தமிழர் நீதி

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

புதுவை ஞானம்


18, ஏப்ரல்,2007 _ இன்று உலக மரபு தினமாம்.

நமது மரபு என்ன ?

வெறுமனே தற்காலப் படைப்பு இலக்கியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முற்போக்கு வியாபாரம் செய்வது தான் மரபா?

முன்னோர்கள் உழைத்ததெல்லாம் __ படைத்ததெல்லாம் ‘விழலுக்குப் பாய்ச்சிய நீர்’ தானா?

தமிழர்களின் ‘அனைத்துந்தழுவிய அறிவு’ பற்றி எத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன ?
என்பதான கேள்விகள் முட்டி மோதுவதைத் தவிர்க்க முடியவில்லை.
காலம்தான் இதற்கெல்லாம் விடை பகர வேண்டும்.

தோழர் ரவி ஸ்ரினிவாசனுக்கு அவரது ‘திண்ணை’ கட்டுரையை ஒட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தோழர் சிவத்தம்பி அவர்கள் ‘தமிழர்களின் கலாச்சார மீளுருவாக்கம்’ ( பெயர் சரியாக நினைவில்லை _ மன்னிக்கவும்) என்ற தலைப்பில் ஒரு நூல் எழுத நியூசெஞ்சுரி புத்தக நிலயத்தார் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. அதில் தமிழர்களின் தாயபாகம் எனப்படும் வாரிசுரிமை பற்றிய யாழ்ப்பானத் தமிழர்களின் பண்டைய நெறிமுறைகள் பற்றி விளக்கியதுடன் அதனை டச்சுக்காரர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியதாகவும் எழுதியிருந்தார். அதனைப் படித்ததில் இருந்தே தமிழகத் தமிழர்களின் நீதி நெறி எவ்வாறு இருந்திருக்கும்? என்ற கேள்வி அலை மோதிக்கொண்டேதான் இருக்கிறது. மனுநீதிச் சோழன் என்றும் ,மனுமுறை கண்ட வாசகம் என்றும் வள்ளலார் எழுதுவதைப் படித்தால் மனுதருமத்துக்கு ஏதும் எதிர்ப்பு அந்தக் காலத்தில் இருந்ததாக எளியேனுக்குத் தெரியவில்லை. ஆனால் ‘ஆங்கிலேயன் மனுதர்மத்தை அப்படியே சட்டமாக்கிவிட்டான் .அது சரியல்ல.’ என தோழர் ஆனைமுத்து அவர்கள் ஒரு கூட்டத்தில் விளக்கிப் பேசியது அறைகுறையாக நினைவுக்கு வருகிறது. எனது ஞாபக மறதியும் என் நன்பர்கள் இது போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்தாமையும் அல்லது அப்படி அக்கறையோடு எழுதப்பட்ட நூல்கள் என் கண்ணில் படாமையும் ஒரு புறமிருக்க,ஒரு வாதத்துக்கு மனு நீதிதான் தமிழர் நீதி _ என்று வைத்துக் கொண்டாலும் ,அதுவாவது தமிழில் வந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை. மொத்தத்தில், வாழ்ந்தால் உயிர்ப்போடும் துடிப்போடும் வாழ வேண்டும் இல்லையேல் செத்துவிட வேண்டும். அறைகுறையாக எழுதி யார் கழுத்தையும் அறுக்கக் கூடாது என்ற மனோநிலையில் தேடிப் பார்த்ததில் ‘என்மனார் புலவர்’ என்பதைப்போல் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரின் கீழ் வரும் பக்கங்கள் கிடைத்தன.

இதனை நான் எடுத்தாள்கையில் இவருக்கும் மூத்த மொழி பெயர்ப்பாளரான அதிவீர ராம பாண்டியனாரும் அவரது நைடதமென்ற காம சூத்திர மொழி பெயர்ப்பும் நினைவுக்கு வருகிறது. அவர் அப்படி காம சூத்திரத்தை மொழி பெயர்த்திருக்காவிட்டால் தமிழனுக்குக் காதல் புரியவே தெரிந்திருக்காது என்று யாராவது சொன்னால் அது எவ்வளவு மடத்தனமாயிருக்குமோ அப்படித்தான் மனுதர்மம் வருமுன் தமிழனுக்கு நீதி பரிபாலனம் தெரியாது என்பதும் மடத்தனமாகி விடும்.
எனவே முதலில் கைக்கெட்டிய தரவுகளிலிருந்து நமது ஆய்வுகளைத் தொடங்குவோமாக. பங்காளி சண்டையால் பாரதமும், சக்களத்தி சண்டையால் இராமாயணமும் உருவானதாகத்தான் அடித்தட்டுப் பாமர மக்கள் கருதுகிறார்கள் என்பதனால் நான் தாயபாகம் எனப்படும் வாரிசு உரிமைச் சட்டத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு இடைச் செருகல். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்ற பெரியோர்கள் வற்புறுத்தலின் பேரில் பாசி படிந்த குளத்தில் இருந்து நீர் அருந்த மறுத்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்குக் குழந்தையாய் இருந்த போது ஒரு சந்தேகம் எழுந்தது. தமிழர்கள் அவ்வளவு மடையர்களா? அசுத்தமான நீரை அருந்தினால் உடல் நலம் கெட்டு விடாதா ? .ஏன் இப்படியானதொரு பழமொழி வழக்கிலிருக்கிறது ? என்பது அந்த சந்தேகம். நீண்ட காலம் கழித்து ஒரு குளத்தின் கரையில் மதிற்சுவரில் ஒரு கல்வெட்டு காணக்கிடைத்தது. அதில் கீழ் வருமாறு செதுக்கப் பட்டிருந்தது.

“நீர்ப்பிழை செய்வது ஊர்ப்பிழைத்தற்றால்
நெடுமுடி மன்னன் கடுஞ்சினம் கொள்ளும்.”

‘இங்கு அசுத்தம் செய்யாதீர். அசுத்தம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள்’ என இக்கால அரசாங்கம் அறிவிப்புப் பலகை வைப்பது போல் அக்காலத்தில் கல்வெட்டாக குளக்கரையில் அரசன் எச்சரிக்கை செய்திருக்கிறான். ஊர் மக்கள் பயன் படுத்தும் நீரை அசுத்தம் செய்தால் அரசன் தண்டிப்பான் என்பது அக் கல்வெட்டின் பொருள். ஊரைப் பிழைத்தாலும் நீரைப் பிழைக்காதே என்ற சொலவடை, காலப்போக்கில் மறுவி ‘ தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே !’ என ஆகிவிட்டதாம்.
இது கொண்டு நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஆங்கிலேயர் வருமுன் பண்டைத் தமிழகத்தில் தமிழில்தான் நீதி பரிபாலனம் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது என்ற அதிசயிக்கத் தக்க உண்மையாகும் !.

தாய பாகம்1 _ தாயமுறை 2.

தாய் தந்தையர் 3 சிறப்புடையராய் உடனிருக்கப் புதல்வர் 4 தலைவராகார். 5 தந்தைக்குப் பின்னர்ப் புதல்வர்கள் 6 தந்தையின் பொருளைப் பிரித்துக் கொள்ளக் கடவர். தந்தையின் பொருளை முதலாகக் கொண்டு ஈட்டப்படாமல் 7 தன்னால் ஈட்டப்பட்ட பொருள் பகுத்துக் கொள்ளத் தக்கது அன்று.

8 தந்தை வழிப்பொருளைப் பாகம் செய்து கொள்ளாதவரின் புதல்வர், பெயரர் முதலியோர் நான்கு தலைமுறை வரை 9 பகுதிக்கூறு பெறக்கடவர். 10அது காறும் பிண்டத்தொடர்புண்டாம். 11அத்தொடர்பு அற்றோர் எல்லோரும்12 தம்முட் சமமாகப் பாகம் செய்து கொள்ளக் கடவர்.
13 தாயப் பொருள் இல்லாதவரும், தாயப்பொருளைப் பகுத்துக்கொண்டவரும் ஒருங்குகூடி வாழ்வாராயின் (தம்பால் உள்ள பொருளை) மீண்டும் பகுத்துக்கொள்ளக்கடவர். 14பொருளைப் பெருக்கியவன் இரண்டு கூறு கொள்ளல் வேண்டும்.

15 மகப்பேறில்லாதவனுடைய பொருளைக் கூடி வாழும் உடன் பிறந்த ஆடவர் கொள்ளுதல் வேண்டும்.16 கன்னியர்க்குமாம்.

17 மகப்பேறுடையவனின் பொருளை அவனுடைய ஆண் மக்களும், 18அறத்திருமணம் புரிந்து பெற்ற பெண்களும், 19அவருமிலரேல்
20 உயிருடன் வாழும் தந்தையும்,அவனுமிலையேல் உடன் பிறந்தாரும்,21அவர்தம் மக்களும் அடையக்கடவர்.

22 தந்தையற்ற பல23 உடன் பிறந்தோரும்,அவருடைய மக்களும் தந்தையின்24 ஒரு கூற்றை அடையக் கடவர்.

25பல தந்தையற்கு ஒரு தாயின் வயிற்றுதித்தவர்கள் (தத்தம்) தந்தைக்குறிய தாயப் பொருளுக்குரி¢யவராவர்.

26கடன் கொண்டவனுடைய தந்தை, உடன் பிறந்தோர்,மக்கள் என்னும் இவர்களுள் முதல்வன் இருக்க ஏனையோரையும்,27 அண்ணன் இருக்கத் தம்பியையும் ( 28 கடன் கொடுத்தவர்கள்) தொடர்தலாகாது.

29தந்தை உயிருடன் இருந்து பாகம் பிரிக்குங்கால் ஒருவனுக்கு30 ஏற்றத்தாழ்வு செய்தலாகாது.31காரணம் இன்றி ஒருவனை கூறு பெறாதவனாகச் செய்தல் கூடாது.த்ந்தையின் பொருள் இல்லாத பொழுதும் மூத்தோன் 32 தீயொழுக்கமில்லாத இளைஞரைப் புரக்கக்கடவன்.

33வழக்கியற்பருவம் அடைந்தவர்கள் பகுத்துக்கோடற்குத் தகுதி உடையவர் ஆவர்.வழக்கியற்பருவம் அடையாதவருடைய பாகப்பொருளில் 34கடன் கழித்து எஞ்சிய பொருளை 35 அப்பருவம் அடையுங்காறும் 36 தாயின் உறவினத்தாதல்,கிராமப் பெரியோரிடத்தாதல் வைத்திருத்தல் வேண்டும்.38 அயலூர் சென்றவனுக்குடைய பொருளிற்குமாம்.

மணம் புரிந்து கொண்டவர்களுக்குச் 39 சமனாக மணம் புரிந்து கொள்ளாதவர்களுக்கு மணச்செலவிற்கும்,40 கன்னியர்க்கு மணம் செய்து கொடுப்பதற்கும் உரிய பொருளைக் கொடுத்தல் வேண்டும்.

41கடனாக வாங்கிய பொருளிலும் கடனாகக் கொடுத்த பொருளிலும் பாகம் சமனாம்.

பொருளற்றவர்கள் நீர்ப் பாண்டங்களையும் பகுத்துக் கொள்ளல் வேண்டும் என்பர் ஆசிரியர். 42உள்ள பொருளே பகுக்கற்பாலன,இல்லதிற்கில்லை ஆகலின் இது தவறு என்பர் கெளடலியர்.

43 பொதுப்பொருள் இத்துணை 44 இதிற்கூறு இத்துணை எனச் சான்றாவரிடத்தில் விளக்கிக் கூறிப் பகுத்துக்கோடல் வேண்டும்.46ஏற்றத்தாழ்வாகப் பகுக்கப்பட்டது,47 ஒருவர்பால் ஒருவர் கவர்ந்தது,48 மறைந்தது, அறியப்படாமல் உண்டானது என்னும் இவற்றை 50மீண்டும் பகுத்துக்கோடல் வேண்டும். 51தாயத்தார் இல்லையாயின் 52 மகளிர் வாழ்வுக்கும், 53 இறுதிக்கடன் செய்தற்கும் வேண்டிய அளவை விடுத்து எஞ்சிய பொருளை வேந்தன் அடையலாம். வேதியன் பொருளாயின் அங்ஙனம் அடைதலாகாது.54அதனை 55மும்மறை ஓதியவனுக்கு அளித்தல் வேண்டும்.

56பதிதன்,பதிதன்பாற் றோன்றியவன், பேடி 57 ஆகிய இவர்கள் கூறு பெறத் தகாதவர் ஆவர். ரடன்,பித்தன்,குருடன்,தொழுநோயுடையவன் ஆகிய இவர்களும் 58 என்க.இவர்களுக்கு மணம் நிகழ்ந்திருப்பின் 60 இவர்கள் போலல்லாத மக்கள் கூறு பெறக் கடவர். பதிதனல்லாத 61 ஏனையோர் ஊண் உடை பெறற்பாலர்.

62 இவர்கள் மணம் புரிந்து கொண்டு 63 மகப்பேறு இல்லாதவர்களாக இருப்பின் 64 உறவினர் 65 மகவுகளைத் தோற்றுவித்தல் வேண்டும்.அவர்களுக்குக் கூறும் கொடுத்தல் வேண்டும்.

(எண் 1_லிருந்து 65 வரையிலான கருத்துக்களுக்கு விளக்கம் இதனைத் தொடர்ந்து வரும் பிற்சேர்க்கையில் காண்க.)

பிற்சேர்க்கை
________________

1தாய பாகம் _குடும்பப் பொதுப் பொருளைப் பகுத்துக்கோடல்.

தாயம் _ குடும்பப் பொதுப்பொருள்.மணஞ்செய்து கொண்டோர் தாய பாகம் செய்து கொள்ளுதற்குரிய தகுதியை அடைவதானும்,மணத்தின் பின் நிகழ வேண்டிய இல்லறத்திற்கு இன்றியமையாப் பொருளை பொது உரிமையானன்றிச் சிறப்புரிமையாக் கோடல் வேண்டுமாகலானும் மணம் பற்றிய வழக்கையடுத்து சிறப்புடையது பொருள் பற்றிய வழக்காதலாலும், ‘மணவியல்’ என்னும் பிரகரணத்தின் பின் இது வைக்கப்பட்டது.இதன் சிறப்பு நோக்கி இதனை ‘தாய முறை’ , ‘பகுதிக்கூறு’ , ‘புதல்வர் வகை’ என்று மூன்று வகைப்படுத்தி மூன்று அத்தியாயங்களிற் கூறுவான் தொடங்கி முதற்கண் ‘தாய முறை’ கூறுகிறார். இதனாற் பிரகரணவியைபு புலனாதலறிக.

2 தாயமுறை : தாயப்பொருளைப் பகுக்கும் விதம்.

3 சிறப்பு _ பொருளைப்பேணும் தகுதி.

4 தலைவராகார் _ குடும்பப் பொருளுக்குரிமையாகார்.

5தந்தைக்குப் பின்னர் _ தந்தை இறந்த பின்னரென்பது.

6 தந்தையின் பொருள் _ தந்தையாலீட்டப்பட்ட பொருள்.

7 தன்னாலீட்டப்பட்ட பொருள் _ சகோதரர்களுள் ஒருவன் குடும்பப் பொதுப்பொருளை முதலாகக் கொள்ளாமல் தன் முயற்சியினால் தனித்தீட்டிய பொருள்.அங்ஙனம் ஈட்டப்பட்ட பொருளில் மற்றைச் சகோதரர்க்கு பாகம் இன்று என்பதாம். எனவே ஒருவன் தந்தையின் பொருளை முதலாகக் கொண்டு தேடிய பொருளில் அவன் சகோதரர் தந்தையீட்டிய பொருளிற் போலப் பாகம் பெறும் உரிமையுடைவராவார் என்பதும் பெற்றாம்.

8 தந்தையின் பொருளைத் தம்முட் பகுத்துக் கொள்ளாமற் பொதுவில் வைத்து இறந்து போன மக்கள் முதலாயினோர் என்பது கருத்து.

9 பகுதிக்கூறு பெறக்கடவர் என்றது அங்ஙனம் இறந்தவர் பலருள் ஒரு சிலர்க்கு மக்கள் பலராகவும், மற்றொரு சிலர்க்கு மக்கள் சிலராகவும் இருப்பாராயின் , அவரெல்லோரும் தந்தை வழிப்பொருளைச் சமமாகப் பாகஞ்செய்து கொள்ளாமல் தத்தம் தந்தைக்குறிய பாகத்தை முதலிற் பகுத்துக்கொண்டு அவற்றைப் பின்னர் தம்முட் சமமாகப் பகுத்துக் கொள்ளல் வேண்டும் என்னும் பொருட்டாம். அ·தாமாறு _ இரண்டு த்ந்தைக்குறிய மக்கள் அறுவராக அவருள் நால்வர் ஒரு தந்தையின் மக்களும், இருவர் ஒரு தந்தையின் மக்களுமாய வழி முறையே தத்தம் தந்தைக்குறிய இரண்டு கூற்றினில் ஒரு கூற்றை நால்வரும்,பிறிதொன்றை இருவருமாகப் பாகஞ்செய்து கொள்ளுதல்.இங்ஙனமே நான்கு தலை முறைகாறும் பகுத்துக்கோடல் வேண்டும் என்பது கருத்து.

10 மேற்கூறியவாறு பாகஞ்செதுகொள்ளற்குக் காரணம் கூறுகின்றார். _ காரணமாவது :- இறந்தவனுக்கு நான்கு தலை முறைகாறும் பிண்டத்தொடர்பு உண்டு என்பது

11 அத்தொடர்பு _ பிண்டத்தொடர்பு ; பிண்டத்தொடர்பு அற்றோர் _ நான்கு தலைமுறைக்குப் பின் வந்தோர்.

12 பிண்டத்தொடர்பு அற்றவராகிய நான்கு தலைமுறைக்குப் பிற்பட்டோர் நான்கு தலைமுறைகாறும் பகுத்துக்கொள்ளப்படாத தாயப் பொருளைப் பகுத்துக்கொள்ல நேர்ந்தால் பிண்டத்தொடர்புடையோர் போலன்றி அக்காலத்து உயிர் வாழும் அச்சந்ததி மக்கள் அனைவரும் சமமாகப் பாகம் செய்து கோடல் வேண்டும் என்பது கருத்து.

13 தாயப்பொருள் இல்லாதவர்களாகிய சகோதரர்கள் கூடிவாழ்ந்தால் அவர்கள் ஈட்டிய பொருளைச் சமமாகப் பாகஞ்செய்து கோடல் வேண்டும் என்றும் , முன்னர்த் தாயப்பொருளைப் பாகஞ்செய்து கொண்ட சகோதரர்கள் பின்னரும் கூடி வாழ்வாராயின் , அவர் கூடி வாழும்பொழுது ஈட்டப்பட்டு வந்த பொருளை மீண்டும் தம்முட் பாகஞ் செய்து கோடல் வேண்டும் என்றும் கொள்க.

14 பொருளைப் பெருக்கியவன் _ தாயப்பொருள் இல்லாத சகோதரருள் ஆதல், பாகஞ்செய்த பின்னரும் ஒன்று சேர்ந்து வாழும் சகோதரருள் ஆதல் தன் முயற்சியால் பொருளைப்பெருக்கியவன் ; இவன் தானீட்டிய பொருளைச் சகோதரருடன் பாகம் செய்து கொள்ளுங்காள், தன் கூறேயன்றியும் சிறப்பாக ஒரு கூறும் பெறக்கடவன் என்பது கருத்து. இனி உடன் பிறந்தார் பலராயின் பெருக்கிய அப்பொருளை இரு கூறு செய்து, ஒரு கூற்றைப் பெருக்கியவனும்,மற்றொரு கூற்றைப் பகுத்து, எஞ்சிய சகோதரர் அனைவரும் கொள்ளல் வேண்டும் என்பது கருத்தாகக் கொள்வாருமுளர்.இங்ஙனம் கூறுவோர்க் கொள்கைக்கு ‘துவியம்சம்’ என்னும் மூலத்திற்கு ‘இரண்டில் ஒரு கூறு’ எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.இது பொருந்துமா என்பது ஆராயத்தக்கது.

15 மகப்பேறில்லாது இறந்தவனுடைய பொருள் அவனுடன் பிறந்து கூடிவாழும் ஆடவர்க்குரியதென்பதாம்.

16 உடன் பிறந்த கன்னியர் இருப்பின் ,அவரது திருமண முதலியவற்றிற்கு அப்பொருளைப் பயன் படுத்தலாம் என்பது கருத்து.

17 மகப்பேறுடையவன் இறந்த பின்னர் அவன் பொருளை அவனுடைய ஆண்மக்கள் அடைதல் வேண்டும் என்பது கருத்து.

18 ஆண்மக்களிலரேல் அறத்திருமணம் புரிந்து பெற்ற பெண்மக்கள் அடையலாம் என்பது.இதனால் ஆண்மக்கள் அறத்திருமணம் அல்லாத மணமுறையில் தோன்றினவராயினும் தந்தையின் பொருளுக்கு உரியவர் என்பது போதரும்.

19 அவருமிலரேல் _ அப் பெண்மக்களும் இலராயின்.

20 உயிருடன் வாழும் தந்தை _ அம்மக்களின் தந்தைக்குத் தந்தை ;பாட்டன் என்க.என்றதனால் ஈண்டுச் சுட்டிய பொருள் டந்தை தானே ஈட்டிய பொருள் என்பது பெற்றாம்.

21 உடன் பிறந்தார் இல்லையாயின் அவர் தம் மக்களும் எனக்கொள்க.

22 தந்தையற்ற என்னும் அடையை மக்களுக்கும் கூட்டுக.

23 உடன் பிறந்தோர் _ ஒரு தந்தைக்கு ஒரு தாய் வயிற்றிறோன்றியவரும்,பல தாயர் வயிற்றிறிறோன்றியவரும் ஆவார்.

24 தந்தையற்ற உடன் பிறந்தோர் தந்தையின் பொருளைச் சமமாகக் கூறு செய்து கொள்ளல் வேண்டும் என்பதும், அவர்தம் மக்கள் அவரவர் த்ந்தையின் கூற்றைப் பகுத்துக்கொள்ளல் வேண்டும் என்பதும் கருத்து.இனித் தந்தையற்ற சகோதரருட் சிலர் இறந்தாராக எஞ்சிய சகோதரரும்,இறந்தவர்தம் மக்களும் தம்முட் பாகம் செய்துகொள்ள நேர்ந்தவிடத்தும் அம்முறையே கொள்ளல் வேண்டும் என்பதுமாம்.இறந்த தந்தைக்கு மக்கள் இருவராக, அவருள்ளும் ஒருவன் இறந்தனனாக ,அவன் மக்களிருவரிப்பராயின்,பொதுப்பொருளை இரு கூறு படுத்து,ஒரு கூற்றை உயிருடன் இருப்பவனும்,மற்றொரு கூற்றை சமமாகப் பகுத்து இறந்தவன் மக்கள் இருவரும் கொள்ளல் வேண்டும் என்பது.

25 ஒருத்தி ஒருவர்பின்னொருவராக பல கணவன்மாரை மணந்தாளாக ,அவரனைவருக்கும் தனித்தனி அவளது வயிற்றிறோன்றிய சகோதரர்கள் தத்தம் தந்தையற்குரிய தாயப்பொருளை அடைதல் வேண்டும் என்பது கருத்து.

26 தந்தையும் அவன் மக்களும் கூடி வாழுங்கால் அம்மக்களுள் ஒருவன் பல புதல்வர்களையுடையவனாக இருந்து குடும்ப நிமித்தம் கடன் வாங்கி இறந்து விட்டானாக கடன் கொடுத்தவர்கள் செய்யத்தக்கது யாது என்பதைக் கூறுகின்றார்.

27 இறந்தவனுடைய மக்களுள் மூத்தவன் இருக்க இளையவனைத் தொடர்தல் ஆகாது என்பது.

28 கடன் வாங்கினவன் இறந்துவிட்டானாக, அவனுடைய தந்தை, உடன் பிறந்தார், மக்கள் என்னும் இவர்களுள் தந்தை உயிருடன் இருக்கும் போது உடன் பிறந்தார் முதலியோரையும், தந்தையில்லாமல் உடன் பிறந்தார் இருக்கும் போது அவன் மக்களையும், மக்களுள்ளும் மூத்தவன் இருக்கும் போது இளையோரையும் கடன் கொடுத்தவர்கள் வழக்குத்தொடர்தல் ஆகாது என்பதும், முற்பட்டோரையே தொடர்தல் வேண்டும் என்பதும் கருத்து.

29 தந்தையிறந்த பின்னரே மக்கள் அவன் பொருளுக்கு உரியவராவார் என்று முன்னர் விதிக்கப்பட்டது.தந்தை உயிருடன் இருக்கும் போது பாகம் செய்து கொள்ளுவதைப் பற்றிக் கூறுகிறார்.

30 தந்தை தன் மக்களுக்கு தன் பொருளைத்தானே கூறு செய்து கொடுக்கலாம் என்பதும்,அங்ஙனம் கூறுசெய்யுங்கால் தன் மக்கள் அனைவருக்கும் சமனாகக் கூறு செய்து கொடுத்தல் வேண்டுமேயன்றி அவருள் ஒருவனுக்குக் கூடுதலாகவோ குரைவாகவோ கூறு கொ¦டௌத்தல் கூடாது என்பதும் கருத்தாகக் கொள்க.

31 காரணம் இன்றி என்றதனால் காரணம் இருப்பின் தந்தை தன் மக்கள் ஒருவற்கு கூறு கொடாமையும் பொருந்தும் என்பது பெற்றாம்;கூறு கொடாமைக்குரிய காரணம் பதிதன் பேடி முதலியோராகப் பின்னர்க் கூறப்படுவோருள் ஒருவனாதல். ( பதிதன் = குலஞ்சமயவொழுக்கற்றிற்றுறந்தோன்,one fallen _ he who has lost caste or renounced his religion, an apostate, a reprobate, traitor. )

32 ‘ தீயொழுக்கமில்லாத’ என்றமையால் இளைஞர் தீயொழுக்கமுடையார பொழுது அவரை மூத்தவன் புரக்கும் கடப்பாடுடையவன் அல்லன் என்பது பெற்றாம்.

33 வழக்கியற்பருவம் அடைந்தவர்கள் பதிறாண்டு அகவையின் மேற்பட்ட ஆடவரும்,பன்னீராண்டு அகவையின் மேற்பட்ட மகளிரும் என்க. அப் பருவம் எய்தியவர் தாயப்பொருளைப் பகுத்துக் கோடற்குத் தகுதி வாய்ந்தவர் ஆவார் என்பதாம்.

34 கடன் _ குடும்பப் பொதுவில் கடன் ஏற்பட்டிருக்குமாயின் அதில் பாகம் பெறுவோனுக்குரிய கூறு.

35 அப் பருவம் _ வழக்கியற் பருவம்.

36 தாயின் உறவினர் _ மாமன் முதலியோர்.

37 தாயின் உறவினர் இல்லையாயின் அல்லது இருந்தும் நம்பத்தகாதவராயின் கிராமப் பெரியோரிடத்து ஒப்புவிக்க வேண்டும் என்பதாம்.

38 அயலூர் சென்றவனுடைய பொருளிற்கும் இவ்விதியாம் என்க.

39 மணம் புரிந்து கொண்ட சகோதரனுக்கு மணத்தின் பொருட்டுச் செலவான பொருளுக்குச் சமமான பொருளை மணமாகாத சகோதரனுக்குத் தனியே கொடுத்தல் வேண்டும் என்பது கருத்து.

40 கன்னியர் _ மணம் பெறாத மகளிர் ; இவர்க்கும் பின்னர் மணம் செய்து கொடுத்தற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தல் வேண்டும் என்பது.

41 ஒரு குடும்பத்தில் தந்தை கடனாக வாங்கிய பொருளிலும்,கடனாகக் கொடுத்த பொருளிலும் மக்களுக்குச் சமமான கூறு உண்டு என்பது.

42 நீர்ப் பாண்டமும் பொருளே யாகலானும், அ·துடையாரைப் பொருளற்றவர் எனக் கூறல் ‘மாறுகொளக்கூறல்’ என்னும் குற்றமாம் என்பது. மேலும், வேறு பொருள் இலாத ஏழையர்களே நீர்ப் பாண்டம் முதலிய எளிய பொருள்களையும் பகுத்துக் கொள்ளற்பாலார்., ஏனைய செல்வர்கள் அத்தகைய எளிய பொருள்களைப் பகுத்துக் கொள்ளற்பாலார் அல்லர் எனப் பெறப்படுவதால்,அங்ஙனம் செல்வர் பகுத்துக் கொள்ள வேண்டாமைக்கு காரணம் காண்டல் அரிதாகலின் குற்றம் என்பதும், பொருள் அனைத்தும் பகுத்தற்பாலன என்பதன் கண்ணே நீர்ப் பாண்டமும் பகுத்தற்பாலன என்னும் விதி பெறப்படுதலின் ,அதனை விதந்தோதல் கூறியது கூறலாய் முடியும் என்பதும் கெளடலியர் கொள்கை.ஆதலின் ‘இது தவறு’ என்றார் என்க.

43 இதன் கண் சந்ததி இல்லாதவராய் இறந்தொழிந்தவரது பொருளைத் தாயத்தார்கள் பகுத்துக்கொள்ளுமாற்றைக் கூறுகிறார் ; சந்ததியின்மையால் தாயத்தார்க்குக் கிடைத்த பொருளின் முழு அளவு இத்துணை எனக் காட்டல் வேண்டும் என்பது கருத்து.

44 அப் பொதுப் பொருளைப் பகுக்க வேண்டிய கூறுகள் எத்தனை என்பதும் , அக்கூறுகளின் தனித்தனி யளௌ எத்துணை என்பதும் நன்றாக விளக்கிக் கூறுதல் வேண்டும் என்பது.

45 சான்றாவார் _ கிராமப் பெரியோர்.

46 ஏற்றத்தாழ்வு _ கூறுகள் ஒன்றற்கொன்று சம மின்மை.

47 பொதுவாக இருக்குங்கால் தாயத்தார் தம்முள் ஒருவர்க்கொருவர் மறைவாகக் கவர்ந்த பொருள் என்பது.

48 மறைந்தது _ காலமிடங்களால் மறைவுபட்டது.

49 அறியப்படாமல் உண்டானது _ இறந்தவனுக்கு உரியதென்று முன்னர் அறியப்படாமலிருந்து பின்னர் வெளிப்பட்ட பொருள்.

50 ஏற்றத்தாழ்வாகப் பகுக்கப்பட்டது முதலியவற்றை அறிந்த பின்னர் அவற்றை மீண்டும் பகுத்துக்கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.

51 இனித் தாயத்தாரும் இல்லாத வழி அப்பொருளுக்குறியவர் யார் என்பது பற்ரிக் கூறுகிறார்.

52 மகளிர் _ இறந்தவனுடைய மனைவி.

53 இறந்தவனைக் குறித்துச் செய்ய வேண்டிய கன்மங்கள் என்பது.

54 அதனை _ வேதியன் பொருளை.

55 தாயத்தாரும் இல்லாத நிலையில் வேதம் ஓர் அந்தணனுடைய பொருளை அவன் இறந்த பின்னர் மற்றொர் அந்தணனுக்குக் கொடுத்து விடல் வேண்டும் என்பதும்,மற்றையோர் பொருளாயின், அப் பொருளுக்குறியவனுடைய ஈமக்கடன் முத்லியவற்றிற்கு வேண்டிய பொருளையும் , கைம்மை மகளிர் இருப்பின் ,அவர் ஆயுள் காலம் உண்ணவும், உடுக்கவும் வேண்டிய பொருளை விடுத்து எஞ்சிய பொருளை அரசன் எடுத்துக் கொள்ளல் வேண்டும் என்பதும் கருத்து. இதனை,
“உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த்
தெறு பொருளும் வேந்தன் பொருள்” (756)
என்னும் திருக்குறளில் பரிமேலழகர் ‘உறு பொருள்’ என்பதற்கு ‘உடையானின்மையாற்றானே வந்துற்ற பொருள்’ எனப் பொருள் கூறி ‘ உறு பொருள் _ வைத்தாறிறந்து போக நெடுங்காலம் நிலத்திற் கிடந்து பின் கண்டெடுக்கப்பட்டதூஉம் , தாயத்தார்ப் பெறாததூஉம்’ விரித்துறைக்குமாற்றானறிக.

56 இதன்கண் கூறுபெறத் தகாதவர் இன்னார் இன்னார் எனக் கூறுகிறார்.

57 ஆகிய இவர்கள் _ ஆகிய இம்மூவரும்.

58 இவர்களும் கூறு பெறத்தகாதவர்கள் எனக்கூட்டுக.

59 ஈண்டு ‘ பார்யாத்தே சதி’ என்பது மூலம். இதற்கு ‘ மனைவியின் பொருள் இருப்பின்’ எனவும்
கூறலாம்.

60 இவர்கள் போலல்லாத மக்கள் _ இங்குக் கூறப்பட்ட மூடன் முதலியோர்க்குப் பிறந்தும் தம் தந்தயரைப் போல மூடன் முதலியோராக இல்லாத நன் மக்கள்.

61 ஏனையோர் _ பதிதன் மகனும், பேடியும், மூடன் முதலியோரும், மூடன் முதலியோர் பால் தோன்றி மூடன் முதலியோராக இருக்கும் மக்கள் ஆகிய இவர்கள்.

62 இவர்கள் _ மூடன் முதலியோர்.

63 மகப்பேறின்மைக்குக் காரணம் வீரிய ஆற்றல் இல்லாமை.

64உறவினர் _ மூடன் முதலியோரின் உறவினர்.

65 மகவுகளைத் தோற்றுவித்தல்மூடன் முதலியோரின் மனைவியரிடத்தென்க.இதனை பாண்டு மன்னன் முதலியோரின் வரலாற்றனுமுணர்க.

அடுத்த பகுதி தொடரும்.

தொகுத்து அளித்தவர்
புதுவை ஞானம்
j.p.pandit@gmail

Series Navigation

author

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

Similar Posts