சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 14. கலை

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

குமரிமைந்தன்“கலை கலைக்கா கலை வாழ்வுக்கா” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்படும் கேள்வியாகும். குமுக மாற்றத்தை விரும்புவோர் கலைகளின் மூலம் தம் கொள்கைகளைப் பரப்ப முற்படும்போது இந்தக் கேள்வி எழுப்பப்படும். கலை என்பது அதன் சுவைக்காகவே இருக்க வேண்டும்; அது வேறு குறிக்கோள்களையோ கருத்துப் பரப்பல்களையோ கொண்டிருக்கக் கூடாது என்று பழமையைக் காக்க விரும்புவோர் கூறுவர். முற்போக்காளர்களோ மக்கள் செய்யும் எதுவும் மக்களுக்காவே இருக்க வேண்டும்; எனவே கலை மக்களுக்குப் பணிபுரிவதாக இருக்க வேண்டும் என்பர். அதே போல் ஒரு குமுக இயக்கம் இல்லாத வேளைகளிலும் கூட கலை இருவகை நோக்கங்களையும் நிறைவேற்றுகிறது. உழைக்கும் மக்களுக்குக் கலை வாழ்வாகிறது. உழைக்கும் போது பாடும் பாடல், உழைப்பு இல்லாத போது நிகழ்த்தப்படும் ஆடல் பாடல் ஆகியவை அவர்களது வாழ்வின் இன்ப துன்பங்களையும் தம் தொழிலின் ஏற்ற இறக்கங்களையும் சித்தரித்துக்காட்டவும் பல வேளைகளில் தம் உழைப்பின் பாங்கை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் அவர்கள் செய்யும் பயன்படு பொருட்களில் மிளிர்கின்றன. அவர்கள் செய்யும் விளையாட்டுப் பொருட்கள் கலை வடிவமாகவே காட்சியளிக்கின்றன. ஆனால் அவர்களது வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காகவே அவை உருவாக்கப்படுவதால் அவற்றில் அடங்கியுள்ள கலையழகின் விலையோ மதிப்போ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. வெறும் உழைப்பின் மதிப்பு கூடக் கிடைப்பதில்லை. உழைப்பாற்றலின் மதிப்பு (Value of labour power) அதாவது அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான மதிப்பு மட்டும் அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களது உழைப்பின் மிகுதி மதிப்பு அல்லது மீத்த மதிப்பு(Surplus Value) கலை மதிப்புடன் சேர்ந்து வாணிகர்களாலும் பிறராலும் சுரண்டப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு வாழ்வழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இத்தகைய கைவன்மைத் தொழில்களில் (Handicrafts) அவர்களை ஈடுபடுத்தி செய்பொருட்களை உள்நாட்டுப் பணக்காரர்களுக்கும் வெளிநாடுகளிலும் விற்றுப் பணம் சேர்க்கும் உள்ளூர் வாணிகர்களும் அவர்களோடு கூட்டுச் சோந்து நிற்கும் “காதிகிராப்ட்” போன்ற அரசு நிறுவனங்களும் ஒருபுறம்; வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பிக் கொள்ளையடிக்கும் “மக்கட்பணி” அமைப்புகள் இன்னொரு புறம்.

அதே வேளையில் வாழ்வோடு தொடர்பில்லாத வெறும் ஆடல், பாடல், ஓவியம், சிற்பங்களைக் காட்டிப் பாராட்டும் பணமும் குவிக்கின்றனர் மேற்சாதியினர். சொற்களின் தேவையின்றி நடிப்புகள், மெய்ப்பாடுகள், அடைவுகள், முத்திரைகளைக் கொண்டது பரத நாட்டியம். மனிதன் தொடக்க காலத்தில் பேச்சு மொழி வளர்ச்சியுறாத நிலையிலும் உரக்கப்பேசக் கூடாத சூழ்நிலையிலும் கையாண்ட செய்கை (சைகை)களே இவ்வாறு முத்திரைகளிலும் அடைவுகளிலும் நடிப்புகளிலும் மெய்ப்பாடுகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது ஒரு விந்தையாகும். சரியான கண்ணோட்டத்தோடு அணுகினால் தமிழ் எழுத்து வடிவங்களுக்கும் இந்த அடைவுகள் முத்திரைகளுக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பதைக் காண முடியும் என்று தோன்றுகிறது. அதேச்போல் கேட்போருக்குப் புரியாத பிற மொழிச் சொற்களிலமைந்த இசைப் பாடல்களில், சொற்களே இல்லாத வெற்று இசைக் கருவிகளில் தம் கலைத் திறனைக் காட்டும் கலைவாணர்களைப் போற்றிப் புரப்பவர் மேற்சாதியினர். அவ்வாறே ஓவியம் சிற்பம் முதலியவற்றில் “தேர்ச்சி” பெற்றுக் கண்காட்சிகள் நடத்திப் பெரும் பொருளும் புகழும் சேர்க்கும் மேற்சாதிக் கலைஞர்களும்.

மக்களின் மொழியாகிய தமிழில் இசையரங்குகளில் பாட வேண்டு மென்பதற்காக இங்கு ஓரு பெரும் இயக்கம் நடைபெற்றும் அது இன்னும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை என்பதும் நம் கவனத்துக்குரியதாகும்.

நம் நாட்டில் கலை இவ்வாறு இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாகப் பிளவுண்டது பழங்காலத்திலேயே நடைபெற்றுவிட்டது. வேத்தியல், பொதுவியல் என அது இருவகையாக முதலில் பிளவுண்டது. (வேந்து = அரசன்; வேந்து g வேத்து + இயல் = வேத்தியல்). பின்னர் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் எனக் கலை வகைகள் பிரிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் என்றும் முதல் பாகுபாடே உடையோர் இல்லாதோர் என்ற இரு வகுப்பினரிடையில் விளங்குகிறது.

மேலையுலகில் நாட்டுப்புறவியல் என்ற துறை பொதுமக்களிடமுள்ள அனைத்துக் கலை வடிவங்களையும் தொகுப்பதாகத் தோன்றியது. ஆனால் அத்துறை இங்கு செயற்பட்டாலும் உழைப்பை வெறுக்கும் வெள்ளாளக்கட்டாளர்களாகிய பார்ப்பனியர்களிடையில் சிக்கிக் கிடப்பதால் ஒரு சில வாய்மொழி இலக்கியங்களைத் திரட்டுவதற்கு மேல் அது செல்லவில்லை. இன்றைய பல்கலைக் கழக ஆய்வுகள் பண்டை இலக்கியங்களிலிருந்து மக்கள் இலக்கியங்கள் என்ற அளவுக்குச் சென்றுள்ளனவே தவிர மக்களின் கலைகளையும் அவற்றோடு ஒன்றி நிற்கும் பொருளியல் வாழ்க்கையையும் சரியான கண்ணோட்டத்தோடு இன்றும் தொடவில்லை. அவற்றை ஆய்வதும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றால் அவை அழிவதிலிருந்து காத்து உயிர்ப்பிப்பதும் நமது கடமைகளாகும். ஆனால் அத்தகைய கலை மீட்புப் பணியைத் தனியாகச் செய்ய முடியாது. மக்கள் தங்களது பொருளியல் மேம்பாட்டு இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்கும் போது தான் இத்தகைய கலைப் பணிகளைச் செய்ய முடியும்.

கலை-இலக்கியத்தின் நோக்கம் பற்றிய கேள்வி ஓர் அடிப்படைக் கேள்வியாகும். இன்றைய நாகரிக வளர்ச்சி நிலையில் கலை-இலக்கியம் என்பதன் நோக்கம் மக்களை மகிழ்விப்பதாகும். அதாவது அது ஒரு பொழுதுபோக்கு வகை துறையாகும். ஆனால் மாந்த நாகரிகத் தொடக்கக் காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. முந்தியல் மாந்தர்கள் தங்கள் வேட்டை, உணவு திரட்டல், வேளாண்மை போன்ற உழைப்பு வடிவங்களைப் போலச்செய்வதாகவே தொடக்கக்கால கலைநிகழ்வுகள் இருந்தன என்று சியார்சுதாம்சன் போன்ற ஆய்வர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகார உரையில் கூத்துகள் பற்றிய குறிப்பினும் தொழில்களோடு உள்ள தொடர்பு காணப்படுகிறது. இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உழைப்பிலிருந்து உருவாகி அவ்வுழைப்பை மேம்படுத்தப் பயன்பட்ட கலைவடிவங்கள், மக்களின் இவ்வுழைப்புச் செயல்முறையிலிருந்து ஒட்டுண்ணிகளால் அயற்படுத்தப்பட்டு இறுத்தெடுக்கப்பட்டவையே “தூய” கலைகள். இத்தூய கலைகள் நிலவுகின்ற குமுக உறவுகளையும், மதிப்பீடுகளையும் இயல்பாகவே எதிரொளித்து அவற்றுக்கு வலிமையும் நிலைப்பும் தேடித்தருகின்றன. கலைகளும் இலக்கியமும் இவ்வாறு பொழுதுபோக்குத் தன்மை பெற்றுவிட்டதால் குமுக உறவுகளையும் மதிப்பீடுகளையும் மாற்றவிழைவோர் தங்கள் இயக்கத்தின் ஒரு கூறாக இக்கருவியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. அவ்வாறு கலை இலக்கியங்களைப் பயன்படுத்தும் போது பழமையர் எழுப்பும் எதிர்ப்பிலிருந்து தான் “கலை கலைக்கா? கலை வாழ்க்கைக்கா?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கருத்து மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மக்கள் பழமையரைக் கைவிட்டு மாற்றம் காணப் பாடுபடுவோரின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அவ்வாறு கலை வாழ்க்கைக்குத் தான் என்பதை அவ்வப்போது மக்கள் நிலைநிறுத்துகின்றனர்.

இந்தக் “கலை கலைக்கா? கலை வாழ்க்கைக்கா?” என்ற கேள்வியை முற்போக்கு முகமூடியுடன் சிலர் முன் வைக்கின்றனர். குமுக மாற்றத்தை முன் வைக்கும் கலை இலக்கியங்களைப் பரப்பல் (பிரச்சாரக்) கலை இலக்கியங்கள் என்றும் பழமை சார்ந்த இலக்கியங்களை “தூய” அல்லது “உயர்தர” இலக்கியங்கள் என்றும் வகைப்படுத்துகிறார்கள். பரப்பல் கலை இலக்கியங்கள் நிலைத்து நில்லா என்பது இவர்களது வாதம்.

அது உண்மைதான். பரப்பல் இலக்கியங்கள் பொதுவாக நிலைத்து நிற்பதில்லை. ஆனால் இது அதற்கு ஒரு குறையுமல்ல. பரப்பல் இலக்கியங்களின் நோக்கமே குமுக மாற்றம் தான். அக்குமுக மாற்றத்தை முன் வைத்து மக்களிடையில் ஒரு வலிமையான இயக்கம் செயல்படும் கால கட்டத்தில் பரப்பல் கலை இலக்கியங்கள் பெறும் வலிமையும் அவை ஆற்றும் மக்கட்பணியும் உலகில் காலங்காலமாகத் தோன்றிய “உயர்தர”க் கலை இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்தாலும் ஆற்ற முடியாது. சராசரிப் பொழுது போக்கு இலக்கியங்கள் அன்றாட உணவு என்றும் “உயர்தர” இலக்கியங்கள் விருந்தென்றும் கொண்டால் பரப்பல் இலக்கியங்கள் மருந்து போன்றவையாகும். நோய் தாக்கி உருக்குலைந்து சாவை நோக்கி நிற்கும் உடலுக்கு மருந்து அன்றாட உணவை விட எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல தேக்கமடைந்து நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் குமுகத்துக்கு அதன் மருத்துவனான புரட்சிகர இயக்கங்களின் கையில் கலை இலக்கியங்களும் இன்றியமையாதவை.

இனி “உயர்தர”க் கலை இலக்கியத்தின் சிறப்புக் கூறாகக் கூறப்படுவது என்ன வென்று பார்ப்போம். இச்சிறப்புக் கூற்றை அழகியல் என்றும் முருகியல் என்றும் அழைப்பர். Aesthetics என்ற ஆங்கிலச் சொல்லுக்கோ அதன் தமிழாக்கங்களான மேலே கூறப்பட்ட சொற்களுக்கோ இன்று வரை தெளிவான, இறுதியான வரையறை கூறப்படவில்லை. ஆனால் வரையறையையும் தன் பெயரிலேயே பெற்றுள்ள ஒரு துறையாக இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படுகிறது. அதுதான் மெய்பாட்டியல். மெய்ப்பாடு எனப்படுவது நகை, அழுகை எனத் தொடங்கும் எட்டு வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். ஒரு கலை அல்லது இலக்கியப் படைப்பாளி தன் படைப்பின் மூலம் அதனைச் சுவைப்போர் உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சிகளை எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறானோ அதில் அவன் பெறும் வெற்றிதான் மெய்ப்பாடு. தான் ஒரு கலைப்படைப்பை உருவாக்கும்போது தான் எழுப்பப் விரும்பும் மெய்ப்பாட்டுக்கு முதலில் தன்னை அவன் உட்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவனது கலைப்படைப்பில் தான் விரும்பும் மெய்ப்பாட்டை வெளிப்படுத்த முடியும். இதில் அவன் வெற்றி பெற்றுவிட்டால் அப்படைப்பைச் சுவைக்கும் மக்களிடையிலும் அதே மெய்ப்பாட்டை உருவாக்க முடியும். அவ்வாறு சுவைப் போரிடத்தில் தான் விரும்பும் மெய்ப்பாட்டைத் தோற்றுவிப்பதில் அடிப்படை வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சிறந்த கலைப்படைப்பாகக் காலத்தை வெல்வதாக அமைகிறது.

நம் குமுகத்தில் இதுபோன்ற சிறந்த கலைப்படைப்புகளுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூற முடியாது. இன்று பெரும் புழகத்தில் இருக்கும் நிகழ்த்து கலைகளும் நுண்கலைகளும் ஆகம வடிவத்திலுள்ளவை. ஆங்கிலத்தில் இதனை Formalism என்பர். கோவில்களிலும் சமயங்களின் தொடர்பாகவும் நிகழ்த்தப்படுபவை அல்லது படைக்கப்படுபவை. இப்பழமைத் தொடர்பை அறுத்துக்கொண்டு அவற்றால் முழுமையாக விடுபட முடியவில்லை. அவை எவ்வளவு தான் திரைப்படம், தொலைக்காட்சி (தொ.கா.) போன்ற மிக முன்னேறிய ஊடகங்களின் வழியாக வெளிப்பட்டாலும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அவை பழைமையின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இக்கலை வடிவங்களில் மெய்ப்பாடுகள் ஆகம விதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் படைப்பாளிக்குக் கற்பனை உரிமை இல்லை. எனவே அவையனைத்தும் விதிகளுக்குட்பட்ட, பண்டங்களைப் படைக்கும் தொழில்நுட்பங்களாகவே இருக்கின்றன.

இவற்றை மீறி ஒரு சில வடிவ மாற்றங்களை தனி மாந்தர்கள் முன்றாலும் அவர்கள் பழைமைச் சிந்தனைகளை உடைக்க விரும்பாதவர்கள். அத்துடன் இன்றைய குமுகத்தில் நிலவும் தேக்க நிலையும் ஒரு புரட்சிகர மக்கள் இயக்கம் இல்லாமையும் இப்புதிய வடிவ முயற்சிகளைக் கைக்கொண்டு புதிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் ஒரு தலைமுறை உருவாக முடியாமைக்குக் காரணங்கள்.

நம் பண்டை வரலாற்றில் அன்று நிலவிய பழமையை அனைத்துத் துறைகளிலும் உடைத்தெறிந்து வரலாறு படைத்த ஒரு கலைப் படைப்பு சிலப்பதிகாரமாகும். கழக (சங்க) இலக்கியத் தொகுப்பு என்ற வடிவில் மறைக்கப்பட்ட தமிழர்களின் தொல் பழம் வரலாற்றுத் துணுக்குகளை, குறிப்பாகக் குமரிக் கண்ட வரலாற்றின் அடிப்படை உண்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்நிலங்களுக்குரிய கலை வடிவங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. ஐந்திரம்-அகத்தியம் என்ற தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் மோதலில் வீழ்த்தப்பட்ட அகத்தியத்தின் பக்கம் நின்று ஐந்திரக் கோட்பாட்டின் செல்வாக்கினால் வழக்கிலிருந்து அகற்றப்பட்ட சகரக் கிளவிகளைக் கையாள்கிறது. நாடுகளுக்கிடையிலான உறவுகளில் தொல்காப்பியப் புறப்பொருள் வகுத்த எல்லைகளை உடைத்து அன்று உண்மையில் நிலவிய அரசதந்திர உத்திகளை எடுத்துக் காட்டியது. தமிழ் மண்ணின் இசை நாடக மரபுகளைப் பேணித் தந்தது. தமிழக வாழ்க்கையின் பல்வேறு முகப்புகளைக் காட்டும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கதை சொல் உத்திகள் தாம் எத்தனை? தன்னுள் மறைத்து வைத்துள்ள செய்திகள் தாம் எத்தனை? செய்யுள் வடிவங்கள் தாம் எத்தனை? இவ்வளவுக்கும் மேலாக அதில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் தாம் எத்தனை. இத்தனை சிறப்புகள் இருந்தும் மயக்கர்களும் சாதி வெறியர்களும் சுவைக்குதவாத மதப் பிதற்றல்களுக்குக் கழகங்களும் மாநாடுகளும் கூட்டி கட்டுப்பாட்டுடன் ஆர்ப்பரிக்கின்றனரே! என்னே கொடுமை!

ஆட்சியாளர்கள், பார்ப்பனியர்கள் என அனைவரும் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும் சிலப்பதிகாரம் நின்று நிலவுகின்றதென்றால் அதன் மெய்ப்பாட்டு வெற்றி தான் காரணம். எனவே தான் அதற்கு “நெஞசையள்ளும் சிலப்பதிகாரம்” எனும் அடைமொழி கிடைத்தது.

அது தோன்றிய காலத்தில் தமிழகத் தேசியத்துக்கு எழுந்த அறைகூவலை தமிழகம் எதிர்கொள்வதில் அது எவ்வளவு துணை நின்றது என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும். புறச்சூழல், மக்களின் மனநிலை, மக்களியக்கங்கள், அவற்றின் தலைவர்கள் என்ற இயங்குதிணைகளின் இடைவினைப்பாடு தான் அதனை முடிவு செய்யும். ஆனால் அவற்றை இன்றும் புரிந்து கொள்வதற்கான தடையங்களைக் கொண்ட ஓர் ஒப்பற்ற கருத்துப் பரப்பல் இலக்கியமாகும் சிலபப்பதிகாரம். கருத்துப் பரப்பல் எனும் போது புரட்சிகரக் கருத்து பரப்பலையே கொள்ள வேண்டும். பரப்பல் இலக்கியத்தில் உயர்தரம் கொண்டது சிலப்பதிகாரமாகும்.

கலை-இலக்கியத்துக்கும் மெய்ப்பாட்டுக்கும் உள்ள உறவைக் கூறும்போது இன்று ஒடுக்கப்பட்டோர் பற்றியவையாக் கூறப்படும் தலித் கலை-இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் கூறியாக வேண்டும்.

மெய்ப்பாடு என்பது இயல்பாக மக்களிடையில் தோன்றும் மெய்ப்பாடுகளையும் அவை தோன்றும் சூழ்நிலைகளையும் அம்மெய்ப்பாடுகளின் விளைவுகளையும் தடம் பிடித்துக் காட்டுவதாகும். அந்தவகையில் எங்கோ கண்ணுக்கெட்டாத நாட்டுப்புறத்தில் ஒடுக்கப்பட்டோரிடையில் நடைபெறும் வாழ்வியல் நடப்புகளை நகரத்தில் வாழும் மேல்தட்டு மேற்சாதிக் கலைஞன் வெளிப்படுத்தும்போது உண்மை வெளிப்படாது என்பது உண்மையே. ஆனால் அந்தக் கலையைச் சுவைக்கும் மக்களில் பெரும்பான்மையினரும் அக்கலைஞன் வெளிப்படுத்துவதாகக் கருதப்படும் சூழ்நிலைகளிலிருந்து அயற்பட்டோரே. அதாவது கலைஞன் வெளிப்படுத்தும் சூழல் இயற்கைக்கு முரணானது என்ற உண்மையை அறியாதவர்கள். எனவே அக்கலைப் படைப்பு கஞைர்களின் மனதில் கலைஞன் எழுப்ப நினைத்த மெய்ப்பாட்டை எழுப்பினாலே அது வெற்றியாகிவிடுகிறது.

அதே வேளையில் ஒடுக்கப்பட்டோரிலிருந்து உருவாகும் ஒரு கலைஞன் தான் கலைஞனாக உருப்பெரும் சூழ்நிலையினால் தான் தோன்றிய சூழ்நிலையிருந்து விலகிச் சென்றாலும் அதன் தாக்கங்களிலிருந்தும் படிமங்களிலிருந்தும் அயற்படாமலிருப்பானாகில் அதேநேரத்தில் தான் விரும்பும் மெய்ப்பாடுகளைச் சுவைஞர் மனதில் எழுப்பும் ஆற்றலும் பெற்றிருப்பானாகில் அவனால் தான் உயர்ந்த ஒடுக்கப்பட்டோர் கலைப்படைப்பைப் படைக்க முடியும்.

(தொடரும்)

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

author

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

Similar Posts