகி பாரதியை மறுத்து, ஆன்மிகம், அரசியல் இரண்டிலும் அவரது இயங்கியல், பொருள்முதல்வாத நிலையின் கூறுகளை இனங்கண்டு, தெளிவாக்குகிறது இந்நூல்.’ என அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அன்று நிலவிய அரசியல், சமூகச் சூழல் பற்றிய அழகானதொரு விவரிப்பாகவும், இலக்கியத் தரம் மிக்கதாகவும் விளங்கிய அக்கடிதத்தினை அப்போது நான் வெளியிட்ட ‘குரல்’ கையெழுத்துப் பிரதியிலும் பதிவு செய்திருந்தேன். அச்சமயதில் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் பயின்று கொண்டிருந்த என் கடைசித் தங்கையும் IPKF: Indian Peace Killing Force என்னும் தலைப்பில் அப்போதிருந்த நிலையினைப் படம் பிடித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். அதனையும் மேற்படி ‘குரல்’ கையெழுத்துப் பிரதியில் பதிவு செய்திருந்தேன். இவற்றைச் சமயம் வரும்போது பதிவுகளிலும் பதிவு செய்வேன்.
மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் முதலாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை. இவற்றில் பாரதி பற்றி எழுதிய சில கட்டுரைகளும், கவிதைகள் சிலவும் அவ்வப்போது சஞ்சிகைகள் மற்றும் பதிவுகள் இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.-
13/09/1982
கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்த பிரபஞ்சம்!
ஆ…இந்த மெல்லிய இளந்தென்றல்…
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்…
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்…
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!
பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமெமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!
மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.
இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்க நீக்ரோக்களென்றாலென்ன,
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸல்மானென்றாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்1
5/3/1983
கவிதை: பொறியின் கதை!
சிறு வித்தொன்றிலிருந்தொரு பெருவாலமரமும்
செழித்திலை தளிர்த்து நிற்கும்.
உருவொன்றினளவிற்கும்
உள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறு பொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனையறியாரே
ஒருவேளை அவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
கருத்தொன்றின் பெருவீச்சில்
உருச்சிறுத்தேயுலர்ந்தொழிந்திட்டவரசுகளின்
வரலாறோ பலப்பல.
ஒரு சத்தியத்தின் ஒளிநாடி பறக்கின்ற பொறியெனிலோ
ஒருநாளில் பெரும் சுவாலையெனவேயொளி வீசிச் சுடர்ந்திடுமே!
அதனொளியில் சடசடத்துதிர்ந்துவிடும் அழுக்காறுச் சுவரெலாமே.
எரிந்து, பொசுங்கிச் சுவாலையெனவே ஆயிடுமே தீமையெலாம்.
உருவொன்றினளவிற்கு முள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறுபொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனை யறியாரே
ஒருவேளை யிவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
29/05/1983
இலட்சியவாதிகளும் காதலும்!
‘வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்’ — பாரதியார்.
ஏதாவதொரு இலட்சியத்திற்காக வாழ்பவர் மத்தியில் (விடுதலைப் போராளிகளுட்பட) காதலைப் பற்றியும், பெண்ணைப் பற்றியுமொரு சந்தேகக் கண்டோட்டம் நிலவுகின்றது. ‘காதல்’, ‘பெண்’ என்பவை தங்கள் இலட்சியத்தைப் பாழடித்து விடுவன என இவர்கள் கருதுகின்றார்கள். ஆயின் இது உண்மையா? லெனினோ, கார்ல் மார்க்ஸோ அல்லது காந்தியடிகளோ காதலை இகழவில்லையே. அம் மகாபுருஷர்களின் வாழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகவன்றோ அவர்தம் காதற்கிழத்தியர் விளங்கினர்.
மேற்கூறிய சந்தேகத்திற்குக் முக்கிய காரணம்… பெண்களை அடிமைகளாக வெறுமனே உடலிச்சை தீர்க்கும் போக கருவிகளாகக் கருதும் ஆண் தலையெடுத்த சமுதாய அமைப்பில் வாழுபவர்களும், மற்றவர்களைப் போல் பெண்களையும், காதலையும் வெறுமனே போக் கருவிகளாக எண்ணிவிடுவதனால் தான் ‘எங்கே அந்த மோகம் தங்களைத் திசை திருப்பி விடுமோ’ என்று கருதுகின்றார்கள். உண்மையில் இவர்களைப் புரிந்துகொண்ட பெண்களால் இவர்களது இலட்சிய வாழ்வு மேலும் சிறப்படையுமே தவிர வேறல்ல. சரியான துணை கிடைத்து விட்டால் ஓர் ஆணின் வெற்றிக்கு எதுவுமே தேவையில்லை. பெண்கள் ஆண்களைப் போலவே சகலவித வேலைகளிலும் ஈடுபடக் கூடியவர்களாகவும், சில வேளைகளில் மிகுந்த மனோதிடமிக்கவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
மானுட வாழ்வின் வெற்றியே தூய காதலின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. இலட்சிய தம்பதிகள் தத்தமது மனக் கட்டுபாடுகள் மூலம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்கின்றார்கள். காதலைக் காமத்தின் வெளிப்பாடாக மட்டும் கருதுபவர்கள்தான், பெண்களை வெறுமனே போகக் கருவியாகக் கருதுபவர்கள்தான், மன அடக்கமற்றவர்கள்தான் ‘காதலையும்’, ‘பெண்’ணையும் கண்டதும் காததூரம் ஓட வேண்டுமென்று அலறுகின்றார்கள்.
‘காதலினாலுயிர் தோன்றும் இங்கு
காதலினாலுயிர் வீரத்திலேறும்’ – பாரதியார்.
மார்ச் 6, 1983.
கவிதை: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ ‘கிறுக்கனென’.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்’ வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
‘நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே’. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
‘ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்’
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் ‘நானொரு கிறுக்கனாம்’.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.
– மார்ச் 6, 1983.-
நவம்பர் 11, 1982
கவிதை: சிறகுகளை விரிப்பீர்!
இரும்புச் சங்கிலிகளெங்கும் பரந்து, கவிந்து
வீதிகளினொவ்வொரு முடுக்குகளிலும்
தனித்து நிற்கும் சோகங்கள்….
ஓ! தோழரே! மெல்ல எழுவீர்.
ஆம். மெல்ல எழுவீர்.
படர்ந்து கிடக்கும் விலங்குச் சிறைகளை
உடைத்தெழுவீர். நொறுக்கிச் சிதைப்பீர்.
உங்களால், ஆம் உங்களால்தானது
முடியக் கூடும் தோழரே.
உங்கள் சிந்தனைச் சூளைகளில்
புடமிட்ட கருவூலங்களால்
ஆம்! நிச்சயம் உங்களால்தான்
அவை முடியக் கூடும் தோழரே.
உமது உறுதிய திண்ணெஞ்சும்
உமது சீரிய நல்வாழ்வும்
தோழரே!
வரலாற்றின் படிக்கற்கள் நீவிர்தான்.
நீவிரேதான்.
விடுதலைச் சிற்பிகளே! உமது
வேலையினைத் தொடங்கிவிடுவீர்.
கொட்டிடும் பனியிலும், கூதலிலும்
துப்பாக்கிக் குண்டுகளின் புகைச்சலிலும்
இருண்ட சிறைக் கோட்டங்களின்
தனிமைகளிலும்
உமது பணி சிறக்கட்டும்.
மெல்ல ஆனால் உறுதியாக உமது சிறகுகளை
விரிப்பீர். விரிப்பீர்.
மெல்ல ஆனால் உறுதியாகச்
சொர்க்கமொன்றின் தரிசனத்தினை
நீவிர் நிச்சயம் காண்பீர்.
– நவம்பர் 11, 1982 –
நவம்பர் 10, 1982
கவிதை: கோழைகளோ நாம்!
முள்ளந்தண்டொடிந்த கோழைகளோ
நாமெலாம். பொய்மை
படர்ந்துளதே பொய்கைப்
பாசியென.
நெஞ்சத்துரமெலாம் வற்றியதே
கோடை நீரென.
ஐயகோ! கேடுகெட்ட வாழ்வு
வாழ்கின்றோமே பேடிகளாய்
நாமெல்லாம்.
எலும்பெல்லாம் நடுநடுங்கிக்
கிடந்திடுதே உக்கிய தண்டெனவே.
மானமிழந்து, மதிகெட்டு எம்வாழ்வெலாம்
பாழானதே பாலைகளாயிதுவரை.
துப்பாக்கிகள் கொணர்ந்து வரும்
சிப்பா(பே)ய்’களின் சிரிப்பொலியில்
நடுங்கிச் செத்திடுவமே நாணமற்ற
பாபிகளாய்.
எரிகிறதே நெஞ்செல்லாம்; கனன்றெறிகிறதே
ஓங்கிடும் காட்டுச் சுவாலையெனவே. செஞ்
சுவாலையின் தீக்கங்குகள் வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும். வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும்.
– நவம்பர் 10, 1982 –
மே 29, 1983
கவிதை: கற்பனைப் பெண்ணே!
கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது. அங்குனக்கென்ன
வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
ஒருபுறத்தே மாடமாளிகளைகளில் கூட கோபுரங்களில்
ஆணவத்தினெக்காளிப்பு தாண்டவமாடிடுகையில்
மறுபுறத்திலோ
காடுகளிலும் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
‘மரணத்துள் வாழு’மொரு நிலையிங்கேன்?
கற்பனைப் பெண்ணே! அடீ கற்பனைப்பெண்ணே!
நிஜங்களின் தரிசனம் உனக்குக் கிடைத்ததா?
ஏழ்மையிலவை தூங்கிக் கிடக்கின்றனவே. உனக்குத்
தெரிந்ததா?
புரிந்து கொண்டால் அறிந்து தெரிந்து கொண்டால்.. வாடி! வா!
இக்கவிதன் மடியில் நெஞ்சில் உனக்கு
நிறையவே இடமுண்டு. வாடி! வா!
– மே 29, 1983 –
29 யூன் 1983
இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று!
– இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின்
கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். –
நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்… இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
துன்புற வைத்ததில்லை.
நானுன்னைக் காதலித்தேன்; எனக்குள்ளேயே,
நம்பிக்கையில்லாமலேயே,
ஆனாலும் உண்மையாக, வெட்கத்துடன்.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.
– 29 யூன் 1983 –
ஜூன் 6, 1983
கவிதை: மனப்பெண்ணே!
என்ன ஆயிற்றாம்? உன்னைத்தான் கேட்கின்றேனடீ!
என்னவாயிற்றாம்? அட உன்னைத்தானென் மனப்பெண்ணே!
உனக்கென்னவாயிற்றாம்? உரைப்பாயெனிலது நன்றன்றோ!
தாவித் தாவிக் குதியாட்டம் போட்டிருந்தவுன்னாலெங்ஙனம்
வாடிக் கிடந்திட முடிந்ததோ?
வனிதையே! விளம்புவையே!
போராட்டங்களிற்குள் புத்தெழுச்சி பெற்றனையே! பின்னேன்
பதுங்கி மாய்ந்து கிடக்கின்றனை.
பாய்ந்தெழு! பாய்ந்தெழு! பாய்ந்தெழு! அட,
பாய்ந்தெழத்தான் மாட்டாயோ பைங்கிளியே!
தோல்விகள் செறிந்திட்ட போதெல்லாம்
தோள்கொட்டி எழுந்து எழுந்து நின்றனையே!
சிரித்தனையே! ஆயின், வெட்டுண்ட விருட்சமென
வீழ்ந்து கிடப்பதுவும்தான் முறையாமோ?
விருட்டெனப் பொங்கியெழத்தான் முடியாதோ?
அட, உன்னைத்தானென் ஆருயிர் மனமே!
உன்னைத்தான்.
வாழுமிச் சிறுவாழ்விலுமுனைத்
தாழ்த்துவதுதானெதுவுமுண்டோ?
உண்டோ? உண்டோ? சொல் மனமே!
பிரபஞ்சச் சுழல்களிற்குள்
உரமற்று உளைவதாலென்ன பயனோ?
உளைவதாலென்ன பயனோ? பயனோ? பயனோ?
– ஜூன் 6, 1983 –
13 நவம்பர் 1982
தனிமையும் நானும்!
தனிமை! தனிமை! சிலவேளைகளில் மிகவும் கொடூரமாக விளங்குகின்ற போதிலும் தனிமைதான் எத்துணை இனிமையானது. தனிமையில் என் நெஞ்சம் சம்பவங்களை அசை போடுகிறது. அதன் விளைவுகள் புடமிட்ட சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகின்றன. எங்கும் நீண்டு, பரந்து, ஓவென்று ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் பார்க்கையில் என் நெஞ்சினை இனம் புரியாத சோகமொன்று கவ்விச் செல்லும். தனிமையில் மூழ்கி நிற்கும் கடல் ஒரு துணையை நாடிச் சோகப் பண்ணிசைத்திடுமொரு பெண்ணாகத்தான் எனக்குத் தெரியும். நீண்டு பரந்து கிடக்கும் கடல் நங்கையினை மாலைகளில் பார்த்துக் கொண்டிருப்பதென்றால் அ·து போன்றதொரு ஆறுதல் வேறேது?
இதுபோல்தான் கானகச் சூழலும் என்னைக் கவர்ந்திழுத்து விடும். தனிமைகளில் ஏதோ சோகமொன்றின் கனம் தாங்கமாட்டாத தோழர்களைப் போன்று விருட்சங்கள் ஏதோ ஒருவித அமைதியில் மூழ்கிக் கிடக்கும் நிலை; இடையிடையே துள்ளிப்பாயும் மர அணில்கள்; சிட்டுக்கள்; அகவும் மயில்கள்; காட்டுப் புறாக்கள். ஓ! தனிமைகளில் கானகச் சூழல்களில் என்னையே நான் மறந்து விடுவேன்.
இரவுகளின் இருண்ட தனிமைகளில், தூரத்தே சோகத்தால் சுடற்கன்னிகளை நோக்குகையில் நெஞ்சினில் பொங்குமுணர்வுகள்… தனிமைகள் என்னைத் தகித்து விடுகின்றன. தவிப்படையச் செய்து விடுகின்றன. சிந்தனைச் சிட்டுக்களைக் கூண்டிலிருந்து விடுவித்து விடுகின்றன. சோகத்தின் பாதிப்புகளால் நெஞ்சினைப் புடம்போட்டு விடுகின்றன. தனிமைகள் தான் என்னை எழுத்தாளனாக்கி வைத்தன. இயற்கையின் ஒவ்வொரு மூலையிலும், துளியிலும் மறைந்து கிடக்கும், பொதிந்து கிடக்கும் மிக மெல்லிய உணர்வுகளைக் கூட உணர்ந்து விடும்படியான வல்லமையினைத் தனிமைகள் தானெனக்குத் தந்து விடுகின்றன.
தனிமைத் தோழர்களை நான் போற்றுகின்றேன். தனிமைத் தேவியரை நான் மனதார நேசிக்கின்றேன். காதலிக்கின்றேன். தனிமைத் தத்துவவித்தகர்களை நான் தொழுகின்றேன். துதிக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.
தனித்திருக்கும், இருண்ட இந்த இரவுகள்….
கறுத்து வானை வெறித்து நிற்கும்
கடற்பரப்புக்கள்…
தனிமைத் தவமியற்றும் கானகத்து
விருட்சங்கள்…
ஓ1 இவ்வுலகம்தான் எத்துணை
இனியது! எத்துணை
எழில் வாய்ந்தது!
இன்பம்! இன்பம்! இன்பம்!
எல்லாமே இன்பம்! இன்பம்! இன்பம்!
– 13 நவம்பர் 1982 –
15 ஆகஸ்ட் 1982
ஒரு தீர்ப்பும் தமிழர் போராட்டமும்!
தென்னாபிரிக்காவின் இனவெறி பிடித்த அரசாங்கத்தின் கொடுமையான சட்டங்களிற்கு நிகரான சட்டமென சர்வதேச ஜூரிமாரால் கண்டிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு சாதாரண குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சிவநேசனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குட்டிமணி (யோகச்சந்திரன்), ஜெகன், கறுப்பன் ஆகிய எதிரிகளில் முதலிருவர்களையும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தியூடர் டீ அல்விஸ் அவர்களிற்கு குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின்படி மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். விந்தையான தீர்ப்பு! ஆயுதப் படைகளின் தடுப்புக் காவலில் பெறப்பட்ட எதிரிகளின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொண்டு ஜூரிகளற்ற நீதிமன்றத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு நீதியினையே அவமதிப்பதாகவிருக்கின்றது. எதிரிகள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிற்கு வரமுன்னர் நிகழ்ந்துள்ளதால் தான் சட்டரீதியாக இத்தகைய தீர்ப்பினை வழங்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் நீதிபதி கூறுவது எதைக் காட்டுகிறது. நீதிபதியே தனது தீர்ப்பைப்பற்றி வருந்துவதாகக் கூறுகிறாரென்றால், நிலவும் சட்டத்தின் தன்மையினை, ‘தர்மிஷ்ட்ட’ அரசு எனக் கூறிக் கொள்ளும் அரசின் தம்மிஷ்ட்ட சட்டங்களின் தன்மைகளை யாவரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்தத் தீர்ப்பினை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட குட்டிமணியும், ஜெகனும் ‘தங்களிற்குக் கருணையேதும் தேவையில்லையெனவும்’, ‘தங்களைத் தமிழ் மண்ணிலேயே தூக்கிலிடும்படியும், தங்கள் உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கும்படியும், கண்களைப் பார்வையற்ற தமிழனொருவனுக்குக் கொடுக்கும்படியும்’ கூறியிருப்பது அவர்களது மனத்திண்மையையும் இலட்சியப் போக்கினையும் காட்டி நிற்கின்றது.
“என்னைப் போல் தமிழ் இளைஞர்கள் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். அந்த அப்பாவித் தமிழ் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மரணதண்டனைக்கு இலக்காவார்கள். … நீதிபதி எனக்களித்த தீர்ப்பின் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தினையும், உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் தமிழ் ஈழத்தில் உருவாவார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தமிழ் ஈழத்தின் தீரமிக்க வீரர்களாகவேயிருப்பார்கள்” (ஆதாரம்: 14-08-1982 வீரகேசரி).
குட்டிமணியின் இந்த இறுதி வாசகங்கள் அடக்குமுறைகளிற்காட்பட்டு வாடும் தமிழ் மக்களிடையே நிச்சயம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும். விடுதலைக்கான போராட்டத்தினை அவை நிச்சயம் விரைவு படுத்தியே தீரும்.
– 15 ஆகஸ்ட் 1982 –
ngiri2704@rogers.com
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- கடிதம்
- இருபது ரூபாய் நோட்டு
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- உதயகுமரன் கதை
- சிந்தாநதி சகாப்தம்
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- யார் அகதிகள்?
- கிளி ஜோசியம்!
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கல்லறைக் கவிதை
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35